உகப்புக் கோட்பாடு

(ஆப்டிமாலிடி கோட்பாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பேச்சு மொழியில் பல ஒலி வடிவங்கள் காணப்படுகின்றன. இவற்றையே நாம் ஒலியன்(phoneme), அசை (syllable), சொல் (word), தொடர் (phrase) மற்றும் வாக்கியம் (sentence) என்கின்றோம். மனித சிந்தையின் ஆழ்நிலையிலுள்ள இந்தக் கூறுகள் (abstract underlying representation) எவ்வாறு மொழி உச்சரிப்பில் (surface level) தெரிகிறது என்பதை விளக்குவதே உகப்புக் கோட்பாடு (Optimality theory) ஆகும். இது பெரும்பாலும் ஒலியனியல் (phonology) மற்றும் தொடரியல் (syntax) என்னும் துறைகளியுள்ள விடயங்களை விளக்குவதற்கு பயன்படுத்த படுகிறது.

ஒலியனியலில் தமிழ் போன்ற ஒரு மொழியில் என்னென்ன ஒலியன்கள் இருக்கின்றன, எந்தெந்த ஒலியன்கள் சேர்ந்து வரும், எந்தெந்த ஒலியன்கள் சேர்ந்து வராது, ஓர் அசையின் கருவாய் (nucleus) எந்த ஒலியன்கள் வரும், அசை கருவின் முன் (onset) எந்த ஒலியன்கள் வரும், அசை கருவின் பின் (coda) எந்தெந்த ஒலியன்கள் வரும் என்னும் பல கேள்விகளுக்கு விவரம் மட்டும் அளிக்காது அவை ஏன் அவ்வாறு வருகின்றன என்பதையும் இந்த கோட்பாடு விளக்குகின்றனது. இந்த கோட்பாட்டின் விளக்கமளிக்கும் கருவிகளில் ஒன்று ‘பொதுக் கட்டுப்பாடுகள்’ (Universal constraints). இந்த பொது கட்டுப்பாடுகள் ஒலியன்கள் மீது செலுத்தப் படுகின்ற கட்டுப்பாடுகள். அனைத்து உலக மொழிகளுக்கும் பொதுவான கட்டுப்பாடுகளாய் இவை அமைகின்றன, அது தான் அதற்குப் பெயர்க்காரணம். இந்த கட்டுப்பாடுகளை ஆமோதித்தே ஒலியன்கள் ஒன்று சேர்ந்து ஒரு சொல் உருவாகிறது.

எடுத்துக்காட்டுக்காக, ‘உருமி’ (urumi)என்னும் சொல் பொது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு எப்படி அசைகளாய் பிரிக்கப்படுகிறது என்பதை காண்போம். பொது கட்டுப்பாடுகளுள் ஒன்று NoCoda - இந்த கட்டுப்பாடு ஓர் அசை கருவின் பின் யாதொரு மெய் ஒலியனும் வரக்கூடாது என்று தடை விதிக்கிறது. அதனால் [உர். உம். இ] [ur.um.i] என்று அசை பிரித்தல் தவறு. ஏனெனில் அவ்வாறு பிரித்தால் முதல் இரண்டு அசைகளில் கருவின் பின் மெய்யொலியன்கள் வந்து விடுகின்றன. இதை NoCoda விரும்புவதில்லை. ஆதலால் [உ. ரு. மி] [u.ru.mi] என்று பிரித்தால் NoCoda நிறைவாகும்.

ஆப்டிமாலிட்டி எனும் உகப்புக் கோட்பாடு (Optimality Theory) ஆலன் ப்ரின்ஸ் (Alan Prince) மற்றும் பால் ஸ்மோலென்ஸ்கி (Paul Smolensky) ஆகியோரால் உருவாக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. Prince, Alan, and Smolensky, Paul (1993) "Optimality Theory: Constraint interaction in generative grammar." Technical Report CU-CS-696-93, Department of Computer Science, University of Colorado at Boulder.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உகப்புக்_கோட்பாடு&oldid=3860669" இலிருந்து மீள்விக்கப்பட்டது