அசை (யாப்பிலக்கணம்)

(அசை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மொழியில் எழுத்தின் ஒலி-அளவை மாத்திரை எனக் கூறும் தமிழ் இலக்கணம் செய்யுளில் எழுத்துக்கள் சேர்ந்து அசையும் நடைத்தொகுப்பை அசை எனக் கூறுகிறது. யாப்பிலக்கணத்தில் அசை என்பது எழுத்துக்களின் குறிப்பிட்ட, வரையறை செய்த சேர்க்கையினால் உருவாகும் ஓர் அடிப்படை உறுப்பாகும். அசைகள் சேர்ந்தே சீர்கள் உருவாகின்றன.

மாடு அசை போடும்போது வாயைத் திறந்து மூடுவது போல பாடலிலுள்ள சீரில் ஓசை விடுபட்டுச் சேர்வது அசை.

அசை நேர், நிரை என இரண்டு வகைப்படும். தொல்காப்பியம் நேர், நிரை, நேர்பு, நிரைபு என நான்கு அசைகளைக் காட்டுகிறது[1] [2]. தொல்காப்பியத்துக்குச் சுமார் 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய யாப்பருங்கலமும், அதன் தொகுப்பாக அமைந்த யாப்பருங்கலக் காரிகையும் நேர்பு, நிரைபு என்னும் அசை-வாய்பாடுகளை விட்டுவிட்டு நேர், நிரை என்னும் இரண்டு வகை அசைநிலைகளை மட்டுமே காட்டுகின்றன.

யாப்பிலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ளபடி அசைகள் அமையும் முறைகள் வருமாறு.

முதல் எழுத்து இரண்டாம் எழுத்து மூன்றாம் எழுத்து எடுத்துக்காட்டு சீர்நிலை
குறில் - - அ, க நேர்
நெடில் - - ஆ, பூ நேர்
குறில் ஒற்று - அன், விண் நேர்
நெடில் ஒற்று - ஆள், தீர் நேர்
குறில் குறில் - அடி, மன நிரை
குறில் நெடில் - அடா, புகா நிரை
குறில் குறில் ஒற்று அடர், திகில் நிரை
குறில் நெடில் ஒற்று அதால், தொழார் நிரை

மேற்கண்டவற்றுள் முதல் நான்கும் நேரசை என்றும் ஏனையவை நிரையசை என்றும் குறிப்பிடப்படுகின்றன.

நேர், நிரை இவற்றுடன் குற்றியலுகரம் சேர்ந்து வரின், நேர்பு, நிரைபு எனப் பெயர் பெறும். இவ்வசைகள் வெண்பாவின் ஈற்றடியின் ஈற்றுச்சீரில் மட்டுமே வரும்.

  • காது, கன்று, காற்று - இவை நேர்பு அசை
  • இனிது, இயல்பு - இவை நிரைபு அசை

எடுத்துக்காட்டு

தொகு

கீழேயுள்ளது சிறுபாணாற்றுப்படை என்னும் நூலிலுள்ள பாடலொன்றின் முதல் அடி.

அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்

இங்கே அருந்திறல், அணங்கின், ஆவியர், பெருமகன் என்பன சீர்களாகும். இச் சீர்களை அவற்றின் ஒலியமைப்பின் அடிப்படையில் கீழே காட்டியவாறு பிரிக்க முடியும்.

அருந்திறல் - அருந் திறல் (நிரை, நிரை)
அணங்கின் - அணங் கின் (நிரை, நேர்)
ஆவியர் - ஆ வியர் (நேர், நிரை)
பெருமகன் - பெரு மகன் (நிரை, நிரை)

மேற்காட்டியவாறு பிரிவடைந்து கிடைக்கும் ஒவ்வொரு பகுதியும் ஒரு அசையாகும். யாப்பிலக்கண விதிகளை நோக்கினால், அசைகளில் மெய்யெழுத்துக்களுக்குத் தனியான பெறுமானம் இல்லாமை புலப்படும் ஆனால் அசைகளின் எல்லைகளைக் காட்ட உதவும். எனவே ஒற்றெழுத்துக்கள் எனப்படும் மெய்யெழுத்துக்களைப் பொருட்படுத்தாது பார்த்தால் அசைகள், கூடிய அளவாக இரண்டு எழுத்துக்களை மட்டுமே கொண்டிருப்பதைக் காணலாம். இவற்றுடன் ஓர் ஒற்றெழுத்தோ அல்லது இரண்டு ஒற்றெழுத்துகளோ இறுதியில் வரக்கூடும்.

அசை பிரிப்பு

தொகு

செய்யுள்களிலே அமையும் சீர்களின் தன்மை பற்றியும், அச் சீர்கள் ஒன்றுடன் இன்னொன்று சேரும்போது உருவாகும் தளைகள் பற்றியும் அறிந்துகொள்வதற்குச் சீர்களிலே அசைகளை இனங்காணல் அவசியம். இவ்வாறு சீர்களை இனங்கண்டு பிரித்தறிதல் அசை பிரித்தல் எனப்படுகின்றது.

ஒரு சீரை அசை பிரிக்கும்போது அச்சீரின் முதல் எழுத்து ஒரு மாத்திரை அளவுக்குக் கூடுதலான எழுத்து ஆயின் அது தனியாகவே ஒரு அசையாக அமையக்கூடும். எடுத்துக்காட்டாக 2 மாத்திரைகள் அளவுள்ள நெடில் அல்லது ஒன்றரை மாத்திரை கால அளவு கொண்ட ஐகார ஔகார எழுத்துக்கள் முதலெழுத்தாக வரின் அது தனியாக ஒரு அசையாகலாம். அடுத்துவரும் எழுத்து ஒரு ஒற்றெழுத்தாக அமையாவிடின் மேற்சொன்ன எழுத்துக்களை அசையாகக் கொள்ளமுடியும். ஆனால் முதல் எழுத்தைத் தொடர்ந்து ஒற்றெழுத்து வருமானால் அந்த எழுத்தையும் முதல் எழுத்தோடு சேர்த்து அசையாகக் கொள்ளவேண்டும்.

கீழேயுள்ளது நான்கு சீர்களைக் கொண்ட ஒரு செய்யுள் அடியாகும்.

"கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி"

இங்கே முதற்சீரான கேளிர் என்பதில் முதலெழுத்தான கே இரண்டு மாத்திரை அளவுள்ள நெடிலாகும். இதைத் தொடர்ந்து ஒற்றெழுத்து வராமையால் கே தனியாகவே அசையாக அமையும். இதுபோலவே இரண்டாஞ் சீரிலும் போ தனியாகவே அசையாகும்.

மூன்றாவது சீரான கேள்கொளல் என்பதிலும் முதலெழுத்தாக இரண்டு மாத்திரை அளவுள்ள நெடிலான கேயே வருவதால், அது தனியாகவே ஒரு அசையாக அமையக் கூடும். ஆனாலும் இரண்டாம் எழுத்து ள் ஒரு ஒற்றெழுத்து ஆதலால், அதையும் சேர்த்து கேள் என்பதை ஒரு அசையாகக் கொள்ள வேண்டும். நாலாஞ் சீரிலும் இதே அடிப்படையில் வே உம் ண் உம் சேர்ந்து வேண் என அசையாகும்.

முன்னர் எடுத்துக்கொண்ட அதே செய்யுள் அடியின் முதற் சீரில், அசையாக இனங்கண்ட கே என்பதைத் தவிர்த்தபின் மிகுதியாக உள்ள ளிர் என்ற பகுதியின் முதல் எழுத்து ளி, அடுத்துவரும் ஒற்றெழுத்தான ர் உடன் சேர்ந்து ளிர்என அசையாகும். இவ்வாறே போலக் என்ற சீரிலும், லக் ஒரு அசையாகும்.

கேள்கொளல் என்னும் சீரில் கேள் என்னும் அசை தவிர்ந்த கொளல் எனும் பகுதியில், கொ குறில் எழுத்து அவ்விடத்தில் தனியாக அசையாகாது. அடுத்துவரும் உடன் சேர்ந்து அசையாகலாம். ஆனால் அடுத்த எழுத்து ஒற்றெழுத்து ஆதலால், அதையும் சேர்த்து கொளல் என்பதை ஒரு அசையாகக் கொள்ளவேண்டும்.

நான்காவது சீரான வேண்டி என்பதில், வேண் என்பது ஒரு அசையாக ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே மீந்துள்ள தனிக் குறிலான டி ஒரு அசையாகும்.

குறிப்பு

தொகு

1. குறில், நெடில் எழுத்துக்கள் எவ்விதமாகச் சேர்ந்து அசைகள் உருவானாலும் தொடர்ந்து வரக்கூடிய ஒற்றெழுத்துக்களை அவற்றுடன் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்பதே யாப்பிலக்கண விதி. சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட ஒற்றெழுத்துக்களும் இவ்வாறு சேர்ந்து அசைகளாவது உண்டு. சில எடுத்துக்காட்டுகள் கீழே தரப்பட்டுள்ளன.

  • மகிழ்ந்தான் - மகிழ்ந் தான்
  • ஆர்த்த - ஆர்த் த
  • உய்த்துணர் - உய்த் துணர்

2. சீரின் அல்லது அசைபிரிக்க எடுத்துக்கொண்ட சீர்ப்பகுதியின் முதலெழுத்து குறிலாக இருந்தால் அது தனியாக அசையாகாது. அது அடுத்துவரும் குறில், நெடில் அல்லது ஒற்றெழுத்து ஆகிய ஏதாவது எழுத்துடன் சேர்ந்தே அசையாக முடியும். தொடர்ந்து வரும் எழுத்துக்கள் ஒற்றெழுத்துக்கள் ஆயின் அவற்றையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். தனிக் குறிலைத் தொடர்ந்து, சேர்த்துக்கொள்வதற்கு அதே சீரில் வேறு எழுத்துக்கள் இல்லாவிடில் தனிக் குறிலே அசையாக அமையும். எடுத்துக்காட்டாக,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்ற குறளின் "அகர" என்னும் முதல் சீரை அசை பிரிக்கும்போது, அக, ர (நிரை, நேர்) என்று பிரித்தல் வேண்டும்; அ, கர (நேர், நிரை) என்று பிரித்தலாகாது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. குறிலே நெடிலே குறில் இணை குறில் நெடில்
    ஒற்றொடு வருதலொடு மெய்ப் பட நாடி
    நேரும் நிரையும் என்றிசின் பெயரே. 3

  2. இரு வகை உகரமொடு இயைந்தவை வரினே
    நேர்பும் நிரைபும் ஆகும் என்ப
    குறில் இணை உகரம் அல் வழியான. 4

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசை_(யாப்பிலக்கணம்)&oldid=4046508" இலிருந்து மீள்விக்கப்பட்டது