துனிசியப் போர்த்தொடர்

துனிசியப் போர்த்தொடர் (Tunisia Campaign) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு போர்த்தொடர். இதில் துனிசியாவுக்கு பின்வாங்கியிருந்த அச்சுப் படைகளை நேச நாட்டுப் படைகள் தோற்கடித்தன. துனிசியப் போர்த்தொடரின் முடிவுடன் வடக்கு ஆப்பிரிக்காவில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது. இது துனிசியா சண்டை (Battle of Tunisia) என்றும் அழைக்கப்படுகிறது.

துனிசியப் போர்த்தொடர்
வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையின் பகுதி

தூனிஸ் வீழ்ந்த பின்னர் ஜெர்மனிய, இத்தாலியப் போர்க்கைதிகள்
நாள் நவம்பர் 17, 1942 – மே 13, 1943
இடம் துனிசியா
நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்

 ஐக்கிய அமெரிக்கா
 பிரான்சு
 நியூசிலாந்து

 Germany
 இத்தாலி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய அமெரிக்கா டுவைட் டி. ஐசனாவர்
ஐக்கிய இராச்சியம் ஹரால்ட் அலெக்சாந்தர்
ஐக்கிய இராச்சியம் கென்னத் ஆண்டர்சன்
ஐக்கிய இராச்சியம் பெர்னார்ட் மோண்ட்கோமரி
நாட்சி ஜெர்மனி ஆல்பெர்ட் கெஸ்செல்ரிங்
நாட்சி ஜெர்மனி எர்வின் ரோம்மல்
நாட்சி ஜெர்மனி யூர்கென் வோன் ஆர்ணிம் (கைதி)
இத்தாலி ஜியோவான்னி மெஸ்சே (கைதி)
இழப்புகள்
76,020 பேர்
849 வானூர்திகள் நாசம்
~3,00,000 பேர்

> 1045 வானூர்திகள் நாசம்
600+ வானூர்திகள் கைப்பற்றப்பட்டன

மேற்குப் பாலைவனப் போர்த்தொடரில் அச்சுப் படைகள் தோற்றபின்னர் அவை பின்வாங்கி துனிசியாவுக்குச் சென்றன. கிழக்கிலிருந்து பிரித்தானிய 8வது ஆர்மி அவற்றை விரட்டி வந்தது. மேற்கிலிருந்து டார்ச் நடவடிக்கை மூலம் வடக்கு ஆப்பிரிக்காவில் தரையிறங்கியிருந்த அமெரிக்கப் படைகள் துனிசியாவைத் தாக்கின. இவ்வாறு இரு திசைகளில் இருந்து துனிசியா நேச நாட்டுப் படைகளால் தாக்கப்பட்டது. ஏழு மாதகால சண்டைக்குப் பின்னர் துனிசியாவிலிருந்த அச்சுப் படைகள் மே 13, 1943ல் சரணடைந்தன. துனிசியப் போர்த்தொடரின் முடிவுடன் வடக்கு ஆப்பிரிக்காவில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

பின்புலம்

தொகு

வடக்கு ஆப்பிரிக்காவில் 1940ம் ஆண்டு அச்சுப் படைகளுக்கும் நேச நாட்டுப் படைகளுக்கும் போர் மூண்டது. முதலில் லிபியா-எகிப்து ஆகிய நாடுகளில் அமைந்துள்ள மேற்குப் பாலைவனத்தில் இரு தரப்பும் மோதிக்கொண்டன. லிபியா இத்தாலியின் கட்டுப்பாட்டிலும் எகிப்து பிரிட்டனின் கட்டுப்பாட்டிலும் இருந்தன. சூயஸ் கால்வாயைக் கைப்பற்றி பிரித்தானியப் பேரரசை இரண்டாகத் துண்டிப்பது வடக்கு ஆப்பிரிக்காவுக்கான அச்சு நாட்டு மேல்நிலை உத்தி. இரு ஆண்டுகள் தொடர்ந்து நடந்த மேற்குப் பாலைவனப் போர்த்தொடரில் அச்சுப் படைகள் தோற்கடிக்கப்பட்டன. அவை லிபியாவிலிருந்து பின்வாங்கி துனிசியா நாட்டிற்குச் சென்றன.

துனிசியாவுக்குப் பின்வாங்கும் அச்சுப் படைகளைக் கிழக்கிலிருந்து பிரித்தானிய 8வது ஆர்மி விரட்டி வந்தது. அதே நேரம் மேற்கில் அல்ஜீரியா மற்றும் மொரோக்கோ நாட்டுக் கடற்கரைகளில் கடல்வழியாக நேச நாட்டுப் படைகள் தரையிறங்கின. இத்தாக்குதல் டார்ச் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. இவ்வாறு நவம்பர் 1943ல் வடக்கு ஆப்பிரிக்காவில் அச்சுப் படைகள் இருபுறமிருந்தும் நெருக்கப்பட்டு இக்கட்டான சூழ்நிலையிலிருந்தன. வடக்கு ஆப்பிரிக்காவைக் காலி செய்து விடுமாறு ஜெர்மானியப் படைத் தளபதி எர்வின் ரோம்மல் இட்லருக்கு ஆலோசனை கூறினார். ஆனால் வடக்கு ஆப்பிரிக்கா வீழ்ந்தால், நடுநிலக் கடலின் கட்டுப்பாடு முழுவதும் நேச நாடுகளுக்குக் கிட்டிவிடும்; அதை பயன்படுத்தி அவர்கள் இத்தாலி மீது படையெடுக்கக்கூடும் என்ற நிலை இருந்தது. மேலும் துனிசியாவின் புவியியல் பாதுகாவலர்களுக்கு சாதகாமாக அமைந்திருந்தது. மேற்கில் அல்ஜீரியாவுடனான எல்லை அட்லசு மலைத்தொடராலும், வடக்கிலும் கிழக்கிலும் நடுநிலக்கடலும் துனிசியாவுக்கு அரணாக அமைந்திருந்தன. துனிசியாவைத் தாக்கும் படைகள் வடமேற்கிலும் தென்கிழக்கிலும் குறைந்த அகலமுள்ள பகுதிகள் வழியாகத் தாக்க வேண்டிய நிலை இருந்தது. இப்பகுதிகளைப் பலப்படுத்திவிட்டால் பல மாதங்கள் துனிசியாவில் சண்டையை நீட்டிக்கலாம் என்பது இட்லரின் கணக்கு. இக்காரணங்களால் இறுதிவரை துனிசியாவில் போராடும்படி தன் படைகளுக்கு இட்லர் உத்தரவிட்டார். நவம்பர் 1943ல் துனிசியாவைக் கைப்பற்றுவதற்கான சண்டை ஆரம்பமானது.

தூனிசை நோக்கி ஓட்டம்

தொகு
 
துனிசியப் போர்க்கள வரைபடம்

நவம்பர் 8, 1942ல் நேச நாட்டுப் படைகள் டார்ச் நடவடிக்கையின் மூலம் மொரோக்கோ மற்றும் அல்ஜீரியாவில் தரையிறங்கின. அடுத்த மூன்று நாட்களுள் காசாபிளாங்கா, அல்ஜியர்ஸ், ஓரான் ஆகிய துறைமுகங்கள் நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் வந்தன. டார்ச் நடவடிக்கை நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையின் இன்னொரு புறம் இரண்டாம் எல் அலாமெய்ன் சண்டையில் அச்சுப் படைகள் தோற்றுப் பின்வாங்கிக் கொண்டிருந்தன. அப்படி பின்வாங்கும் அச்சுப் படைகள் துனிசியாவிற்குள் தஞ்சம் புகுந்து தூனிஸ் நகரைத் தங்கள் தளமாக்கக் கூடும் என்பதை நேச நாட்டுத் தளபதிகள் உணர்ந்தனர். அச்சுப் படைகள் கிழக்கிலிருந்து தூனிஸ் நகரை அடைவதற்குள், மேற்கில் அல்ஜீரியக் கடற்கரையிலிருந்து விரைந்து அந்நகரைக் கைப்பற்ற முடிவு செய்தனர்.

நவம்பர் 10ம் தேதி தூனிஸ் நகரை நோக்கிய நேச நாட்டுப் படைமுன்னேற்றம் தொடங்கியது. ஒரு டிவிசன் அளவிலான படைப்பிரிவு விரைந்து கிழக்கு நோக்கி முன்னேறத் தொடங்கியது. இக்குறிக்கோள் படைப்பிரிவு (taskforce) இரண்டாகப் பிரிக்கப்பட்டு வட திசையில் ஒன்றும் தென் திசையில் ஒன்றும் ஜெர்மானிய அரண்நிலைகளைத் தாக்கின. நவம்பர் 26 வரை இரு பிரிவுகளும் ஜெர்மானிய எதிர்ப்புகளை முறியடித்து வேகமாக முன்னேறின. நவம்பர் கடைசி வாரத்தில் சண்டையின் போக்கு மாறியது. தூனிசைக் காப்பாற்ற வடக்கு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்ட புதிய ஜெர்மானியப் படைப்பிரிவுகள் உடனடியாக ஒரு எதிர்த்தாக்குதலை மேற்கொண்டு, நேச நாட்டுப் படைகளைப் பின்வாங்கச் செய்தன. மூன்று வாரங்கள் மந்த நிலைக்குப் பின்னர் நேச நாட்டுப் படைகள் தூனிசைக் கைப்பற்ற மீண்டுமொரு பெருந்தாக்குதலைத் தொடங்கின. ஆனால் சில நாட்கள் சண்டைக்குப் பின்னர் அத்தாக்குதல் தோல்வியடைந்தது. தூனிசை நோக்கிய நேச நாட்டுப் படை முன்னேற்றம் டிசம்பர் 25ல் முடிவுக்கு வந்தது. துனிசியாவைத் தங்கள் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவந்த அச்சுப் படைகள் அங்கு பல அரண்நிலைகளைப் பலப்படுத்தத் தொடங்கின.

துனிசியப் போர்த்தொடர் தொடங்கிய போது வடக்கு ஆப்பிரிக்கவின் பிரெஞ்சு காலனிகள் நாசி ஜெர்மனிக்கு ஆதரவளித்து வந்த விஷி அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. நேச நாட்டுப் படைகள் துனிசியாவை நெருங்கிய பின்னால், விஷி அரசின் வடக்கு ஆப்பிரிக்கப் பிரதிநிதிகள் நேச நாடுகளுடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டு நேச நாட்டு ஆதரவாளர்களாகிவிட்டனர். இதனால் வடக்கு ஆப்பிரிக்காவிலிருந்த விஷிப் படைகள் நேச நாட்டுப் படைகளுடன் இணைந்து கொண்டன.

வடக்குப் போர்முனை

தொகு
 
வடக்குப் போர்முனை

டிசம்பர் 1942-பெப்ரவரி 1943 காலகட்டத்தில் நிலவிய மந்த நிலையை பயன்படுத்திக் கொண்ட இரு தரப்பினரும் அடுத்த கட்ட மோதல்களுக்கான ஆயத்தங்களில் இறங்கினர். துனிசியாவைத் தாக்க தென் கிழக்கிலிருந்து பிரித்தானிய 8வது ஆர்மியும், வடக்கில் அமெரிக்கப் படைகளும் தயாராகின. பிரித்தானியத் தாக்குதலைச் சமாளிக்க மாரெத் அரண்கோட்டினை ரோம்மல் பலப்படுத்தினார். இதனைத் தகர்க்க பிரித்தானியர்கள் முயன்று கொண்டிருக்கும் போது வடக்கில் அமெரிக்கர்களைத் தாக்கி அழிக்க முடிவு செய்தார்.

பெப்ரவரி 1943ல் வட மேற்குப் போர்க்களத்தின் மந்த நிலை முடிவுக்கு வந்தது. துனிசியாவுக்குள் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் படைகளை விரட்டுவதற்கு ஜெர்மானியத் தளபதி எர்வின் ரோம்மல் தலைமையிலான அச்சுப் படைகள் திட்டமிட்டன. ஃபெய்ட் கணவாய் மற்றும் சிடி பூ சிட் ஆகிய இடங்களில் அமெரிக்கப் படைகளை ரோம்மலின் படைகள் தாக்கி முறியடித்தன. இச்சண்டைகளில் அமெரிக்கப் படைகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது.

 
கேசரைன் கணவாயில் அமெரிக்கப் படைகள்

அடுத்த கட்டமாக துனிசியா-அல்ஜீரிய எல்லையில் அமைந்திருந்த அட்லசு மலைத்தொடரினைக் கடந்து அல்ஜீரியாவில் அமைந்திருந்த முக்கிய அமெரிக்கப் படைநிலைகளைத் தாக்கின. பெப்ரவரி 19ம் தேதி தொடங்கிய இத்தாக்குதலில் அட்லசு மலைத்தொடரில் அமைந்திருந்த கேசரைன் கணவாய் வழியாக ஜெர்மானிய கவசப் படைகள் வேகமாக முன்னேறின. பல ஆண்டுகள் போர் அனுபவமும், திறன் வாய்ந்த தளபதிகளும் பெற்றிருந்த ஜெர்மானியப் படைப்பிரிவுகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அமெரிக்கப் படைப்பிரிவுகள் நிலைகுலைந்து சிதறின. பெப்ரவரி 20ம் தேதி கேசரைன் கணவாய் முழுவதும் அச்சுக் கட்டுப்பாட்டில் வந்தது. கணவாயை விட்டு வெளியேறி அல்ஜீரியவுக்குள் புகுந்த அவை, தாலா நகரை நோக்கி முன்னேறின. தோற்றோடிய அமெரிக்கர்களுள் சில படைப்பிரிவுகளும், சில சிறிய பிரெஞ்சு மற்றும் பிரித்தானியப் படைப்பிரிவுகளும் எதிர்த்தாக்குதல் நடத்தி ஜெர்மானியப் படைமுன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தின. ஜெர்மானியப் படைப்பிரிவுகள் பின்வாங்கி கேசரைன் கணவாய் வழியாக துனிசியாவுக்குச் சென்று விட்டன. கிழக்கிலிருந்து பிரித்தானியப் படைகள் மாரெத் அரண்கோட்டை தாக்கும் போது அவற்றைத் தடுக்க தனது படைப்பிரிவுகள் தேவையென்பதால் ரோம்மல் இப்பின்வாங்கலுக்கு உத்தரவிட்டார்.

ரோம்மலின் படைகள் பின்வாங்கிவிட்டாலும், கேசரைன் கணவாய் சண்டை அமெரிக்கப் படைகளுக்குப் பெரும் தோல்வியாகக் கருதப்படுகிறது. இதில் போர் அனுபவம் இல்லாத புதிய அமெரிக்கப் படைகளும் தளபதிகளும், பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஜெர்மானியப் படையினருடன் மோதினர். அமெரிக்கர்கள் படுதோல்வியடைந்ததால் அவர்களது மன உறுதி குலைந்து தங்கள் ஆயுதங்களையும் தளவாடங்களையும் களத்திலேயே போட்டுவிட்டுப் பின்வாங்கினர். இந்தப் படுதோல்வியால் இரு விளைவுகள் நேர்ந்தன - அமெரிக்கர்களது பின்வாங்கலைக் கண்ட ஜெர்மானியத் தளபதிகள் அமெரிக்கர்களது போர்த்திறனை குறைத்து மதிப்பிட்டனர். எண்ணிக்கை மட்டுமே அமெரிக்கர்களின் பலமென்றும், கடுமையான தாக்குதல்களை அவர்களால் சமாளிக்க முடியாதென்றும் முடிவு செய்தனர். இந்த தப்புக்கணக்கு அடுத்து நிகழ்ந்த சண்டைகளில் ஜெர்மானியர்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இத்தோல்வி தந்த அனுபவப் பாடங்களைக் கொண்டு படை அலகு அமைப்புகள், கட்டுப்பாட்டு முறைமைகள், உத்திகள், படைப்பயிற்சி முறைகள் ஆகியவை உடனடியாக மாற்றியமைக்கப்பட்டன. தோற்கடிக்கப்பட்ட அமெரிக்க 2வது கோரின் தளபதி லாயிட் ஃபீரிடன்ஹால் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அதிரடித் தாக்குதலுக்குப் பெயர் பெற்ற ஜார்ஜ் பேட்டன் துனிசியாவுக்கு அனுப்பப்பட்டார்.

கேசரைன் சண்டைக்குப் பின்னர் இரு தரப்பின் படைப்பிரிவுகள் புனரமைக்கப்பட்டன. ஒன்றிணைந்து செயல்படுவதற்கு ஏற்றவகையில் பிரித்தானிய 8வது ஆர்மியும் அமெரிக்க 1வது ஆர்மியும் புதிதாக உருவாக்கபப்ட்ட நேச நாட்டு 18வது ஆர்மி குரூப்பின் கீழ் கொண்டுவரப்பட்டன. பிரித்தானிய ஜெனரல் ஹரால்ட் அலெக்சாந்தர் இதன் தளபதியாக நியமிக்கப்பட்டார். அச்சு தரப்பிலும் இத்தாலிய, ஜெர்மானிய ஆர்மிகள் ரோம்மலின் தலைமையில் ஆர்மி குரூப் ஆப்பிரிக்கா என்ற புதிய படைப்பிரிவின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டன.

தெற்குப் போர்முனை

தொகு
 
தெற்குப் போர்முனை

பிரித்தானிய 8வது ஆர்மி பெப்ரவரி 17ம் தேதி மாரெத் அரண்கோட்டினை அடைந்து அதைத் தாக்கத் தயாரானது. இத்தாக்குதலைத் தாமதப்படுத்த ரோம்மல் மெடினைன் என்ற இடத்தில் மார்ச் 6ம் தேதி அவற்றைத் தாக்கினார். ரோம்மலின் தாக்குதல் நிகழப் போகிறது என்பதை அல்ட்ரா திட்டத்தின் (ஜெர்மானிய வானொலி செய்திகளை இடைமறித்து, எனிக்மா ரகசியக் குறியீடுகளை உடைத்து அவற்றைப் படிக்கும் திட்டம்) மூலம் பிரித்தானியர்கள் முன்னரே அறிந்து கொண்டனர். இதனால் பலமான அரண் நிலைகளைத் தயார் செய்து இத்தாக்குதலை எதிர்கொண்டனர். நேச நாட்டு பீரங்கிக் குழுமங்கள் தாக்கும் ஜெர்மானிய டாங்குகள் மீது குண்டு மழை பொழிந்தன. பல டாங்குகள் அழிக்கப்பட்டதால் ஜெர்மானியப் படைகள் தங்கள் தாக்குதலைக் கைவிட்டுப் பின்வாங்கன. துனிசியப் போர்த்தொடரில் அச்சுப் படைகள் நடத்திய கடைசித் தாக்குதல் நடவடிக்கை இதுவே. தோல்வி உறுதி என்று தெரிந்த பின்னால் ஜெர்மானியப் போர்த்தலைமையகம் ரோம்மலை ஐரோப்பாவுக்குத் திரும்பும்படி உத்தரவிட்டது. அவருக்கு பதிலாக ஹான்ஸ்-யூர்கன் வோன் ஆர்ணிம் அச்சுப் படைகளுக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

மாரெத் அரண்கோட்டின் மீதான பிரித்தானியத் தாக்குதல் மார்ச் 19ம் தேதி தொடங்கியது. கடுமையான அச்சுப் படைகளின் எதிர்ப்பு, சாதகமில்லாத புவியமைப்பு, மோசமான வானிலை போன்ற காரணங்களால் முதலில் நிகழ்ந்த நேச நாட்டுத் தாக்குதல்கள் வெற்றி பெறவில்லை. ஆனால் மாரெத் அரண்நிலையில் மோதல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே டெபாகா கணவாய் மூலமாக அச்சு அரண்நிலைகளைச் சுற்றி வளைத்துத் தாக்க பிரித்தானியத் தளபதி பெர்னார்ட் மோண்ட்கோமரி முயன்றார். இத்தாக்குதலுக்கு இரண்டாம் சூப்பர்சார்ஜ் நடவடிக்கை என்று பெயரிடப்பட்டது. டெபாகா கணவாய் மூலம் முன்னேறும் நேசப் படைகள் மாரெத் அரண்நிலையைச் சுற்றி வளைத்துவிடலாம் என்பதை உணர்ந்த அச்சுப் படைகள் பின்வாங்கி அடுத்த கட்ட அரண் நிலையான வாடி அகாரிட்டுக்கு சென்று விட்டன. பிரித்தானிய நேரடித் தாக்குதல் தோல்வியடைந்தாலும், அச்சுப் படைகளின் பின்வாங்கலால், மாரெத் அரண்நிலை நேச நாட்டு கட்டுப்பாட்டில் வந்தது.

வாடி அகாரிட்டில் கபேஸ்-எல் ஹம்மா நகரங்களுக்கிடையே அச்சுப்படைகள் ஒரு பலமான அரண்கோட்டினை உருவாக்கியிருந்தன. துனிசியாவின் தென்பகுதியில் இறுதிகட்ட அச்சு அரண்நிலையாக இது இருந்தது. இங்கு இத்தாலிய 1வது ஆர்மி பாதுகாவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தது. கிழக்கு-மேற்காக அமைந்திருந்த இக்கோட்டின் கிழக்குப் பகுதியில் நடுநிலக்கடலும் மேற்கில் எல் ஹம்மா உப்பு சதுப்புநிலப்பகுதியும் அமைந்திருந்தன. இதனால் பிரித்தானியப் படைகளால் இதனைச் சுற்றி வளைக்க இயலாமல், நேரடியாகத் தாக்குமபடியானது. ஏப்ரல் 6ம் தேதி அகாரிட் அரண்நிலை மீது பிரித்தானியத் தாக்குதல் தொடங்கியது. இரு நாட்கள் சண்டையில் அகாரிட் அரண்கோடு தகர்க்கப்பட்டது. நிலை குலைந்த அச்சுப் படைகள் வேகமாக தூனிஸ் நகரை நோக்கிப் பின்வாங்கின. அகாரிட்டுக்கு அடுத்தபடியாக எந்தவொரு பலமான அரண்நிலையும் தெற்கு துனிசியாவில் இல்லையென்பதால், அவற்றை விரட்டிச் சென்ற நேச நாட்டுப் படைகள் குறுகிய காலத்தில் சுமார் 220 கிமீ தூரம் முன்னேறிவிட்டன. நடுநிலக்கடல் கரையோரமாக நிகழ்ந்த இம்முன்னேற்றம், தூனிஸ் அருகே என்ஃபிடாவில் நகர் வரை தடையின்றி நிகழ்ந்தது.

இறுதி கட்டம்

தொகு
 
அச்சு நிலைகளின் மீது குண்டுவீசும் அமெரிக்க பி-25 ரக குண்ட்டுவீசி

அடுத்து துனிசியப் போர்த்தொடரின் இறுதிகட்டம் ஆரம்பமானது. தரைப்படைத் தாக்குதலுக்கு முன் அச்சுப் படைகளைப் பலவீனப்படுத்த கடல்வெளியுலும் வான்வெளியிலும் நேச நாட்டுப் படைகள் முயன்றன. அச்சுப் படைகள் நடுநிலக் கடல் வழியாக ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்கவும், அவற்றுக்குத் தேவையான தளவாடங்களும், துணைப்படைகளும் கடல்வழியாக அனுப்பப்படுவதைத் தவிர்க்கவும், ஏப்ரல் மாதம் ஃபிளாக்சு நடவடிக்கையை நேச நாட்டுப் படைகள் மேற்கொண்டன. ஏப்ரல் 1943ல் நிகழ்ந்த இந்த வான்படைத்ட் ஹாக்குதலில் நேச நாட்டுத் தாக்குதல்களுக்கு அச்சு போக்குவரத்து வானூர்தி படைப்பிரிவுகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால் துனிசியாவிலுள்ள அச்சு தரைப்படைகளுக்கு தளவாட மற்றும் எரிபொருள் வழங்கல் தடைபட்டது. மே 4ம் தேதிக்குப் பின்னர் துனிசியாவுக்கு அச்சு வான்வழிப் போக்குவரத்து முற்றிலும் நின்றுபோனது.

துனிசியாவில் அச்சுப் படைகள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டபின்னர், மே 6ம் தேதி நேச நாட்டுத் தரைப்படைகளின் இறுதிகட்ட தாக்குதலான வல்கன் நடவடிக்கை தொடங்கியது. ஒரு வார சண்டைக்குப்பின்னர் அச்சுப்படைகள் சரணடைந்தன. சுமார் 2,30,000 அச்சுப் படைவீரர்கள் போர்க்கைதிகளாக்கப்பட்டனர். இறுதி கட்டத்தில் கடல்வழியாக அச்சுப் படைகள் ஐரோப்பாவுக்குத் தப்பாமல் தடுக்க நேச நாட்டு கடற்படைகள் ரெட்ரிபியூசன் நடவடிக்கையை மேற்கொண்டன.

விளைவுகள்

தொகு

துனிசியப் போர்த்தொடரில் அச்சுப் படைகளின் தோல்வியுடன் வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் சண்டைகள் முற்றுப்பெற்றன. வடக்கு ஆப்பிரிக்கக் கடற்கரை முழுவதும் நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் வந்தது. அங்கிருந்த துறைமுகங்களைத் தளங்களாகப் பயன்படுத்தி செப்டம்பர் 1943ல் சிசிலி மீதும் அடுத்து இத்தாலி மீதும் அவை படையெடுத்தன.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துனிசியப்_போர்த்தொடர்&oldid=4094827" இலிருந்து மீள்விக்கப்பட்டது