காம்ப்பசு நடவடிக்கை
காம்ப்பசு நடவடிக்கை (காம்பஸ் நடவடிக்கை, Operation Compass) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். இதில் எகிப்து மீது படையெடுத்திருந்த பாசிச இத்தாலியின் படைகளை பிரிட்டானியப் படைகள் தாக்கித் தோற்கடித்தன.
இத்தாலியின் எகிப்து படையெடுப்பு | |||||||
---|---|---|---|---|---|---|---|
மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் பகுதி | |||||||
இத்தாலிய போக்கைதிகள் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய இராச்சியம் ஆத்திரேலியா பிரிட்டானிய இந்தியா சுதந்திர பிரான்ஸ் | இத்தாலி | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஆர்ச்சிபால்ட் வேவல் ஹென்றி மெய்ட்லாண்ட் வில்சன் ரிச்சர்ட் ஓ காணர் | ரொடோல்ஃபோ கிராசியானி இட்டாலோ கரிபால்டி மாரியோ பெர்ட்டி கஸ்சிப்பி டெல்லேரா † பியேட்ரோ மல்லேட்டி † ஆன்னிபேல் பெர்கென்சோலி (கைதி) |
||||||
பலம் | |||||||
36,000 வீரர்கள்[1] 120 பீரங்கிகள் 275 tanks 142 வானூர்திகள்[2] | 150,000 வீரர்கள் 1,600 பீரங்கிகள் 600 டாங்குகள் 331 வானூர்திகள்[3] |
||||||
இழப்புகள் | |||||||
500 மாண்டவர்[4] 55 காணாமல் போனவர்[4] 1,373 காயமடைந்தவர்[4] 15 வானூர்திகள்[5] | 3,000 மாண்டவர் 115,000 போர்க்கைதிகள் 400 டாங்குகள் 1,292 பீரங்கிகள் 1,249 aircraft |
செப்டம்பர் 1940ல் தொடங்கிய இத்தாலியின் எகிப்து படையெடுப்பு ஒரு வாரத்துள் நின்று போனது. 65 மைல் தூரம் எகிப்துள் முன்னேறிய இத்தாலியப் படைகள் பல்வேறு காரணங்களால் தேக்கமடைந்துவிட்டன. இதனை பயன்படுத்திக் கொண்ட எகிப்திலிருந்த பிரிட்டானியப் படைகள் எதிர்த்தாக்குதலுக்குத் தயாராகின. காம்ப்பசு நடவடிக்கை எனக் குறிப்பெயரிடப்பட்ட இந்த முயற்சி ஆரம்பத்தில் ஒரு சிறு ஐந்து நாள் திடீர்த்தாகுதலாக மட்டுமே திட்டமிடப்பட்டது. எகிப்திலிருந்து இத்தாலியப் படைகளை விரட்ட வேண்டுமென்பது மட்டும் இதன் குறிக்கோளாக இருந்தது. டிசம்பர் 8ம்தேதி சிடி பர்ரானி என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த இத்தாலியப் பாசறைகளின் மீது பிரிட்டானியப் படைகள் தங்கள் தாக்குதலைத் தொடங்கின. பிரிட்டானிய வான்படை இத்தாலிய வான்படைத் தளங்களின் மீது குண்டுவீசி அங்கு நிறுத்தப்பட்டிருந்த பல வானூர்திகளை அழித்தது. நிலை குலைந்து போன இத்தாலியப் படைப்பிரிவுகள் வேகமாக லிபியாவை நோக்கிப் பின்வாங்கத் தொடங்கின. எகிப்திலிருந்து அவற்றை விரட்டியதோடு நிற்காத பிரிட்டானியப் படைகள் லிபிய எல்லையைத் தாண்டி தங்கள் விரட்டலைத் தொடர்ந்தன. ஏராளமான இத்தாலிய வீரர்களும் அவர்கள் போட்டுவிட்டு ஓடிய தளவாடங்களும் பிரிட்டானியப் படைகளிடம் சிக்கிக் கொண்டன. சாதாரண திடீர்த்தாக்குதலாகத் தொடங்கிய காம்ப்பசு நடவடிக்கை பிரிட்டானியர்களுக்கு ஒரு வெற்றிகரமான படையெடுப்பாக அமைந்தது. அடுத்த இரண்டு மாதங்களில் பார்டியா, டோப்ருக், குஃப்ரா ஆகிய இடங்களும் அவைகளால் கைப்பற்றப்பட்டன. லிபியாவினுள் 800 கிமீ வரை அவை ஊடுருவி விட்டன. பெப்ரவரி மாதம் அச்சு நாடுளால் தாக்கப்பட்டிருந்த கிரீசு நாட்டுக்கு உதவி செய்ய வேண்டி பிரிட்டானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் லிபியாவில் படை முன்னேற்றத்தை நிறுத்த உத்தரவிட்டார்.
இச்சண்டையில் எகிப்து மீது படையெடுத்திருந்த இத்தாலிய 10வது ஆர்மி அழிக்கப்பட்டுவிட்டது. 22 தளபதிகள் உட்பட 1,30,000 இத்தாலிய வீரர்கள் போர்க்கைதிகளாயினர். காம்ப்பசில் பங்கு கொண்ட பிரிட்டானியப் படையில் பிரிட்டானிய இந்தியப் படைப்பிரிவுகள் இடம் பெற்றிருந்தன. இத்தாலியின் படுதோல்வி அதன் வடக்கு ஆப்பிரிக்க காலனிகளின் நிலையை கேள்விக் குறியாக்கியது. லிபியாவின் கிழக்குப் பகுதியாகிய சிரெனைக்காவின் பெரும்பகுதி பிரிட்டானிய கட்டுப்பாட்டில் வந்தது. முசோலினிக்கு உதவி செய்ய இட்லர் ஜெர்மானியத் தரைப்படையின் ஆப்பிரிக்கா கோரினை தளபதி எர்வின் ரோம்மல் தலைமையில் வடக்கு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பினார்.