அலைபாயுதே கண்ணா (பாடல்)
அலைபாயுதே கண்ணா எனும் தமிழ் பாடல், இந்துக் கடவுளான கண்ணனைக் குறித்துப் பாடப்படும் பாடல். இப்பாடலை எழுதியவர் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் ஆவார்[1]. தமிழகத்தில் மிகவும் பிரபலமாக உள்ள இப்பாடல், பெரும்பாலான கருநாடக இசைக் கச்சேரிகளில் 'துக்கடா'வாகப் பாடப்படுகிறது.
சிறப்பு
தொகுபுகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகர்கள் இப்பாடலைப் பாடியதன் ஒலிவடிவம், வெவ்வேறு இசைத்தொகுப்புகளில் உள்ளன. அலைபாயுதே எனும் திரைப்படத்தில் இப்பாடல் பாரம்பரிய இசை மரபின்படியே ஏ. ஆர். ரகுமானால் இசையமைக்கப்பட்டுள்ளது.இதே பாடல் "எத்தனை கோணம் எத்தனை பார்வை" படத்தில் இளையராஜா அவரகளால் ஜேசுதாஸ், ஜானகி பாட அற்புதமாக இசையமைக்கப்பட்டுள்ளது
பாடல் வரிகள்
தொகுஅலைபாயுதே... கண்ணா, என் மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே... கண்ணா, என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே... கண்ணா...
நிலைபெயராது சிலைபோலவே நின்று...
நிலைபெயராது சிலைபோலவே நின்று,
நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா என் மனம்
அலைபாயுதே... கண்ணா...
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே...
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே...
திக்கை நோக்கி என் புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே
கனித்த/ (கதித்த) மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
கனித்த/(கதித்த) மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து மகிழ்த்தவா
கலை கடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா
கதறி மனமுருக நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ
கதறி மனமுருக நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ, இது முறையோ, இது தர்மம் தானோ?
இது தகுமோ, இது முறையோ, இது தர்மம் தானோ?!
குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவொடு
அலைபாயுதே... கண்ணா, என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே... கண்ணா...!
அருஞ்சொற்பொருள்
தொகு- மோகன(ம்)[2] - ராகங்களுள் ஒன்று; கவர்ந்து இழுக்கக் கூடியது எனவும் பொருள்படும்.
- வேணுகானம்[3] - புல்லாங்குழல் இசை (வேணு-புல்லாங்குழல், கானம்- இசை)
- திக்கை[4] நோக்கி - வரும் திசையை நோக்கி
- கனித்த மனத்தில் - உனக்காக இரங்கும் என் மனத்தில் (கனித்தல் என்பது இரங்குதல், உருகுதல், கரைந்தல், பழுத்தல், மனங்களித்தல் ஆகிய பொருளில் வரும்)
- (கதித்த மனத்தில்- எழுச்சி நிரம்பியுள்ள என மனத்தில் எனவும் சிலர் இசைப்பதுண்டு)
- முகிழ்த்தவா - உணர்விலே ஆழ்த்துதல்
- கனை கடல் - ஒலி எழுப்புகின்ற கடல்
- இணையிரு கழலெனக் களித்தவா - இணையற்ற இரு தாள்களை எனக்கு அளித்தவனே
- குழைகள் - காதில் அணியும் குண்டலம் என்ற அணி