கசூர் (ஆங்கிலம்: kasur; பஞ்சாபி மற்றும் உருது : قصُور) என்பது பாகிஸ்தான் மாகாணமான பஞ்சாபில் லாகூருக்கு தெற்கே உள்ள ஒரு நகரம் ஆகும். இந்த நகரம் கசூர் மாவட்டத்தின் தலைமையகமாக செயற்படுகின்றது. மேலும் இது அண்டை நாடான இந்தியாவின் எல்லைக்கு அருகில் உள்ளது. மேலும் கசூர் மாவட்டத்தின் எல்லைகளாக லாகூர், நங்கனா சஹாப் மற்றும் பஞ்சாப் மாகாணத்தின் ஒகாரா மாவட்டம் என்பன அமைந்துள்ளன. கசூர் 1525 ஆம் ஆண்டில் பஷ்டூன் குடியேறிகளால் நிறுவப்பட்டது. கசூர் நகரம் தற்சமயம் பஞ்சாபின் 16 வது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகவும், 2017-18 ஆம் ஆண்டில் 358,409 சனத்தொகை கொண்ட பாகிஸ்தானின் 24 வது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகவும் உள்ளது.[1] சூஃபி-கவிஞர் புல்லே ஷா அடக்கம் செய்யப்பட்ட இடமாகவும் அறியப்படுகின்றது.

சொற்பிறப்பியல்தொகு

கசூர் என்ற சொல்லுக்கு "அரண்மனைகள்" அல்லது "கோட்டைகள்" என்று பொருள்படும்.[2] கசூர் என்ற சொல் என்ற அரபு மொழியில் இருந்து பெறப்பட்ட வார்த்தையாகும். கசூர் நகரம் இராமாயணத்தின் இளவரசர் குசனால் நிறுவப்பட்டு பெயரிடப்பட்டதாக என்றும் இந்து மரபுகள் கூறுகின்றன. குசன் இந்து தெய்வங்களான இராமன் மற்றும் சீதையின் மகனாவார். 1525 ஆம் ஆண்டுகளில் இந்த நகரம் பஷ்தூன்களின் கெஷ்கி பழங்குடியினரால் ஒரு வலுவான குடியேற்றமாக நிறுவப்பட்டது. அவர்கள் கைபர் பக்தூன் குவா பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஆகிய பகுதிகளில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் ஆவார்கள்.[3]

வரலாறுதொகு

கசூர் பகுதி சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தின் போது காடுகளைக் கொண்ட விவசாயப் பகுதியாக இருந்தது. கசூர் பகுதி மௌரிய சாம்ராஜ்யம் , இந்தோ-கிரேக்க இராச்சியம் , குஷன் பேரரசு , குப்தா பேரரசு , ஹெப்தலைட்டுகள் மற்றும் காபூல் ஷாஹி ஆகிய இராச்சியங்களால் ஆட்சி செய்யப்பட்டது.

1525 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் இருந்து பாபரின் ஆட்சிக் காலத்தில் இப்பகுதிக்கு குடிபெயர்ந்த முகமதுசாய் பஷ்டூன்களின் கெஷ்கி பழங்குடியினரால் கசூர் ஒரு நகரமாக நிறுவப்பட்டது.[4] மேலும் இப்பகுதியில் பல சிறிய கோட்டைகள் கட்டப்பட்டன. இந்த நேரத்தில் சூஃபி மதக் குழுவினால் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களினால் பெரும்பாலான பஞ்சாப் பகுதி மக்கள் முஸ்லிம்களாக மாறினர்.

முகலாயரின் ஆட்சியின் கீழ், நகரம் செழித்து வளர்ந்தது. வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இது புகழ்பெற்ற சூஃபி துறவி மற்றும் புகழ்பெற்ற கவிஞர் புல்லே ஷா என்பவரின் இருப்பிடமாக மாறியது. அவர் இந்த நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

முகலாய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, 1763 ஆம் ஆண்டில் கசூர் அஹ்மத் ஷா துரானியால் கைப்பற்றப்பட்டது. பின்னர் ரஞ்சித் சிங்கின் கீழ் இருந்த சீக்கிய பேரரசு 1807 ஆண்டில் நகரத்தை கைப்பற்றியது.[5]

பிரித்தானிய ஆட்சியின் போது, ​​கசூர் மாவட்டத்தின் பெரிய பகுதிகளுக்கு நீர்ப்பாசனம் செய்யும் பாசன கால்வாய்கள் கட்டப்பட்டன. இறைச்சி விற்பனை பிரச்சினை தொடர்பாக சீக்கியர்கள், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே வகுப்புவாத குழப்பங்கள் 1908 ஆம் ஆண்டில் வெடித்தன.[6] 1919 ஏப்ரல் 12 அன்று ஜாலியன்வாலா பாக் படுகொலையைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. இது நகரின் ரயில் நிலையம் உள்ளிட்ட குடிமை உள்கட்டமைப்புகளை அழிக்க வழிவகுத்தது. கலவரங்களுக்கு பதிலளிக்கும் விதமாக 1919 ஏப்ரல் 16 அன்று இராணுவச் சட்டம் விதிக்கப்பட்டது.[7]

1947 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த பின்னர், சிறுபான்மை இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தனர். அதே நேரத்தில் முஸ்லிம் அகதிகள், இந்தியாவில் இருந்து கசூரில் குடியேறினர். கசூர் சுதந்திரத்திற்குப் பிறகு தோல் பதனிடுதலில் முக்கிய மையமாக மாறியது.[8]

புவியியல்தொகு

வடக்கில் லாகூர், தெற்கு மற்றும் கிழக்கில் இந்தியா, ஒகாரா மற்றும் நங்கனா சஹாப் மாவட்டங்கள் என்பன கசூரின் எல்லைகளாகும். இந்த நகரம் காந்தா சிங் வாலாவின் எல்லையை ஒட்டியுள்ளது.

விவசாயம்தொகு

கசூரில் விளையும் முக்கிய பயிர்கள் கோதுமை , சோளம் , அரிசி , உருளைக்கிழங்கு , கரும்பு மற்றும் மஞ்சள் என்பனவாகும்.

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கசூர்&oldid=2866662" இருந்து மீள்விக்கப்பட்டது