இந்து சமயத்தில் ஆபாசவாதம் என்பது வேதாந்தத்தின் இரு வகைகளுள் ஒன்றாகும். மற்றையது பரிணாமவாதம்[1]. அத்வைத சிந்தனைகளின் தனித்துவமான வாதங்களில் ஆபாசவாதமும் ஒன்றாகும். அதாவது பிரம்மமே ஆன்மாவாகத் தோன்றுகின்றது என்பதை விளக்குவதற்காக அத்வைத சிந்தனாவாதிகள் கையாண்ட நெறிமுறைகளுள் இதுவும் முன்னிலைப்படுத்தப்படுகின்றது. ஆபாசம் என்பது உண்மை போலவே தோற்றமளிக்கும் போலி (மாயை) ஆகும்[2].

அதாவது, பிரம்மமானது மாயையின் காரணத்தினால் ஆன்மாவாகத் தெரிகின்றது என்பது அத்வைதிகளின் கொள்கை. இவ்வாறு பிரம்மம் தெரிவதற்கு மாயை அல்லது அவித்தை எவ்வாறு துணைபுரிகின்றது என்பதை எடுத்துக் காட்ட இவ் ஆபாசவாதம் முன்வைக்கப்படுகின்றது.

நிறமற்ற பளிங்கின் அருகில் செந்நிறப் பூவினைக் கொண்டு வரும்போது அப்பளிங்கானது செந்நிறமாகவே மாறிவிடுவதனை அவதானிக்க முடிகின்றது. அதனைப் போன்றே எவ்வித சலனமும் அற்றிருக்கும் பிரம்மத்தின் அருகில் மாயையினால் ஏற்படும் அவித்தை பிரம்மத்தை ஆன்மாவாகத் தோற்றுவிக்கின்றது. என்பதுவே ஆபாசவாதம்.

ஆனால், பிற்கால வேதாந்திகள் இதற்கு மறுப்புரைகள் வழங்கத் தவறிவிடவில்லை. "பளிங்கும் பூவும் இருந்தபடியே இருக்கும்போது பளிங்கில் எவ்வித சலனமும் ஏற்படுவதில்லை. பளிங்கு இயல்பாகவே இருக்கின்றது. ஆனால், பளிங்கின் அருகில் பூவோ, அல்லது பூவின் அருகிலோ பளிங்கோ வரும்போதுதான் பளிங்கின் இயல்பில் மாற்றம் ஏற்படுகின்றது. எனவே, அவ்வாறு பளிங்கையும், பூவையும் ஒன்றன் அருகில் மற்றொன்றைக் கொண்டு வருவதற்கு ஒருவர் தேவை. ஏனெனில் அவை தானாக அசையமாட்டா. அதுபோலவே, பிரம்மத்தையும் - மாயையினால் ஏற்பட்ட அவித்தையையும் அருகருகே கொணர்ந்து அதன் மூலமாக ஆன்மாவை தோற்றுவிப்பதற்கு இவை இரண்டிலிருந்தும் வேறுபட்ட ஒரு பொருள் தேவை!" என்கின்றனர்.

அவ்வாறு ஒரு பொருள் காணப்படுமாயின் "ஏகம் ஸத்" என்ற மகாவாக்கியத்திற்கு "உள்ளபொருள் ஒன்று" என சங்கரர் கொடுத்த விளக்கம் தவறாக அமைவதோடு, அவரது ஒருமை வாதம் எனும் அடிப்படைக் கோட்பாடே பொய்யானதாகிவிடும் என்கின்றனர்.

மேற்கோள்கள் தொகு

  1. அண்டாதிபேதம், பாடல் எண் 26, திருமூலரின் திருமந்திரம்
  2. தத்துவமசி மகாவாக்கியம், பாடல் எண். 1, திருமூலரின் திருமந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆபாசவாதம்&oldid=1494190" இலிருந்து மீள்விக்கப்பட்டது