அவிலா நகரின் யோவான்

கார்மேல் சபையில் இணை நிறுவனருக்கு, பார்க்க சிலுவையின் புனித யோவான்

அவிலா நகரின் புனித யோவான் (எசுப்பானியம்: San Juan de Ávila) (6 சனவரி 1500 – 10 மே 1569) என்பவர் கத்தோலிக்க குருவும், எசுப்பானியா போதகரும், எழுத்தாளரும், இறைக்காட்சியாளரும், புனிதரும் ஆவார். திருச்சபையின் மறைவல்லுநர் எனத் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் இவரை 7 அக்டோபர் 2012இல் அறிவித்தார்.

அவிலா நகரின் புனித யோவான்
San Juan de Ávila (எசுப்பானியம்)
பிறப்பு(1500-01-06)6 சனவரி 1500
அல்மொடோவார் தெல் காம்போ, எசுப்பானியா
இறப்பு10 மே 1569(1569-05-10) (அகவை 69)
மொன்டீயா, எசுப்பானியா
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்க திருச்சபை
அருளாளர் பட்டம்12 நவம்பர் 1893 by திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
புனிதர் பட்டம்31 மே 1970 by திருத்தந்தை ஆறாம் பவுல்
திருவிழா10 மே
பாதுகாவல்அண்டலூசியா, எசுப்பானியா
செல்வாக்குக்கு உட்பட்டோர்அவிலாவின் புனித தெரேசா, கடவுளின் யோவான், பிரான்சிஸ் போர்ஜியா மற்றும் கிரானாடா நகரின் லூயிஸ்.

இளமை தொகு

அவிலா நகரின் யோவான், எசுப்பானியாவில் ஒரு பக்தி உள்ள செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர்.[1] 14ஆம் அகவையில் இவர் கல்வி கற்க சாலமான்கா பல்கலைக்கழகத்திற்கு அனுபப்பட்டார். ஒருவருடம் கழித்து வீடு திரும்பிய இவர் அங்கேயே கடும் தவ முயற்சிகளில் ஈடுபட்டார்.

 
அவிலா நகரின் யோவான் தவ முயற்சிகளில் ஈடுபட்ட குகை

பிரான்சிஸ்கன் சபையினரால் ஈர்க்கப்பட்ட இவர், அவர்களின் அறிவுரைப்படி இறையியலும், தத்துவமும் படித்தார். படித்துக்கொண்டிருக்கும் போதே இவரின் பெற்றோர் இறந்தனர். இவர் படித்து குருவான பின்பு இவரின் பெற்றோர் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்தில் இருந்த ஆலயத்தில் தனது முதல் திருப்பலியை நிறைவேற்றினார். பின்னர் தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்தார். பின்னர் மெக்சிக்கோவுக்கு சென்று மறைப்பணியாற்ற தன்னையே தயாரித்து வந்தார். 1527இல் இவர் நிகழ்த்திய திருப்பலியின்போது துலங்கிய பக்தியைக் கண்ட ஆயர் இவரை அண்டலூசியாவிற்குச் சென்று அங்கு மழுங்கிப்போன பக்தியைப் புதுப்பிக்க இவரைக் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தார்.

அண்டலூசியாவில் தொகு

அவர் தனது முதல் பிரசங்கத்தை அண்டலூசியாவில் ஜூலை 22, 1529 இல் போதித்த உடனடியாக இவரது புகழ் அங்கு பரவியது. அவர் அண்டலூசியாவில் பணியாற்றிய ஒன்பது ஆண்டுகளில், அவரது போதனைகளைக் கேட்க தேவாலயங்கள் மக்களால் நிரம்பி வழிந்தது. மக்களும் திருச்சபையும் சீர்திருத்தம் பெறவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், உயர் சமூகத்தின் நடத்தையையும் அவர் கண்டனம் செய்தார். இதனால் யோவான் செவீயா நகருக்குக் கொண்டுவரப்பட்டு, அங்கு சமய விசாரணை மன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார். இவர் செல்வத்தால் வரும் ஆபத்துக்களை மிகைப்படுத்திக் கூறினார் என்றும், செல்வந்தர்கள் விண்ணரசில் நுழைய முடியாது என்று போதித்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் யோவான் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் ஆதாரமற்றவை என்று விரைவிலேயே தெரிந்துபோனது. இறுதியாக, அவர் குற்றம் யாதும் புரியவில்லை என்று 1533இல் அறிவிக்கப்பட்டது.[2]

எசுப்பானியாவில் தொகு

எசுப்பானியாவில் குருக்கள் மற்றும் துறவியரின் வாழ்க்கைமுறையில் சீர்திருத்தம் கொண்டுவந்த சிறப்பும் இவருக்கு உண்டு.[2] இவர் நிறுவிய பல கல்லூரிகளில் இவரது சீடர்கள் இளைஞர்களுக்குக் கற்பிப்பதில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டனர்.

இவரது வாழ்க்கை மற்றும் போதனையால் ஈர்க்கப்படோருள் அவிலாவின் புனித தெரேசா, கடவுளின் யோவான், பிரான்சிஸ் போர்ஜியா மற்றும் கிரனாடா நகரின் லூயிஸ் ஆகியோர் உள்ளடங்குவர்.

திருத்தந்தை மூன்றாம் பவுல் 1538இல் பயேசா நகரில் ஒரு பல்கலைக்கழகத்துக்கு அடித்தளம் இட்டார். அந்த நிறுவனத்தின் முதல் அதிபராக அவிலாவின் யோவான் நியமிக்கப்பட்டார். குருத்துவக் கல்லூரிகளுக்கும் பிற கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக அப்பல்கலைக்கழகம் அமைந்தது. இயேசு சபையினர் கல்விக்கூடங்களுக்கும் அது ஒரு முன்னுதாரணமாயிற்று.

அவிலாவின் யோவான் இயேசு சபையினரால் பெரிதும் மதிக்கப்படுகிறார். இயேசு சபை எசுப்பானியாவில் கண்ட பெரு வளர்ச்சிக்கு இவர் எண்பித்த நட்பும் ஆதரவுமே காரணம் என்று கருதப்படுகிறது.[2]

இறப்பு தொகு

தமது முப்பதாம் வயதில் அவிலாவின் யோவான் அண்டலூசியாவில் போதகம் நிகழ்த்தச் சென்றார். ஒன்பது ஆண்டுகள் மறைப்பணி ஆற்றிய பின்னர் அவர் செவீயா நகருக்குத் திரும்பினார். தொடர்ந்து, எசுப்பானியாவிலேயே கோர்தொபா, கிரனாடா, பயேசா, மொன்டீயா மற்றும் சாஃப்ரா ஆகிய இடங்களில் மறைப்பணி ஆற்றினார்.

நாற்பது ஆண்டுகளாக ஈடுபட்டிருந்த கடின உழைப்புக் காரணமாக அவரது வாழ்க்கையின் இறுதி பதினெட்டு ஆண்டுகளும் அவர் நோயுற்றிருந்தார். அவர் மொன்டீயா நகரில் 1569ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் நாள், தமது 69ஆம் வயதில் உயிர்துறந்தார்.

புனிதர் பட்டம் தொகு

1759ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 8ஆம் நாள் திருத்தந்தை பதின்மூன்றாம் கிளமெண்ட் அவிலா யோவானை வணக்கத்துக்குரியவர் என்று அறிவித்தார். திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ அவருக்கு 1893, நவம்பர் 12ஆம் நாள் முத்திப்பேறு பெற்ற பட்டம் அளித்தார்.

திருத்தந்தை ஆறாம் பவுல் அவிலா யோவானை 1970, மே 31ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார்.

2012, அக்டோபர் 7ஆம் நாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவிலா யோவானுக்கு திருச்சபையின் மறைவல்லுநர் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்.[3]

படைப்புகள் தொகு

அவிலா யோவானின் எழுத்துப் படையல்கள் மாட்ரிட் நகரில் 1618, 1757, 1792, மற்றும் 1805 ஆகிய ஆண்டுகளில் தொகுக்கப்பட்டன. தாந்தீயி என்பவர் அவற்றைப் பிரஞ்சு மொழியில் பெயர்த்து பாரிஸ் நகரில் 1673இல் வெளியிட்டார். 1856-1881 கால கட்டத்தில் ஷேர்மர் என்பவர் அவிலா யோவானின் நூல்களை செருமானியத்தில் பெயர்த்து ரேகன்ஸ்புர்க் நகரில் வெளியிட்டார்.

அவிலா யோவானின் மிகச் சிறப்பான நூல்களாகக் கருதப்படுபவை இவை:

  • "Audi Fili" (மக்களே, கேளுங்கள் - ஆங்கிலப் பெயர்ப்பு: 1620; மறுபதிப்பு: இலண்டன் 1903). இந்நூலில் கிறித்தவ ஆன்ம வாழ்வு விவரிக்கப்படுகிறது.
  • "ஆன்மிகக் கடிதங்கள்" (ஆங்கிலப் பெயர்ப்பு: 1631; மறுபதிப்பு: இலண்டன் 1904). இந்நூல் அவிலா யோவான் தம் சீடர்களுக்கு எழுதிய கடிதத் தொகுப்பு ஆகும்.[4]

ஆதாரங்கள் தொகு

  1. Wilke 2003, ப. 963
  2. 2.0 2.1 2.2 Wilke 2003, ப. 964
  3. "Pope names 2 church doctors: preacher St. John of Avila and mystic St. Hildegard of Bingen". Washington Post. 7 October 2012 இம் மூலத்தில் இருந்து 23 அக்டோபர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191023124236/https://www.washingtonpost.com/national/on-faith/pope-names-2-church-doctors-preacher-st-john-of-avila-and-mystic-st-hildegard-of-bingen/2012/10/07/b42217b2-106b-11e2-9a39-1f5a7f6fe945_story.html. பார்த்த நாள்: 7 October 2012. 
  4. St. John of Ávila 1904
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவிலா_நகரின்_யோவான்&oldid=3232556" இலிருந்து மீள்விக்கப்பட்டது