இத்தாலி-நேசநாட்டுப் படைகள் இடையே போர் நிறுத்தம்

இரண்டாம் உலகப் போரின் போது அச்சு நாடுகளில் ஒன்றான இத்தாலிக்கும் நேச நாட்டுப் படைகளுக்கும் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் செப்டம்பர் 3, 1943ல் கையெழுத்தானது; செப்டம்பர் 8ம் தேதி வெளிப்படையாக அறிவிக்கபப்ட்டது. நேச நாட்டுப் படைகள் தெற்கு இத்தாலி மீது படையெடுத்த போது ஏற்பட்ட இவ்வொப்பந்தத்தின் மூலம் இத்தாலி அச்சுக் கூட்டணியிலிருந்து வெளியேறி நேச நாடுகளிடம் சரணடைந்தது. இது செப்டம்பர் 8 போர் நிறுத்தம் எனவும், கசீபிலி ஒப்பந்தம் (ஒப்படந்தம் முடிவான இடத்தைப் பின்பற்றி) எனவும் அறியப்படுகிறது.

சர்வாதிகாரி முசோலினியின் தலைமையில் பாசிச இத்தாலி அச்சு நாடுகள் கூட்டணியில் பல ஆண்டுகளாக இடம் வகித்து வந்தது. நாசி ஜெர்மனிக்குத் துணையாக இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டது. ஆனால் வடக்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட தோல்வியால் இத்தாலிய மக்களிடையே முசோலினியின் செல்வாக்கு சரிந்தது. நேச நாட்டுப்படைகள் இத்தாலியின் ஒரு பகுதியான சிசிலி மீது படையெடுத்த போது, இத்தாலிய ஆளும் பாசிச கட்சித் தலைவர்கள் ஜூலை 1943ல் முசோலினியை பதவி நீக்கம் செய்தனர். இத்தாலியின் மன்னர் மூன்றாம் விக்டர் எமானுவேலின் ஆதரவாளர்கள் பின் ஆட்சியைக் கைப்பற்றினர். ஆனால் அவர்கள் உடனடியாகக் கூட்டணி மாறவில்லை. நேச நாட்டுத் தரப்புடன் சரணடைவுப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர். இப்பேச்சு வார்த்தைகள் நடுநிலை நாடான போர்த்துகலில் இரகசியமாக நடைபெற்றன. இத்தாலி கட்சி மாறிவிடும் என்பதை ஊகித்த இட்லர் பல கூடுதல் தரைப்படை டிவிசன்களை இத்தாலிக்கு அனுப்பினார்.

ஆகஸ்ட் 1943 முழுவதும் நீடித்த பேச்சுவார்த்தைகளின் பலனாக இத்தாலி சரணடைய ஒப்புக்கொண்டது. செப்டம்பர் 3ம் தேதி எச். எம். எசு நெல்சன் போர்க்கப்பலில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்தாலி சார்பில் ஜெனரல் ஜுசேப்பே காஸ்தெலானோவும் நேச நாடுகள் தரப்பில் ஜெனரல் வால்ட்டர் பெடெல் ஸ்மித்தும் அதில் கையெழுத்திட்டனர். ஆனால் உடனடியாக இச்செய்தி உலகுக்கு அறிவிக்கப்படவில்லை. அதேநாள் இத்தாலி மீது நேச நாட்டுப் படையெடுப்பு நிகழ ஏற்படாகியிருந்தது. என்று நேச நாட்டுப் படைகள் இத்தாலியின் நடுப்பகுதியில் தரையிறங்குகின்றனவோ அன்றிலிருந்து போர் நிறுத்தம் நடமுறைக்கு வரும் என்று ஏற்பாடாகியிருந்தது. அதன்படி செப்டம்பர் 8ம் தேதி சலேர்னோவில் நேச நாட்டுப் படைகள் தரையிறங்கிய போது போர் நிறுத்தம் உலகிற்கும் இத்தாலியப் படைகளுக்கும் அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 8, 1943ல் இத்தாலியின் அரசுத் தலைவரும் பிரதமருமான மார்சல் பியெத்ரோ படோகிலியோ இதனை இத்தாலிய தேசிய வானொலியில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து நேச நாட்டு தெற்குத் தலைமைத் தளபதி டுவைட் டி. ஐசனாவர் இதனை அல்ஜீர்ஸ் வானொலியில் அறிவித்தார்.

இதனை முன்னரே எதிர்பார்த்த ஜெர்மானியப் படைகள் ஆக்சே நடவடிக்கை மூலம் இத்தாலிய படைப்பிரிவுகளை முடக்கி அவற்றை நிராயுதபாணிகளாக்கினர். இத்தாலியின் கட்டுப்பாட்டிலிருந்த ஐரோப்பிய பகுதிகள் அனைத்தையும் ஜெர்மானியப் படைகள் ஆக்கிரமித்தன. போர் நிறுத்தம் திடீரென்று அறிவிக்கப்பட்டதால் இத்தாலியப் படைகள் மற்றும் மக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது. பெரும்பாலான இத்தாலியப் படைப்பிரிவுகள் ஜெர்மானியர்களால் முடக்கப்பட்டுவிட்டன. மேலும் பல படைப்பிரிவுகளும், இத்தாலிய வான்படை மற்றும் கப்பற்படையும் நேச நாடுகள் பக்கம் சேர்ந்து விட்டன. பாசிச கட்சியின் ஆதரவாளர்கள் பலர் தங்கள் நாட்டின் சரணடைவை ஏற்க மறுத்தனர். அவர்களைக் கொண்டு ஜெர்மனி முசோலினியின் தலைமையில் இத்தாலிய சமூக அரசு என்ற பெயரில் ஒரு கைப்பாவை அரசை உருவாக்கியது. இத்தாலியில் உள்நாட்டுப் போர் மூண்டு ஜெர்மனி மற்றும் நேச நாட்டு ஆதரவாளர்கள் என இரு அணிகள் மோதிக்கொண்டன.


மேற்கோள்கள் தொகு

  • Aga Rossi, Elena (1993). Una nazione allo sbando. Bologna. 
  • Bianchi, Gianfranco (1963). 25 luglio, crollo di un regime. Milan. 
  • Marchesi, Luigi (1969). Come siamo arrivati a Brindisi. Milan. 

வெளி இணைப்புகள் தொகு