நடுநிலக் கடல்

அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதி
(நடுநிலக்கடல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நடுநிலக் கடல், மத்தியதரைக் கடல், நடுத்தரைக் கடல் அல்லது நண்ணிலக் கடல் (Mediterranean Sea) என்பது அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியாகும். இது ஏறத்தாழ நாற்புறமும் நிலப்பகுதியால் சூழப்பட்டுள்ளது. வடக்கில் ஐரோப்பாவும், அனத்தோலியாவும் தெற்கே வடக்கு ஆப்பிரிக்காவும், கிழக்கில் ஆசியாவும் உள்ளன. இது அண்ணளவாக 25 இலட்சம் சதுர கிலோமீட்டர் (965,000 சதுர மைல்கள்) பரப்பளவு கொண்டது. அத்திலாந்திக் பெருங்கடலுடனான இதன் தொடுப்புப் பகுதி 14 கிலோமீட்டர் மட்டுமே அகலமாகக் கொண்டது. இத் தொடுப்பு, ஜிப்ரால்ட்டர் நீரிணை என அழைக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் இக்கடல் மெடிட்டேரியன் சீ என அழைக்கப்படுகிறது. இக்கடலின் சராசரி ஆழம் 1,500 m (4,900 அடி) ஆக உள்ளது; அயோனியன் கடலில் உள்ள கலுப்சோ டீப் என்றவிடத்தில் மிகக்கூடிய ஆழமாக 5,267 m (17,280 அடி) பதியப்பட்டுள்ளது.

நடுநிலக் கடல்
நடுநிலக் கடலின் கூட்டான செயற்கைக்கோள் படிமம்
ஆள்கூறுகள்35°N 18°E / 35°N 18°E / 35; 18
வகைகடல்
வடிநில நாடுகள்
about 60
மேற்பரப்பளவு2,500,000 km2 (970,000 sq mi)
சராசரி ஆழம்1,500 m (4,900 அடி)
அதிகபட்ச ஆழம்5,267 m (17,280 அடி)
நீர்க் கனவளவு3,750,000 km3 (900,000 cu mi)
நீர்தங்கு நேரம்80-100 ஆண்டுகள்[2]
Islands3300+

மெடிட்டேரியன் என்ற சொல் மடுதரை (மடு (Cavity) + தரை (Land Surface)) என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு என்றும் கூறப்படுகிறது. பண்டைக்காலத்தில் இக் கடற்பகுதி, மெசொப்பொத்தேமியா, எகிப்து, செமிட்டிக், பாரசீகம், போனீசிய, கார்த்தஜீனிய, கிரேக்கம் மற்றும் ரோமன் ஆகிய பல்வேறு நாகரீகங்களுக்கு இடையிலான வணிக மற்றும் பண்பாட்டுத் தொடர்புகளுக்கான முக்கியமான பாதையாக இருந்து வந்தது. மேற்கத்திய நாகரீகத்தின் தோற்றம் அதன் வளர்ச்சி என்பன பற்றிப் புரிந்துகொள்வதற்கு மத்தியதரைக் கடலின் வரலாற்றை அறிந்துகொள்வது இன்றியமையாததாகும்.[3]

மொத்தம் 22 நாடுகள் இதன் கரைகளில் அமைந்துள்ளன.

வரலாறு

தொகு
 
தொன்மையான கிரேக்க போனீசிய குடியிருப்புக்கள்
 
1571இல் உதுமானியப் பேரரசின் மீதான புனிதக் கூட்டணியின் வெற்றி

நடுநிலகடல் தொன்மையான, சிக்கலான வரலாற்றை உடையது. மேற்கத்திய நாகரீகத்தின் தொட்டிலாக இக்கடல் விளங்கியது. இப்பகுதியில் எகிப்திய, மெசொப்பொத்தேமிய நாகரீகங்கள் தழைத்திருந்தன. [4]இவற்றின் பேரரசுகள் நடுநிலக்கடலின் கடலோரப் பகுதி நாடுகளை ஆண்டு வந்தன. கிரேக்க, கார்த்தேஜ் மற்றும் உரோமை நகரங்கள் முதன்மையானவையாகத் திகழ்ந்தன. இவை கடற்வழி வணிகத்தையும் கடற்படை போரியலையும் வளர்த்தன.

வெனிசு நகரம் வணிகத்தில் முதன்மையான நகரமாக தலைதூக்கியது. கப்பல்களின் பங்குகளை பரிமாறிக்கொள்ள இங்குதான் முதல் பங்குச்சந்தை உருவானது. வணிகக்கப்பல்களின் எண்ணிக்கை கூடவும் வெனிசின் ஆயுதங்கள் நான்கு மடங்காக உயர்த்தப்படவும் இந்தப் பங்குச்சந்தை தூண்டுதலாக அமைந்தது.மற்றொரு கடல்வழி வணிக நகரமான ஜெனுசுடனான போட்டியால் வணிகம் வளர்ந்தோங்கியது; அமெரிக்காக்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே வணிக மையம் மேற்கு நோக்கி நகர வெனிசு தனது முதன்மையை இழந்தது.

மேற்கத்திய ரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு கிழக்கத்திய ரோமானியப் பேரரசாக பைசாந்தியப் பேரரசு விளங்கியது. இசுலாம் தோன்றிய பின்னர், அராபிய கலீபாக்கள் நடுநிலக் கடலின் 75% பகுதிகளை ஆண்டு வந்தனர்.

ஐரோப்பாவின் நடுக்காலத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சிகளைத் தொடர்ந்து அங்குள்ள நாடுகள் ஒருங்கிணைந்து புதிய தாக்கத்தை ஏற்படுத்தின.

உதுமானியப் பேரரசின் வளர்ச்சி 1453இல் காண்ஸ்டாண்டிநோபுள் வீழ்ச்சிக்குப் பிறகு குன்றலாயிற்று. 16வது நூற்றாண்டில் உதுமானியர்கள் தெற்கு பிரான்சு, மொரோக்கோ, துனிசியா நாடுகளில் கடற்படைத்தளங்களைக் கொண்டு நடுநிலக்கடலை கட்டுப்படுத்தி வந்தனர். ஐரோப்பிய நாடுகளின் ஆற்றல் படிப்படியாக வளர்ந்து 1571இல் நடந்த போரில் உதுமானியர்களைத் தோற்கடித்தனர்.

பெருங்கடல் கப்பலோட்டம் நடுநிலக் கடலில் தாக்கமேற்படுத்தியது. கிழக்கிலிருந்து அனைத்து வணிகமும் இப்பகுதி மூலமே அதுவரை நடந்திருக்க, ஆபிரிக்காவைச் சுற்றிக்கொண்டு ஏலமும் மிளகும் ஐரோப்பாவின் அத்லாந்திய துறைமுகங்களில் வந்திறங்கத் தொடங்கியது.[5][6][7]

புவியியல்

தொகு

நடுநிலக் கடல் மேற்கில் அத்திலாந்திக்குப் பெருங்கடலுடன் ஜிப்ரால்ட்டர் நீரிணையால் இணைக்கப்பட்டுளது; கிழக்கில் மர்மரா கடலுடன் டார்டனெல்லசாலும் கருங்கடலுடன் பொசுபோரசாலும் இணைக்கப்பட்டுள்ளது. மர்மரா கடல் நடுநிலக் கடலின் பகுதியாக கருதப்படுகின்றபோதும் கருங்கடல் நடுநிலக்கடலின் பகுதியாகக் கருதப்படுவதில்லை. தென்கிழக்கில் 163 km (101 mi) நீளமுள்ள செயற்கையான சுயஸ் கால்வாய் நடுநிலக்கடலை செங்கடலுடன் இணைக்கிறது.

நடுநிலக் கடலில் உள்ள தீவுகளில் சைப்பிரஸ், கிரீட், சார்தீனியா, கோர்சிகா, சிசிலி ஆகியன முதன்மையானவை. நடுநிலக் கடலின் தட்பவெப்பநிலை மிதமானது; கோடைகாலங்களில் வெப்பமிகுந்தும் உலர்ந்த காற்றுப் பதத்துடனும் உள்ளது. குளிர்காலத்தில் மழையுடன் மிதமான குளிருடன் விளங்குகிறது. இந்த வெப்பநிலைகளில் இங்கு சைத்தூன்கள், திராட்சைகள், ஆரஞ்சுப் பழங்கள், தக்கை மரங்கள் நன்கு விளைகின்றன.

நடுநிலக் கடலிலுள்ள முதல் 10 பெரிய தீவுகளின் பட்டியல்

தொகு
 
நடுநிலக் கடலின் இருபெரும் தீவுகள்: சிசிலி மற்றும் சார்தீனியா
நாட்டின் கொடி தீவின் பெயர் பரப்பளவு(சதுர கி.மீ.) மக்கள் தொகை
    சிசிலி 25,460 5,048,995
    சார்தீனியா 23,821 1,672,804
  சைப்பிரஸ் 9,251 1,088,503
    கோர்சிகா 8,680 299,209
  கிரீட் 8,336 623,666
  ஈவோபியா 3,655 218.000
    மயோர்க்கா 3,640 869,067
  லெஸ்பாஸ் 1,632 90,643
  ரோடிஸ் 1,400 117,007
  சீயோஸ் 842 51,936

உயிரினங்களின் வாழ்க்கை முறை

தொகு

ஒரு சமயம், மெசனியன் எனப்படும் உப்புத்தன்மையின் விளைவால், இக்கடல் வற்றிப்போய்விட்டது[8]. அப்போது,அட்லாண்டிக் பெருங்கடல் தான் இக்கடலைச் சுற்றியிருந்த உயிரிகள் பிழைத்து வந்தன. வட அட்லாண்டிக் பெருங்கடலானது, நடுநிலக்கடலை விட குளிர்ந்ததாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்கும். நடுநிலக்கடலைச் சுற்றியிருந்த உயிரிகள், அக்கடல் மீண்டும் பழைய பசுமையை அடைவதற்கு ஆகிய 5மில்லியன் ஆண்டு காலம் வரை, வட அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து வரும் பருவக்காற்று மூலம் உயிர் பிழைத்தன.

அல்பரோனா கடலானது, நடுநிலக்கடலுக்கும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் மத்திய மண்டலமாக அமைந்துள்ளது. ஆகையால், இவ்விரு கடலிலும் காணப்படும் உயிரினங்கள், அல்பரோனா கடலிலும் வாழும். கடற் பாலூட்டி இனமான பாட்டில்நோஸ் டால்பின்கள் இங்கு அதிகமாக காணப்படுகிறது. கடற் பாலூட்டிகளின் மற்றொரு இனமான ஆர்பர் பார்பாயிசும் இங்கு அதிகளவில் காணப்படுகின்றன. ஐரோப்பாவின் பெருந்தலைக் கடலாமைளும், இக்கடலிற்கு உணவு தேடி தஞ்சம் புகுந்தவைகளாகும். அல்பரோனா கடலில் வாழும், மத்தி மீன்களும் ஊசிமுனை மீன்களும் வணிகத்திற்காக பிடிக்கப்படுபவையாகும். நடுநிலக்கடலைச் சேர்ந்த நீர் நாய்கள், கிரேக்க நாட்டின் ஏகன் கடலில் வாழ்கின்றன. 2003ம் ஆண்டு இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் ஆய்வுப்படி, குறிப்பிட்ட அளவிற்கு மீறிய மீன்பிடித் தொழில் நடப்பதால், இங்கு வாழும் டால்பின்கள், ஆமைகள் மற்றும் இதர கடல் வாழ் உயிரிகள் அழியும் தருவாயில் உள்ளது.

மேற்சான்றுகள்

தொகு
  1. UNECE.indb
  2. Pinet, Paul R. (2008). Invitation to Oceanography. Jones & Barlett Learning. p. 220. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7637-5993-7.
  3. எகல் The Philosophy of History, p. 87, Dover Publications Inc., 1956 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-20112-0; 1st ed. 1899
  4. David Abulafia (2011). The Great Sea: A Human History of the Mediterranean. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.
  5. C.I. Gable - Constantinople Falls to the Ottoman Turks - Boglewood Timeline - 1998 - Retrieved 3 September 2011.
  6. "History of the Ottoman Empire, an Islamic Nation where Jews Lived" - Sephardic Studies and Culture - Retrieved 3 September 2011.
  7. Robert Guisepi - The Ottomans: From Frontier Warriors To Empire Builders பரணிடப்பட்டது 2015-03-11 at the வந்தவழி இயந்திரம் - 1992 - History World International - Retrieved 3 September 2011.
  8. Hsu K.J., "When the Mediterranean Dried Up" Scientific American, Vol. 227, December 1972, p32

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடுநிலக்_கடல்&oldid=3817308" இலிருந்து மீள்விக்கப்பட்டது