அரசியல் கருத்துக்கள்-முற்கால இந்தியா

முற்கால இந்தியாவின் அரசியல் கருத்துக்கள்

அரசியல் கருத்துக்கள், பண்டைய இந்தியா அல்லது முற்கால இந்திய அரசியற் கருத்துருக்கள் (Political thoughts of Ancient India) இரிக் வேதத்தில், அரசியலைச் சார்ந்த தொடர்பான கருத்துக்கள் ஒன்றும் இல்லை. ஆனால், 'ராஜ்ய', 'ராஷ்டிர', 'க்ஷத்ர' முதலிய சொற்கள், இருக்கு வேதத்தின், மிகப் பழமைவாய்ந்த பகுதிகளில் காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது.[1]

இருக்கு வேதம், சமசுகிருத மொழியில் அமைந்த பழைய அச்சுத்தாள்

பிராமணங்கள்தொகு

பிராமணங்களில், அரசியல் கருத்துக்கள் மிகுதியாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஐதரேயப் பிராமணம்[2][3] பகைவர்களைப் போரில் வென்று, நாட்டின் அமைதியைக் காப்பதற்காக அரசன் ஏற்பட்டானென்று கூறுகிறது; அதில் பல அரசரை வென்று, ஆட்சி பெற்றுச் சிறப்பாக மகாபிஷேகம் நடத்திக்கொண்ட மன்னர்கள் பலருடைய பெயர்களும் குறிக்கப்பட்டிருக்கின்றன. முதன் முதல் அரசியல் கருத்துக்கள் ஆராயப்பட்டது கி.மு. 600-300 ஆம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற பௌதாயன, கௌதம, ஆபஸ்தம்ப தரும சூத்திரங்களில் என்று சொல்லலாம். இந்நூல்களில், க்ஷத்திரியர்களுடைய தருமங்களைக் கூறுமிடத்து, அரசர்களுடைய கடமைகளும், அவர்களுக்கும் அவர்களுடைய குடிகளுக்கும் இருக்க வேண்டிய உறவுமுறைகளும் தனியே எடுத்துக் கூறப்படுகின்றன. அறிவு, கல்வி, நன்னடக்கை முதலிய நற்குணங்கள் வாய்ந்த ஓர் அந்தணனைப் புரோகிதனாகத் தேர்ந்தெடுத்துப் பிறகு அவன் வழிப்படி நடக்கவேண்டியது அரசன் கடமை என்பது இந்நூல்களின் முக்கியக் கருத்துக்களில் ஒன்று ; இது பிராமணங்களில் குறிக்கப்பட்டுள்ள பிராமம், க்ஷத்ரம் என்ற இரண்டு பகுதிகளும் ஒன்றோடொன்று ஒத்து அரசியல் நடத்த வேண்டுமென்ற கொள்கையை மேற்கொண்டு வரையப் பெற்ற ஏற்பாடாகும். ஆபஸ்தம்ப தரும் சூத்திரம், ஓர் அரசன் தன் நாட்டில் தட்ப வெப்பத்தின் கொடுமையாலோ, பசி, பிணி முதலிய துன்பங்களாலோ, ஒருவராவது வருந்த நேரிடாமல் காக்கவேண்டுமென்று கூறுகிறது. பூமியின் விளைவில், ஆறிலொரு பங்கு அரசனைச் சார்ந்ததென்றும், மற்ற வரிகள் குடிகளுக்குக் கேடின்றி ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும் தரும நூல்களில் காண்கிறோம்.

இதிகாசங்களின் ஆளுமைதொகு

இராமாயணத்தில், இராம ராச்சியத்தின் செம்மையும் அராஜகத்தின் கொடுமைகளும் விவரமாக எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. மகாபாரதத்தில், அதிலும் முக்கியமாக சாந்தி பருவத்தில், அரசநீதி மிகவும் விரிவாக நூற்றுக்கணக்கான அத்தியாயங்களில் பீஷ்மரால் யுதிஷ்டிரனுக்கு எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ அதேகாலத்தில் எழுதப்பெற்ற மனுஸ்மிருதி, கௌடிலிய அர்த்த சாஸ்திரம் ஆகிய நூல்களிலும் அத்தகைய கொள்கைகள் காணப்படுகின்றன. கௌடிலியனுடைய நூலில் சிற்சில சிறப்புப்பகுதிகளுண்டு. இராச நீதி அல்லது தண்ட நீதி பிரமனால் செய்யப்பட்ட ஒரு பெரு நூலாயிருந்து, பிறகு பல கடவுளராலும் முனிவராலும் பலமுறை சுருக்கப்பெற்று, மானிட உலகத்தில் வழங்கப்பட்டு வருவதாகப் பாரதம் கூறும். "முற்காலங்களில் அரசே ஏற்படவில்லை ; தாமாகவே மனிதர் நன்னடக்கையில் ஈடுபட்டிருந்தனர். நாளடைவில் காமமும் வெகுளியும் தோன்றிச் சண்டை சச்சரவுகள் ஏற்படவே, எல்லோரும் ஒருங்கு கூடித் தங்கள் வாழ்க்கையை நியாயமாக நடத்தித் தரவேண்டி அரசன் ஒருவனை ஏற்படுத்தி, அவனுக்குக் கூலியாக நிலவரியும் வேறு வரிகளும் கொடுக்க ஒப்புக்கொண்டார்கள். அப்பொழுதே அரசனுடைய உதவிக்காகப் பிரமன் தன் ஒளியினின்று தண்டம் (செங்கோல்) ஒன்றைப் படைத்து, அதை நடத்தும் முறையை விளக்கும் தண்டநீதி என்னும் நூலையும் இயற்றினான். இந்தத் தண்டம் தருமத்தின் உரு ; உபநிஷத்துக்களில் எங்கும் நிறைந்ததாகக் கூறப்பட்ட பிரமத்தின் அமிசம்; இதன் வலியே அரசன் வலி ; இதற்கிணங்கியே குடிகள் சமாதானமாக வாழ்கிறார்கள். ஆனால், அரசன் முறை தவறினால், தண்டம் அவனுக்கு உதவாமல் போவதன்றி, அவனைக் குடும்பத்துடனே நாசமாக்கிவிடும் என்று அரசாட்சிக் குறித்து கூறப்பட்டுள்ளது.

நாடுகள் அரசராலேயே ஆளப்பட்டுவந்தபோதிலும், சில காலங்களிலும் சில நாடுகளிலும் அரசனில்லாத குடியரசு நிலவியிருந்தது. இவைகளைச் சங்கம், கணம், அரட்டம் என்னும் பெயர்களால் குறிப்பிடுவர். இவை முக்கியமாக வட இந்தியாவில் உள்ள இமயமலைச் சாரல்களிலும், கோசல நாடு, மிதிலை நாடு, பஞ்சாப், சிந்து முதலிய பகுதிகளிலும் நிறைந்திருந்தன. இவைகளைக் குறித்து ஒரு தனி அத்தியாயம், சாந்தி பருவத்தில் உண்டு. இவைகளின் முக்கியக் குறைகள், ஒற்றுமைக் குறைவும், முக்கியமான ஆலோசனைகளையும், உபாயங்களையும் இரகசியமாக வைத்துக்கொண்டு நிறைவேற்ற இயலாததுமே என்று இந்த அத்தியாயம் குறிக்கும். கௌடிலியன் தனது நூலில், அரசர்கள் இந்தக் கணராச்சியங்களைச் சீர் குலைத்துத் தம் வசப்படுத்திக்கொள்வதற்கான பல சூழ்ச்சிகளைக் குறிப்பிட்டிருக்கிறான்.[4]

மேற்கோள்கள்தொகு