ஆத்திசூடி வெண்பா

ஆத்திசூடி வெண்பா [1] [2] என்னும் நூல் ஆத்திசூடி நூலின் பெருமையை உணர்ந்து அதனைச் சிறப்பித்துப் பாடும் நூல்கள் பலவற்றுள் ஒன்று. தொண்டை நாட்டில் பாகை என்னும் ஊரில் கணபதி என்பவரின் மகன் ‘புன்னைவன நாதன்’ ஒரு வள்ளல். இவனைப் போற்றிப் பாடப்பட்ட நூல் இது.

ஆத்திசூடி வெண்பா முகப்பு
ஆத்திசூடி வெண்பா முகப்பு

இதில் உள்ள 110 வெண்பாக்களில் தொடக்கத்தில் உள்ள காப்பு வெண்பா, இறுதியில் உள்ள ‘வாழி வெண்பா’, சாத்துக்கவி வெண்பா ஆகிய மூன்றும் நீங்கலாக 107 வெண்பாக்களிலும் ஓர் ஆத்திசூடிப் பாடலும், அதனோடு தொடர்புள்ள கதையோ, செய்தியோ உள்ளன.

நூலை இயற்றியவர் இராமபாரதி. சென்னையில் அக்காலத்தில் இருந்த கல்விச்சங்கத்தின் புலவர் புதுவை இராசகோபால முதலியார் என்றும், அவர் இந்த நூலை முதலில் அச்சில் பதிப்பித்தார் என்றும், அந்தப் பதிப்புப் பிரதியில் உள்ளபடி மதுரைப் புதுமண்டபம் புத்தகக் கடை வி. என். இராகவக்கோனார் என்பவர் சென்னையிலிருந்த கோ. செல்லப்ப முதலியாரது ‘சீவகாருண்ய விலாசம்’ என்னும் அச்சகத்தில் 1905 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது என்றும் அந்த நூலின் முகப்பு தெரிவிக்கிறது.

வெண்பாவின் இறுதியில் ஓர் ஆத்திசூடி இருக்கும். முந்தைய அடிகளில் அந்த ஆத்திசூடிப் பாடலுக்குத் தொடர்புள்ள கதைச்செய்தி புன்னைவன நாதன் பெயரோடு கூறப்பட்டிருக்கும்.

எடுத்துக்காட்டு

தொகு

நித்தியத்தைக் கேட்கப்போய் நித்திரையென் றேகுளறிப்
புத்தியற்ற கும்பகர்ணன் பொன்றினன்பார் – மத்தமத
குன்றம்போல் புன்னைவனக் கொற்றவா, வாகைமன்னா
என்றும்சொற் சோர்வு படேல்.

  • ஆத்திசூடி நூலின் காலம் 12ஆம் நூற்றாண்டு. இந்த வெண்பா நூலின் காலம் பிற்பட்டது.

மேற்கோள்

தொகு
  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005
  2. இராமபாரதி, ஆத்திசூடி வெண்பா, வி. என். இராகவக் கோனார் பதிப்பு, 1905
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்திசூடி_வெண்பா&oldid=3093469" இலிருந்து மீள்விக்கப்பட்டது