அ. வைத்திலிங்கம்
அம்பலவாணர் வைத்திலிங்கம் (Ambalavanar Vaidialingam, 25 மே 1915 – 5 ஆகத்து 1988), இலங்கைத் தமிழ் இடதுசாரி அரசியல்வாதியும், தொழிற்சங்கவாதியும், கல்விமானும், கணித ஆசிரியரும் ஆவார்.[1]
அ. வைத்திலிங்கம் | |
---|---|
1985 இல் அ. வைத்திலிங்கம் | |
பிறப்பு | அம்பலவாணர் வைத்திலிங்கம் 25 மே 1915 அராலி மேற்கு, வட்டுக்கோட்டை, இலங்கை |
இறப்பு | 5 ஆகத்து 1988 | (அகவை 73)
தேசியம் | இலங்கைத் தமிழர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | யாழ்ப்பாணக் கல்லூரி, கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரி, இம்மானுவேல் கல்லூரி, கேம்பிரிட்ச் |
பணி | ஆசிரியர் |
அறியப்படுவது | இடதுசாரி அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி |
பெற்றோர் | அம்பலவாணர், சிவகாமி |
வாழ்க்கைத் துணை | அன்னபூரணி |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுவைத்திலிங்கம் 1915 மே 25 இல் யாழ்ப்பாண மாவட்டம், வட்டுக்கோட்டையில் அராலி என்ற ஊரில் வைத்திலிங்கம் அம்பலவாணர் (அராலி வடக்கு-மேற்கு விதானை), சிவகாமி முத்துக்குமாரு ஆகியோருக்கு மூன்றாவது மகவாகப் பிறந்தார்.[2] பொன்னம்பலம், சரவணமுத்து ஆகியோர் இவருக்கு மூத்தவர்கள்.[2] இளவயதிலேயே பெற்றோர்களை இழந்தார். தாய் மாமன் மரு. சங்கரப்பிள்ளையின் பராமரிப்பில் வளர்ந்தார்.[2] தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணக் கல்லூரியில் பயின்று, அங்கிருந்து கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரி சென்று கணிதத்தில் சிறப்புப் பட்டம் பெற்றார்.[2] பல்கலைக்கழகத்தில் பகுதி-நேர விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.[3] தொடர்ந்து புலமைப் பரிசில் கிடைக்கப்பெற்று, 1936 இல் இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தின் இம்மானுவல் கல்லூரியில் கணிதத்தில் உயர் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார்.[2]
அரசியல் செயற்பாடு
தொகுஇங்கிலாந்தில் ஆரம்பகால அரசியல்
தொகுபிரித்தானியாவில் கல்வி கற்ற வேளை அங்கு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இயக்கங்களை அவதானித்தார்.[1] இந்திய விடுதலைக்காக போராடிய பல இளைஞர்களை சந்தித்தார். குறிப்பாக ரஜனி பாமிதத், கிருஷ்ணமேனன், பார்வதி கிருஷ்ணன், யோதி பாசு, பெரோசு காந்தி போன்ற தோழர்களுடன் இணைந்து கொண்டார்.[2] 'பிரித்தானியா வெளியேறு' என்ற இயக்கத்தில் மேனனுடன் இணைந்து செயற்பட்டார். "Left Book Club" என்ற அமைப்பில் சேர்ந்து கார்ல் மார்க்சு, லெனின், யோசப் இசுட்டாலின் எழுதிய பொதுவுடமைத் தத்துவ நூல்களைப் படித்தார்.[2] இலங்கையில் இடதுசாரி அரசியலையும், தொழிற்சங்க நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கும் பொருட்டு, இலண்டனில் தனது சக நண்பர்களான பொன். கந்தையா, பீட்டர் கெனமன் ஆகியோருடன் விவாதித்தது மட்டுமல்லாமல், மூவரும் பிரித்தானிய பொதுவுடைமைக் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டனர்.[1][2][4][5]
இலங்கையில் அரசியல்
தொகுபடிப்பை முடித்து 1939-ஆம் ஆண்டளவில் நாடு திரும்பிய வைத்திலிங்கம், முழுநேர அரசியல் செயற்பாட்டாளராக மாறினார்.[1][2] தொடக்கத்தில் எஸ். ஏ. விக்கிரமசிங்கவுடன் இணைந்து இலங்கையின் முதலாவது இடதுசாரி இயக்கமான லங்கா சமசமாஜக் கட்சியில் பணியாற்றினார்.[1][2] லியோன் திரொட்ஸ்கியின் கம்யூனிச சித்தாந்தத்தை சமசமாசக் கட்சி உள்வாங்கிக் கொண்டதை அடுத்து, இலங்கை இடதுசாரி இயக்கமும் பிளவடைந்தது.[4] வைத்திலிங்கம் "சமசமாஜியிசமும் முன்னோக்கி செல்லும் வழியும்" என்ற சிறு பரப்புரை நூலை எழுதி வெளியிட்டார். இலங்கையில் இடதுசாரி இயக்கத்தைப் பிளவுபடுத்தும் முயற்சிகளை அந்நூலில் அவர் கண்டித்து எழுதினார்.[2] எஸ். ஏ. விக்கிரமசிங்க, ஆரியவன்ச குணசேகர, வைத்திலிங்கம், பீட்டர் கெனமன், எம். ஜி. மெண்டிஸ், பொன். கந்தையா, மு. கார்த்திகேசன், கே. இராமநாதன் போன்றோர் இணைந்து 1940-இல் ஐக்கிய சோசலிசக் கட்சியை ஆரம்பித்தனர்.[2] தொழிற் சங்கங்களை நிறுவினர். அன்றைய பிரித்தானிய அரசு 1942 இல் இக்கட்சியைத் தடைசெய்தது.[2][4] 1943-இல் விக்கிரமசிங்க, எம். ஜி. மென்டிசு போன்றோர் சமசமாசக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.[4] வைத்திலிங்கமும் வெளியேறினார். பின்னர் இவர்கள் 1943 சூலை 3 இல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கினர்.[4] இக்கட்சியின் கீழ் செயற்பட்ட இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளராக வைத்திலிங்கம் இருந்து செயற்பட்டார்.[1][2] கட்சியின் மத்திய குழுவிலும், அரசியற் குழுவிலும் தொடக்க காலம் முதல் 1984 இல் இளைப்பாறும் வரை உறுப்பினராக இருந்து செயற்பட்டார்.[1][2]
யாழ்ப்பாணத்தில் அரசியலும் ஆசிரியப் பணியும்
தொகுகட்சியின் முழு நேர ஊழியராகச் செயற்பட்ட வைத்திலிங்கம் இலங்கையின் வடக்கே கட்சியைப் பலப்படுத்துவதற்காக 1950 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டார்.[2] யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 1951 முதல் 1958 வரை கணித ஆசிரியராகப் பணியாற்றினார். இவரது உழைப்பின் விளைவாக வடமாகாண ஆசிரியர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு தொழிற்சங்கமாகப் பதிவு செய்யப்பட்டது. ஆசிரியர்களுக்கென இடமாற்றசபை ஒன்றும் தோற்றுவிக்கப்பட்டது.[2]
இனப்பிரச்சினை தீவிரமடைந்த காலத்தில் தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. வட இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி பிரதேச சுயாட்சி முறையை வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற கட்சி மாநாட்டில் முன்மொழிந்தது. இத் தீர்மானம் 1955இல் மாத்தறையில் இடம்பெற்ற கட்சியின் தேசிய காங்கிரசில் அங்கீகரிக்கப்பட்டது.[1]
1958 இல் உரும்பிராய் இந்துக் கல்லூரியின் அதிபராகப் பதவி உயர்வு பெற்று அங்கு 1970 வரை பணியாற்றினார்.[2] இக்காலத்தில் அவர் மலேசியா, சிங்கப்பூர் சென்று பணம் திரட்டி பாடசாலைக்கென புதிய கட்டடிடங்களை நிறுவினார்.[1] வடமாகாண ஆசிரியர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து பணியாற்றினார்.
தேர்தல் அரசியலில்
தொகுகம்யூனிஸ்டுக் கட்சியின் கொள்கைகளையும் நோக்கங்களையும் யாழ்ப்பாண மக்களுக்குப் பரப்பும் நோக்கில் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் 1952,[6] 1956,[7] 1960 மார்ச்,[8] 1960 சூலை[9] ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[2][3]
குடும்பம்
தொகுவைத்திலிங்கம் தனது தாய்மாமனார் மகள் அன்னபூரணியை 1943 இல் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு சிவகாமி அம்பலவாணர், கோபால் சங்கரப்பிள்ளை, லீலா தவகுமாரன், விமலா மணிவாசகன், அம்பிகா பிரபாகரன், மோகன் சுப்பிரமணியம் ஆகியோர் பிள்ளைகள் ஆவர். சிறிது காலம் சுகவீனமுற்றிருந்த வைத்திலிங்கம் 1988 ஆகத்து 5 இல் யாழ்ப்பாணத்தில் காலமானார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 தோழர் வைத்திலிங்கம் அவர்கள் தனது நூறாவது பிறந்த தினமன்று பிரித்தானியாவில் நினைவு கூரப்படுகின்றார், ரி. குகதாஸ், செப்டம்பர் 1, 2015
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 2.18 2.19 தாரகை ஒளி, நினைவு மலர்
- ↑ 3.0 3.1 கொண்ட கொள்கைக்காகச் சலியாது உழைப்பவர், ஐ. ஆர். அரியரத்தினம், மல்லிகை, சூன் 1985
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் 65 ஆண்டுகள் - ஒரு மீள்பார்வை, கீற்று
- ↑ இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தனது 66 ஆவது ஆண்டினுள் காலடி வைக்கின்றது!
- ↑ "RESULTS OF PARLIAMENTARY GENERAL ELECTION, 1952" (PDF). 2015-09-24. Archived from the original (PDF) on 2022-08-19. பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help) - ↑ "RESULTS OF PARLIAMENTARY GENERAL ELECTION, 1956" (PDF). 2015-09-24. Archived from the original (PDF) on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
- ↑ "RESULTS OF PARLIAMENTARY GENERAL ELECTION, 1960 March" (PDF). 2015-07-12. Archived from the original (PDF) on 12 July 2015. பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.
- ↑ "RESULTS OF PARLIAMENTARY GENERAL ELECTION, 1960 July" (PDF). 2015-09-24. Archived from the original (PDF) on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.