ஆக்சே நடவடிக்கை

இராணுவ நடவடிக்கை

ஆக்சே நடவடிக்கை (Operation Achse) அல்லது அலாரிக் நடவடிக்கை (Operation Alaric) என்பது என்பது இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியில் நடைபெற்ற ஒரு படைத்துறை நடவடிக்கை. இத்தாலியப் போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் நாசி ஜெர்மனியின் படைகள் தங்களது முன்னாள் கூட்டாளிகளான இத்தாலியப் படைகளிடமிருந்து ஆயுதங்களைப் பறித்து அவர்களை நிராயுதபாணிகளாக்கின.

பாசிச சர்வாதிகாரி முசோலினி தலைமையிலான இத்தாலி அச்சு நாடுகள் கூட்டணியில் பல ஆண்டுகள் இடம் பெற்றிருந்தது. நேச நாட்டுப் படைகள் இத்தாலி மீது படையெடுத்த போது அந்நாட்டு ஆட்சியாளர்கள் முசோலினியைப் பதவி நீக்கம் செய்தனர். பின்பு நேச நாட்டுப் படைகளிடம் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டு அச்சுக் கூட்டணியிலிருந்து விலகினர். செம்படம்பர் 8, 1943ல் இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. இத்தாலி அணி மாறிவிடும் என்பதை முன்கூட்டியே கணித்திருந்த ஜெர்மானியர்கள் உடனடியாக இத்தாலியினை ஆக்கிரமிக்கும் முயற்சிகளில் இறங்கினர். இத்தாலியின் ஆக்கிரமிப்பில் இருந்த தெற்கு பிரான்சு, பால்கன் பகுதிகளில் ஜெர்மானியப் படைகள் நுழைந்து அங்கிருந்த இத்தாலிய வீரர்களைக் கைது செய்தன. இத்தாலிக்குள்ளும் பல கூடுதல் ஜெர்மானிய டிவிசன்கள் நுழைந்தன.

இத்தாலியப் படைகள் நேச நாடுகளுக்குத் துணையாக போரிடாமல் செய்யும் வண்ணம் அவற்றின் ஆயுதங்களை ஜெர்மானியர்கள் பறிமுதல் செய்தனர். சுமார் பத்து லட்சம் இத்தாலிய வீரர்கள் நிராயுதபாணிகளாக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் கைப்பற்றப்பட்டன. இத்தாலிய வீரர்களுள் சுமார் இரண்டு லட்சம் பேர், ஜெர்மனிக்கு ஆதரவாக போரில் ஈடுபட முன்வந்தனர். இவர்களும் பாசிசத்தை பின்பற்றுபவர்களும் முசோலினியின் நாடுகடந்த இத்தாலிய சமூக அரசின் ஆதரவாளர்களும் அடக்கம். எஞ்சியோர் ஜெர்மனியின் வேலை முகாம்களில் அடைக்கப்பட்டனர். 1945ல் ஜெர்மனி சரணடையும் வரை இத்தாலியில் அச்சுப் படைகளுக்கும் நேசப் படைகளுக்கும் தொடர்ந்து சண்டை நடைபெற்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்சே_நடவடிக்கை&oldid=1361119" இலிருந்து மீள்விக்கப்பட்டது