அழகர் கிள்ளை விடு தூது

தமிழில் உள்ள 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று
(அழகர் கிள்ளைவிடுதூது இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழில் உள்ள 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று தூது. அத்தூது வகை இலக்கியங்களுள் ஒன்று அழகர் கிள்ளை விடு தூது.[1]

நூல் வரலாறு தொகு

திருமாலிருஞ்சோலை மலையில் கோயில் கொண்டிருக்கும் அழகரிடத்து பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் கிளியைத் தூது விடுவதாக அமைத்துப் பாடிய நூல் அழகர் கிள்ளை விடு தூது. காப்பு வெண்பா ஒன்றையும், 239 கண்ணிகளையும் கொண்ட நூல் இது. இந்நூலை இயற்றியவர் சொக்கநாதப் புலவர். இவர் மதுரை நகரைச் சார்ந்தவர். தந்தை பெயர் சொக்கலிங்கம் பிள்ளை. பலபட்டடைக் கணக்கு எழுதும் தொழில் செய்யும் மரபில் வந்ததால் இப்பெயர் பெற்றார்.

  1. மதுரை மும்மணிக்கோவை,
  2. யமக அந்தாதி,
  3. தென்றல் விடு தூது,

கன்னிவாடி நரசிங்கர் மேல் பாடிய

  1. வளமடல்,
  2. தேவை உலா

முதலியன இவர் இயற்றிய வேறு நூல்களாகும்.

நூல் அமைப்பு தொகு

அழகர் மலைக்கு,

  1. திருமாலிருஞ்சோலை,
  2. இடபகிரி,
  3. தென்திருப்பதி,
  4. சஞ்சீவி பர்வதம்,
  5. பழமுதிர்சோலை

எனப் பல பெயர்கள் உண்டு. கிள்ளை விடு தூதில் அழகர் மலை சிறப்புகள், இறைவன் சிறப்புகள் ஆகியன இடம் பெற்றுள்ளன. அழகர் மலைக் கடவுள் மீது காதல் கொண்ட பெண்ணொருத்தி தன் காதலை அவரிடம் கூறக் கிளியைத்தூது அனுப்புவதாக அமைகிறது நூல். நூலின் முதலில் கிளியின் பெருமைகள் சொல்லப்படுகின்றன. அடுத்துக் கோடைத் திருவிழாவில் அழகர் உலா வரும் அழகும், அப்பெருமானிடம் தலைவி தன் உள்ளம் இழந்த வரலாறும் சொல்லப்படுகின்றன. இறுதியாக அழகரிடம் தன் காதலைத் தெரிவித்து அவருடைய மாலை ஒன்றை வாங்கிவருமாறு கிளியிடம் கூறுவதாக நூல் அமைகிறது. சாமி கவிகாளருத்திரர் பாடிய பிள்ளைத்தமிழ், கவிகுஞ்சர பாரதியாரின் அழகர் குறவஞ்சி முதலிய சிற்றிலக்கியங்களிலும் இம்மலையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.

நூற்சிறப்புகள் தொகு

இந்நூலில் பல்வேறு புராண இதிகாசச் செய்திகள், பழக்க வழக்கங்கள், அழகர் கோயில் பூசை வழிபாட்டு முறைகள் ஆகியன இடம்பெற்றுள்ளன. இந்த நூலின் மூலத்தை 1905-ஆம் ஆண்டு மு. வேணுகோபாலசாமி நாயுடு பதிப்பித்தார். இந்நூலைப் பழைய ஏட்டு சுவடிகளுடன் ஒப்பிட்டு அரிய குறிப்புரைகளுடன் உ. வே. சாமிநாதையர் 1937-ஆம் ஆண்டு பதிப்பித்துள்ளார். [2]

உசாத்துணைகள் தொகு

  • பேராசிரியர் செ.இராதாகிருஷ்ணன்( பதிப்பாசிரியர்)- அழகர் கிள்ளை விடு தூது- முல்லை நிலையம்-2009.
  • தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்- பொதுத்தமிழ் மேல்நிலை முதலாம் ஆண்டு பகுதி-1,2009 பக்கம்-61.
  • மு.வரதராசன்,"தமிழ் இலக்கிய வரலாறு" சாகித்திய அகாதெமி வெளியீடு-1994.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகர்_கிள்ளை_விடு_தூது&oldid=3303087" இலிருந்து மீள்விக்கப்பட்டது