பிரான்சு சண்டை

பிரான்சு சண்டை (Battle of France) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது பிரான்சின் வீழ்ச்சி (Fall of France) என்றும் அழைக்கப்படுகிறது. மே 10 – ஜூன் 25, 1940ல் நடைபெற்ற இச்சண்டையில் நாசி ஜெர்மனி பிரான்சைத் தாக்கி கைப்பற்றியது.

பிரான்சு சண்டை
இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின் பகுதி

பிரான்சு சரணடைந்தபின் பாரிசிலுள்ள ஆர்கி-டி-டிரயோம்ஃப் தேசியச் சின்னத்தின் அருகில் அணுவகுத்துச் செல்லும் ஜெர்மானிய வீரர்கள்
நாள் மே 10 – ஜூன் 25, 1940
இடம் பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து
தெளிவான அச்சு நாட்டு வெற்றி
  • கோம்பியேனில் இரண்டாம் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியது
  • ஜெர்மனி லக்சம்பர்க், நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் பிரான்சை ஆக்கிரமித்தது.
  • இத்தாலி தென் கிழக்கு பிரான்சை ஆக்கிரமித்தது.
  • பிரான்சின் மூன்றாம் குடியரசு வீழ்ந்து விஷி அரசு உருவானது
பிரிவினர்
 நாசி ஜெர்மனி
இத்தாலி இத்தாலி (ஜூன் 10 முதல்)
பிரான்சு
 ஐக்கிய இராச்சியம்
 பெல்ஜியம்
 நெதர்லாந்து
 கனடா
செக்கஸ்லோவாக்கியா
போலந்து போலந்து
 லக்சம்பர்க்
தளபதிகள், தலைவர்கள்
நாட்சி ஜெர்மனி கெர்டு வான் ரன்ஸ்டட்

நாட்சி ஜெர்மனி ஃபெடோர் வான் போக்

நாட்சி ஜெர்மனி வில்லெம் வான் லீப்

இத்தாலி இரண்டாம் உம்பர்ட்டோ
பிரான்சு மாரீஸ் காமெலின்
பிரான்சு மாக்சிம் வேய்காண்ட்
பிரான்சு சார்லஸ் டி கோல்
ஐக்கிய இராச்சியம் கோர்ட் பிரபு

பெல்ஜியம் மூன்றாம் லியோபோல்டு
நெதர்லாந்து ஹென்ரி விங்கெல்மான்
போலந்து விளாடிஸ்லா சிகோர்ஸ்கி
பலம்
நாசி ஜெர்மனி:
141 டிவிசன்கள்,
7,378 பீரங்கிகள்,
2,445 டாங்குகள்,
5,638 விமானங்கள்[1][2][3]
3,350,000 படைவீரர்கள்
ஜூன் 20 முதல் ஆல்ப்ஸ் பகுதியில்
300,000 இத்தாலியர்கள்

144 டிவிசன்கள்,
13,974 guns,
3,383 டாங்குகள்,
2,935 விமானங்கள்[1][4]
3,300,000 troops
ஜூன் 20 முதல் ஆல்ப்ஸ் பகுதியில்
~150,000 பிரெஞ்சுப் படைகள்
இழப்புகள்
நாசி ஜெர்மனி:
27,074 (மாண்டவர்),
110,034 (காயமடைந்தவர்)
18,384 காணாமல் போனவர்
மொத்தத்தில் 49,000 பேர் இறந்தனர்[5]
1,236 விமானங்கள் அழிந்தன, 323 சேதமடைந்தன[6]
753 டாங்குகள்[6]
இத்தாலி:
1,247 மாண்டவர் / காணாமல் போனவர்,
2,631 காயமடைந்தவர்,
2,151 உறைபனிக்கடியால் பாதிக்கப்பட்டனர்
360,000 மாண்டவர் / காயமடைந்தவர்,
1,900,000 கைப்பற்றப்பட்டவர்
2,233 விமானங்கள்[7]

செப்டம்பர் 1, 1939ல் ஜெர்மானியப் படைகள் போலந்தைத் தாக்கியதால் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. போலந்தைக் கைப்பற்றிய பிறகு ஜெர்மனி அடுத்து மேற்குத் திசையில் தாக்கத் தயாரானது. இத்தாக்குதலை எதிர்பார்த்து நேச நாடுகள் பிரான்சு-ஜெர்மானிய எல்லையில் தயார் நிலையில் இருந்தன. நேச நாட்டுக் கூட்டணியில் பிரான்சு, பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகள் இடம் பெற்றிருந்தன. மே 10, 1940ல் ஜெர்மனியின் மேற்குப் போர்முனைத் தாக்குதல் ஆரம்பமாகியது. இத்தாக்குதலுக்கான ஜெர்மானிய மேல்நிலை உத்தி ”மஞ்சள் திட்டம்” (ஜெர்மன்:Fall Gelb) என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. அதன்படி ஜெர்மானியப் படைகள் மேற்கு எல்லையில் இரு இடங்களில் தாக்கின. பெல்ஜியத்தின் மீதான ஜெர்மானியத் தாக்குதலின் நோக்கம் நேச நாட்டுப் படைகளைத் திசை திருப்புவதாகும். பெல்ஜியத்தைப் பாதுகாக்க நேச நாட்டு முதன்மைப் படைகள் விரைந்து வந்தபின், அவற்றின் பின் பகுதியில் ஆர்டென் காடுகள் வழியாக ஜெர்மனியின் முக்கிய தாக்குதல் நடைபெற்றது. ஜெர்மானிய உத்தி வெற்றியடைந்து, நேச நாட்டு முதன்மைப் படைகளின் பெரும் பகுதி ஜெர்மானியக் கிடுக்கிப் பிடிக்குள் சிக்கிக் கொண்டது. ஜெர்மானியக் கிடுக்கியின் இரு கரங்களும் வேகமாக முன்னேறி மே மாத இறுதிக்குள் ஆங்கிலக் கால்வாயை அடைந்தன. ஜெர்மானியப் படைவளையம் வேகமாக இறுகினாலும் சிக்கிய நேசநாட்டுப் படைகளின் பெரும்பகுதி டன்கிர்க் துறைமுகம் வழியாக இங்கிலாந்துக்கு தப்பின. இத்துடன் (ஜூன் 4) பிரான்சு சண்டையின் முதல் கட்டம் பெரும் ஜெர்மானிய வெற்றியில் முடிவடைந்தது.

அடுத்த கட்டமாக பிரான்சின் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்றும் ஜெர்மானிய நடவடிக்கை (சிவப்புத் திட்டம் - Fall Gelb). ஜூன் 5ம் தேதி தொடங்கியது. பிரான்சின் மையப்பகுதி மீது ஜெர்மானியப் படையெடுப்பு ஆரம்பமாகியது. ஜூன் 10ம் தேதி இத்தாலியும் பிரான்சைத் தாக்கியது. இரு முனைத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பிரான்சின் படைகள் பின்வாங்கத் தொடங்கின. ஜூன் 14ம் தேதி பிரான்சின் தலைநகர் பாரிஸ் ஜெர்மானியர் வசமானது. போர்டியூ நகருக்கு இடம் பெயர்ந்த பிரான்சின் அரசுள் பெரும் குழப்பம் நிலவியது. அரசு கவிழ்ந்து தளபதி ஃபிலீப் பேதான் பிரதமராகப் பொறுப்பேற்றார். ஜூன் 17ம் தேதி பேதான் ஜெர்மனியிடம் சண்டை நிறுத்தம் கோரினார். ஜூன் 22ல் போர் நிறுத்தம் கையெழுத்தாகி பிரான்சு சரணடைந்தது. அடுத்த நான்காண்டுகள் ஜெர்மானிய-இத்தாலிய ஆக்கிரமிப்பில் கழிந்தன. பிரான்சு மூன்றாகப் பிரிக்கப்பட்டது - வடக்கு மற்றும் மேற்கு பகுதிகள் ஜெர்மானியரின் நேரடி ஆக்கிரமிப்பிலும், தென் கிழக்கில் சில பகுதிகள் இத்தாலியின் கட்டுப்பாட்டிலும் வந்தன. மீதமிருந்த பகுதிகள் பிரெஞ்சு அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தன. விஷி (Vichy) அரசாங்கம் என்றழைக்கப்பட்ட அந்த பிரெஞ்சு அரசுக்கு ஜெர்மானிய-இத்தாலிய ஆக்கிரமிப்பு பகுதிகளில் பெயரளவில் மட்டுமே அதிகாரமிருந்தது. இவ்வாறு பிரான்சு சண்டை அச்சு நாடுகளுக்கு பெருத்த வெற்றியுடன் முடிவடைந்தது.

பின்புலம் தொகு

1939 செப்டம்பரில் ஹிட்லர் போலந்தைத் தாக்கிக் கைப்பற்றினார். அடுத்து மேற்கு நோக்கி தன் கவனத்தைத் திருப்பினார். முதல் உலகப் போரில் ஜெர்மனி தோற்று வெர்சாய் ஒப்பந்ததில் கையெழுத்திட நேர்நத அவமானத்திற்கு இம்முறை நேச நாடுகளை வென்று பழி தீர்த்துக் கொள்ள வேண்டுமென விரும்பினார். மேலும் சோவியத் யூனியனுடன் எப்படியும் போர் மூளும் என்று அவர் உறுதியாக நம்பினார். அவ்வாறு நிகழ்வதற்கு முன் மேற்கிலுள்ள எதிரிகளை முறியடித்துவிட வேண்டும் இல்லையெனில் இருமுனைப் போர் ஒன்றில் சிக்கிக் கொள்ள நேரிடும் என்று அவர் உணர்ந்திருந்தார். போலந்தைக் கைப்பற்றிய பின்னர் நாசி ஜெர்மனியின் படைகள் டென்மார்க், நார்வே ஆகிய நாடுகளையும் தாக்கி ஆக்கிரமித்தன. ஆனால் பிரான்சுடனான எல்லைப் பகுதியில் போர் மூளாமல் மந்த நிலை நிலவியது. பிரான்சின் மேற்கு அரணை முறியடித்து நேச நாடுகளைத் தோற்கடிக்க புதிய திட்டங்களை வகுக்குமாறு தன் தளபதிகளுக்கு உத்தரவிட்டார்.

மேற்குப் போர்முனைக்கான ஜெர்மானிய மேல்நிலை உத்தி ஜெனரல் ஃபிரான்சு ஹால்டரால் உருவாக்கப்பட்ட மஞ்சள் திட்டமாகும். போருக்கு முன்பே உருவாக்கப்பட்டிருந்த இத்திட்டம் பிரான்சைக் கீழ் நாடுகள் (low countries - பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்சம்பர்க்) வழியாகத் தாக்க பரிந்துரைத்தது. மேல்நிலை உத்தியளவில் முதல் உலகப் போரின் ஷிலீஃபன் திட்டத்தை ஒத்திருந்தது. ஆனால் இத்திட்டம் ஹிட்லருக்கும் பிற தளபதிகளுக்கும் ஏற்புடையதாக இல்லை. திட்டத்தின் படி நேரடித் தாக்குதல் நடத்தினால் இழப்புகள் பெரிதாக இருக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். மேலும் 19ம் நூற்றாண்டிலிருந்து ஜெர்மானியப் போர் உத்திகளின் அடிப்படையாக இருந்து வரும் இயங்குநிலைப் போர்க் கோட்பாட்டிற்கு (Bewegungskrieg) இது புறம்பானது என்று அவர்கள் கருதினார்கள். எதிரிகளின் முக்கிய படைகளை ஒரு பொறியில் சிக்க வைத்து அழிக்க வேண்டுமென்பதே (Kesselschlacht - கொப்பரைப் போர்; எதிரியின் படைகளை கொதிக்கும் கொப்பரையில் வறுத்தெடுப்பது போல அழிக்க வேண்டுமென்று பொருள்) ஜெர்மானியப் போர்க் கோட்பாடு. ஆனால் ஹால்டரின் மஞ்சள் திட்டம் இதற்கு புறம்பாக அரண் நிலைகளை நேரடியாகத் தாக்க வேண்டுமெனக் கூறியது.

 
மஞ்சள் திட்டத்தின் பரிணாமம்

இந்நிலையில், ஃபீல்டு மார்ஷல் எரிக் வான் மான்ஸ்டீன் மஞ்சள் திட்டத்தில் சில மாற்றங்கள் செய்தார். பான்சர் படைகளின் (கவச படைகள்) முன்னோடியாகக் கருதப்படும் தளபதி குடேரியனின் உதவியுடன் புதிய மான்ஸ்டீன் திட்டம் தயாரிக்கப்பட்டது. இதன்படி பெல்ஜியம் போன்ற கீழ் நாடுகளின் மீதான தாக்குதல் திசைதிருப்பும் தாக்குதலாக மாற்றப்பட்டது. பெல்ஜியம் நேச நாட்டுப்படைகளை ஈர்க்கும் பொறியாக மட்டும் இருக்கும். அவை பெல்ஜியத்துக்கு விரைந்தவுடன் அவற்றின் பின் பகுதியில், பிரான்சின் ஆர்டென் காடுகள் வழியாக ஜெர்மானிய முக்கிய தாக்குதல் நடக்கும். முந்தையப் போர்களில் போலல்லாமல் கவசப் படைகள் தன்னிச்சையாக வேகமாக முன்னேற வேண்டும். தரைப்படைப் பிரிவுகள் முடிந்த வரை அவற்றைப் பின் தொடர வேண்டும். ஆனால் அவற்றுக்காக கவசப் படைகள் காத்திருக்கக் கூடாது. வேகமாக முன்னேறி எதிரி படைகளை அதிர்ச்சியில் ஆழ்த்தித் தாக்கி ஆங்கிலக் கால்வாயை அடைய வேண்டும். மான்ஸ்டீனின் இத்திட்டம் ஹிட்லராலும் பிற தளபதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஜெர்மானிய உத்தியை பெல்ஜிய உத்தியாளர்கள் ஓரளவு கணித்து விட்டனர். ஆனால அவர்களது எச்சரிக்கையை பிரான்சும், பிரிட்டனும் பொருட்படுத்தவில்லை. நேச நாட்டுத் தளபதிகள் பிரான்சின் எல்லை அரணான மஷினோ கோடு உடைக்க முடியாததென்றும் எனவே ஜெர்மனியின் முக்கியத் தாக்குதல் பெல்ஜியத்தில் தான் நடக்குமென்று நம்பினார்கள். தாக்குதல் தொடங்கியவுடன் பெல்ஜியத்துக்கு விரைந்து சென்று ஜெர்மானியப் படைகளை அங்கே தடுத்து நிறுத்த வேண்டுமென நேச நாட்டு உத்தி வகுக்கப்பட்டது. பெல்ஜியமும் நெதர்லாந்தும் பெயரளவில் நடுநிலை நாடுகளாக இருந்ததால், தாக்குதல் தொடங்குமுன் அங்கு தங்கள் படைகளை நகர்த்த பிரான்சும், பிரிட்டனும் விரும்பவில்லை.

படை பலம் தொகு

 
மேற்குப் போர்முனையில் இரு தரப்பு படைகள்

1940ல் மேற்குப் போர்முனையில் எண்ணிக்கையளவில் நேச நாட்டுப் படைகளே பலம் வாய்ந்தவையாக இருந்தன. ஜெர்மானிய தரப்பில் 141 டிவிசன்களும் முப்பது லட்சம் படைவீரர்களும் இத்தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்பட்டனர். மேற்குப் போர்முனையில் ஜெர்மானியப் படைகள் மூன்று ஆர்மி குரூப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஃபீல்டு மார்ஷல் கெர்ட் வான் ரன்ஸ்டெட் தலைமையிலான ஆர்மி குருப் ஏ விடம் ஆர்டென் காடுகளில் முக்கியத் தாக்குதல் நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதில் ஏழு கவச டிவிசன்கள் உட்பட 45 1/2 டிவிசன்கள் இருந்தன. இந்த ஆர்மி குரூப்பு 4வது, 12வது மற்றும் 16வது ஆர்மிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஃபெடோர் வான் போக் தலைமையிலான ஆர்மி குரூப்பு பி விடம் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து மீதான திசை திருப்பும் தாக்குதலை நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதில் முன்று கவச டிவிசன்கள் உட்பட 29 1/2 டிவிசன்கள் இடம்பெற்றிருந்தன. இப்பிரிவு 6வது மற்றும் 18வது ஆர்மிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவ்விரண்டு ஆர்மி குரூப்புகளும் மான்ஸ்டீன் திட்டத்தின் ”கொப்பரை”யின் இரு கரங்களாகப் பயன்படுத்தப்பட்டன. இவை தவிர வில்லெம் ரிட்டர் வான் லீப் தலைமையில் 18 டிவிசன்களைக் கொண்ட ஆர்மி குரூப் சி யும் உருவாக்கப்பட்டது. முக்கிய தாக்க்தலில் ஈடுபடும் ஆர்மி குரூப் ஏ வை பக்கவாட்டிலிருந்து நேசப்படைகள் தாக்காத வண்ணம் பாதுகாக்கும் பணி இதற்குக் கொடுக்கப்பட்டது.

ஜெர்மானியர்களை எதிர்க்க நேச நாடுகள் ஆறு கவச டிவிசன்கள், 24 எந்திரமயமாக்கப்பட்ட டிவிசன்கள் உட்பட 144 டிவிசன்களை மேற்குப் போர்முனையில் நிறுத்தியிருந்தன. இவற்றுள் 93 பிரெஞ்சு, 22 பெல்ஜிய, 10 பிரிட்டிஷ், 9 டச்சு, 2 போலந்திய மற்றும் 1 செக் டிவிசனும் அடக்கம். இவை தவிர வேறு பல சிறு படைப்பிரிவுகளும் களத்திலிருந்தன. ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டிருந்த பிரிட்டிஷ் படை “பிரிட்டிஷ் பயணப் படை” (British Expeditionary Force) என்று அழைக்கப்பட்டது. பீரங்கிகள் மற்றும் டாங்குகளின் எண்ணிக்கையிலும் நேசநாடுகளின் கையே ஓங்கியிருந்தது. வான்படை எண்ணிக்கையிலும் நேசநாடுகள் ஜெர்மனியை விட அதிக எண்ணிக்கையில் சண்டை விமானங்களையும், குண்டு வீசி விமானங்களையும் கொண்டிருந்தன. ஆனால் தொழில்நுட்ப மற்றும் தாக்குதல் திறன் அடிப்படையில் ஜெர்மானிய விமானப்படை (லுஃப்வாஃபே) நேச நாட்டு வான்படைகளை விட முன்னணியில் இருந்தது.

சண்டையின் போக்கு தொகு

பிரான்சு சண்டை இரு கட்டங்களாக நடைபெற்றது. மே 10 முதல் டன்கிர்க் காலிசெய்தல் முடிவடைந்த ஜூன் 4 வரை முதல் கட்டம். ஜூன் 4 முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த ஜூன் 25 வரை இரண்டாம் கட்டம்.

முதல் கட்டம் தொகு

 
ஜெர்மானிய பான்சர் (கவச) படைகள்

மே 9 பின்னிரவில் ஜெர்மானிய போர்த் தலைமையகம் தாக்குதலைத் தொடங்குமாறு தனது படைப்பிரிவுகளுக்கு ஆணையிட்டது. தாக்குதல் தொடங்குவதற்கு முன்பே எந்தவொரு எதிர்ப்புமின்றி மே 9ம் தேதி மாலையில் ஜெர்மானியப் படைகள் லக்சம்பர்கை ஆக்கிரமித்தன. மே 10 அன்று அதிகாலையில் ஆர்மி குரூப் பி யின் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து (டச் குடியரசு) மீதான திசை திருப்பும் தாக்குதல் ஆரம்பமாகியது. ஜெர்மானியத் திட்டப்படி இதுவே அவர்களின் முக்கிய தாக்குதல் என்று நம்பிய நேசநாடுகள் தங்கள் முக்கியப் படைகளை பெல்ஜியத்துக்கு அனுப்பின. அதி வேகமான இந்த முன்னேற்றம், அப்படைகளின் ஒழுங்கமைப்பை சீர்குலைத்ததுடன் அவற்றின் எரிபொருள் கையிருப்பைக் கணிசமாகக் குறைத்தது. நெதர்லாந்துக்கு பிரான்சின் படைகள் வந்து சேர்வதற்குள், ஜெர்மானியப் படைகளின் கை அங்கு ஓங்கி விட்டது.

நெதர்லாந்து சண்டையின் துவக்கத்தில் ஜெர்மானிய வான்குடை வீரரக்ள் (ஃபால்ஷிர்ம்யெகர்) அந்நாட்டின் முக்கிய அரண் நிலைகளைத் தாக்கிக் கைப்பற்றினர். ஜெர்மானிய வான்படை லுஃப்ட்வாஃபே டச்சு வான்படையை எளிதில் முறியடித்து டச்சு வான்வெளியில் ஆதிக்க நிலையை எட்டியது. பின்னர் ஜெர்மானியத் தரைப்படைகளுக்குத் துணையாக டச்சு தரைப்படைகளின் மீது குண்டுவீசத் தொடங்கியது. டச்சு எதிர்த்தாக்குதல்களால், ஜெர்மானிய வான்குடைப் பிரிவுகளில் பெருத்த சேதம் ஏற்பட்டது. ஆனால் டச்சுப் படைகளாலும், அவற்றின் துணைக்கு வந்த பிரெஞ்சுப் படைகளாலும் ஜெர்மானிய முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. மே 13ம் தேதி ஜெர்மனியின் பான்சர் (கவச) படைகள் ரோட்டர்டாம் நகரத்தின் எல்லையை அடைந்து விட்டன. நிலைமை கைமீறிப் போனதை அறிந்த டச்சு அரசு, மே 14ம் தேதி சரணடைந்தது.

 
மே 21ல் பெல்ஜியப் போர்முனை நிலவரம்

நெதர்லாந்தைப் போலவே பெல்ஜியம் சண்டையிலும் ஜெர்மானியப் படைகளுக்கு ஆரம்பத்தில் எளிதில் வெற்றிகள் கிட்டின. ஜெர்மானிய வான்குடை வீரர்கள் பெல்ஜிய எல்லைக் கோட்டையான எபென் எமேலைத் தாக்கிக் கைப்பற்றினர். ஜெர்மானிய முன்னேற்றத்தைத் தடுக்க பிரான்சின் முதலாம் ஆர்மியும், பிரிட்டிஷ் பயணப் படைகளும் பெல்ஜியத்துக்கு வந்து சேர்ந்தன. இங்கு தான் முக்கியத் தாக்குதல் நிகழும் என்று நிரூபிக்கும் வண்ணம், ஹன்னூட்டிலும் ஜெம்புளூவிலும் ஜெர்மானியப் படைகள் தாக்குதல் நடத்தின. இவ்விரண்டு சண்டைகளிலும் பிரெஞ்சுப் படைகள் வெற்றி பெற்றாலும், அவற்றின் கவனம் இப்பொழுது முழுவதும் பெல்ஜியப் போர் முனையிலேயே இருந்தது. மான்ஸ்டீனின் திசை திருப்பும் திட்டம் முழு வெற்றியடைந்தது.

 
வரைபடங்களைப் பார்வையிடும் ஜெர்மானியத் தளபதி ரோம்மல்

மே 11ம் தேதி ஆர்டென் காடுகள் வழியான ஜெர்மானிய முக்கிய தாக்குதலை ஆர்மி குரூப் ஏ தொடங்கியது. இதனை எதிர்பார்க்காத பிரெஞ்சுப் படைகள் அதிர்ச்சியில் ஆழ்ந்ததால் பெரிய எதிர்த்தாக்குதல் நிகழ்த்தவிலலை. வேகமாக முன்னேறிய ஜெர்மானியப் படைகள் மே 12ம் தேதி மியூசே ஆற்றை அடைந்தன. மியூசே ஆற்றைக் கடப்பதற்காக மூன்று இடங்களில் பாலங்களைக் கைப்பற்றின. இவற்றுள் முக்கியமானவை செடான் நகரருகே அமைந்திருந்த பாலங்கள். மூன்று நாட்கள் சண்டைக்குப் பின்னர் இப்பாலங்கள் ஜெர்மானியர் வசமாகி அவர்களது படைகள் மியூசே ஆற்றைக் கடக்கத் தொடங்கின. செடானில் ஏற்பட்ட தோல்வி பிரெஞ்சுத் தளபதிகளுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

 
ஜூன் 6ல் மேற்குப் போர்முனை நிலவரம்

மியூசே ஆற்றைக் கடந்தவுடன் ஜெர்மானியக் கவசப் படைகள் தரைப்படைகளின் துணையின்றி பிரான்சினுள் வேகமாக முன்னேறத் தொடங்கின. நிதானமாக பகுதிகளைக் கைப்பற்றுவதை விட வேகமான முன்னேற்றத்தால் எதிரியை வியப்பில் ஆழ்த்தி அவர்கள் எதிர்வினையாற்றுமுன் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி அவர்கள் மன உறுதியைக் குலைக்கும் மின்னலடித் தாக்குதல் (பிளிட்ஸ்க்கிரீக்) முறையை பயன்படுத்தின. தாக்குதல் தொடங்கி நான்கு நாட்களுள் பிரான்சின் தளபதிகளும், தலைவர்களும் மன உறுதியை இழந்தனர். முன்னேறும் ஜெர்மானிய பான்சர் படைகளின் பக்கவாட்டில் எதிர்த்தாக்குதல் நடத்த பிரான்சிடம் இருப்புப் படைகளும் இல்லை. முதன்மைப் படைகள் அனைத்தும் பெல்ஜியத்துக்குப் போயிருந்தன. பிரான்சு அரசு போரில் தோல்விதான் என்ற மனநிலைக்கு வந்து விட்டது. ஆர்மி குரூப் ஏ வின் முக்கிய தாக்குதல் ஆங்கிலக் கால்வாயை நோக்கி வேகமாக முன்னேறிக்கொண்டிருந்த அதே சமயத்தில் ஆர்மி குரூப் பி யின் திசை திருப்பும் தாக்குதலும் எதிர்ப்புகளை முறியடித்து முன்னேறியது. ஜெர்மானியப் படைவளையத்தின் இரு கரங்களும் நேசநாட்டுப் படைகளை பெல்ஜியத்திலும், வடமேற்கு பிரான்சிலும் சுற்றி வளைத்தன. மே மாதத்தின் இறுதி வாரத்தில் இந்தப் படை வளையம் இறுகத் தொடங்கியது. இதனை உடைத்து சிக்கிய படைகளைத் தப்ப வைக்க நேசநாட்டுப் படைகள் மேற்கொண்ட எதிர்த்தாக்குதல்கள் ஜெர்மானியரால முறியடிக்கப்பட்டன. போரில் தோல்வி உறுதியென்பதை உணர்ந்த நேச நாட்டுத் தளபதிகள் டன்கிர்க் துறைமுகம் வழியாக தங்கள் படைகளை இங்கிலாந்துக்கு காலி செய்யத் தொடங்கினர். முடிந்த வரை அதிகமான படைகளைத் தப்புவிக்க, ஜெர்மானியப் படைகளைத் தாமதப்படுத்துவதற்காக கலே, லீல் போன்ற இடங்களில் நேச நாட்டுப் படைகள் ஜெர்மானியரை எதிர்த்தன. இதனால் டன்கிர்க்கிலிருந்து சுமார் மூணேகால் லட்சம் நேச நாட்டுப் படைகள் தப்பின. ஜூன் 4ம் தேதி டன்கிர்க் நகரம் ஜெர்மானியர் வசமானது. பிரான்சு சண்டையின் முதல் கட்டம் முடிவடைந்தது.

இரண்டாம் கட்டம் தொகு

ஜூன் 4ல் பிரான்சின் நிலை மோசமாக இருந்தது. பெல்ஜியம், நெதர்லாந்து, வடமேற்கு பிரான்சு ஆகிய பகுதிகள் ஜெர்மானியர் வசமாகியிருந்தன. நெதர்லாந்து மே 14ம் தேதியும், பெல்ஜியம் மே 28ம் தேதியும் சரணடைந்திருந்தன. பிரான்சின் முன்னணிப் படைகள் சிதறியிருந்தன அல்ல ஜெர்மானியரால் கைப்பற்றப்பட்டிருந்தன. துணைக்கு வந்த பிரிட்டிஷ் பயணப்படை தளவாடங்களையெல்லாம் இழந்து இங்கிலாந்துக்குத் தப்பியிருந்தது. ஒரு மாதம் முன்பு பலம் பொருந்தியதாக காட்சியளித்த நான்கு நேச நாடுகளின் கூட்டணியில் இப்போது பலவீனமான பிரான்சு மட்டுமே எஞ்சியிருந்தது. பிரான்சின் அரசாங்கத்திலும், படைத் தலைமையகத்திலும் பெரும் குழப்பம் நிலவியது.

முதல் கட்டத்தில் வெற்றியடைந்த ஜெர்மானியப் படைகள் வேகமாக தங்கள் அடுத்த திட்டமான சிவப்புத் திட்டத்தை செயல் படுத்தின. ஜூன் 5ம் தேதி பிரெஞ்சுத் தலைநகர் பாரிசைக் கைப்பற்றும் நோக்குடன் செய்ன் ஆற்றை நோக்கி ஜெர்மானியப் படைகள் முன்னேறத் தொடங்கின. பிரான்சிடம் மீதமிருந்த பலவீனமான இருப்புப் படைகளால் ஜெர்மானிய முன்னேற்றத்தைத் தடுக்க முடியவில்லை. ஜூன் 10ம் தேதி இத்தாலி தென்கிழக்கு பிரான்சின் மீது படையெடுத்தது. இருமுனை தாக்குதல்களும் ஏற்கனவே பிரான்சின் தலைவர்களிடம் நிலவிய குழப்பமும் பிரான்சின் எதிர்ப்பை அறவே தகர்த்துவிட்டன. ஜூன் 14ல் பாரிஸ் ஜெர்மானியர் வசமானது. போர்டோ நகருக்கு இடம்பெயர்ந்த பிரான்சு அரசு கவிழ்ந்தது. பிரெஞ்சு பிரதமர் பால் ரேனோ பதவி விலகினார். அவருக்குப் பதிலாக முதல் உலகப் போரில் புகழ்பெற்ற தளபதியான மார்ஷல் ஃபிலிப்பு பேதான் பிரெஞ்சுப் பிரதமராகப் பொறுப்பேற்றார். பேதான் ஜூன் 17ல் ஜெர்மானியர்களிடம் போர் நிறுத்தம் கோரினார். ஜூன் 22ம் தேதி ஹிட்லர் முன்னிலையில் போர் நிறுத்தம் கையெழுத்தாகி ஜூன் 25ல் அமலுக்கு வந்தது. 1918ல் முதல் உலகப் போரில் ஜெர்மனி பிரான்சிடம் சரணடைந்த அதே இடத்தில், வெர்சாய் ஒப்பந்தம் கையெழுத்தாகிய அதே தொடர்வண்டிப் பெட்டியில் இம்முறை ஜெர்மனியிடம் பிரான்சு சரணடைந்தது.

விளைவுகள் தொகு

 
1940-45ல் பிரான்சு

சரணடைந்த பிரான்சு அச்சு நாடுகளால் மூன்றாகப் பிரிக்கப்பட்டது. வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் ஜெர்மனியாலும், தென்கிழக்கில் சில பகுதிகள் இத்தாலியாலும் ஆக்கிரமிக்கப்பட்டன. எஞ்சியிருந்த "சுதந்திரப் பகுதி" (Zone Libre) பேதானின் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்தது. ஜெர்மானிய ஆக்கிரமிப்புப் பகுதியில் பேதானின் விஷி அரசாங்கத்தின் அதிகாரம் பெயரளவில் செல்லுபடியானாலும், ஜெர்மானியர் விருப்பத்தை மீறி அங்கு எதுவும் நடக்க இயலாது. பேதானின் அரசாங்கம், பிரான்சின் தோல்வியை ஒப்புக்கொண்டு, ஜெர்மானியர் விருப்பப்படியே நடந்து கொண்டது. யூத ஒழிப்பு, உள்நாட்டு எதிர்ப்புப் படைகளை ஒழித்தல் போன்ற அனைத்து விஷயங்களிலும் ஜெர்மானியருடன் ஒத்துழைத்தது. ஆனால் பேதானின் அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ளாத தளபதி சார்லஸ் டி கோல் நாடு கடந்த பிரெஞ்சு அரசையும் சுதந்திர பிரெஞ்சுப் படையமைப்பையும் நிறுவினார். ஆப்பிரிக்கா மற்றும், ஆசியாவில் அமைந்திருந்த பிரெஞ்சுக் காலனிகள் மற்றும் ஏனைய நேச நாட்டு அரசுகளின் துணையுடன் செயல்பட்டார். பிரான்சிலும் பேதானின் அரசை ஏற்றுக் கொள்ளாத பல உள்நாட்டு எதிர்ப்புக் குழுக்கள் உருவாகின. அடுத்த நான்காண்டுகளுக்கு பிரான்சு ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்தது. ஜூன் 6, 1944ல் ஓவர்லார்ட் நடவடிக்கையின் மூலம் நேச நாட்டுப் படைகள் பிரான்சின் மீது படையெடுத்து அதை ஜெர்மானியர் பிடியிலிருந்து மீட்டன.

 
ஹிட்லருடன் பேதான்

1940ல் மேற்குப் போர்முனையில் மட்டும் ஜெர்மானியப் படைகள் பிரான்சு, பிரிட்டன், டச்சு மற்றும் பெல்ஜியப் படைகளைத் தோற்கடித்து பெருத்த வெற்றி அடைந்திருந்தன. இப்படையெடுப்பில் 44,000 ஜெர்மானிய வீரர்கள் கொல்லப்பட்டனர் ஒன்றரை லட்சம் பேர் காயமடைந்தனர். பிரான்சின் படைகளில் 85,000 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 1,20,000 காயமடைந்தனர். பதினைந்து லட்சம் பிரெஞ்சுப் படையினர் கைது செய்யப்பட்டு ஜெர்மானிய கைதி முகாம்களில் அடைக்கப்பட்டனர்.

அடிக்குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 Jordine, Melissa Ph.D. Class Lecture. World War Two Global Conflict. California State University, Fresno Fresno, CA. 16 October 2009.
  2. E.R Hooton 2007, p. 47-48: Hooton uses the Bundesarchiv, Militärarchiv in Freiburg.
  3. Luftwaffe strength included gliders and transports used in the assaults on The Netherlands and Belgium
  4. E.R Hooton 2007, p. 47-48: Hooton uses the National Archives in London for RAF records. Including "Air 24/679 Operational Record Book: The RAF in France 1939–1940", "Air 22/32 Air Ministry Daily Strength Returns", "Air 24/21 Advanced Air Striking Force Operations Record" and "Air 24/507 Fighter Command Operations Record". For the Armee de l'Air Hooton uses "Service Historique de Armee de l'Air (SHAA), Vincennes".
  5. Karl-Heinz Frieser: Blitzkrieg-Legende, 2nd ed., Munich 1996, p. 400.
  6. 6.0 6.1 "Das Deutsche Reich und der Zweite Weltkrieg" Band 2
  7. Hooton 2007, p. 90.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சு_சண்டை&oldid=3488650" இலிருந்து மீள்விக்கப்பட்டது