சிடி பூ சிட் சண்டை

சிடி பூ சிட் சண்டை (Battle of Sidi Bou Zid) என்பது இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு படை முன்னேற்றம். துனிசியப் போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் நாசி ஜெர்மனியின் படைகள் துனிசியாவில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் படைகளைத் தோற்கடித்தன.

சிடி பூ சிட் சண்டை
துனிசியப் போர்த்தொடரின் பகுதி

துனிசியப் போர்முனை
நாள் பெப்ரவரி 14–17, 1943
இடம் 34°52′N 9°29′E / 34.867°N 9.483°E / 34.867; 9.483
சிடி பூ சிட், துனிசியா
ஜெர்மானிய வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய அமெரிக்கா  ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய அமெரிக்கா லாயிட் ஃபிரேடன்ஹால்
ஐக்கிய அமெரிக்கா ஆர்லாண்டோ வார்ட்
நாட்சி ஜெர்மனி ஹான்ஸ்-யூர்கன் வோன் ஆர்ணிம்
நாட்சி ஜெர்மனி ஹெய்ன்ஸ் சீக்லர்

1942 நவம்பரில் வடக்கு ஆப்பிரிக்காவில் டார்ச் நடவடிக்கையின் மூலம் அமெரிக்கப் படைகள் தரையிறங்கின. மேற்குப் பாலைவனப் போர்த்தொடரில் தோற்று துனிசியாவை நோக்கிப் பின்வாங்கிக்கொண்டிருந்த அச்சுப் படைகள் தூனிஸ் நகரை அடைவதற்குள் அந்நகரைக் கைப்பற்ற முயன்றன. ஆனால் அம்முயற்சி தோல்வியடைந்தது. அடுத்த சில மாதங்களுக்கு துனிசியப் போர்முனையில் மந்த நிலை நீடித்தது. இரு தரப்பும் அடுத்தகட்ட மோதலுக்கான ஆயத்தங்களைச் செய்தன. துனிசியாவின் பெரும்பகுதி அச்சுக் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சிடி பூ சிட் நகரின் அருகேயுள்ள பகுதிகள் அமெரிக்க 2வது கோர் மற்றும் பிரெஞ்சு 9வது கோரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவற்றால் தன் படைநிலைகளுக்கு ஆபத்து என்பதை உணர்ந்த ஜெர்மானியத் தளபதி எர்வின் ரோம்மல் அவற்றைத் தாக்கத் திட்டமிட்டார்.

பெப்ரவரி 14, 1943 அன்று ஜெர்மானிய கவசப் படைப்பிரிவுகள் சிடி பூ சிட்டின் மீது தங்கள் தாக்குதலைத் தொடங்கின. சிடி பூ சிட் துனிசியப் போர்முனையின் அமெரிக்கர்களின் முக்கியமான தொலைதொடர்பு மற்றும் தளவாட வழங்கல் மையங்களில் ஒன்று. நான்கு ஜெர்மானிய கவசப் படைப்பிரிவுகள் அதனைத் தாக்கின. இங்கு நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் படைப்பிரிவுகள் அனுபவமின்மையாலும் போர்த்திறனற்ற தளபதிகளைக் கொண்டிருந்தமையாலும் எளிதில் தோற்கடிக்கப்பட்டன. மூன்று நாட்கள் சண்டைக்குப் பின் சிடி பூ சிட்டிலிருந்து பின் வாங்கின. இச்சண்டையிலும் அடுத்து நிகழ்ந்த கேசரைன் கணவாய் சண்டையிலும் கிடைத்த எளிதான வெற்றிகளால் ஜெர்மானியர்கள் அமெரிக்கப் படைகளின் போர்த்திறனைக் குறைத்து மதிப்பிட்டனர். எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் எளிதில் அமெரிக்கர்களை வென்று விடலாம் என்று கணக்கிட்டனர். ஆனால் துனிசியப் போர்த்தொடர் நீடிக்க நீடிக்க அமெரிக்கப் படைகளும் தளபதிகளும் அனுபவம் பெற்று விரைவில் தங்கள் திறனை அதிகரித்துக் கொண்டனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிடி_பூ_சிட்_சண்டை&oldid=2917581" இலிருந்து மீள்விக்கப்பட்டது