ரெட்ரிபியூசன் நடவடிக்கை

ரெட்ரிபியூசன் நடவடிக்கை (Operation Retribution) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு கடற்படை நடவடிக்கை. துனிசியப் போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில், துனிசியாவில் எஞ்சியிருந்த அச்சுப் படைகளுக்கு ஐரோப்பாவுடனான கடல்வழிப் போக்குவரத்தை நேச நாட்டு கடற்படைகள் துண்டித்தன.

ரெட்ரிபியூசன் நடவடிக்கை
துனிசியப் போர்த்தொடரின் பகுதி

சிசிலி நீரிணை
நாள் 8–13 மே 1943
இடம் சிசிலி நீரிணை மற்றும் துனிசியா
நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்
 ஐக்கிய அமெரிக்கா
 ஜெர்மனி
 இத்தாலி
தளபதிகள், தலைவர்கள்
ஆர்த்தர் கன்னிங்காம்

மார்ச் 1943ல் வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்த அச்சுப் படைகள் துனிசியாவின் வடமேற்கு முனையில் சுற்றி வளைக்கப்பட்டன. இறுதிகட்ட தரைப்படைத் தாக்குதலில் அவற்றைப் பலவீனப்படுத்த கடல்வெளியுலும் வான்வெளியிலும் இரு போர் நடவடிக்கைகளை நேச நாட்டுப் படைகள் மேற்கொண்டன. அச்சுப் படைகள் நடுநிலக் கடல் வழியாக ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்கவும், அவற்றுக்குத் தேவையான தளவாடங்களும், துணைப்படைகளும் கடல்வழியாக அனுப்பப்படுவதைத் தவிர்க்கவும், ஏப்ரல் மாதம் ஃபிளாக்சு நடவடிக்கையை நேச நாட்டுப் படைகள் மேற்கொண்டன. வடக்கு ஆப்பிரிக்கா-ஐரோப்பாவிடையே பயணிக்கும் அச்சுக் கப்பல்கள் அனைத்தையும் மூழ்கடிக்கவும், வடக்கு ஆப்பிரிக்காவை ஐரோப்பாவிலிருந்து துண்டிக்கவும் மே 8ம் தேதி ரெட்ரிபியூசன் நடவடிக்கை தொடங்கியது.

மே 6ம் தேதி துனிசியாவில் நேச நாட்டுத் தரைப்படைகளின் இறுதிகட்ட தாக்குதலான வல்கன் நடவடிக்கை தொடங்கியது. அச்சுப் படைகள் கடல்வழியாக ஐரோப்பாவுக்குத் தப்பாமல் இருக்க பிரித்தானியக் கடற்படைத் தளபதி ஆண்ட்ரூ கன்னிங்காம் சிசிலி நீரிணையில் பயணிக்கும் அனைத்து அச்சுக் கப்பல்களையும் மூழ்கடிக்க தனது போர்க்கப்பல்களுக்கு உத்தரவிட்டார். ஒரு கப்பல் கூட தப்பக்கூடாதென்று ஆணையிட்டார். பெருமளவில் பிரித்தானிய கடற்படைக் கப்பல்கள் சிசிலி நீரிணையில் குவிக்கப்பட்டன. இதனால் அச்சு கடற்படைகள் துனிசியாவில் சிக்கியிருந்த தங்கள் படைகளைக் கடல்வழியாகக் காலிசெய்ய பெரிய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. முயன்ற ஓரிரு கப்பல்களும் நேச நாட்டுப் போர்க்கப்பல்களால் மூழ்கடிக்கப்பட்டன. மே 13ம் தேதி துனிசியாவில் எஞ்சியிருந்த அச்சுப் படைகள் சரணடைந்தன. ரெட்ரிபியூசன் நடவடிக்கை முடிவுக்கு வந்தது.