வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனை

இரண்டாம் உலகப் போரில் வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனை (North African Front) என்பது வடக்கு ஆப்பிரிக்காவில் துனிசியா, அல்ஜீரியா, மொரோக்கோ, லிபியா மற்றும் எகிப்து ஆகிய பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. இது நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் ஒரு பகுதியாகும். ஜூன் 10, 1940 - மே 16, 1943 காலகட்டத்தில் இங்கு அச்சுப் படைகளுக்கும் நேச நாட்டுப் படைகளுக்கும் இடையே நிகழ்ந்த மோதல்கள் வடக்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடர் (North African Campaign) என்றழைக்கப்படுகின்றன.

வடக்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடர்
நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் பகுதி

குரூசேடர் நடவடிக்கையில் அழிக்கப்பட்ட ஒரு ஜெர்மானிய டாங்கு (நவம்பர் 27, 1941)
நாள் ஜூன் 10, 1940 – மே 16, 1943
இடம் லிபியா, எகிப்து, அல்ஜீரியா, துனிசியா, மொரோக்கோ
நேச நாட்டு வெற்றி; அச்சுப் படைகள் இத்தாலிக்குப் பின்வாங்கின
பிரிவினர்
நேச நாடுகள்:
 ஐக்கிய இராச்சியம்
 இந்தியா
 ஆத்திரேலியா
 தென்னாப்பிரிக்கா
 நியூசிலாந்து
 ஐக்கிய அமெரிக்கா
 சுதந்திர பிரான்ஸ்
போலந்து போலந்து
செக்கஸ்லோவாக்கியா
 கிரேக்க நாடு
அச்சு படைகள்:
 இத்தாலி
  • இத்தாலி இத்தாலிய லிபியா

 ஜெர்மனி
பிரான்சு விஷி பிரான்சு

தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் ஹரால்ட் அலெக்சாந்தர்
ஐக்கிய இராச்சியம் கிளாட் ஆச்சின்லெக்
ஐக்கிய அமெரிக்கா டுவைட் டி. ஐசனாவர்
ஐக்கிய இராச்சியம் ஆர்ச்சிபால்டு வேவல்
இத்தாலி பியேத்ரோ படொக்லியோ
நாட்சி ஜெர்மனி யூர்கென் வோன் ஆர்ணிம்Surrendered
இத்தாலி யூகோ காவெல்லெரோ
நாட்சி ஜெர்மனி ஆல்பெர்ட் கெஸ்செல்ரிங்
இத்தாலி ஜியோவானி மெஸ்சேSurrendered
நாட்சி ஜெர்மனி எர்வின் ரோம்மல்
பிரான்சு ஃபிரான்சுவா டார்லான்
இழப்புகள்
~2,38,558 பேர்[nb 1] 6,20,000[1]–9,50,000 பேர்[4][nb 2]
8,000 வானூர்திகள்[4]
6,200 பீரங்கிகள், 2,500 டாங்குகள் மற்றும் 70,000 போக்குவரத்து ஊர்திகள்[4]

அச்சு நாடுகள் தரப்பில் முதலில் இத்தாலியும் பின் அதனுடன் நாசி ஜெர்மனியும் பங்கேற்றன. நேச நாடுகள் தரப்பில் பிரிட்டனும் அதன் பேரரசில் இடம் பெற்றிருந்த நாடுகளும் பங்கேற்றன. 1941 முதல் ஐக்கிய அமெரிக்காவும் நேச நாட்டுக் கூட்டணியில் நேரடியாக இடம்பெற்றது. இப்போர்முனையில் மோதல்கள் மேற்குப் பாலைவனப் போர்த்தொடர் மற்றும் துனிசியப் போர்த்தொடர் என இரு பெரும் கட்டங்களாக நடைபெற்றன. இவ்விரு போர்த்தொடர்களைத் தவிர வடக்கு ஆப்பிரிக்காவில் அமெரிக்க படையிறக்க நிகழ்வான டார்ச் நடவடிக்கை மற்றும் நடுநிலக்கடலில் நிகழ்ந்த பல வான்படை மற்றும் கடற்படை சண்டைகளும் வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையின் பகுதியாகக் கருதப்படுகின்றன.

மூன்று ஆண்டுகள் போருக்குப்பின் வடக்கு ஆப்பிரிக்காவில் அச்சு படைகள் தோற்கடிக்கப்பட்டு சரணடைந்தன. இத்தோல்வியினால் வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்திருந்த இத்தாலிய காலனிகள் நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் வந்தன. வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் அச்சு நாடுகளுக்கு ஏற்பட்ட படை மற்றும் தளவாட இழப்புகள் பிற களங்களில் அவற்றின் வெற்றி வாய்ப்பினைப் பாதித்தன. வடக்கு ஆப்பிரிக்காவில் அச்சுப் படைகள் சரணடைந்தபின்னர் அப்பகுதி இத்தாலி மீதான நேச நாட்டுப் படையெடுப்புக்குக்குத் தளமாகப் பயன்படுத்தப்பட்டது.

பின்புலம்

தொகு
 
போர் துவங்கும் முன் வடக்கு ஆப்பிரிக்காவில் அரசியல் நிலவரம்

இரண்டாம் உலகப் போருக்கு முன் வடக்கு ஆப்பிரிக்காவின் பெரும்பான்மையான நாடுகள் ஐரோப்பிய நாடுகளின் காலனிகளாக இருந்தன. துனிசியா, மொரோக்கொ மற்றும் அல்ஜீரியா பிரான்சின் காலனிகளாகவும், லிபியா இத்தாலியின் காலனியாகவும் இருந்தன. எகிப்து பிரித்தானியப் பேரரசுடன் செய்திருந்த ராணுவ ஒப்பந்தங்களின் படி அங்கு பிரித்தானியப் படைகள் நிறுத்தப்பட்டிருந்தன. பிரிட்டனும் பிரான்சும் நேச நாடுகள் அணியிலும் இத்தாலி அச்சு நாடுகள் அணியிலும் இடம்பெற்றிருந்தன.

செப்டம்பர் 1939ல் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் மூண்டது. 1940 ஜூன் மாதத்தில் மேற்கு ஐரோப்பாவிலிருந்த பெரும்பான்மையான நேச நாடுகள் அச்சுப் படைகளால் தோற்கடிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டன. இதனால் அவற்றின் ஆசிய-ஆப்பிரிக்க காலனிகளில் ஒரு அதிகார வெற்றிடச்சூழல் உருவானது. இதனை பயன்படுத்திக் கொண்டு தன ஆப்பிரிக்கக் காலனிகளை விரிவுபடுத்த விரும்பினார் இத்தாலியின் பாசிச சர்வாதிகாரி முசோலினி. மேலும் ஐரோப்பாவில் அச்சு நாடுகளுக்கு கிட்டிய அனைத்து வெற்றிகளும் நாசி ஜெர்மனியின் படைகளுக்கே கிட்டியிருந்தன. எனவே தன் படைகளாலும் வெற்றி பெற இயலும் என்பதைக் காட்ட விரும்பினார். இதை வடக்கு ஆப்பிரிக்காவில் நிகழ்த்திக்காட்டத் தயாராகினார்.

ஆப்பிரிக்கா ஆசிய கண்டங்களுக்கிடையே அமைந்திருந்த சூயசு கால்வாய் பிரித்தானியப் பேரரசின் நிருவாகத்துக்கும் வர்த்தகத்துக்கும் மிக இன்றியமையாத ஒன்றாக இருந்தது. இதன் மூலமாகத் தான் பிரித்தானிய இந்தியாவும் பிற கிழக்காசிய காலனிகளும் பிரிட்டன் தீவுகளுடன் தொடர்பிலிருந்தன. எகிப்தைக் கைப்பற்றினால் சூயசு கால்வாயினைக் கட்டுப்படுத்தலாம், பிரிட்டன் தீவுகளை அதன் கிழக்காசிய காலனிகளிடமிருந்து துண்டித்து விடலாம் என்பது அச்சு நாடுகளின் மேல்நிலை உத்தி. இக்காரணங்களால் வடக்கு ஆப்பிரிக்க முனையில் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானது.

1940-42: மேற்குப் பாலைவனப் போர்த்தொடர்

தொகு

ஜூன் 10, 1940ல் இத்தாலி பிரான்சு மற்றும் பிரிட்டன் மீது போர் சாற்றியது. உடனடியாக எகிப்திலிருந்த பிரித்தானியப் படைகள் லிபியாவினுள் திடீர்த்தாக்குதல்கள் தொடுக்கத் தொடங்கின. ஆனால் ஜூலை மாதம் பிரான்சு சரணடைந்தபின் எகிப்து-லிபிய எல்லையில் இத்தாலியப் படைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் பிரித்தானிய திடீர்த்தாக்குதல்கள் நிறுத்திக் கொள்ளப்பட்டன. எகிப்து மீது படையெடுக்கத் தயாராகுமாறு லிபியாவிலிருந்த இத்தாலியப் படைகளுக்கு முசோலினி உத்தரவிட்டார். இதன் மூலம் மேற்குப்பாலைவனப் போர்த்தொடர் தொடங்கியது. இதில் மூன்று சுற்றுகளாக அச்சுப் படைகள் எகிப்து மீது படையெடுத்தன. மூன்று முறையும் அவற்றின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. இரு தரப்பினரும் கிழக்கு மேற்காக பலமுறை முன்னேறிப்-பின்வாங்கினர்.

முதல் சுற்று

தொகு

செப்டம்பர் 9, 1940ல் எகிப்து மீதான முதல் இத்தாலியத் தாக்குதல் தொடங்கியது. இத்தாலியப் படைகள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் பயிற்சி, போர்த்திறன், ஆயுத பலம், தளவாட வழங்கல் ஆகியவற்றில் பிரிட்டானியப் படையினை விட மிகவும் பின்தங்கி இருந்தது. இத்தாலியப் படைப்பிரிவுகள் மெல்ல எகிப்துக்குள் முன்னேறின. 7 நாட்களில் எதிர்ப்பின்றி 65 மைல்கள் முன்னேறிய இத்தாலியப் படைப்பிரிவுகள் தளவாடப் பற்றாக்குறையால் முன்னேற்றத்தை நிறுத்திக் கொண்டன. இவ்வாறு இந்த படையெடுப்பில் பெரிய அளவு மோதல்கள் நிகழவில்லை. எகிப்தில் அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கு இத்தாலியப் படைகள் தயாராகிக் கொண்டிருந்த போதே முசோலினி கிரீசு மீது படையெடுத்தார். இதனால் எகிப்து படையெடுப்புக்கு முக்கியத்துவம் குறைந்து போனது.

 
காம்ப்பசு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட இத்தாலியப் போர்க்கைதிகள்

இந்த இடைவெளியினையும் மெத்தனத்தையும் பயன்படுத்திக் கொண்ட பிரிட்டானியப் படைகள் டிசம்பர் 1940ல் காம்ப்பசு நடவடிக்கை என்று பெயரிடப்பட்ட எதிர்த்தாக்குதலைத் தொடங்கின. இந்த முயற்சி ஆரம்பத்தில் ஒரு சிறு ஐந்துநாள் திடீர்த்தாக்குதலாக மட்டுமே திட்டமிடப்பட்டது. எகிப்திலிருந்து இத்தாலியப் படைகளை விரட்ட வேண்டுமென்பது மட்டும் இதன் குறிக்கோளாக இருந்தது. டிசம்பர் 8ம் சிடி பர்ரானி என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த இத்தாலியப் பாசறைகளின் மீது பிரிட்டானியப் படைகள் தங்கள் தாக்குதலைத் தொடங்கின. பிரிட்டானிய வான்படை இத்தாலிய வான்படைத் தளங்களின் மீது குண்டுவீசி அங்கு நிறுத்தப்பட்டிருந்த பல வானூர்திகளை அழித்தது. நிலைகுலைந்து போன இத்தாலியப் படைப்பிரிவுகள் வேகமாக லிபியாவை நோக்கிப் பின்வாங்கத் தொடங்கின. எகிப்திலிருந்து அவற்றை விரட்டியதோடு நிற்காத பிரிட்டானியப் படைகள் லிபிய எல்லையைத் தாண்டி தங்கள் விரட்டலைத் தொடர்ந்தன.

ஏராளமான இத்தாலிய வீரர்களும் அவர்கள் போட்டுவிட்டு ஓடிய தளவாடங்களும் பிரிட்டானியப் படைகளிடம் சிக்கிக் கொண்டன. சாதாரண திடீர்த்தாக்குதலாகத் தொடங்கிய காம்ப்பசு நடவடிக்கை பிரிட்டானியர்களுக்கு ஒரு வெற்றிகரமான படையெடுப்பாக அமைந்தது. அடுத்த இரண்டு மாதங்களில் பார்டியா, டோப்ருக், குஃப்ரா ஆகிய இடங்களும் அவைகளால் கைப்பற்றப்பட்டன. லிபியாவினுள் 800 கிமீ வரை அவை ஊடுருவி விட்டன. பெப்ரவரி மாதம் அச்சு நாடுளால் தாக்கப்பட்டிருந்த கிரீசு நாட்டுக்கு உதவி செய்ய வேண்டி பிரிட்டானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் லிபியாவில் படை முன்னேற்றத்தை நிறுத்த உத்தரவிட்டார். இச்சண்டையில் எகிப்து மீது படையெடுத்திருந்த இத்தாலிய 10வது ஆர்மி அழிக்கப்பட்டுவிட்டது. 22 தளபதிகள் உட்பட 1,30,000 இத்தாலிய வீரரகள் போர்க்கைதிகளாயினர்.

இரண்டாம் சுற்று

தொகு

முதல் முயற்சியில் இத்தாலியின் படுதோல்வியால் லிபியாவின் கிழக்குப் பகுதியாகிய சிரெனைக்காவின் பெரும்பகுதி பிரிட்டானிய கட்டுப்பாட்டில் வந்தது. முசோலினிக்கு உதவ இட்லர் ஜெர்மானியப் படைப்பிரிவுகளை அனுப்பினார். அவை பெப்ரவரி 11, 1941ம் தேதி லிபியாவை அடைந்தன. இந்த படை நகர்த்தல் நிகழ்வுக்கு சோனென்புளூம் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. இந்நடவடிக்கை மேலும் சில மாதங்கள் நீடித்து கூடுதல் படைப்பிரிவுகள் லிபியாவுக்கு அனுப்பபட்டன. ஆப்பிரிக்கா கோர் என்று பெயரிடப்பட்ட இப்படைப்பிரிவுக்குத் தலைமைதாங்க புகழ்பெற்ற ஜெர்மானியத் தரைப்படைத் தளபதி ரோம்மல் வடக்கு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்டார்.

 
எர்வின் ரோம்மல்

வந்திறங்கிய ஒரு மாதத்துள் நிலைமையை ஓரளவு சீர் செய்த ரோம்மல் இத்தாலி இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் இறங்கினார். மார்ச் 25ம் தேதி மேற்கு நோக்கி ரோம்மலின் முன்னேற்றம் தொடங்கியது. அவரது முதன்மை இலக்குகளில் ஒன்று லிபியக் கடற்கரையோரச் சாலையின் மேல் அமைந்திருந்த டோபுருக் துறைமுகத்தைக் கைப்பற்றுவது. ஏப்ரல் 10ம் தேதி டோபுருக்கை அடைந்த ரோம்மலின் படைகள் அதனை முப்புறமும் முற்றுகையிட்டன. (கடல்புறம மட்டும் சூழப்படவில்லை). ஆப்பிரிக்கா கோரைத் தவிர சில இத்தாலிய டிவிசன்களும் இம்முற்றுகையில் பங்கேற்றன. டோப்ருக்கைக் கைப்பற்ற ரோம்மல் மேற்கொண்ட பல்வேறு தாக்குதல்கள் தோல்வியடைந்ததால், நீண்ட முற்றுகைத் தொடங்கியது. பல மாத காலம் நீடித்த இந்த முற்றுகையின் போது பிரிட்டானியப் படைகள் மேற்கொண்ட பிரீவிட்டி நடவடிக்கையும் (மே 1941) பேட்டில்ஆக்சு நடவடிக்கையும் (ஜூன் 1941) தோல்வியடைந்தன. இந்த நடவடிக்கைகள் டோப்ருக்கில் ரோம்மலின் படைகள் ஈடுபட்டிருப்பதைப் பயன்படுத்தி லிபிய-எகிப்து எல்லையிலிருந்த ஆலஃபாயா கணவாய், கப்பூசோ கோட்டை போன்ற முக்கிய அரண்நிலைகளைக் கைப்பற்ற மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ரோம்மலின் படைகள் இவற்றை முறியடித்து விட்டன.

 
ஆச்சின்லெக்கின் குரூசேடர் தாக்குதல்: நவம்பர் 18, 1941 – டிசம்பர் 31, 1941

நவம்பர் 1941ல் தேதி ரோம்மலை லிபியாவிலிருந்து விரட்ட பிரிட்டானியப் படைகள் மூன்றாவதாகத் தொடங்கிய நடவடிக்கை குரூசேடர் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. நவம்பர் 18ம் தேதி பிரிட்டானிய 8வது ஆர்மி லிபியப் போர் முனையில் தன் தாக்குதலைத் தொடங்கியது. டோப்ருக்கிலும் லிபிய எல்லையிலும் நான்கு வாரங்கள் நடந்த கடுமையான மோதல்களால் அச்சுத் தரப்பு டாங்குகளில் பெரும்பாலானவை சேதமடைந்திருந்தன. எஞ்சியிருந்த கவசப் படைப்பிரிவுகளைப் பாதுகாப்பதற்காக ரோம்மல் டோப்ருக் முற்றுகையைக் கைவிட்டு பின்வாங்க நேர்ந்தது. அச்சுப்படைகள் டோபுருக்கிலிருந்து பின்வாங்கி முதலில் கசாலா அரண்நிலைக்கும் பின்னர் எல் அகீலா அரண்நிலைக்கும் சென்றன. இந்தப் பின்வாங்கலால் பார்டியா, ஆலஃபாயா கணவாய் போன்ற பல அச்சு நாட்டு கோட்டைகளும், அரண்நிலைகளும் நேச நாட்டுப் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டு பின் சரணடைந்தன. வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் ரோம்மலின் படைகளுடன் சண்டையிட்ட நேச நாட்டுப் படைகளுக்கு கிடைத்த முதல் பெரும் வெற்றி இது.

மூன்றாம் சுற்று

தொகு
 
ரோம்மலின் இரண்டாவது தாக்குதல்: ஜனவரி 21, 1942 – ஜூலை 7, 1942

ரோம்மலின் படைகள் லிபியாவின் கிழக்குப் பகுதியிலிருந்து பின்வாங்கி எல் அகீலா என்ற இடத்திலிருந்த அரண்நிலைகளுக்குச் சென்றன. அங்கு தன் படைகளுக்கு ஓய்வு அளித்து அடுத்த கட்ட தாக்குதல்களுக்குத் தயாரானார். குரூசேடர் நடவடிக்கையில் பெரும் சேதமடைந்திருந்த பிரிட்டானியப் படைகளும் அதற்கு மேல் முன்னேற முடியாமல் தேங்கி நின்றுவிட்டன. கசாலா அரண்கோட்டினைப் (Gazala line) பலப்படுத்தத் தொடங்கின. ஐரோப்பாவிலிருந்து வந்திறங்கிய புதிய படைப்பிரிவுகளுடன் மீண்டும் ஜனவரி 1942ல் கிழக்கு நோக்கி படையெடுத்தார் ரோம்மல். பெங்காசி, டிமிமி ஆகிய நகரங்களை எளிதில் அச்சுப் படைகள் கைப்பற்றின. இப்புதிய தாக்குதலை எதிர்கொள்ள கசாலா முதல் பீர் ஹக்கீம் வரையிலான 50 கிமீ நீளமுள்ள பகுதியில் பிரிட்டானியப் படைகள் குவிக்கப்பட்டன. பெப்ரவரி-மே காலகட்டத்தில் இரு தரப்பினரும் அடுத்து நிகழவிருக்கும் மோதலுக்காக தயாராகினர். மே 26, 1942ல் ரோம்மல் கசாலா அரண்கோட்டின் மீதான தாக்குதலைத் தொடங்கினார். சில நாட்கள் கடும் சண்டைக்குப்பின்னர் கசாலா அரண்கோட்டினை ரோம்மலின் படைகள் சுற்றிவளைத்து தகர்த்துவிட்டன. பின்னர் ஜூன் முதல் வாரம் மீண்டும் கிழக்கு நோக்கி முன்னேறத் தொடங்கின. பிரிட்டானியத் தளபதி கிளாட் ஆச்சின்லெக், கசாலா அரண்நிலைகளைக் கைவிட்டு விட்டு எகிப்து-லிபிய எல்லைக்குப் பின்வாங்க தன் படைகளுக்கு உத்தரவிட்டார். ரோம்மலின் படைகள் அடுத்து டோப்ருக் கோட்டையைத் தாக்கின. டோப்ருக் நகரம் இம்முறை அச்சுத் தாக்குதல்களைச் சமாளிக்க இயலாமல் ஜூன் 21ல் சரணடைந்தது.

 
ஜூலை 1942ல் மேற்குப் பாலைவனப் போர்க்கள நிலவரம்

டோப்ருக்கில் கிடைத்த பெரும் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள எகிப்தினுள் முன்னேறின ரோம்மலின் படைகள். நிலைகுலைந்த நேச நாட்டுப் படைகள் கசாலா அரண்நிலைகளில் இருந்து மெர்சா மாத்ரூ அரண்நிலைகளுக்கும் பின் அங்கிருந்து எல் அலாமெய்ன் அரண்நிலைகளைக்கும் பின்வாங்கின. அலாமெய்னின் தெற்கே கட்டாரா என்ற பள்ளப்பகுதி (Quattara depression) அமைந்திருந்தால், ரோம்மலால் இந்த அரண்நிலையை எளிதில் சுற்றி வளைக்க முடியாது என்று அவர்கள் கருதினர். ஜூலை 1,1942ல் அலாமெய்ன் மீதான அச்சுத் தாக்குதல் தொடங்கியது. அலாமெய்னின் புவியியல் அமைப்பால் சுற்றி வளைத்து தாக்கும் உத்தியை ரோம்மலால் பயன்படுத்த இயலவில்லை. நேரடியாக பலமான நேச நாட்டு அரண்நிலைகளின் மீது தாக்கவேண்டியதாயிற்று. ஐந்து நாட்கள் இடைவிடாது தாக்குதல் நடத்தியும் ரோம்மலின் படைகளால் அலாமெய்ன் அரண்நிலையை ஊடுருவ முடியவில்லை. பெரும் இழப்புகளுடன் தன் தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்திய ரோம்மல், அலாமெய்ன் அரண்நிலைக்கு எதிராக தானும் ஒரு அரண்நிலையை உருவாக்கத் தொடங்கினார்.

 
எல் அலாமெய்னில் நேச நாட்டுப் பாதுகாவல் படைகள்

அடுத்த இருபது நாட்கள் இரு தரப்பினரும் அலாமெய்னில் அமைந்துள்ள பல மணல் முகடுகளைக் கைப்பற்ற கடுமையாக மோதிக் கொண்டனர். இத்தொடர் மோதல்களால் ஜூலை இறுதியில் இரு தரப்பு படைப்பிரிவுகளும் பலத்த சேதங்களுக்கு ஆளாகி இருந்தன. பிரிட்டானிய 8வது ஆர்மியும், ரோம்மலின் ஆப்பிரிக்கா கோரும் தொடர்ந்து சண்டையிட இயலாத அளவுக்கு பலவீனமடைந்திருந்தன. யாருக்கும் வெற்றி தோல்வியின்றி இச்சண்டை முடிவடைந்தாலும், அலெக்சாந்திரியா நோக்கியான ரோம்மலின் முன்னேற்றம் தடைபட்டுப் போனது. பிரிட்டானியத் தளபதி ஆச்சின்லெக்கின் மீது நம்பிக்கை இழந்த பிரிட்டானிய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அவருக்கு பதிலாக பதிலாக பெர்னார்ட் மோண்ட்கோமரியை புதிய பிரிட்டானியத் தளபதியாக நியமித்தார். நின்று போன தனது கிழக்கு நோக்கிய முன்னேற்றத்தை மீண்டும் தொடங்க ரோம்மல் ஆகஸ்ட்-செப்டம்பர் 1942ல் இறுதியாக ஒரு முயற்சி மேற்கொண்டார். ஆனால் அலாம் எல் அல்ஃபாவில் நிகழ்ந்த இச்சண்டையில் ரோம்மலின் படைகள் தோற்றன.

 
மோண்ட்கோமரியின் எதிர்த்தாக்குதல்: நவம்பர் 1942 – பெப்ரவரி 1943

அச்சுப்படைகளின் கிழக்கு நோக்கிய முன்னேற்றம் எல் அலாமெய்ன் அரண்கோட்டில் தடைபட்ட இந்நேரத்தில் வடக்கு ஆப்பிரிக்காவின் மேல்நிலை உத்தி நிலை நேச நாட்டுப் படைகளுக்கு சாதகமாக மாறியிருந்தது. நேச நாடுகளின் தளவாட உற்பத்தி பலம் மற்றும் எண்ணிக்கை பலம் ஆகியவை ரோம்மலின் படைகளை இக்கட்டான நிலைக்கு கொண்டு சென்றிருந்தன. நாளுக்கு நாள் நேசநாட்டுப் படைபலம் கூடிக் கொண்டே போனது. ரோம்மலின் போர்த்திறனிற்கு ஏற்ற திறனுடைய பெர்னார்ட் மோண்ட்கோமரி பிரிட்டானிய 8வது ஆர்மியின் தளபதியாகப் பொறுப்பேற்றிருந்தார். இக்காரணங்களால் முதலாம் எல் அலாமெய்னில் பிரிட்டானியப் படைகள் வெற்றி பெற்றால் வடக்கு ஆப்பிரிக்காவில் ரோம்மலின் தோல்வி உறுதி என்ற நிலை உருவானது. அலாம் எல் அல்ஃபா சண்டைக்குப் பின் கிடைத்த இரு மாத இடைவெளியை இரு தரப்பினரும் தங்கள் படைகளைப் பலப்படுத்த பயன்படுத்தியிருந்தனர். இதுவரை பின்வாங்கி வந்த பிரிட்டானியப் படைகள் மேற்கு நோக்கித் தங்கள் தாக்குதலை ஆரம்பித்தன. அக்டோபர் 23, 1942ல் இரண்டாம் எல் அலாமெய்ன் சண்டை தொடங்கியது. அக்டோபர் 23 முதல் நவம்பர் 7 வரை ஐந்து கட்டங்களாக நடந்த இச்சண்டையில் நேச நாட்டுப் படைகளின் எண்ணிக்கை பலமும், ஆயுத பலமும் ரோம்மலின் படைகளை வீழ்த்தின. எரிபொருள் பற்றாக்குறையினாலும், தனது படைகளுக்கு ஏற்பட்ட பெரும் சேதத்தினாலும் தனது படையெடுப்பைக் கைவிட்டு பின்வாங்கினார் ரோம்மல்.

 
இரண்டாம் எல் அலாமெய்னில் படைகளை நோட்டமிடும் மோண்ட்கோமரி

பின் வாங்கிய ரோம்மலை விடாது விரட்டிச் சென்ற நேச நாட்டுப் படைகள் விரைவில் லிபியா முழுவதையும் கைப்பற்றின. நவம்பர் 7ம் தேதி மெர்சா மாத்ரூ, 9ம் தேதி சிடி பர்ரானி, 11ம் தேதி ஆலஃபாயா கணவாய் ஆகிய அரண்நிலைகளை அச்சுப் படைகள் காலி செய்தன. நவம்பர் 13ம் தேதி டோப்ருக் நகரம் நேச நாட்டுப் படைகளிடம் வீழ்ந்தது. இதே போல டெர்னா நவம்பர் 15ம் தேதியும் பெங்காசி அதற்கு ஐந்து நாட்கள் கழித்தும் நேச நாட்டுப் படைகளால் கைப்பற்றப்பட்டன. டிசம்பர் 11/12ல் எல் அகீலாவும் வீழ்ந்தது. ஜனவரி 1943ல் அச்சுப் படைகள் லிபியாவை விட்டு முழுவதுமாக வெளியேறி துனிசியாவுக்கு பின்வாங்கி விட்டன. திரிப்பொலி நகரம் நேச நாட்டுப் படைகள் வசமானது. இத்துடன் மேற்குப் பாலைவனப் போர்த்தொடர் முடிவுக்கு வந்தது.

டார்ச் நடவடிக்கை

தொகு
 
டார்ச் நடவடிக்கை வரைபடம்

இரண்டாம் எல் அலாமெய்ன் சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே நவம்பர் 8-16, 1942ல் டார்ச் நடவடிக்கையின் மூலம் அல்ஜீரிய மற்றும் மோரோக்கோ கடற்கரைகளில் அமெரிக்கப் படைகள் வடக்கு ஆப்பிரிக்காவில் தரையிறங்கின. வடக்கு ஆப்பிரிக்காவில் ஜெர்மனியை இருமுனைப் போரில் ஈடுபடச் செய்யவேண்டுமென்று நேச நாட்டு மேல்நிலை உத்தியாளர்கள் திட்டமிட்டதால் இந்த படைஎடுப்பு நிகழ்ந்தது. டுவைட் டி. ஐசனாவர் இதற்கான தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

1943ல் வடக்கு ஆப்பிரிக்காவின் பிரெஞ்சு காலனிகள் (அல்ஜீரியா மற்றும் மொராக்கோ) நாசி ஆதரவு விஷி பிரெஞ்சு அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. விஷி கட்டுப்பாட்டிலிருந்து பிரெஞ்சுக் காலனிகளை மீட்பதும், வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்த அச்சுப் படைகளை பின்புறமாகத் தாக்க வழிவகை செய்வதும் டார்ச் நடவடிக்கையின் உடனடி இலக்குகள். படையெடுப்புக்கு முன்னரே விஷி அரசின் வடக்கு ஆப்பிரிக்க ஆட்சியாளர்கள் படைத் தளபதிகள் சிலருடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களைத் தங்கள் தரப்புக்கு நேச நாட்டுத் தலைவர்கள் ஈர்த்துவிட்டனர். இதனால் படையிறக்கம் நிகழும் போது எதிர்ப்பு குறைவாக இருந்தது. நவம்பர் 8, 1942 அதிகாலையில் டார்ச் நடவடிக்கை தொடங்கியது. பிரிட்டானிய மற்றும் அமெரிக்கத் துறைமுகங்களில் இருந்து மூன்று குறிக்கோள் படைப்பிரிவுகளாக (task forces) நேச நாட்டுப் படைகள் புறப்பட்டு வடக்கு ஆப்பிரிக்க கரையை அடைந்தன. இவற்றுள் மேற்குக் குறிக்கோள் பிரிவு கேசாபிளாங்கா துறைமுகத்தையும், மத்திய மற்றும் கிழக்குக் குறிக்கோள்ப்பிரிவுகள் முறையே ஓரான் மற்றும் அல்ஜியர்ஸ் துறைமுகங்களையும் தாக்கின. நவம்பர் 8ம் தேதி தொடங்கிய டார்ச் நடவடிக்கை இரு நாட்களுள் முடிவடைந்தது.

 
டார்ச் நடவடிக்கை - படகுகளில் அமெரிக்கப் படைகள்

நேச நாட்டுப் படைகளை எதிர்ப்பதா வேண்டாமா என்று விஷி ஆட்சியாளர்களுள் நிலவிய குழப்பத்தால், நேச நாட்டுப் படைகளுக்கு எதிர்ப்பு குறைவாகவே இருந்தது. இத்தரையிறக்கத்தை காசாபிளாங்கா துறைமுகத்திலிருந்த பிரெஞ்சுக் கடற்படை மட்டும் எதிர்க்க முயன்று தோற்றது. அல்ஜியர்ஸ் நகரில் விடுதலை பிரெஞ்சுப் படையினரும் உள்ளூர் எதிர்ப்புப் படையினரும் விஷி ஆட்சியாளர்களுக்கு எதிராக ஒரு எழுச்சியைத் தொடங்கினர். கடற்கரையோர பீரங்கிகளைச் செயலிழக்கச் செய்து நேச நாட்டுப் படைகளுக்கு உதவினர். அனைத்து புறங்களிலும் நேச நாட்டுப் படைகளால் சூழப்பட்ட அல்ஜியர்ஸ் நகரம் நவம்பர் 8ம் தேதி மாலை சரணடைந்தது. அதே போல நவம்பர் 9ம் தேதி ஓரான் துறைமுகமும் 10ம் தேதி காசாபிளாங்காவும் சரணடைந்தன. அடுத்த ஒரு வார காலத்துள் அனைத்து நேச நாட்டுப் படைப்பிரிவுகளும் வடக்கு ஆப்பிரிக்காவில் தரையிறங்கி விட்டன.

டார்ச் நடவடிக்கையின் வெற்றியால் வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் அச்சுப்படைகளின் தோல்வி உறுதியானது இரண்டாம் எல் அலாமெய்ன் சண்டையில் தோல்வியுற்ற அச்சுப்படைகள் துனிசியாவுக்குப் பின்வாங்கின. கிழக்கிலிருந்து பிரிட்டானியப் படைகள் அவற்றை விரட்டி வந்தன. டார்ச் நடவடிக்கையின் வெற்றியால் துனிசியாவுக்கு மேற்கிலிருந்த பகுதிகளும் நேச நாட்டுப் படைகளிடம் சிக்கிக் கொண்டன. இதனால் அச்சுப் படைகள் துனிசியாவில் சிக்கிக் கொண்டன. அடுத்து துனிசியாவைக் கைப்பற்றுவதற்கான போர்த்தொடர் ஆரம்பமாகியது.

1942-43: துனிசியப் போர்த்தொடர்

தொகு
 
துனிசியப் போர்க்கள வரைபடம்

நவம்பர் 1942ல் டார்ச் நடவடிக்கை வெற்றி பெற்றபின்னர் அல்ஜீரியா மற்றும் மொரோக்கோவில் தரையிறங்கிய அமெரிக்கப்படைகள் துனிசியாவின் தலைநகர் தூனிசைக் கைப்பற்ற முயன்றன. இம்முயற்சியுடன் துனிசியப் போர்த்தொடர் தொடங்கியது. ஏழு மாதங்களுக்குப் பின் அச்சுப்படைகளின் சரணடைவுடன் முற்றுப்பெற்றது.

தூனிசை நோக்கி ஓட்டம்

தொகு

இரண்டாம் எல் அலாமெய்ன் சண்டையில் தோற்றுப் பின்வாங்கிக் கொண்டிருந்த அச்சுப் படைகள் துனிசியாவிற்குள் தஞ்சம் புகுந்து தூனிஸ் நகரைத் தங்கள் தளமாக்குவதற்கு முன்னர் மேற்கில் அல்ஜீரியக் கடற்கரையிலிருந்து விரைந்து அந்நகரைக் கைப்பற்ற முடிவு செய்தனர் நேச நாட்டு தளபதிகள். நவம்பர் 10ம் தேதி தூனிஸ் நகரை நோக்கியான நேச நாட்டுப் படைமுன்னேற்றம் தொடங்கியது.

ஒரு டிவிசன் அளவிலான படைப்பிரிவு விரைந்து கிழக்கு நோக்கி முன்னேறத் தொடங்கியது. இக்குறிக்கோள் படைப்பிரிவு (taskforce) இரண்டாகப் பிரிக்கப் பட்டு வட திசையில் ஒன்றும் தென் திசையில் ஒன்றும் ஜெர்மானிய அரண்நிலைகளைத் தாக்கின. நவம்பர் 26 வரை இரு பிரிவுகளும் ஜெர்மானிய எதிர்ப்புகளை முறியடித்து வேகமாக முன்னேறின. நவம்பர் கடைசி வாரத்தில் சண்டையின் போக்கு மாறியது. தூனிசைக் காப்பாற்ற வடக்கு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்ட புதிய ஜெர்மானியப் படைப்பிரிவுகள் உடனடியாக ஒரு எதிர்த்தாக்குதலை மேற்கொண்டு, நேச நாட்டுப் படைகளைப் பின்வாங்கச் செய்தன. மூன்று வாரங்கள் மந்த நிலைக்குப் பின்னர் நேச நாட்டுப் படைகள் தூனிசைக் கைப்பற்ற மீண்டுமொரு பெருந்தாக்குதலைத் தொடங்கின. ஆனால் சில நாட்கள் சண்டைக்குப் பின்னர் அத்தாக்குதல் தோல்வியடைந்தது. தூனிசை நோக்கியான நேச நாட்டுப் படை முன்னேற்றம் டிசம்பர் 25ல் முடிவுக்கு வந்தது. துனிசியாவை தங்கள் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்த அச்சுப் படைகள் அங்கு பல அரண்நிலைகளை பலப்படுத்தத் தொடங்கின. அடுத்த சில மாதங்களுள் கிழக்கிலிருந்து விரட்டி வந்த பிரித்தானியப் படைகள் துனிசியாவின் தென்கிழக்கு எல்லையை அடைந்தன. துனிசியா நிலவழியாக சுற்றி வளைக்கப்பட்டுவிட்டது.

இக்கால கட்டத்தில் வடக்கு ஆப்பிரிக்காவின் பிரெஞ்சு காலனிகளை ஆண்டு வந்த விஷி பிரான்சு ஆட்சியாளர்கள், நாசி ஜெர்மனிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு நேச நாட்டுக் கூட்டணியில் இணைந்து விட்டனர்.

வடக்குப் போர்முனை

தொகு
 
வடக்குப் போர்முனை

டிசம்பர் 1942-பெப்ரவரி 1943 காலகட்டத்தில் நிலவிய மந்த நிலையை பயன்படுத்திக் கொண்ட இரு தரப்பினரும் அடுத்த கட்ட மோதல்களுக்கான ஆயத்தங்களில் இறங்கினர். துனிசியாவைத் தாக்க தென் கிழக்கிலிருந்து பிரித்தானிய 8வது ஆர்மியும், வடக்கில் அமெரிக்கப் படைகளும் தயாராகின. பிரித்தானியத் தாக்குதலை சமாளிக்க மாரெத் அரண்கோட்டினை ரோம்மல் பலப்படுத்தினார். இதனைத் தகர்க்க பிரித்தானியர்கள் முயன்று கொண்டிருக்கும் போது வடக்கில் அமெரிக்கர்களைத் தாக்கி அழிக்க முடிவு செய்தார்.

பெப்ரவரி 1943ல் வட மேற்குப் போர்க்களத்தின் மந்த நிலை முடிவுக்கு வந்தது. துனிசியாவுள் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் படைகளை விரட்டுவதற்கு ஜெர்மானியத் தளபதி எர்வின் ரோம்மல் தலைமையிலான அச்சுப்படைகள் திட்டமிட்டன. ஃபெய்ட் கணவாய் மற்றும் சிடி பூ சிட் ஆகிய இடங்களில் அமெரிக்கப் படைகளை ரோம்மலின் படைகள் தாக்கி முறியடித்தன. இச்சண்டைகளில் அமெரிக்கப் படைகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது.

 
கேசரைன் கணவாயில் அமெரிக்கப் படைகள்

அடுத்த கட்டமாக துனிசியா-அல்ஜீரிய எல்லையில் அமைந்திருந்த அட்லசு மலைத்தொடரினைக் கடந்து அல்ஜீரியாவில் அமைந்திருந்த முக்கிய அமெரிக்கப் படைநிலைகளைத் தாக்கின. பெப்ரவரி 19ம் தேதி தொடங்கிய இத்தாகுதலில் அட்லசு மலைத்தொடரில் அமைந்திருந்த கேசரைன் கணவாய் வழியாக ஜெர்மானிய கவசப் படைகள் வேகமாக முன்னேறின. பல ஆண்டுகள் போர் அனுபவமும், திறன் வாய்ந்த தளபதிகளும் பெற்றிருந்த ஜெர்மானிய படைப்பிரிவுகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அமெரிக்கப் படைப்பிரிவுகள் நிலைகுலைந்து சிதறின. பெப்ரவரி 20ம் தேதி கேசரைன் கணவாய் முழுவதும் அச்சுக் கட்டுப்பாட்டில் வந்தது. ஆனால் கணவாயை அடுத்திருந்த தாலா நகரைக் கைப்பற்றுவதற்குள் நேச நாட்டு எதிர்ப்பு வலுத்ததால் ஜெர்மானியப் படைப்பிரிவுகள் பின்வாங்கி கேசரைன் கணவாய் வழியாக துனிசியாவுக்குச் சென்று விட்டன. கிழக்கிலிருந்து பிரித்தானியப் படைகள் மரேத் அரண்கோட்டை தாக்கும் போது அவற்றைத் தடுக்க தனது படைப்பிரிவுகள் தேவையென்பதால் ரோம்மல் இப்பின்வாங்கலுக்கு உத்தரவிட்டார்.

கேசரைன் கணவாய் சண்டையில் போர் அனுபவம் இல்லாத புதிய அமெரிக்கப் படைகளும் தளபதிகளும், பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஜெர்மானியப் படையினருடன் மோதினர். அமெரிக்கர்கள் படுதோல்வியடைந்ததால் அவர்களது மன உறுதி குலைந்து தங்கள் ஆயுதங்களையும் தளவாடங்களையும் களத்திலேயே போட்டுவிட்டு பின்வாங்கினர். இந்தப் படுதோல்வியால் இரு விளைவுகள் நேர்ந்தன - அமெரிக்கர்களது பின்வாங்கலைக் கண்ட ஜெர்மானியத் தளபதிகள் அமெரிக்கர்களது போர்த்திறனை குறைத்து மதிப்பிட்டனர். எண்ணிக்கை மட்டுமே அமெரிக்கர்களின் பலமென்றும், கடுமையான தாக்குதல்களை அவர்களால் சமாளிக்க முடியாதென்றும் முடிவு செய்தனர். இந்த தப்புக்கணக்கு அடுத்து நிகழ்ந்த சண்டைகளில் ஜெர்மானியர்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இத்தோல்வி தந்த அனுபவப் பாடங்களைக் கொண்டு அமெரிக்கப்படை அலகு அமைப்புகள், கட்டுப்பாட்டு முறைமைகள், உத்திகள், படைப்பயிற்சி முறைகள் ஆகியவை உடனடியாக மாற்றியமைக்கப்பட்டன.

தெற்குப் போர்முனை

தொகு
 
தெற்குப் போர்முனை

துனிசியாவின் தென்கிழக்கில், பிரித்தானிய 8வது ஆர்மி பெப்ரவரி 17ம் தேதி மாரெத் அரண்கோட்டினை அடைந்து அதைத் தாக்கத் தயாரானது. இத்தாக்குதலைத் தாமதப்படுத்த ரோம்மல் மெடினைன் என்ற இடத்தில் மார்ச் 6ம் தேதி அவற்றைத் தாக்கினார். ரோம்மலின் தாக்குதல் நிகழப்ப் போகிறது என்பதை அல்ட்ரா திட்டத்தின் (ஜெர்மானிய வானொலி செய்திகளை இடைமறித்து, எனிக்மா ரகசியக் குறியீடுகளை உடைத்து அவற்றைப் படிக்கும் திட்டம்) மூலம் பிரித்தானியர்கள் முன்னரே அறிந்து கொண்டு தயர் நிலையில் இருந்ததால், இத்தாக்குதலை முறியடித்துவிட்டனர். துனிசியப் போர்த்தொடரில் அச்சுப் படைகள் நடத்திய கடைசித் தாக்குதல் நடவடிக்கை இதுவே. தோல்வி உறுதி என்று தெரிந்த பின்னால் ஜெர்மானிய போர்த்தலைமையகம் ரோம்மலை ஐரோப்பாவுக்குத் திரும்பும்படி உத்தரவிட்டது. அவருக்கு பதிலாக ஹான்ஸ்-யூர்கன் வோன் ஆர்ணிம் அச்சுப் படைகளுக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

மாரெத் அரண்கோட்டின் மீதான பிரித்தானியத் தாக்குதல் மார்ச் 19ம் தேதி தொடங்கியது. கடுமையான அச்சுப் படைகளின் எதிர்ப்பு, சாதகமில்லாத புவியமைப்பு, மோசமான வானிலை போன்ற காரணங்களால் முதலில் நிகழ்ந்த நேச நாட்டுத் தாக்குதல்கள் வெற்றி பெறவில்லை. ஆனால் மாரெத் அரண்நிலையில் மோதல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே டெபாகா கணவாய் மூலமாக அச்சு அரண்நிலைகளைச் சுற்றி வளைத்துத் தாக்க பிரித்தானிய தளபதி பெர்னார்ட் மோண்ட்கோமரி முயன்றார். இத்தாக்குதலுக்கு இரண்டாம் சூப்பர்சார்ஜ் நடவடிக்கை என்று பெயரிடப்பட்டது. டெபாகா கணவாய் மூலம் முன்னேறும் நேசப் படைகள் மாரெத் அரண்நிலையை சுற்றி வளைத்துவிடலாம் என்பதை உணர்ந்த அச்சுப் படைகள் பின்வாங்கி அடுத்த கட்ட அரண் நிலையான வாடி அகாரிட்டுக்கு சென்று விட்டன. பிரித்தானிய நேரடித் தாக்குதல் தோல்வியடைந்தாலும், அச்சுப் படைகளின் பின்வாங்கலால், மாரெத் அரண்நிலை நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் வந்தது.

வாடி அகாரிட்டில் கபேஸ்-எல் ஹம்மா நகரங்களுக்கிடையே அச்சுப்படைகள் ஒரு பலமான அரண்கோட்டினை உருவாக்கியிருந்தன. துனிசியாவின் தென்பகுதியில் இறுதிகட்ட அச்சு அரண்நிலையாக இது இருந்தது. இங்கு இத்தாலிய 1வது ஆர்மி பாதுகாவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தது. கிழக்கு-மேற்காக அமைந்திருந்த இக்கோட்டின் கிழக்குப் பகுதியில் நடுநிலக்கடலும் மேற்கில் எல் ஹம்மா உப்பு சதுப்புநிலப்பகுதியும் அமைந்திருந்தன. இதனால் பிரித்தானியப் படைகளால் இதனைச் சுற்றி வளைக்க இயலாமல், நேரடியாகத் தாக்கும்படியானது. ஏப்ரல் 6ம் தேதி அகாரிட் அரண்நிலை மீது பிரித்தானியத் தாக்குதல் தொடங்கியது. இரு நாட்கள் சண்டையில் அகாரிட் அரண்கோடு தகர்க்கப்பட்டது. நிலை குலைந்த அச்சுப் படைகள் வேகமாக தூனிஸ் நகரை நோக்கிப் பின்வாங்கின. அகாரிட்டுக்கு அடுத்தபடியாக எந்தவொரு பலமான அரண்நிலையும் தெற்கு துனிசியாவில் இல்லையென்பதால், அவற்றை விரட்டிச் சென்ற நேச நாட்டுப் படைகள் குறுகிய காலத்தில் சுமார் 220 கிமீ தூரம் முன்னேறிவிட்டன. நடுநிலக்கடல் கரையோரமாக நிகழ்ந்த இம்முன்னேற்றம், தூனிஸ் அருகே என்ஃபிடாவில் நகர் வரை தடையின்றி நிகழ்ந்தது.

இறுதி கட்டம்

தொகு
 
தூனிஸ் வீழ்ந்த பின்னர் அச்சு போர்க்கைதிகள்

அடுத்து துனிசியப் போர்த்தொடரின் இறுதிகட்டம் ஆரம்பமானது. தரைப்படைத் தாக்குதலுக்கு முன் அச்சுப் படைகளைப் பலவீனப்படுத்த கடல்வெளியுலும் வான்வெளியிலும் நேச நாட்டுப் படைகள் முயன்றன. அச்சுப் படைகள் நடுநிலக் கடல் வழியாக ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்கவும், அவற்றுக்குத் தேவையான தளவாடங்களும், துணைப்படைகளும் கடல்வழியாக அனுப்பப்படுவதைத் தவிர்க்கவும், ஏப்ரல் மாதம் ஃபிளாக்சு நடவடிக்கையை நேச நாட்டுப் படைகள் மேற்கொண்டன. ஏப்ரல் 1943ல் நிகழ்ந்த இந்த வான்படைத் தாக்குதலில் நேச நாட்டுத் தாக்குதல்களுக்குள்ளான அச்சு போக்குவரத்து வானூர்தி படைப்பிரிவுகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால் துனிசியாவிலுள்ள அச்சு தரைப்படைகளுக்கு தளவாட மற்றும் எரிபொருள் வழங்கல் தடைபட்டது. மே 4ம் தேதிக்குப் பின்னர் துனிசியாவுக்கு அச்சு வான்வழிப் போக்குவரத்து முற்றிலும் நின்றுபோனது.

துனிசியாவில் அச்சுப் படைகள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டபின்னர், மே 6ம் தேதி நேச நாட்டுத் தரைப்படைகளின் இறுதிக்கட்ட தாக்குதலான வல்கன் நடவடிக்கை தொடங்கியது. ஒரு வார சண்டைக்குப் பின்னர் அச்சுப்படைகள் சரணடைந்தன. சுமார் 2,30,000 அச்சுப் படைவீரர்கள் போர்க்கைதிகளாக்கப்பட்டனர். இறுதி கட்டத்தில் கடல்வழியாக அச்சுப் படைகள் ஐரோப்பாவுக்குத் தப்பி விடாமல் தடுக்க நேச நாட்டு கடற்படைகள் ரெட்ரிபியூசன் நடவடிக்கையை மேற்கொண்டன.

நடுநிலக்கடல் சண்டை

தொகு

வடக்கு ஆப்பிரிக்காவில் நிலப்பகுதியில் தரைப்படைகள் மோதிக் கொண்டிருக்கும் போதே நடுநிலக்கடலைக் கட்டுப்படுத்த அச்சு-நேச நாட்டு வான் மற்றும் கடற்படைகளிடையே பலப்பரீட்சை நடந்தது. வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையின் பரந்தகன்ற களத்தால் அதில் நிகழ்ந்த ஒவ்வொரு மோதலுக்கும் பல நூறு கிலோமீட்டர்கள் தூரம் படைகளை நடத்த வேண்டியிருந்தது. எந்திரமயமாக்கப்பட்ட போர்முறையால் ஐரோப்பாவிலிருந்து அனுப்பப்படும் எரிபொருள் மற்றும் உதிரி பாகங்கள் படைகளின் இயக்கத்துக்கு இன்றியமையாது போயின. நடுநிலக்கடல் சரக்குக் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துபவரே போரின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்க இயலும் என்ற நிலை உருவானது.

வடக்கு ஆப்பிரிக்காவில் தரைப்படை மோதல்கள் தொடங்கும் முன்னரே மெர்சு-எல்-கேபிர் சண்டையில் பிரெஞ்சு கடற்படைக் கப்பல்கள் அச்சு நாடுகள் வசமாகாதிருக்க நேச நாட்டுப் படைகள் அவற்றைத் தாக்கி அழித்தன. மேற்குப் பாலைவனப் போர்த்தொடர் தொடங்கிய பின்னர் நடுநிலக்கடலில் அமைந்துள்ள மால்டா தீவிலிருந்தும் எகிப்தின் அலெக்சாந்திரியா துறைமுகத்திலிருந்தும் நேச நாட்டுக் கடற்படைகள் செயல்பட்டு வந்தன. மால்டாவைக் கைப்பற்ற அச்சுப்படைகள் பல முறை முயன்று தோற்றன. அலெக்சாந்திரியா துறைமுகத்தின் மீதும் திடீர்த்தாக்குதல் நிகழ்த்தி அதைப்பல மாதங்கள் செயலிழக்கச் செய்தன. வடக்கு ஆப்பிரிக்காவுக்குத் தளவாடங்களையும் துணைப்படைகளையும் ஏற்றிவரும் நேச நாட்டுக் கப்பல் கூட்டங்கள் மீதும் அச்சு வான்படைகளும் கடற்படைகளும் தாக்குதல் நடத்தி வந்தன. இத்தாக்குதல்களினால் நேச நாட்டு தளாவாட வழங்கலுக்கும் தற்காலிகமான இடையூறுகளையே ஏற்படுத்த முடிந்தது. அவற்றை முற்றிலும் தடுக்க இயலவில்லை. அதே நேரம், அச்சு கப்பல் கூட்டங்களின் மீது நேச நாட்டு வான் மற்றும் கடற்படைத் தாக்குதல்கள் அதிகரித்து அச்சு நாட்டு தளவாட வழங்கலைப் பெரிதும் பாதித்துவிட்டன. வடக்கு ஆப்பிரிக்காவில் போர் முடிந்தபின்னரும் நடுநிலக்கடல் சண்டை முற்றுப்பெறவில்லை. அடுத்து நிகழ்ந்த சிசிலிய மற்றும் இத்தாலியப் படையெடுப்புகளிலும் இது முக்கிய பங்கு வகித்தது. ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வரும் வரை தொடர்ந்ந்து நீடித்தது.

விளைவுகள்

தொகு

வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் அச்சுப்படைகளின் தோல்வியால் அங்கு அமைந்திருந்த இத்தாலியக் காலனிகள் நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் வந்தன. வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் அச்சு நாடுகளுக்கு ஏற்பட்ட படை மற்றும் தளவாட இழப்புகள் பிற களங்களில் அவற்றின் வெற்றி வாய்ப்பினை பாதித்தன. மேலும் அதுவரை நாசி ஜெர்மனிக்கு ஆதரவளித்து வந்த விஷி பிரான்சின் வடக்கு ஆப்பிரிக்க ஆட்சியாளர்கள், நேச நாடுகளின் கூட்டணியில் இணைந்து விட்டனர். வடக்கு ஆப்பிரிக்காவில் அச்சுப் படைகள் சரணடைந்தபின்னர் அப்பகுதி இத்தாலி மீதான நேச நாட்டுப் படையெடுப்புக்குக்குத் தளமாகப் பயன்படுத்தப்பட்டது.

குறிப்புகள்

தொகு
  1. American losses ammounted to 18,558 in the Tunisian campaign, while British Commonwealth losses totalled around 220,000 for the entire North African campaign. No figure is provided for French or other allied losses.[1] The British official campaign historian and historian Rick Atkinson give a slightly lower figure for American losses, they suggest a total of 18,221 men: 2,715 killed, 8,978 wounded, and 6,528 missing.[2][3]
  2. The Feldgrau website claims that 12,808 Germans were killed during the campaign, a further 90,052 missing, but provides no figures on the number wounded.[5] Historian John Keegan notes that 238,000 were captured.[6] A 1957 Italian study states that 22,341 Italians were killed or listed as missing during the campaign.[7]
  1. இங்கு மேலே தாவவும்: 1.0 1.1 Zabecki, North Africa
  2. Playfair, p. 460
  3. Atkinson, p. 536
  4. இங்கு மேலே தாவவும்: 4.0 4.1 4.2 Barclay, Mediterranean Operations
  5. Feldgrau website. "Feldgrau Statistics and Numbers".
  6. Keegan 2001, p. 638
  7. Roma:Instituto Centrale Statistica' Morti E Dispersi Per Cause Belliche Negli Anni 1940-45 Rome 1957

மேற்கோள்கள்

தொகு