ஆஸ்திரேலியக் கால்பந்தாட்டம்

(அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆஸ்திரேலியக் கால்பந்தாட்டம் (Australian rules football) என்பது அவுஸ்திரேலியாவில் உருவாகி விளையாடப்படும் ஒரு காற்பந்தாட்ட வகையாகும். ஒவ்வொன்றும் 18 வீரர்களைக் கொண்ட அணிகளுக்கிடையில் நீள்வட்ட மைதானத்தில் நடைபெறும் இவ்வாட்டத்தில் நீளுருண்டை வடிவப் பந்து பயன்படுகிறது.

ஆஸ்திரேலிய காற்பந்தாட்டம்

மைதானத்தில் இரு புறங்களில் நான்கு கம்பங்கள் வீதம் காணப்படும். எதிரணியின் நடு இரு கம்பங்களிடையே பந்தை அடித்துப் புள்ளிகள் பெறுவதே விளையாட்டின் நோக்கமாகும். ஒவ்வொரு ஆட்டமும் நான்கு காற்பகுதிகளாக விளையாடப்படுகிறது. நான்காவது காற்பகுதியின் முடிவில், அதாவது ஆட்ட முடிவில் அதிக புள்ளிகளைப் பெறும் அணி வெற்றி பெறும். புள்ளிகள் சமநிலையில் இருந்தால் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடியும்.

இந்த ஆட்டவகையில் பந்தைக் கொண்டுசெல்ல உடலின் எந்தப் பாகத்தையும் பயன்படுத்த முடியும். உதைத்தல், கைகளால் செலுத்துதல், பந்துடன் ஓடுதல் ஆகியன பந்தைக் கொண்டுசெல்லும் மூன்று முறைகளாகும்.

வரலாறு

தொகு

அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டம் எப்பொழுது தொடங்கப்பட்டது என்பது தொடர்பில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. 1853 அளவில் விக்ரோறியத் தங்க நிலங்களில் காற்பந்தாட்டம் ஆடப்பட்டமை தெரிய வந்துள்ளது. ஆயினும் 1858 இல் மெல்பேணில் அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டம் ஓர் ஒழுங்குமுறைக்குள் கொண்டுவரப்பட்டது. குளிர்காலங்களில் துடுப்பாட்டக்காரர்கள் ஆடுவதற்காகவே இந்த ஒழுங்குமுறை ஏற்படுத்தப்பட்டது. 1859 இல் மெல்பேண் காற்பந்தாட்டக் கழகத்தால் முதல்முறையாக காற்பந்தாட்ட விதிகள் அச்சிடப்பட்டன.

2008 இல் அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டத்தின் 150 ஆண்டு நிறைவு கொண்டாடப்படுகிறது.

ஆட்ட விதிகள்

தொகு

விளையாடப்படும் மைதானமும் பயன்படும் பந்தும் நீள்வட்ட வடிவமானவை. ஒவ்வொரு அணி சார்பாகவும் ஆகக் கூடியது 18 வீரர்களே களமிறங்கலாம். மேலதிகமாக நான்கு வீரர்கள் ஆட்டத்தின் இடையே மாற்றம் செய்யப்படலாம். அவ்வகையில் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ஒவ்வொரு அணி சார்பாகவும் 22 வீரர்கள் இருப்பார்கள்.

ஆட்டம் தொடங்குகையில் வீரர்கள் மைதானத்தின் எப்பகுதியிலும் நிற்கலாம். ஆனால் ஆட்டந் தொடங்கும் போது மைதானத்தின் நடுப்பகுதியிலிருந்து 50 மீற்றர் தூரத்துக்குள் ஒவ்வோர் அணி சார்பிலும் நான்கு வீரர்கள் மட்டுமே நிற்கலாம்.