மிர்சு அல்-கபீர் சண்டை

(மெர்சு-எல்-கேபிர் சண்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மிர்சு அல்-கபீர் சண்டை (Attack on Mers-el-Kébir) என்பது இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு கடற்படைச் சண்டை. நடுநிலக்கடலில் நடந்த இச்சண்டையில் அல்ஜீரியக் கடற்கரையோரமாக இருந்த பிரஞ்சு கடற்படையை பிரிட்டானியக் கடற்படை கப்பல்கள் தாக்கி அழித்தன.

மிர்சு அல்-கபீர் சண்டை
நடுநிலக் கடல் களத்தின் பகுதி

தீப்பற்றி எரியும் பிரெஞ்சு போர்க்கப்பல் ஸ்ட்ராஸ்பர்க்
நாள் ஜூலை 3, 1940
இடம் மெர்சு-எல்-கேபிர், அல்ஜீரியா
பிரெஞ்சு கடற்படை செயலிழக்கப் பட்டது
பிரிவினர்
ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம் பிரான்சு பிரான்சு
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் ஜேம்ஸ் சோமர்வில்
ஐக்கிய இராச்சியம் ஆண்ட்ரூ கன்னிங்காம்
பிரான்சு மார்செல் புரூனோ ஜென்சோல்
பிரான்சு ஃபிரான்சுவா டார்லான்
பலம்
1 வானூர்தி தாங்கிக்,
2 போர்க்கப்பல்கள்,
1 பெட்டில்குரூசர்,
2 இலகு ரக குரூசர்கள்,
11 டெஸ்டிராயர்கள்,
பல வானூர்திகள்
4 போர்க்கப்பல்கள்,
6 டெஸ்டிராயர்கள்
இழப்புகள்
6 வானூர்திகள் சேதம்
2 பேர் மாண்டனர்
1 போர்க்கப்பல் மூழ்கடிப்பு,
2 போர்க்கப்பல்கள் சேதம்
3 டெஸ்டிராயர்கள் சேதம்
1 டெஸ்டிராயர் தரை தட்டியது
1,297 மாண்டவர்,
350 காயமடைந்தவர்

ஜூன் 1940ல் ஐரோப்பாவில் நடந்த சண்டைகளில் பிரான்சு நாசி ஜெர்மனியால் தோற்கடிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டது. பிரெஞ்ச் அரசின் ஒரு பகுதியினர் பிரான்சிலிருந்து தப்பி விடுதலை பிரான்சு என்ற பெயரில் நாடுகடந்த அரசை நிறுவினர். ஆனால் மற்றொரு பகுதியினர் ஜெர்மானியர்களுக்கு கட்டுப்பட்ட ஒரு அரசை உருவாக்க முயன்றனர். (சில வாரங்கள் கழித்து விஷி (Vichy) அரசு என்ற பெயரில் நாசிக் கைப்பாவை அரசு ஒன்று உருவானது). பிரான்சின் காலனிகளையும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த படைகளையும் யார் கட்டுப்படுத்துவது என்று இரு போட்டி அரசுகளுக்கும் மோதல் உருவானது. சில காலனிகளும் நாடு கடந்த அரசுக்கும் வேறு சில நாசி ஆதரவு அரசுக்கும் தங்கள் விசுவாசத்தை அறிவித்தன. இத்தகு குழுப்ப நிலையில் பிரான்சின் கப்பல்படைக் கப்பல்கள் நாசி ஆதரவு அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிடாமல் நேச நாட்டுத் தலைவர்கள் தடுக்க முயன்றனர். இம்முயற்சிக்கு காட்டாபுல்ட் நடவடிக்கை (Operation Catapult) என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. இதன்படி பிரித்தானியத் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருந்த பிரெஞ்சுக் கப்பல்கள் கைப்பற்றப்பட்டன.

அல்ஜீரியா பிரான்சின் காலனிகளில் ஒன்று. அங்கு ஒரு பெரும் பிரெஞ்சு கடற்படை நிறுத்தப்பட்டிருந்தது. அதன் தளபதி அட்மைரல் ஃபிரான்சுவா டார்லான் உடனடியாக தன் படைகளை நாடு கடந்த பிரஞ்சு அரசின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்காமல் இழுத்தடித்தார். அவரது கட்டுப்பாட்டில் இருந்த போர்க் கப்பல்கள் நாசி ஆதரவு பிரெஞ்சு அரசின் கையில் சிக்காமல் இருக்க அவற்றைத் தாக்கி அழிக்க பிரித்தானியத் தலைவர்கள் முடிவு செய்தனர். போர்க்கப்பல்களைச் சரணடைய பிரித்தானியா விதித்த இறுதிக் கெடு கடந்த பின்னர், பிரித்தானியக் கடற்படை தன் தாக்குதலைத் தொடங்கியது. ஜூலை 3, 1940 அன்று மாலை அல்ஜீரியாவின் மெர்சு எல் கேபிர் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பிரெஞ்சுக் கப்பல்கள் மீது பிரிட்டானியக் கடற்படை குண்டு வீசத் தொடங்கியது. இத்தாக்குதலை எதிர்பாராத பிரஞ்சுப் போர்க்கப்பல்கள் பெரும் சேதமடைந்தன. துறைமுகத்திலிருந்து தப்ப முயன்ற கப்பல்கள் மீது பிரித்தானிய விமானங்கள் குண்டு வீசின. இத்தாக்குதல் மேலும் சில நாட்கள் நீடித்தது. மெர்சு எல் கேபிரிலிருந்து தப்பிய பிரெஞ்சு கப்பல்களை பிரித்தானியக் கப்பல்கள் விடாது துரத்தின. பிரிட்டானிய நீர்மூழ்கிக் கப்பல்களும் இத்தாக்குதலில் ஈடுபட்டன. இத்தாக்குதலில் மெர்சு எல் கேபிரிலிருந்த பெரும்பாலான கப்பல்கள் சேதமடைந்தன, சில மூழ்கடிக்கப்பட்டன. ஒரு சில மட்டும் தப்பி நாசிக் கட்டுப்பாட்டு பிரான்சை அடைந்தன. இத்தாக்குதலில் 1297 பிரெஞ்சு மாலுமிகள் கொல்லப்பட்டனர் 350 பேர் காயமடைந்தனர்.

பிரித்தானியப் படைகள் நேச நாடுகளுள் ஒன்றான பிரான்சின் படைகள் மீதே நடத்திய இத்தாக்குதல் சார்லஸ் டி கோல் தலைமையிலான விடுதலை பிரான்சு அரசுக்கும் வின்ஸ்டன் சர்ச்சில் தலைமையிலான பிரித்தானிய அரசுக்கும் இடையே சில மாதங்களுக்கு கடும் உரசலை ஏற்படுத்தியது. பிரெஞ்சுப் படைகள் பிரித்தானியக் கட்டுப்பாட்டில் இருந்த கிப்ரால்ட்டர் மீது பதிலடியாக வான்வழியே குண்டுவீசினர். நேச நாடுகளின் இந்த உட்பூசல், நாசி ஜெர்மனியின் பரப்புரைக்கு தீனியாக பயன்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிர்சு_அல்-கபீர்_சண்டை&oldid=2193629" இலிருந்து மீள்விக்கப்பட்டது