கடன்-குத்தகை ஒப்பந்தம்

கடன்-குத்தகை (Lend-Lease) என்பது இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம், சீனா, பிரான்சு போன்ற பிற நேச நாடுகளுக்கு தளவாடங்களை வழங்கிய திட்டத்தின் பெயராகும். இத்திட்டத்தின் கீழ் 1941-45 காலகட்டத்தில் 50.1 பில்லியன் $ மதிப்புள்ள சரக்குகளை அமெரிக்கா பிற நாடுகளுக்கு வழங்கியது. ”பொதுச் சட்டம் 77-11” (Public Law 77-11) என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்ட இச்சட்டம் மார்ச் 11, 1941ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இதற்கு பதினெட்டு மாதங்கள் முன்னரே (செப்டம்பர் 1939) ஐரோப்பாவில் போர் மூண்டிருந்தது. ஆனால் அமெரிக்கா நேரடியாக இப்போரில் ஈடுபடுவதற்கு (டிசம்பர் 1941) முன்னரே இத்திட்டம் செயல்முறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

கடன் குத்த்கை வரைவு சட்டத்தில் கையெழுத்திடும் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட்

இத்திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் அமெரிக்கா தன் நடுநிலையைத் துறந்தது. முதல் உலகப் போரிலிருந்து பன்னாட்டு அரசியலில் பின்பற்றி வந்த தலையிடாமைக் கொள்கை இதனால் முடிவுக்கு வந்தது. இத்திட்டத்தை அமெரிக்க செயல்படுத்துவதை நடுநிலை மீறலாகக் கருதிய நாசி ஜெர்மனியின் தலைவர் இட்லர் தளவாடங்களை ஏற்றி வரும் அமெரிக்க சரக்குக் கப்பல்களை அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கடிக்கும்படி தன் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு உத்தரவிட்டார். இத்திட்டத்தில் பெரும்பாலும் இலவசமாகவும், சில சமயம் வெகு குறைந்த விலையிலும் தளவாடங்களைப் பெற்றுக் கொண்ட பிற நேச நாடுகள், பதிலுக்கு வான் படைத்தளங்கள் போன்ற தளங்களை அமெரிக்காவுக்கு வாடகையின்றி குத்தகைக்கு விட்டன. மேலும் அவை திருப்பித் தர வேண்டிய பணத்தை நெடுங்காலக் கடன்களாக அமெரிக்கா பெற ஒப்புக் கொண்டது.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடன்-குத்தகை_ஒப்பந்தம்&oldid=4164211" இலிருந்து மீள்விக்கப்பட்டது