வல்கன் நடவடிக்கை
வல்கன் நடவடிக்கை (Operation Vulcan) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. துனிசியப் போர்த்தொடரின் இறுதிகட்ட மோதலான இதில், துனிசியாவில் எஞ்சியிருந்த அச்சுப் படைகள் நேச நாட்டுப் படைகளால் தோற்கடிக்கப்பட்டு சரணடைந்தன. இதுவே வடக்கு ஆப்பிரிக்க போர்முனையின் இறுதிகட்ட மோதல்.
வல்கன் நடவடிக்கை | |||||||
---|---|---|---|---|---|---|---|
துனிசியப் போர்த்தொடரின் பகுதி | |||||||
கைது செய்யப்பட்ட அச்சு நாட்டு போர்க்கைதிகள் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய இராச்சியம் ஐக்கிய அமெரிக்கா | ஜெர்மனி இத்தாலி |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஹரால்ட் அலெக்சாந்தர் ஜார்ஜ் பேட்டன் | யூர்கென் வோன் ஆர்ணிம் ஜியோவானி மெஸ்சே |
மார்ச் 1943ல் வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்த அச்சுப் படைகள் துனிசியாவின் வடமேற்கு முனையில் சுற்றி வளைக்கப்பட்டன. அவை நடுநிலக் கடல் பகுதி வழியாக ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்கவும், அவற்றுக்குத் தேவையான தளவாடங்களும், துணைப்படைகளும் வான்வழியாக அனுப்பப்படுவதைத் தவிர்க்கவும், ஏப்ரல் மாதம் ஃபிளாக்சு நடவடிக்கை என்ற நடவடிக்கையை நேச நாட்டுப் படைகள் மேற்கொண்டன. இதன்மூலம் வடக்கு ஆப்பிரிக்காவுக்கு வரும் அச்சுப் போக்குவரத்து வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டு, வடக்கு ஆப்பிரிக்கா ஐரோப்பாவிலிருந்து துண்டிக்கப்பட்டது. இதே போல கடல்வழிப் போக்குவரத்தைத் துண்டிக்க ரெட்ரிபியூசன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ்விரண்டு நடவடிக்கைகளால் துனிசியாவில் அச்சுப் படைகள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டுவிட்டன.
தூனிஸ் நகரைச் சுற்றி அச்சுப் படைகள் பலமான அரண்நிலைகளை அமைத்திருந்தன. அச்சுப் படைகள் முழுமையாக சுற்றி வளைக்கப்பட்டபின் நேசப் படைகளின் இறுதிகட்ட தரைப்படை தாக்குதல் மே 6ம் தேதி தொடங்கியது. கடுமையான சண்டைக்குப் பின்னர் மே 7ம் தேதி தூனிஸ் நகருக்குள் பிரித்தானியப் படைகள் நுழைந்தன. மேலும் 6 நாட்கள் சண்டைக்குப்பின்னர் துனிசியாவில் எஞ்சியிருந்த அச்சுப் படைகள் அனைத்தும் சரணடைந்தன. சுமார் 2,30,000 அச்சுப் படைவீரர்கள் போர்க்கைதிகளாக்கப்பட்டனர். இத்துடன் துனிசியப் போர்த்தொடர் முற்றுப்பெற்றது.