அறுபதாம் கல்யாணம்

அறுபதாம் கல்யாணம் அல்லது சஷ்யப்தபூர்த்தி கல்யாணம் அல்லது மணி விழா என்பது திருமணமான ஒரு ஆண், தனது மனைவியோடு இல்லற வாழ்வில், தனது 60 வயதை கடந்து 61 வயதில் அடியெடுத்து வைக்கும் போது செய்து கொள்ளும் ஒரு திருமணச் சடங்காகும். சஷ்டியப்தபூர்த்தி சடங்கு, அறுபதாம் திருமணம் செய்து கொள்பவரின் பிறந்த மாதத்தில், பிறந்த நட்சத்திரம் மற்றும் திதியன்று நடத்தபடுகிறது.

பெரும்பாலும் அறுபதாம் கல்யாணம் கோயில்களிலேயே நடத்தப்படுகிறது. பல்வேறு ஹோமங்களும் பூஜைகளும் செய்யப்படுகின்றன. அதிதேவதைகளுக்கு பூரண கும்பங்கள் வைத்து பூஜைகள் செய்யப்படுகின்றன .மேலும் கலச பூஜையும் செய்யப்படுகின்றது. தங்கள் வசதிக்குத் தகுந்தவாறு கலசங்கள் முறையே 16, 32, 64 எண்ணிக்கையில் வைத்து பூஜிக்கப்படுகின்றன.

பூஜை முடிந்ததும் கலசங்களில் இருக்கும் புனித நீரானது அவர்களின் பிள்ளைகளால், உறவினர்களால், நண்பர்களால் மணமக்களின் மீது ஊற்றப்படுகிறது. மணமக்களின் பாதங்களில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்குவது மிகுந்த பாக்கியமாகக் கருதப்படுகிறது.

மணமக்களும் தங்களிடம் ஆசீர்வாதம் பெற்றவர்களுக்கு சேலை, சோளி, மஞ்சள், மாங்கல்யச் சரடு போன்ற பொருட்களை தங்கள் வசதிக்குத் தகுந்தவாறு வழங்குகின்றனர்.

வசதி படைத்தவர்கள் மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேசுவரர் கோயிலில் அறுபதாம் கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.

சஷ்டியப்தபூர்த்தி அன்று குலதெய்வ பூஜை செய்த பின்பு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், ஆயுஷ் ஹோமம், அமிர்த மிரித்துஞ்சய ஹோமம், தன்வந்திரி ஹோமம் முதலிய ஹோமங்கள் செய்யப்பட்டு கலச பூஜை செய்யப்படும். பிறகு முகூர்த்த நேரத்தில் குடும்பத்தின் 61 வயதை தொடும் ஆண்மகனான மணமகன் புது தாலியை தனது மனைவியின் கழுத்தில் கட்டி சஷ்டியப்தபூர்த்தி சடங்கை நிறைவு செய்வர்.

பெற்றோருக்கு, தம் குழந்தைகள் சஷ்டியப்பூர்த்தி சடங்கை செய்வதால், அவர்கள் தங்களின் திருமண வாழ்க்கை காலத்தில் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கி நன்மைகள் ஏற்படுகின்றன. மேலும் ஹோமங்களின் பலன்களால் அத்தம்பதியருக்கு நோய், ஆரோக்கிய குறைவு ஏற்படுவதை தடுத்து, நீண்ட ஆயுளையும், உடல் மற்றும் மன பலத்தையும், அவரின் மனைவிக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை தருகிறது.[1][2]

பிற வயதிகளில் செய்யும் திருமணங்கள்

தொகு
  1. 70ஆவது வயது முடிந்த பின்னர் பீமரத சாந்தி
  2. 80 வயது முடிவில் சதாபிஷேகம்
  3. 90 வயதில் விஜயரத சாந்தி
  4. 100 வயதில் கனகாபிஷேகம்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறுபதாம்_கல்யாணம்&oldid=3714452" இலிருந்து மீள்விக்கப்பட்டது