பேட்டில்ஆக்சு நடவடிக்கை

பேட்டில்ஆக்சு நடவடிக்கை (பேட்டிலாக்ஸ் நடவடிக்கை, Operation Battleaxe) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு நடவடிக்கை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். இதில் நேச நாட்டு படைகள் லிபியாவின் கிழக்குப் பகுதியிலிருந்த அச்சு நாட்டுப் படைகளை விரட்ட முயன்று தோற்றன.

பேட்டில்ஆக்சு நடவடிக்கை
மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் பகுதி

ஆலஃபாயா கணவாயைக் கைப்பற்ற முயன்று தோற்ற 4வது இந்திய டிவிசன் வீரர்கள்.
நாள் ஜூன் 15-17, 1941
இடம் சிரனைக்கா, லிபியா
அச்சு நாட்டு வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்


இந்தியா பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு

 Germany
இத்தாலி இத்தாலி
தளபதிகள், தலைவர்கள்
ஆர்ச்சிபால்ட் வேவல் எர்வின் ரோம்மல்
பலம்
20,000+ காலாட்படை வீரர்கள்
190 டாங்குகள்
98 சண்டை வானூர்திகள்
105 குண்டுவீசி வானூர்திகள்
13,200 காலாட்படை வீரர்கள்
50 டாங்குகள்
130 சண்டை வானூர்திகள்
84 குண்டுவீசி வானூர்திகள்
இழப்புகள்
969 பேர்
91 டாங்குகள்
36 வானூர்திகள்
678 (ஜெர்மனி) + 592 (இத்தாலி)
12 டாங்குகள்
10 வானூர்திகள்

வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் 1941ல் தளபதி ரோம்மலின் தலைமையிலான அச்சு நாட்டுப்படைகளுக்கும் நேச நாட்டுப் படைகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் நிகழ்ந்து வந்தன. லிபிய, எகிப்து நாட்டுப் பகுதிகளில் இரு தரப்புப்படைகளும் மோதி வந்தன. ரோம்மலின் படைகள் டோப்ருக் கோட்டையை நீண்ட நாட்களாக முற்றுகையிட்டிருந்தன. இந்த முற்றுகையை முறியடிக்கவும், லிபியாவின் கிழக்குப் பகுதியான சிரனைக்காவிலிருந்து அச்சு நாட்டுப் படைகளை விரட்டவும் நேச நாட்டுப் படைகள் ஜூன் 15ம் தேதி பேட்டில்ஆக்சு நடவடிக்கையை மேற்கொண்டன. இம்மாதிரி ஒரு தாக்குதல் நிகழும் என்பதை எதிர்பார்த்த ரோம்மல் இதற்கு முன்னர் நடந்த பிரீவிட்டி நடவடிக்கையில் கிடைத்த படிப்பினைகளைக் கொண்டு தனது படைநிலைகளை பலப்படுத்தியிருந்தார்.

ஜூன் 15ம் தேதி வான்வழி குண்டுவீச்சுடன் இத்தாக்குதல் தொடங்கியது. மூன்று பிரிவுகளாக நேச நாட்டுப் படைகள் அச்சு நாட்டு படைநிலைகளைத் தாக்கின. கப்பூசோ கோட்டையை விரைவில் கைப்பற்றினாலும் முக்கியமான ஆலஃபாயா கணவாயை அவற்றால் கைப்பற்ற இயலவில்லை. அதே போல அஃபீத் முகட்டிலும் அவை முறியடிக்கப்பட்டுவிட்டன. முதல் நாள் சண்டையில் பிரிட்டானியப் படைபிரிவுகளின் பெரும்பாலான டாங்குகள் சேதமடைந்திருந்தன. ஜூன் 16ம் தேதி இரு தரப்பினரும் மீண்டும் பல இடங்களில் மோதிக் கொண்டனர். ஆனால் யாருக்கும் தெளிவான வெற்றி கிட்டவில்லை. ஆலஃபாயா கணவாய் ஜெர்மானியர் வசமும், கப்பூசோ கோட்டை பிரிட்டானியர் வசமும் இருந்தன. நேரடியாக மோதுவதால் பயனில்லை என்பதை உணர்ந்த ரோம்மல், மறுநாள் நேச நாட்டுப் படைகளைச் சுற்றி வளைத்து பக்கவாட்டிலிருந்தும் பின்புறமிருந்தும் தாக்க தன் படைப்பிரிவுகளுக்கு உத்தரவிட்டார். தங்களுக்கு நிகழவிருந்த அபாயத்தை உணர்ந்த பிரிட்டானியப் படைப்பிரிவுகள் ஜெர்மானியப் படைவளையம் இறுகும் முன்னர் பின்வாங்கி ரோம்மலின் பொறியிலிருந்து தப்பினர். மூன்று நாள் சண்டையில் அவை பெரும் சேதமடைந்திருந்தால், ரோம்மலின் அடுத்தகட்ட தாக்குதலைச் சமாளிக்க பலமில்லாது போயின. ஆயினும், ரோம்மலின் தளவாட மற்றும் எரிபொருள் போக்குவரத்து சிக்கல்களால் அவரால் பின்வாங்கும் பிரிட்டானியப் படைகளை விரட்டித் தாக்க முடியவில்லை.

பேட்டிலாக்சு நடவடிக்கை பிரிட்டானியப் படைகளுக்குப் பெரும் தோல்வியாக அமைந்தது. ரோம்மலின் படைகளை விரட்டக் கிளம்பிய அவை, மூன்று நாட்களுள் அவரது படைகளால் விரட்டப்படும் நிலையில் இருந்தன. இத்தோல்வியால் கோபமடைந்த ஐக்கிய இராச்சியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பிரிட்டானிய தளபதி வேவல் பிரபுவை தளபதி பதவியிலிருந்து நீக்கினார். அவருக்கு பதிலாக இந்தியாவிலிருந்த பிரிட்டானியப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் ஆச்சின்லெக்கை வடக்கு ஆப்பிரிக்க பிரிட்டானியத் தளபதியாக நியமித்தார்.

மேற்கோள்கள்

தொகு