அழ. பகீரதன்

கவிஞர்
அழ. பகீரதன்
பிறப்பு(அகவை 61)
யாழ்ப்பாணம் Edit on Wikidata
பணிஎழுத்தாளர் edit on wikidata

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

யாழ்ப்பாணத்தில் பண்டத்தரிப்பு, காலையடியில் 16.05.1963 அன்று பிறந்தார். இவரது தந்தையார் ச. அழகரத்தினம் பிரபல சோதிடர். தாயார் சிவகெங்கா. ஆரம்பக் கல்வியைப் பண்ணாகம் வடக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையிலும் இடைநிலை, உயர் கல்வியை பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரியிலும் பெற்றவர். கலையியல் இளையர் (தமிழியல்) பட்டத்தை சென்னை மாநிலக் கல்லூரியில் கற்று சென்னைப் பல்கலைக்கழகம் மூலம் பெற்றார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 1991-92இல் எழுதுவினைஞராக ஒருவருடத்திற்கு மேல் கடமையாற்றி இலங்கை வங்கியில் 1992 செப்டம்பரில் இலங்கை வங்கியில் எழுதுவினைஞராய் இணைந்து பதவியுயர்வுகள் பெற்று உதவி முகாமையாளராக கடமையாற்றி 2018 இல் ஓய்வுபெற்றார். மகேந்திரன் சிவலதாவை மணம்புரிந்து திசாயினி, துவீபன், பிரபஞ்சன் என இவருக்கு மூன்று பிள்ளைகள்.

இதழியல் துறையில்

தொகு

தனது 13வது வயதில் 1976இல் தனது நண்பர்களின் ஒத்துழைப்புடன் 'கலைமுத்துக்கள்' கையெழுத்துப் பிரதியினை வெளிக்கொணர்ந்தார். அவ்விதழ் அப்போதைய மறுமலர்ச்சி மன்ற நூலகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது. 1979 இல் முற்றிலும் தன் சுயமுயற்சியாக 'ரதன் முத்து' என்ற கையெழுத்துப் பிரதியினை தன் கைப்பட உருவாக்கி ஓரிரு இதழ்கள் வெளிக்கொணர்ந்தார். 1980களின் ஆரம்ப வருடங்களில் பேரம் விஜயநாதன் துணையுடன் 'சிறுசுகள்' கையெழுத்து, தட்டெழுத்து இதழாக வெளிக்கொணர்ந்தார். இவ்விதழ் பிரதிகள் பணிப்புலம் அம்பாள் சனசமூகநிலையம், மறுமலர்ச்சி மன்றம், சங்கானை பொது நூலகம், காங்கேசன் துறை சீமந்து தொழிற்சாலை நூலகம், யாழ்ப்பாணம் பல்கலைக் கழக நூலகம் ஆகிய இடங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டன. ஏழு இதழ்கள் வரை வெளிவந்தன. மறுமலர்ச்சி மன்ற வெளியீடான காலைக் கதிர் றோணியோ இதழில் ஆசிரியராக 1989-90இல் பொறுப்பெடுத்து நான்கு இதழ்கள் வந்தன.[1],[2] கொழும்பு பிறைற் புக் சென்ர‍ர் வெளியிட்ட புது அறிவொளி சஞ்சிகையின் ஓரிதழில் (1990ல்) அதன் ஆசிரியராக இருந்தார். தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியிடுகின்ற தாயகம் இதழின் ஆசிரியர் குழுவில் 1996இலிருந்து பணியாற்றுவதோடு அதன் வளர்ச்சியில் கணிசமான பங்காற்றுவதோடு அதன் இதழ் வடிவமைப்பிலும் சிவ பரதன் ஆக பங்கெடுக்கின்றார். இலங்கை வங்கி யாழ்ப்பாணம் கலை இலக்கிய விளையாட்டுக் கழக வெளியீடாக வந்த ஊக்கி காலாண்டு இதழின் இணை ஆசிரியராக பணியாற்றினார். 2018இல் மூன்று இதழ்களே வெளிவந்துள்ள மக்கள் சக்தி பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றினார். இலங்கை வங்கி ஓய்வூதியர் சங்கம் -யாழ் மாவட்டம் வெளியிடும் நித்திய வங்கியாளர் மலரின் ஆசிரியர் குழு உறுப்பினர். த‍மிழகத்திலிருந்து வெளிவரும் வளரி கவிதை இதழின் வடிவமைப்பில் 2018 இலிருந்து பங்கெடுப்பதோடு 2019 இலிருந்து அதன் பொறுப்பாசிரியராக இணைந்துள்ளார். 2021இல் எங்கள் முற்றம் இதழின் ஆசிரியர்

கவிஞராக

தொகு

சிறு வயதிலிருந்து எழுதுவதி்ல் ஆர்வம் காட்டிய இவர் 1980களில் தன்னை கவிஞராக முன்னிறுத்தினார். சோதிடமலர், பூபாளம், வீரகேசரி, தினகரன், சிந்தாமணி, ஈழமுரசு, திசை, பொங்கும் தமிழமுது, மலரும் தமிழீழம், புது அறிவொளி, ஊக்கி போன்ற இதழ்களிலும் தமிழகத்தில் தம்ழ்ப்பணி, மகாகவி கவிதாமண்டலம் இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்த‍துடன் கூடுதலாக பல கவிதைகள் 'தாயகம்' இதழிலேயே பிரசுரமாகியுள்ளன.[3] புவிநேசன், விருத்தன், காலையூரான், சிவபரதன், ப.லதா, சத்தியவதனி போன்ற புனைபெயர்களில் எழுதியுள்ளார். யாழ்ப்பாணம், சுழிபுரம், கொக்குவில், இருபாலை, கொழும்பு தமிழ் சங்கம் ஆகிய இடங்களில் இடம்பெற்ற கவியரங்கங்களில் கவிதை வாசித்துள்ளார். இவரது கவிதைகளை தொகுத்து 1989இல் மறுமலர்ச்சி மன்றத்தில் கவிதா நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. 1997இல் இவரது தேர்ந்த கவிதைகள் 'அப்படியே இரு' எனும் தொகுப்பாக தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடாக வந்த‍து. தொடர்ந்து இப்படியும், எப்படியெனிலும், ஒப்புவதோ?, ஐப்பசியில் கவிதைத் தொகுப்புகள் வந்தன. வெளியீட்டுவிழாக்கள், அறிமுக நிகழ்வுகள் இடம்பெற்றதோடு தமிழகத்தில் சென்னையில் எழில் கலை மன்றத்தில் பேராசிரியர் மறைமலை இலக்குனாரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. வளரி, வார்ப்பு, காற்றுவெளி, எழுத்து மின் இதழ்களிலும் எழுதியுள்ளார்.

கட்டுரையாளனாய்

தொகு

கட்டுரைகள் எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டாவிடினும் தமிழகத்தில் உங்கள் நூலகம் இதழில் ஈழத்து நூல்கள் பற்றிய அறிமுக கட்டுரைகளை எழுதியுள்ளார். நெருஞ்சிமுள் என்ற ஈழத்து சினிமா பற்றிய ஒரு நோக்கு கட்டுரை புதுவிதி இதழில் பிரசுமாகியுள்ளது. மக்கள் சக்தி மூன்று இதழ்களிலும் இவர் எழுதிய ஆசிரியர் தலையங்க‍ங்கள் குறிப்பிடத்தக்கன. திண்டுக்கல் அநுக்கிரகா சமூகவியல் கல்லூரியில் கலைஞர் கருணாநிதியின் இலக்கியப் பணிகள் பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கில் 2018 டிசம்பரில் பங்குபெற்றியுள்ளார்.

சமூகப் பணியில்

தொகு

பண்டத்தரிப்பு, காலையடி, மறுமலர்ச்சி மன்றம் வளர்ச்சியில் கூடுதல் பங்கெடுத்ததோடு அதன் தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற பல பதவிகளை வகித்ததோடு தொடர்ந்தும் அதன் அறகட்டளை உறுப்பினராக உள்ளார். பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம், பணிப்புலம் கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் தலைவராகவும் இருந்துள்ளார். தேசிய கலை இலக்கியப் பேரவையின் வடமாகாண அமைப்பின் உறுப்பினரான இவர் யாழ்ப்பாணம் எழுத்தாளர் ஒன்றியத்தின் நிர்வாக சபையிலும் இருந்துள்ளார். சங்கானை, வலிமேற்கு கலாசார பேரவையின் நிர்வாக சபையிலும் இருந்துள்ளார். சுழிபுரம் வடக்கு யோகி. கார்த்திகேசு அறநெறிப் பாடசாலை நிர்வாகியாக தொடர்வதோடு விசு. க. விமலன் ஞாபகார்த்த தரும கரும‍ம் அமைப்பிலும் உள்ளார்.

வெளிவந்துள்ள நூல்கள்

தொகு
  • அப்படியே இரு - கவிதைத் தொகுப்பு -1997
  • இப்படியும் - கவிதைத் தொகுப்பு -2012
  • எப்படியெனிலும் - கவிதைத் தொகுப்பு -2013
  • அப்படியே இரு - கவிதைத் தொகுப்பு -2017 இரண்டாவது பதிப்பு
  • ஒப்புவதோ? - கவிதைத் தொகுப்பு - ஓகஸ்ட் 2019
  • ஐப்பசியில் - கவிதைத் தொகுப்பு - மே 2023

தொகுப்பு நூல்கள்

தொகு
  • மறுமலர்ச்சி - சிறுகதைத் தொகுப்பு - 2022

விருதுகள்

தொகு

வலிகாம‍ம் மேற்கு கலாசாரப் பேரவை (சங்கானை பிரதேச செயலகம்) இவருக்கு இலக்கியத்துக்காக கலை வாரிதி விருதினை 2017 இல் வழங்கி கௌரவித்த‍து.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்

தொகு
  1. https://issuu.com/thevasabathanujan/docs/kalaikathir_old_1
  2. https://issuu.com/thevasabathanujan/docs/kalaikathir_old_2
  3. நாளைய வாழ்வு யாரின் கையிலோ-அழ. பகீரதன் பரணிடப்பட்டது 2019-12-29 at the வந்தவழி இயந்திரம், தாயகம் 1983.06
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழ._பகீரதன்&oldid=4041569" இலிருந்து மீள்விக்கப்பட்டது