பிரீவிட்டி நடவடிக்கை
பிரீவிட்டி நடவடிக்கை (Operation Brevity) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு நடவடிக்கை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். இதில் டோப்ருக் நகரை அச்சு நாட்டுப் படைகள் முற்றுகையிட்டிருந்த போது சொல்லம்-கப்பூசோ-பார்டியா போர்க்களத்தில் பலவீனமடைந்திருந்த அவற்றின் படைநிலைகளை ஊடுருவ நேச நாட்டுபடைகள் முயன்றன.
பிரீவிட்டி நடவடிக்கை | |||||||
---|---|---|---|---|---|---|---|
மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய இராச்சியம் | ஜெர்மனி இத்தாலி |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஆர்ச்சிபால்டு வேவல் வில்லியம் கோட்ட் | எர்வின் ரோம்மல் மேக்சிமில்லியன் வோன் ஹெர்ஃப் |
||||||
பலம் | |||||||
3 காலாட்படை பட்டாலியன்கள் 53 டாங்குகள் | பல பட்டாலியன்களின் பிரிவுகள் 30–50 டாங்குகள் |
||||||
இழப்புகள் | |||||||
206+ பேர்[1] | 605+ பேர்[2] 3 டாங்குகள்[2] |
1940ல் இத்தாலி எகிப்து மீது படையெடுத்தது. இதற்கு நேச நாட்டுப் படைகள் நடத்திய எதிர்த்தாக்குதலில் இத்தாலியப் படைகள் படுதோல்வி அடைந்தன. இத்தாலியின் கட்டுப்பாட்டிலிருந்து லிபியாவினுள் நேச நாட்டுப் படைகள் முன்னேறியதால், இத்தாலியின் உதவிக்கு இட்லர் தளபதி ரோம்மலின் தலைமையில் ஆப்பிரிக்கா கோர் படைப்பிரிவை அனுப்பினார். 1941 பெப்ரவரியில் வடக்கு ஆப்பிரிக்காவை அடைந்த ரோம்மல் அடுத்த மாதமே நேச நாட்டுப் படைகளுக்கு எதிராக ஒரு தாக்குதலைத் தொடங்கினார். அவரது படைகள் வேகமாக முன்னேறி டோப்ருக் நகரை முற்றுகையிட்டன. ஆனால் அந்நகரைக் கைப்பற்ற முடியவில்லை என்பதால் அவற்றின் முன்னேற்றம் தடைபட்டது. முற்றுகை சில மாதங்கள் நீடித்தது. அச்சுப் படைகளின் கவனம் டோப்ருக்கில் இருந்ததை பயன்படுத்திக் கொண்டு, சொல்லம்-கப்பூசோ-பார்டியா போர்முனையினை பிரிட்டானியப் படைகள் தாக்கின. இதற்கு பிரீவிட்டி நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது.
மே 15, 1941ல் தேதி ஜெனரல் வேவல் தலைமையில் பிரிட்டானியப் படைகள் தங்கள் தாக்குதலைத் தொடங்கின. அவற்றின் இலக்கு போர்முனைக்கும் டோப்ருக்கும் இடைப்பட்ட பகுதியைக் கைப்பற்றுவது மற்றும் டோப்ருக்கை முற்றுகையிட்டுள்ள அச்சு படைப்பிரிவுகளை பலவீனப்படுத்துவது. முதல் நாள் தாக்குதலில் வெற்றி பெற்ற பிரிட்டானியர்கள் முக்கியமான ஆல்ஃபாயா கணவாய் (halfaya pass), கப்பூசோ கோட்டை ஆகியவற்றை இத்தாலியப் படைகளிடமிருந்து கைப்பற்றினர். ஆனால் மறுநாள் இத்தாலியப் படைகளுக்குத் துணையாக ரோம்மல் அனுப்பிய ஜெர்மானியப் படைகள் அப்பகுதியினை அடைந்து கப்பூசோ கோட்டையை மீண்டும் கைப்பற்றின. மேலும் பல ஜெர்மானியப் படைப்பிரிவுகள் அப்பகுதிக்கு அனுப்பபட்டதால், பிரிட்டானியப் படைப்பிரிவுகள் ஆல்ஃபாயா கணவாய்க்கு பின்வாங்கின. இத்துடன் பிரீவிட்டி நடவடிக்கை முடிவடைந்தது. ஆனால் தளவாடப் போக்குவரத்துக்கு அக்கணவாயின் இன்றியமையாமையை உணர்ந்திருந்த ரோம்மல் சில வாரங்கள் கழித்து அதனைத் தாக்கி மீண்டும் கைப்பற்றினார்.