அல்பினிசம்
அல்பினிசம் எனப்படும் வெண்மைத் தோல் நோய், குறைபாடுடைய நிறமிகள் தோலில் தோன்றுவதால் ஏற்படுகிறது. இது ஒரு மரபணுக் குறைபாட்டு நோய். தோலில் உள்ள மெலானின் நிறமி தோன்றுவதற்கான டைரோசினேஸ் செயல் நடைபெறுவதில்லை. இவர்களுக்கு வெண்பொன் நிறமான தலைமயிர், பார்வைக் குறைபாடு, ஒளி வெறுப்பு போன்ற தன்மைகள் ஏற்படும். இவர்களது தோலில் அதிக அளவு சூரிய ஒளியால் புற்றுநோய்ப் புண்கள் தோன்ற வாய்ப்புண்டு.[1][2][3]
நோயும் மரபியலும்
தொகுஅல்பினிசம் நோயானது இரு பின்னடைவான எதிருருக்களைக் (aa) கொண்டிருக்கையில் ஏற்படும். நோய் இருக்கையில் ஒருவரில் அசாதாரணமான தோற்றம் காணப்படும். எனவே மரபணுவமைப்பு வேறுபட்ட எதிருருக்களைக் கொண்டிருந்தாலோ (Aa) அல்லது இரு ஆட்சியுடைய எதிருருக்களைக் கொண்டிருந்தாலோ (AA) நோயானது வெளித் தெரிவதில்லை. அதாவது ஒரே மாதிரியான தோற்றவமைப்பைக் கொண்டிருப்பர். நோயுள்ள ஒருவர் (aa), நோயற்ற ஒரே மாதிரியான எதிருருக்களைக் கொண்ட (AA) ஒருவருடன் சேர்ந்து ஏற்படுத்தும் வழித்தோன்றல்களில் அனைவரும் நோயற்றவர்களாக, சாதாரண தோற்றத்துடன் இருப்பினும், அனைவரும் பின்னடைவான எதிருருவைக் காவிச் செல்ல முடியும். நோயுள்ள ஒருவர் (aa), நோயில்லாத சாதாரண தோற்றம் கொண்ட காவி ஒருவருடன் (Aa) சேர்ந்து உருவாக்கும் தோன்றல்களில் 50% நோயற்ற, சாதாரண தோற்றம் கொண்ட காவிகளாகவும், 50% நோயுள்ள அசாதாரண தோற்றம் கொண்டவர்களாகவும் இருப்பர். ஒரு நோயற்ற, சாதாரண காவி (Aa), இன்னொரு நோயற்ற சாதாரண காவியுடன் (Aa) இணைந்து உருவாக்கும் தோன்றல்களில், 25% நோயற்ற சாதாரணமானவரும், 50% நோயற்ற, சாதாரண தோற்றமுள்ள காவிகளாகவும், 25% நோயுள்ள அசாதாரண தோற்றம் உடையவர்களாகவும் இருப்பர். அதே போல் இரு நோய் கொண்டவர்கள் (aa) இணைந்தால் வழித் தோன்றல்கள் அனைத்துமே நோயுள்ளவர்களாக அமைந்துவிடும்.
தோற்றவமைப்பு | மரபணுவமைப்பு |
---|---|
அல்பினிசம் இல்லை | AA or Aa |
அல்பினிசம் உண்டு | aa |
மேற்கோள்கள்
தொகு- ↑ Oetting, William S; Adams, David (2018). "Albinism: Genetics". eLS: 1–8. doi:10.1002/9780470015902.a0006081.pub3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780470016176.
- ↑ "Albinism". The Free Dictionary. பார்க்கப்பட்ட நாள் January 31, 2015.
- ↑ "New Albino Alligators". GeorgiaAquarium.org. The Georgia Aquarium. Archived from the original on January 20, 2015. பார்க்கப்பட்ட நாள் January 20, 2015.