நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களம்
இரண்டாம் உலகப் போரில் நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களம் (Mediterranean, Middle East and African theatres of World War II) என்பது நடுநிலக்கடல் வடிநிலப்பகுதி, மத்திய கிழக்காசியா மற்றும் ஆப்பிரிக்கப்பகுதிகளில் நேச மற்றும் அச்சு தரப்புகளுக்கிடையே நடைபெற்ற போர்த்தொடர்களை உள்ளடக்கியது. இவற்றில் அனைத்திலும் நேச நாட்டுப் படைகளே வெற்றி கண்டன. இக்கட்டுரையில் இக்களத்தின் பகுதியான போர்முனைகளும் போர்த்தொடர்கள் பற்றிய சுருக்கமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களம் | |||||||
---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப் போர் பகுதி | |||||||
நடுநிலக்கடல் பகுதியில் போரின் துவக்கத்தில் களநிலவரம்: கரும்பச்சை - நேச நாட்டுப் பகுதிகள், ஆரஞ்சு - அச்சு நாட்டுப் பகுதிகள், வெளிர் பச்சை - பிற்காலத்தில் நேச நாட்டு வசமான பகுதிகள்; சாம்பல்- நடு நிலை நாடுகள் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
நேச நாடுகள்: ஐக்கிய இராச்சியம் (1939-45) நாடுகடந்த அரசுகள் / உள்நாட்டு எதிர்ப்பு இயக்கங்கள்: பிரித்தனியப் பேரரசு/ பொதுநலவாயம்: | அச்சு நாடுகள்: இத்தாலி (1940-43) |
வடக்கு ஆப்பிரிக்கா
தொகுவடக்கு ஆப்பிரிக்கப் போர்முனை வடக்கு ஆப்பிரிக்காவில் துனிசியா, அல்ஜீரியா, மொரோக்கோ, லிபியா மற்றும் எகிப்து ஆகிய பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. ஜூன் 10, 1940 - மே 16, 1943 காலகட்டத்தில் இங்கு படைகளுக்கும் நேச நாட்டுப் படைகளுக்கும் இடையே நிகழ்ந்த மோதல்கள் வடக்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடர் என்றழைக்கப்படுகின்றன.
அச்சு நாடுகள் தரப்பில் முதலில் இத்தாலியும் பின் அதனுடன் நாசி ஜெர்மனியும் பங்கேற்றன. நேச நாடுகள் தரப்பில் பிரிட்டனும் அதன் பேரரசில் இடம் பெற்றிருந்த நாடுகளும் பங்கேற்றன. 1941 முதல் ஐக்கிய அமெரிக்காவும் நேச நாட்டுக் கூட்டணியில் நேரடியாக இடம்பெற்றது. இப்போர்முனையில் மோதல்கள் மேற்குப் பாலைவனப் போர்த்தொடர் மற்றும் துனிசியப் போர்த்தொடர் என இரு பெரும் கட்டங்களாக நடைபெற்றன. இவ்விரு போர்த்தொடர்களைத் தவிர வடக்கு ஆப்பிரிக்காவில் அமெரிக்க படையிறக்க நிகழ்வான டார்ச் நடவடிக்கை மற்றும் நடுநிலக்கடலில் நிகழ்ந்த பல வான்படை மற்றும் கடற்படை சண்டைகளும் வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையின் பகுதியாகக் கருதப்படுகின்றன. மேற்குப் பாலைவனப் போர்த்தொடரில் இதில் மூன்று முறை அச்சு நாட்டுப் படைகள் நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் இருந்த எகிப்து மீது படையெடுத்தன. மூன்று முறையும் அவற்றின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு இறுதியில் துனிசியாவுக்குப் பின்வாங்கின. கிழக்கிலிருந்து பிரித்தானிய 8வது ஆர்மி அவற்றை விரட்டி வந்தது. மேற்கிலிருந்து டார்ச் நடவடிக்கை மூலம் வடக்கு ஆப்பிரிக்காவில் தரையிறங்கியிருந்த அமெரிக்கப் படைகள் துனிசியாவைத் தாக்கின. இவ்வாறு இரு திசைகளில் இருந்து துனிசியா நேச நாட்டுப் படைகளால் தாக்கப்பட்டது. ஏழு மாதகால சண்டைக்குப் பின்னர் துனிசியாவிலிருந்த அச்சுப் படைகள் மே 13, 1943ல் சரணடைந்தன. துனிசியப் போர்த்தொடரின் முடிவுடன் வடக்கு ஆப்பிரிக்காவில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
இத்தோல்வியினால் வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்திருந்த இத்தாலிய காலனிகள் நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் வந்தன. வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் அச்சு நாடுகளுக்கு ஏற்பட்ட படை மற்றும் தளவாட இழப்புகள் பிற களங்களில் அவற்றின் வெற்றி வாய்ப்பினைப் பாதித்தன. வடக்கு ஆப்பிரிக்காவில் அச்சுப் படைகள் சரணடைந்தபின்னர் அப்பகுதி இத்தாலி மீதான நேச நாட்டுப் படையெடுப்புக்குக்குத் தளமாகப் பயன்படுத்தப்பட்டது.
மேற்கு ஆப்பிரிக்கா
தொகுஜூன் 1940 இல் பிரான்சு சண்டையில் தோல்வியடைந்த பிரான்சு நாசி ஜெர்மனியிடம் சரணடைந்தது. பிரெஞ்சு அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினர் நாசி ஜெர்மனியுடன் ஒத்துழைத்து அதன் ஆதரவுடன் விஷி அரசை உருவாக்கினர். இதனை ஏற்றுக் கொள்ளாத மற்றொரு பிரிவினர் சார்லஸ் டி கோல் தலைமையில் நாடுகடந்த விடுதலை பிரான்சு அரசை உருவாக்கினர். ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்த பிரெஞ்சு காலனிகள் அனைத்தும் இவ்விரு தரப்புகளுள் ஏதேனும் ஒன்றுக்கு ஆதரவு தெரிவித்தன. மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்த பிரெஞ்சு காலனிகளைக் கட்டுப்படுத்த இரு தரப்பினருக்கும் நிகழ்ந்த மோதல்களே மேற்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடர் எனப்படுகின்றன. மேற்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடரின் இரு முக்கிய மோதல்கள்: டாக்கார் சண்டை மற்றும் காபோன் சண்டை. இவற்றில் டி கோலின் விடுதலை பிரெஞ்சுப் படைகள் நேச நாட்டுப் படைகளின் ஆதரவுடன், விஷி அரசின் கட்டுப்பாட்டிலிருந்த பிரெஞ்சு ஆப்பிரிக்கக் காலனிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்றன. காபோன் சண்டையில் கிடைத்த வெற்றியால் பிரெஞ்சு நடுநிலக்கோடு ஆப்பிரிக்கா விடுதலை பிரெஞ்சுப் படைகள் வசமானது. ஆனால் டாக்கார் சண்டையில் அவை முறியடிக்கப்பட்டதால் பிரெஞ்சு மேற்கு ஆப்பிரிக்கா விஷிப் படைகளின் வசமே தங்கி விட்டது. 1942 இல் டார்ச் நடவடிக்கை நடைபெறும் வரை விஷிப் படைகளே அப்பகுதிகளைக் கட்டுப்படுத்தின.
கிழக்கு ஆப்பிரிக்கா
தொகுகிழக்கு ஆப்பிரிக்கப் போர்முனை, கிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான், சொமாலியா, கென்யா, எரிட்ரியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. ஜூன் 10, 1940 - நவம்பர் 27, 1941 காலகட்டத்தில் இங்கு நிகழ்ந்த மோதல்கள் கிழக்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடர் என்றழைக்கப்படுகின்றன.
முசோலினியின் தலைமையின் கீழிருந்த இத்தாலி 1930களில் மற்ற ஐரோப்பிய காலனியாதிக்க நாடுகளைப் போல தனக்கும் ஒரு காலனியப் பேரரசை உருவாக்கத் தீர்மானித்தது. 1936இல் எத்தியோப்பியாவைக் கைப்பற்றி இத்தாலிய சோமாலிலாந்து மற்றும் எரிட்ரிய காலனிகளை அதனுடன் ஒன்றிணைத்து “கிழக்கு ஆப்பிரிக்க இத்தாலியப் பேரரசு” என்ற பெயரில் ஒரு காலனிய அரசை உருவாக்கியது. 1939ல் ஐரோப்பாவில் போர் மூண்டபின்னர் பிரித்தானியப் பேரரசின் கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கக் காலனிகளைக் கைப்பற்ற இத்தாலி முயன்றது. ஜூன் 10, 1940 இல் இத்தாலி எகிப்து மற்றும் பிரித்தானியக் கிழக்கு ஆப்பிரிக்கக் காலனிகளின் மீது படையெடுத்தது. ஜூலை 4 ஆம் தேதி கென்யா மற்றும் சூடானைத் தாக்கிய இத்தாலியப் படைகள் அவற்றின் சில பகுதிகளைக் கைப்பற்றின. ஆகஸ்ட் 3 ஆம் தேதி அவை பிரித்தானிய சோமாலிலாந்தின் மீது படையெடுத்தன. சில வாரகால சண்டைக்குப் பின் பிரித்தானியப் படைகள் பின் வாங்கின; சொமாலிலாந்து இத்தாலி வசமானது.
பிரித்தானிய சோமாலிலாந்தை மீட்க ஜனவரி 1941 இல் பிரித்தானிய மற்றும் பொதுநலவாயப் படைகள் ஒரு எதிர்த்தாக்குதலைத் தொடங்கின. இத்தாக்குதல் மூன்று திசைகளிலிருந்து நடைபெற்றது. வடக்கில் லெப்டினண்ட் ஜெனரல் வில்லியம் பிளாட் தலைமையிலான ஒரு படை எரிட்ரியா மற்றும் சூடான் வழியாகத் தாக்கியது; தெற்கில் ஆலன் கன்னிங்காம் தலைமையிலான ஒரு படை கென்யா வழியாக சொமாலிலாந்து மீது படையெடுத்தது. இவை தவிர கிழக்கிலிருந்து கடல்வழியாக ஒரு படைப்பிரிவு சொமாலியாலாந்து மீது நீர்நிலத் தாக்குதல் நடத்தியது. எத்தியோப்பியாவின் உள்நாட்டு எதிர்ப்புப் படைகள் அந்நாட்டு மன்னர் முதலாம் ஹைலி செலாசி தலைமையில் இத்தாலிய ஆக்கிரமிப்புப் படைகளைத் தாக்கின. இவ்வாறு பலமுனைகளிலிருந்து நடைபெற்ற தாக்குதல்களை சமாளிக்க இயலாத இத்தாலியப் படைகள் தோல்வியடைந்தன. ஐந்து மாத கால சண்டைக்குப் பின், கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளும் இத்தாலியக் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப் பட்டு விட்டன. அடுத்த சில மாதங்களில் எஞ்சியிருந்த பகுதிகளும் முழுமையாகக் கைப்பற்றப்பட்டன. இத்தாலியின் முன்னாள் காலனிகள் நேச நாடுகளின் கட்டுப்பாட்டில் வந்தன.
மத்திய கிழக்காசியா
தொகுஈராக்
தொகுமுதலாம் உலகப் போருக்குப்பின் பிரிட்டன் உலக நாடுகள் சங்கத்தின் அனுமதியோடு ஈராக்கை நிருவகித்து வந்தது. 1932 இல் ஈராக்கிற்கு தன்னாட்சி வழங்கி படிப்படியாக தனது படைகளை விலக்கிக் கொண்டது. ஈராக்கிய ஆட்சியாளர்கள் பிரித்தானிய் ஆதர்வாளர்களாக இருந்தனர். இரண்டாம் உலகப் போர் மூண்டவுடன் நாசி ஜெர்மனியுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டது. ஏப்ரல் 1941 இல் தேசியவாதியான ரசீத் அலி இராணுவ அதிகாரிகளுடன் துணையுடன் புரட்சி ஒன்றை ஏற்படுத்தி ஈராக்கில் ஆட்சியைக் கைப்பற்றினார். அவர் அச்சு நாட்டு ஆதரவாளர். அவரது நிருவாகத்தில் ஈராக் அச்சு நாடுகளுக்கு ஆதரவாகச் செயல்படத் தொடங்கியது. இதனால் கோபம் கொண்ட பிரித்தானியத் தலைவர்கள், படைபலத்தால் ஈராக்கைப் பணிய வைக்க முடிவு செய்தனர். ஏப்ரல் 1941 இல் ஈராக்குக்கு பிரித்தானிய தரை, கடல் மற்றும் வான்படைப் பிரிவுகள் பல அனுப்பப்பட்டன. இதனால் இரு தரப்புக்குமிடையே பேச்சுவார்த்தைகள் முறிந்து வெளிப்படையாகப் போர் மூண்டது. அடுத்த சில வாரங்களில், ரசீத் அலி அரசுக்கு ஆதரவாக அச்சுப் படைகள் ஈராக்குக்கு அனுப்பப்பட்டன. நாசி ஜெர்மனி, பாசிச இத்தாலி, விஷி பிரான்சு ஆகியவை ரசீத் அலிக்கு ஆதரவாக படைப்பிரிவுகளையும் தளவாடங்களையும் ஈராக்குக்கு அனுப்பின. பாலஸ்தீனத்திலிருந்து ஜெனரல் ஆர்ச்சிபால்டு வேவல் தலைமையில் ஒரு பிரித்தானியப் படை வடக்கிலிருந்து ஈராக் மீது படையெடுத்தது. இரு பிரிவுகளாக ஈராக்கினுள் முன்னேறி ஈராக்கின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றியது. மே 31ம் தேதி பக்தாத் நகரம் சரணடைந்து போர் முடிவுக்கு வந்தது. ரசீத் அலியின் அரசு கலைக்கப்பட்டு, அப்துல்லா மன்னராட்சி பதில்-ஆளுனராக மீண்டும் நியமிக்கப்பட்டார். மேலும் ஒரு பிரித்தானிய ஆதரவு அமைச்சரவை ஈராக்கில் பதவியேற்றது.
ஈரான்
தொகுஇரண்டாம் உலகப் போரில் ஈரான் நடுநிலை நாடாக அதன் அரசர் ரெசா ஷா பஹலவியால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஈரானின் புவியியல் அமைவிடம் காரணமாக அது மேல்நிலை உத்தியளவில் மிக முக்கியமான ஒரு நாடாக இருந்தது. ஈரானைக் கட்டுப்படுதுத்துவோர் கிழக்குப் போர்முனையில் சோவியத் ஒன்றியத்துக்கான கிழக்குத் தளவாட வழங்கல் பாதைகளைக் கட்டுப்படுத்தக் கூடுமென்பதால் ஈரானின் முக்கியத்துவம் அதிகமானது. நாசி ஜெர்மனியின் படைகள் மேற்கிலிருந்து சோவியத் ஒன்றியத்துக்குள் வேகமாக முன்னேறியதால் கடன்-குத்தகை ஒப்பந்தம் மூலமாக அமெரிக்காவிலிருந்து சோவியத் ஒன்றியத்துக்கு அனுப்பப்படும் தளவாடங்களை ஈரான் வழியாக அனுப்ப நேச நாடுகள் முடிவு செய்தன. இவ்வழிக்கு பெர்சிய வழி (Persian corridor) எனப் பெயரிடப்பட்டிருந்தது. அதற்காக ஈரானைத் தாக்கிக் கைப்பற்ற முடிவு செய்தன. ஈரானில் வாழும் ஜெர்மானிய குடிமக்களை வெளியேற்ற ரெசா ஷா மறுத்ததைக் காரணம் காட்டி ஆகஸ்ட் 25, 1941 இல் பிரிட்டனும் சோவியத் ஒன்றியமும் ஈரான் மீது படையெடுத்தன. இது ஒரு சாற்றாத படையெடுப்பாக அமைந்தது. தெற்கிலிருந்து பிரித்தானியப் படைகளும் வடக்கிலிருந்து சோவியத் படைகளும் ஒரே சமயத்தில் ஈரானைத் தாக்கி அதன் படைகளை முறியடித்தன. பாரசீக வளைகுடாவில் பிரித்தானிய வேந்தியக் கடற்படை ஈரானியக் கடற்படை கப்பல்கள் பலவற்றை மூழ்கடித்தது. இரு முனைத் தாக்குதலை ஈரானால் சமாளிக்க இயலவில்லை. மூன்று வாரங்கள் சண்டைக்குப் பின்னால் ஈரான் சரணடைந்தது. செப்டம்பர் 17ம் தேதி ஈரானியத் தலைநகர் டெஹ்ரான் வீழ்ந்தது. ரெசா ஷா கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். அவருக்கு பதிலாக அவரது மகன் முகமது ரெசா ஷா பஹ்லவி ஈரானின் அரசராக்கபப்ட்டார். போர் முடியும் வரை ஈரான் பிரிட்டன் மற்றும் சோவியத் ஒன்றியத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. கிழக்குப் போர்முனையின் தளவாட வழங்கலுக்கு பெர்சிய வழி மிகவும் பயன்பட்டது.
சிரியா மற்றும் லெபனான்
தொகுபிரான்சின் ஆப்பிரிக்கக் காலனிகளைப் போலவே அதன் ஆசியக் காலனிகளிலும் டி காலின் விடுதலைப் பிரெஞ்சுப் படைகளுக்கும் நாசி ஆதரவு விஷிப் படைகளுக்கும் மோதல்கள் நிகழ்ந்தன. சிரியா, லெபனான் ஆகிய பகுதிகள் விஷி அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்தன. அங்கு ஜெர்மானியர்களுக்கு படைத்தள வசதிகளை அமைத்துக் கொள்ள விஷி அரசு அனுமதி அளித்தது. மேலும் ஆங்கில-ஈராக்கியப் போரின் போது ஈராக்கில் போரிட்ட அச்சு படைப்பிரிவுகள் சிரியாவைத் தளமாகக் பயன்படுத்த முயன்றன. இக்காரணங்களால் நேச நாட்டு தளபதிகள் சிரியா மற்றும் லெபனான் மீது படையெடுத்து அவற்றை ஆக்கிரமிக்கத் திட்டமிட்டனர். ஜூன் 8, 1941 இல் இத்தாக்குதல் தொடங்கியது. நான்கு பிரிவுகளாக நேச நாட்டுப் படைகள் சிரியா மீது படையெடுத்தன.பாலஸ்தீனத்திலிருந்து டமாஸ்கஸ் மற்றும் பெய்ரூட் நோக்கி இரு படைப்பிரிவுகள் முன்னேறின. மேலும் ஈராக்கிலிருந்து வடக்கு மற்றும் மத்திய சிரியாவை இரு படைப்பிரிவுகள் தாக்கின. இவை தவிர கடல் வழியாகவும் வான் வழியாகவும் விஷி படைகளை நேச நாட்டுப் படைகள் தாக்கின. ஒரு மாத கால சண்டைக்குப் பின்னர் விஷி படைகள் சரணடைந்தன. சிரியா மற்றும் லெபனான் டி கோலின் விடுதலை பிரெஞ்சுப் படைகளின் கட்டுப்பாட்டில் வந்தது. 1943 மற்றும் 1944 இல் முறையே லெபனான் மற்றும் சிரியா இரண்டிற்கும் விடுதலை பிரெஞ்சுப் படைகள் சுதந்திரம் வழங்கின. விடுதலை அடைந்த இரு நாடுகளும் உடனடியாக அச்சு நாடுகள் மீது போர் சாற்றின.
கடற்போர்
தொகு1940ஆம் ஆண்டு மேற்குப் போர்முனையில் ஜெர்மானியத் தாக்குதல் ஆரம்பான பின்னால், இத்தாலி நேச நாடுகளுடன் போர் சாற்றியது. உடனடியாக நடுநிலககடலைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர இரு தரப்புகளும் மோதத் தொடங்கின. இரு தரப்புகளுக்கும் இப்போர்த்தொடரில் மூன்று முக்கிய குறிக்கோள்கள் இருந்தன. அவை:
- எதிர்தரப்பின் தளவாட வழங்கல் வழிகளைத் தாக்கி சரக்குப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தல்
- வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் போரிட்டுக் கொண்டிருந்த தங்கள் தரப்பு படைகளின் தளவாட வழங்கல் வழிகளை எதிர் தரப்புத் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்தல்
- எதிர்தரப்பின் கடற்போர் வன்மையை அழித்தல்
பிரான்சு ஜெர்மானியப் படைகளிடம் சரணடைந்த பின்னால் அதன் வடக்கு ஆப்பிரிக்கக் காலனிகளில் நிறுத்தப்பட்டிருந்த பிரெஞ்சு கடற்படைப் பிரிவுகள் அச்சு வசமாகாதிருக்க அங்கிருந்த பிரெஞ்சு கப்பல்களை நெச நாட்டுக் கடற்படைகள் அழித்தன. அடுத்து வடக்கு ஆப்பிரிக்காவிலும் பால்கன் குடாப் பகுதிகளிலும் நடைபெற்ற தரைப்படை மோதல்களுக்கு ஆதரவாக தொடர்ந்து இரு தரப்பு கடல்-வான் படைகள் மோதிக்கொண்டன. 1941 இல் பால்கன் போர்த்தொடரில் அச்சு தரப்புக்கும் இரண்டு ஆண்டுகள் கழித்து வடக்கு ஆப்பிரிக்காவில் நேச நாடுகளுக்கும் வெற்றி கிட்டியது. இடையே மால்டா தீவினைக் கைப்பற்ற அச்சுப் படைகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.
வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் வெற்றி கண்ட நேசப் படைகள் 1943 இல் இத்தாலி மீது படையெடுத்தன. இத்தாலி சரணடைந்த பின்னால் இத்தாலிய வேந்தியக் கடற்படை இரண்டாகப் பிளவுபட்டு ஒரு பிரிவு நேச நாடுகளுக்கு ஆதரவாகவும் இன்னொரு பிரிவு நாசி ஜெர்மனிக்கு ஆதரவாகவும் போரிட்டன. 1944 இல் அச்சு கடல் மற்றும் வான்படைகள் மெல்ல அழிக்கப்பட்டு நேச நாட்டுப் படைகளின் கை ஓங்கியது. 1945இல் நேசப் படைகள் நடுநிலக்கடல் பகுதியில் முழு வான் மற்றும் கடல் ஆளுமை பெற்றன. மே 2, 1945 இல் இத்தாலியத் தீபகற்பத்தில் இருந்த ஜெர்மானியப் படைகள் சரணடைந்ததுடன் நடுநிலக்கடல் சண்டை முடிவுக்கு வந்தது.
மால்டா மற்றும் ஜிப்ரால்டர்
தொகுமால்டா தீவு நடுநிலக்கடலின் கடல்வழிகளையும் சரக்குப் போக்குவரத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய இடத்தில் அமைந்திருந்தது. அதனைக் கட்டுப்படுத்துவோர் நடுநிலக்கடல் சரக்கு போக்குவரத்திற்கு இடையூறு செய்ய இயலும். மே 1940 இல் வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் போர் மூண்ட பின்னர் அங்கு சண்டையில் ஈடுபட்டுள்ள படைகளுக்கு நடுநிலக்கடல் வழியாகத் தளவாடங்களை வழங்குதல் அவசியமானது. இதனால் மால்டாவின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்தது. மால்டா நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் உள்ளவரை வடக்கு ஆப்பிரிக்காவில் வெற்றி கடினம் என்பதை உணர்ந்த அச்சு தளபதிகள் அதனைக் கைப்பற்ற முயன்றனர். வான்வழியாக தொடர்ந்து குண்டுவீசியும், கடல்வழிகளை அடைத்து முற்றுகையிட்டு மால்டா மக்களைப் பட்டினி போடுவதன் மூலமும் அத்தீவைக் கைப்பற்ற அச்சுப் படைகள் முயனறன.
ஜூன் 1940 இல் இத்தாலிய வான்படையும் கடற்படையும் மால்டா முற்றுகையைத் தொடங்கின. ஜனவரி 1941 இல் இத்தாலியர்களால் தனித்து மால்டாவைக் கைப்பற்ற இயலாது என்பதை உணர்ந்த நாசி ஜெர்மனியின் தளபதிகள், அத்தீவைத் தாக்கை தங்கள் வான்படையான லுஃப்ட்வாஃபேவை அனுப்பினர். லுஃப்ட்வாஃவேவின் வரவு மால்டா முற்றுகையைத் தீவிரப்படுத்தியது. வான் ஆதிக்கம் பெற்றிருந்த லுஃப்ட்வாஃபே குண்டுவீசி வானூர்திகள் மால்டா இலக்குகள் மீதும் அப்பகுதியில் காவலுக்கிருந்த பிரித்தானியக் கடற்படைக் கப்பல்கள் மீதும் தொடர்ந்து குண்டுவீசித் தாக்கின. மே 1941 வரை நடந்த முதல் கட்ட மோதல்களில், அச்சு வான்படைகள் பெரு வெற்றி பெற்றன. நடுநிலக்கடல் பகுதியில் நேச நாட்டு சரக்குக் கப்பல் போக்குவரத்து அடியோடு நின்று போனது. மால்டாவின் பொதுமக்கள் நகரங்களை விட்டு வெளியேறி ஊர்ப்புறங்களுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தனர். ஏப்ரல் 1941 இல் பால்கன் போர்த்தொடர் ஆரம்பமானதால், ஜெர்மானியர்களின் கவனம் சிதறியது. அதில் பங்கேற்பதற்காகப் மால்டாவிலிருந்து பல லுஃப்ட்வாஃபே வான்படைப்பிரிவுகள் பால்கன் குடாப் பகுதிக்கு திருப்பி விடப்பட்டன. இதனால் மால்டா மீதான ஜெர்மானிய வான்தாக்குதல்களின் தீவிரம் வெகுவாகக் குறைந்து விட்டது. இதனால் ஜூன் - நவம்பர் 1941 இல் மால்டா முற்றுகையின் போக்கு நேச நாடுகளுக்கு சார்பாகத் திரும்பியது. மீண்டும் மால்டாவைக் கைப்பற்ற ஜெர்மானியப் படைகள் கடுமையாக முயன்றன. 1942 நடுப்பகுதியில் நடந்த கடுமையான மோதல்களில் அவை தோற்கடிக்கப்பட்டதால் மால்டா முற்றுகையைக் கைவிட்டன.
அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து நடுநிலக்கடலுக்குள் கப்பல்கள் செல்லும் இடத்தில் அமைந்திருந்த ஜிப்ரால்டர் தீவு பிரித்தானியக் கட்டுப்பாட்டில் இருந்தது. 1940-43 காலகட்டத்தில் அச்சுப் படைகளால் பலமுறை தாக்கப்பட்டது. வடக்கு ஆப்பிரிக்க மற்றும் மால்டா மோதல்களுக்கு தளவாட வழங்கல் ஒருங்கமைப்புத் தளமாகவும் நேச நாட்டுப் படைகளுக்குப் பயன்பட்டது.
பால்கன் போர்த்தொடர்
தொகுமுசோலினியின் பெரும் இத்தாலியப் பேரரசு அமைக்கும் ஆசை காரணமாகவும் ஜெர்மனியின் சோவியத் ஒன்றியத்தின் மீதான படையெடுப்புக்கு பால்கன் குடாப் பகுதி நாடுகளின் துணை தேவைப்பட்டதாலும் அச்சுப் படைகள் பால்கன் குடா நாடுகள் மீது படையெடுத்தன. பல்கேரியா, ரொமேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பின்றி அச்சுக் கூட்டணியில் இணைந்து விட்டன. யுகோஸ்லாவியா, கிரீசு ஆகிய நாடுகள் அச்சு நாடுகளுக்கு இணங்க மறுத்ததால் பால்கன் போர்த்தொடர் மூண்டது.
இத்தாலி கிரீசை சரணடைந்து தனது மேலாண்மையை ஏற்றுக் கொள்ள வற்புறுத்தியது. கிரேக்கர்கள் இத்தாலியின் சரணடைவு ஆணையை நிராகரித்து விட்டதால் அக்டோபர் 28, 1940ல் இத்தாலியப் படைகள் கிரீசு மீது படையெடுத்தன. ஒரு மாத காலத்துக்குள் இத்தாலியப் படையெடுப்பை முறியடித்து விட்டன. நவம்பர் 14ம் தேதி ஒரு பெரும் எதிர்த் தாக்குதலையும் தொடங்கின. அடுத்த சில மாதங்களுக்கு அல்பேனிய - கிரீசு எல்லையில் கடும் சண்டை நடந்தது. ஆனால் எத்தரப்புக்கும் தெளிவான வெற்றி கிட்டாமல் தேக்க நிலை உருவானது. இத்தாலியால் தனியாக கிரீசைத் தோற்கடிக்க இயலாது என்பதை ஒப்புக்கொண்ட முசோலினி, இட்லரின் உதவியை நாடினார். இட்லரின் ஆணைப்படி முசோலினிக்கு உதவ ஜெர்மானியப் படைகள் ஏப்ரல் 6ம் தேதி கிரீசு மீது படையெடுத்தன. ஏப்ரல் 6, 1941 அன்று ஜெர்மானியப் படைகள் யுகோசிலாவியா மீதும் கிரீசு மீதும் ஒரே நேரத்தில் படையெடுத்தன. அங்கேரி, பல்கேரியா, ரொமேனியா ஆகிய மூன்று நாடுகளில் இருந்து மூன்று புறங்களில் இருந்து ஜெர்மானியப் படைகள் யுகோசியாவியாவைத் தாக்கின. அடுத்த பதினோரு நாட்களில் யுகோசிலாவியப் படைகளை எளிதில் முறியடித்த அச்சுப் படைகள் பெல்கிரேடை சுற்றி வளைத்தன. ஏப்ரல் 17 அன்று யுகோசிலாவியா சரணடைந்தது.
யுகோசிலாவியா மீது படையெடுத்த அன்றே கிரீசையும் ஜெர்மானியப் படைகள் தாக்கின. கிரீசுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்திருந்த பிரிட்டன் தனது படைகளையும் பொதுநலவாயப் படைகளையும் கிரேக்கப் படைகளின் உதவிக்கு அனுப்பியது. ஆனால் ஜெர்மானியப் படைபலத்தைச் சமாளிக்க முடியாமல் நேச நாட்டுப் படைகள் பின்வாங்கின. மூன்று வார சண்டைக்குப் பின்னர் ஜெர்மானியப் படைகள் பெருவெற்றி பெற்றன. கிரீசிலிருந்த பிரித்தானியப் படைகள் பின்வாங்கி கடல்வழியாகத் தப்பின. கிரேக்கத் தலைநகர் ஏதென்சின் வீழ்ச்சியுடன் ஏப்ரல் 30ம் தேதி கிரீசு சண்டை முடிவுக்கு வந்தது. கிரேக்க அரசும், மன்னர் இரண்டாம் ஜார்ஜும் தலைநகர் ஏதென்சை விட்டு வெளியேறி கிரீட் தீவுக்கு இடம் பெயர்ந்தனர். அடுத்து கிரீட் தீவினை ஜெர்மானியர்கள் தாக்கினர். பிரித்தானியக் கடற்படை பெரும் பலத்துடன் தீவினைப் பாதுகாத்ததால் வான்வழியாக படைகளைத் தரையிறக்கி கிரீட்டைக் கைப்பற்ற ஜெர்மானியர்கள் முயன்றனர். மே 20, 1941ல் கிரீட் மீதான ஜெர்மானியத் தாக்குதல் தொடங்கியது. ஃபால்ஷிர்ம்யேகர் என்றழைக்கப்பட்ட ஜெர்மானிய வான்குடைப் படைப்பிரிவுகள் வானூர்தி வழியாக கிரீட்டின் பல பகுதிகளில் தரையிரங்கி பல முக்கிய இடங்களைக் கைப்பற்றின. அவற்றை சமாளிக்க முடியாத நேச நாட்டுத் தளபதிகள் கிரீட்டிலிருந்து பின் வாங்க முடிவு செய்தனர். கிரீட்டிலிருந்த நேச நாட்டுப் படைகள் கடல்வழியாக எகிப்துக்குக் காலி செய்யப்பட்டன. கிரேக்க அரசர் இரண்டாம் ஜார்ஜும் கிரீட்டிலிருந்து தப்பினார். ஜூன் 1ம் தேதி கிரீட்டில் எஞ்சியிருந்த கிரேக்க மற்றும் நேச நாட்டுப் படைகள் சரணடைந்து கிரீட் சண்டை முடிவுக்கு வந்தது.
இத்தாலி
தொகுவடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் வெற்றி பெற்ற நேச நாட்டு படைகள் அடுத்து நடுநிலக்கடல் பகுதி முழுவதிலும் ஆதிக்கம் செலுத்த விரும்பின. இதற்காக இத்தாலி மீது படையெடுத்தன. ஜூலை 1943ல் இத்தாலிக்கு தெற்கே உள்ள சிசிலி தீவு மீதான படையெடுப்புடன் இத்தாலியப் போர்த்தொடர் ஆரம்பமானது. சிசிலி கைப்பற்றப்பட்டவுடன் இத்தாலிய மூவலந்தீவின் மீது செப்டமப்ர் 1943ல் படையெடுப்பு நிகழ்ந்தது. இப்படையெடுப்பால் இத்தாலியில் பெரும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. போரில் ஏற்பட்ட தொடர் தோல்விகளால் இத்தாலிய மக்கள் சர்வாதிகாரி முசோலினி மீது அதிருப்தி கொண்டிருந்தனர். அவரது சக பாசிச அதிகாரிகள் அவரை முதலில் சர்வாதிகாரிப் பதவியில் இருந்து நீக்கினர். பின்பு அச்சுக் கூட்டணியிலிருந்து விலகி நேச நாட்டுக் கூட்டணியில் இத்தாலியை இணைத்து விட்டனர். எனினும் ஜெர்மனி முசோலினி தலைமையில் “இத்தாலிய சமூக அரசு” என்ற நாடு கடந்த கைப்பாவை அரசை உருவாக்கியது. இத்தாலியின் கட்டுப்பாட்டிலிருந்து பகுதிகளை ஜெர்மானியப் படைகள் ஆக்கிரமித்தன. இத்தாலியர்கள் இரு தரப்புகளாகப் பிளவுண்டு முசோலினி தலைமையில் ஒரு சிறு படை ஜெர்மானியர்களுக்கு ஆதரவாக நேச நாட்டுப் படைகளையும், இத்தாலிய அரசுப் படைகளையும் எதிர்த்துப் போரிட்டது. படையெடுப்பு தொடங்கி சில மாதங்களுள் தெற்கு இத்தாலியைக் கைப்பற்றிய நேச நாட்டுப் படைகள் மெதுவாக வடக்கு நோக்கி முன்னேறின. சுமார் இரு ஆண்டுகள் தொடர்ந்து நிகழ்ந்த மோதல்களில் மத்திய மற்றும் வடக்கு இத்தாலியின் பெரும் பகுதி நேச நாட்டு வசமானது. ஜெர்மானியர்கள் வரிசையாகப் பல அரண்கோடுகளை அமைத்து பாதுகாவல் போர் உத்திகளைக் கையாண்டதால் நேச நாட்டுப் படை முன்னேற்றம் மெதுவாக நடைபெற்றது. மே 1945ல் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து ஜெர்மனி சரணடைந்த போது இத்தாலியில் எஞ்சியிருந்த ஜெர்மானியப் படைகளும் சரணடைந்தன.
தெற்கு பிரான்சு
தொகுஜூன் 1944ல் நார்மாண்டிச் சண்டையுடன் நேச நாடுகளின் நாசி ஐரோப்பாவின் மீதான படையெடுப்பு தொடங்கியது. அடுத்த இரு மாதங்களில் நேச நாட்டுப் படைகள் வேகமாக முன்னேறி பிரான்சின் பல பகுதிகளைக் கைப்பற்றின. ஆனால் பிரான்சிலுள்ள படைகளுக்குத் தேவையான தளவாடங்களை இறக்குமதி செய்ய போதுமான துறைமுக வசதிகள் நேச நாட்டுப்படைகளிடம் இல்லை. இதற்காகத் தெற்கு பிரான்சிலிருந்த மார்சே துறைமுகத்தைக் கைப்பற்ற டிராகூன் நடவடிக்கை நடத்தப்பட்டது. 1944, ஆகஸ்ட் 15ம் தேதி ஆல்ஃபா, டெல்டா, காமெல் என்று குறிப்பெயரிடப்பட்டிருந்த பிரான்சின் தெற்குக் கடற்கரைப் பகுதிகளில் படைகள் தரையிறங்கத் தொடங்கின. தரையிறங்கும் படைகளுக்கு உதவியாக வான்குடை வீரர்கள் ஜெர்மானிய பீரங்கித் தளங்களைத் தாக்கி அழித்தனர். பல நேச நாட்டுப் போர்க்கப்பல்களும் ஜெர்மானியப் பாதுகாப்பு நிலைகளின் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தின. உள்ளூர் பிரெஞ்சு எதிர்ப்பு படையினரும் ஜெர்மானியப் பாதுகாவல் படைகளைத் தாக்கினர். இந்த பகுதியில் முன்பு நிறுத்தப்படிருந்த ஜெர்மானியப் படைகளின் பெரும் பகுதி வடபிரான்சு போர்முனைக்கு அனுப்பப்பட்டிருந்ததால், ஜெர்மானியர்களிடமிருந்து பெரிதாக எதிர்ப்பு ஒன்றும் இல்லை. முதல் நாளன்றே 94,000 படை வீரர்களும், 11,000 வண்டிகளும் பிரான்சு மண்ணில் தரையிறங்கி விட்டன. அவை விரைவாக இருபது கிலோ மீட்டர் வரை முன்னேறி தாக்குதல் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தன.
குறிப்புகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-08-15. பார்க்கப்பட்ட நாள் 2011-09-09.
- ↑ Beevor, Stalingrad. Penguin 2001 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-100131-3 p183
மேற்கோள்கள்
தொகு- Douglas Porch, 2004, The Path to Victory: The Mediterranean Theater in World War II. New York: Farrar, Straus and Giroux (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-37420-518-3)
- Ready, J. Lee (1985). Forgotten Allies: The European Theatre, Volume I. McFarland & Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0899501291.
- Ready, J. Lee (1985). Forgotten Allies: The Military Contribution of the Colonies, Exiled Governments and Lesser Powers to the Allied Victory in World War II. McFarland & Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0899501178.