ஆட்டெண்டோட்டசு வளைந்தவால் கொண்டைக் கரிச்சான்

பறவை துணை இனம்

ஆட்டெண்டோட்டசு வளைந்தவால் கொண்டைக் கரிச்சான் (அறிவியல் பெயர்: Dicrurus hottentottus hottentottus) என்பது வளைந்தவால் கொண்டைக் கரிச்சானின் துணையினமாகும்.[1][2] இது இந்தியா, மத்திய மற்றும் தெற்கு சீனம், வடக்கு மியான்மர் மற்றும் வடக்கு இந்தோசீனா ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.

ஆட்டெண்டோட்டசு வளைந்தவால் கொண்டைக் கரிச்சான்

விளக்கம் தொகு

ஆட்டெண்டோட்டசு வளைந்தவால் கொண்டைக் கரிச்சான் பறவையானது மைனா அளவில் சுமார் 25 செ. மீ. நீளம் இருக்கும். இதன் அலகும் கால்களும் கறுப்பாகவும், விழிப்படலம் செம்பழுப்பு நிறத்திலும் இருக்கும். இப்பறவையின் அலகு நீண்டு கூர்மையாகச் சற்று கீழ் நோக்கி வளைந்திருக்கும். உடலின் மேற்பகுதி பளபளப்பான கறுப்பு நிறத்தில் இருக்கும். இதன் உச்சந்தலையில் சுமார் ஐந்து செ. மீ. நீளமுள்ள மயிரை ஒத்த சில தூவிகள் பின்னோக்கி வளைந்ததாக காணப்படும். வால் பிளவு படாமல் சதுரமாக இருக்கும் என்றாலும் வாலின் புற இறகுகள் மேல் நோக்கி வளைந்து திருகிக் கொண்டிருக்கும். ஆண் பெண் பறவைகளுக்கு இடையில் பால் ஈருருமை இல்லை.[3]

பரவலும் வாழிடமும் தொகு

ஆட்டெண்டோட்டசு வளைந்தவால் கொண்டைக் கரிச்சான் இந்தியா மத்திய மற்றும் தெற்கு சீனம், வடக்கு மியான்மர் மற்றும் வடக்கு இந்தோசீனா ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைசார்ந்த மகுதிகளில் பசுங்காடுகளைச் சார்ந்து ஆங்காங்கே சமவெளிகளிலும் மலைகளில் 900 மீட்டர் உயரம் வரையும் காண இயலும்.[3]

நடத்தை தொகு

இது தனித்தோ, இணையாகவோ, சிறு கூட்டமாகவோ காடுகளில் உள்ள மரங்களின் மேல் திரியும் இயல்புடையது. பறக்கும் பூச்சிகளைப் பிடித்து உண்ணக்கூடிய இது மலர்களில் உள்ள தேனை விரும்பி உண்ணக்கூடியது. குறிப்பாக முள்முருக்கு, தைல மரம் போன்ற மரங்களில் கூட்டமாக காணலாம். மரங்களில் தேனை உண்ண வரும் பிற பறவைகளை இவை எட்டு முதல் பத்து வரையிலான கூட்டமாக சேர்ந்து விரட்டி அடிக்கும். இவை வைவது போல உரக்கக் குரல் எழுப்பும்.

இவை பெப்ரவரி முதல் சூன் முடிய இனப்பெருக்கத்தில் ஈடுபடும். இவைகருங்கரிச்சானின் கூட்டைவிட சற்று பெரியதாக் கோப்பை வடிவில் மரக்கிளைகளின் புறவெளி நுனியில் அமைக்கும். இவற்றின் கூடுகளை காடுகளில் உள்ள மரங்களிலேயே காண இயலும். இவை மூன்று அல்லது நான்கு முட்டைகளை இடும். முட்டைகள் வெளிர் பாலேடு நிறத்தில் சிவப்புக் கோடுகளோடு காணப்படும். ஆண் பெண் என இரு பறவைகளும் கூடு கட்டுதல், அடைக்காத்து இனப்பெருக்கம் செய்தல் போன்வற்றில் சேர்ந்து ஈடுபடும்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Gill, F.; Donsker, D.; Rasmussen, P. (eds.). "IOC World Bird List: Welcome". IOC World Bird List. International Ornithological Congress. பார்க்கப்பட்ட நாள் 31 August 2020.
  2. Eaton, JA; van Balen, B; Brickle, NW; Rheindt, FE (2016). Birds of the Indonesian Archipelago. Greater Sundas and Wallacea. Lynx Edicions, Barcelona.
  3. 3.0 3.1 3.2 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 358–359.