பர்தியா சண்டை

(பார்டியா சண்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பர்தியா சண்டை (Battle of Bardia) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது காம்ப்பசு நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இதில் எகிப்து மீது படையெடுத்திருந்த பாசிச இத்தாலியின் படைகளை நேச நாட்டுப் படைகள் தாக்கித் தோற்கடித்தன.

பர்தியா சண்டை
காம்ப்பசு நடவடிக்கை பகுதி

பார்டியாவுள் நுழையும் ஆஸ்திரேலியப் படைகள்
நாள் 3–5 ஜனவரி 1941
இடம் பார்டியா, லிபியா
தெளிவான நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
 ஆத்திரேலியா
 ஐக்கிய இராச்சியம்
 இத்தாலி
தளபதிகள், தலைவர்கள்
ஆத்திரேலியா இவென் மெக்கே இத்தாலி ஆன்னிபேல் பெர்கென்சோலி
பலம்
16,000[1]45,000[2]
இழப்புகள்
130 (மாண்டவர்)
326 (காயமடைந்தவர்)[3]
1,000 (மாண்டவர்)
3,000 (காயமடைந்தவர்)
36,000 போர்க்கைதிகள்[2]

செப்டம்பர் 1940ல் எகிப்து மீது இத்தாலிய படைகள் படையெடுத்தன. ஆனால் வெகு சீக்கிரம் இத்தாலியப் படைமுன்னேற்றம் தடைபட்டுப் போனது. டிசம்பர் மாதம் அவர்களை எகிப்திலிருந்து விரட்ட பிரித்தானியப் படைகள் காம்ப்பசு நடவடிக்கை என்ற எதிர்த்தாக்குதலைத் தொடங்கின. அவற்றின் தாக்குதலை சமாளிக்க முடியாத இத்தாலியர்கள் எகிப்தை விட்டுப் பின்வாங்கி லிபியாவுக்குத் திரும்பினர். ஆனால் பிரித்தானியப் படைகள் லிபியாவுக்குள்ளும் அவர்களை துரத்திச் சென்றன. ஜனவரி 3ம் தேதி லிபியாவிலுள்ள இத்தாலியக் கோட்டையான பர்தியா மீது நேச நாட்டுப் படைகள் தங்கள் தாக்குதலைத் தொடங்கின. இத்தாக்குதலை ஆஸ்திரேலியப் படைப்பிரிவுகள் முன்னின்று நிகழ்த்தின. இரண்டாம் உலகப் போரில் ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கு கொண்ட முதல் போர் நடவடிக்கை இது தான்.

பர்தியா மீதான தாக்குதல் இரு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டத்தில் ஜனவரி 3ம் தேதி குண்டுவீசி வானூர்திகளும், போர்க்கப்பல்களும் பர்தியா கோட்டை மீது குண்டு வீசின. பின்னர் தரைப்படை பீரங்கிகளின் தொடர் குண்டுவீச்சு நிகழும் போதே, நேச நாட்டு வெடி வல்லுனர்கள் (sappers) கோட்டையைச் சுற்றியிருந்த முட்கம்பி வேலியினை ஆங்காங்கே தகர்த்தனர். இவற்றின் வழியாக உள்ளே புகுந்த காலாட்படைகள் விரைவில் கோட்டையின் பல பகுதிகளைக் கைப்பற்றி 8,000 இத்தாலிய வீரர்களை கைது செய்தன. இரண்டாம் கட்டத்தில் 17வது காலாட்படை பிரிகேட், பார்டியா கோட்டையைத் தாண்டி அடுத்த இத்தாலிய அரண் நிலையான “சுவிட்ச் கோட்டினை” அடைந்தது. ஜனவரி 4ம் தேதி பார்டியா நகரம் நேச நாட்டுப் படைகள் வசமானது. நேச நாட்டு படை முன்னேற்றத்தால் பர்தியா கோட்டை அரண்நிலைகள் இரு பகுதிகளாகப் பிளவுபட்டன. மூன்றாம் நாள் தனியாக்கப் பட்ட இரு பகுதிகளையும் நேச நாட்டுப் படைகள் ஒரே நேரத்தில் தாக்கிக் கைப்பற்றின. இத்தாலியப் படைகள் அனைத்தும் சரணடைந்தன. மொத்தம் 36,000 இத்தாலியர்கள் போர்க்கைதிகளாக்கப்பட்டனர்.

பர்தியாவில் கிட்டிய வெற்றி லிபியாவினுள் மேலும் முன்னேற நேச நாட்டுப் படைகளை மேலும் தூண்டியது. இத்தாலிக்கு ஏற்பட்ட இத்தோல்வியால் லிபியாவின் கிழக்குப் பகுதியாகிய சிரனைக்கா விரைவில் முழுவதும் நேச நாட்டு வசமானது.

மேற்கோள்கள் தொகு

  1. Stockings 2009, ப. 3
  2. 2.0 2.1 Long 1952, ப. 199
  3. Long 1952, ப. 203
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்தியா_சண்டை&oldid=1828765" இலிருந்து மீள்விக்கப்பட்டது