இறைவாக்கினர் ஆமோஸ் (ஆங்கில மொழி: Amos; /ˈməs/; எபிரேயம்: עָמוֹס‎) என்பவர் கி.மு. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவார். கிறித்தவ மற்றும் யூத புனித நூலான பழைய ஏற்பாட்டில் வரும் ஆமோஸ் நூலின் ஆசிரியர் இவர். 12 சிறு இறைவாக்கினர்களுள் இவர் பட்டியலிடப்படுகின்றார். கிழக்கு மரபுவழி திருச்சபையில் இவரின் விழாநாள் ஜூன் 15 ஆகும். இவர் எசாயா, மீக்கா, ஓசேயா ஆகியோரின் சமகாலத்தவர்.

ஆமோஸ்
ஆமோஸ்
18ம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஆமோஸின் உரசியத் திருவோவியம்
இறைவாக்கினர்
இறப்பு745 கி.பி
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
கிறித்தவம்
இசுலாம்
திருவிழாஜூன் 15 (மரபுவழி சபைகள்)
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஆமோஸ் (நூல்)

பெயர்

தொகு

ஆமோஸ் என்னும் பெயர் மூல எபிரேயத்தில் עמוס (Amos,ʻāmōʷs) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கத்தில் Αμώς (Amós) என்றும் இலத்தீனில் Amos என்றும் உள்ளது. இப்பெயரின் பொருள் சுமை சுமப்பவர் என்பதாகும்.

வரலாற்று சுறுக்கம்

தொகு

இறைவாக்கு உரைப்பதற்கு முன் இடையராகவும், தெக்கோவா என்னும் ஊரில் கால்நடைச் செல்வம் மிகுதியாக உடையவர்களுள் ஒருவராகவும், காட்டு அத்திமரத் தோட்டக்காராகவும்[1] ஆமோஸ் இருந்தார்.[2] யூதாவை உசியாவும் இஸ்ரயேலை யோவாசின் மகன் எரொபவாமும் ஆண்டுவந்த காலத்தில், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன், இஸ்ரயேலைக் குறித்து இவர் காட்சி கண்டு இறைவாக்கு உரைக்க துவங்கினார் என இவரின் நூலில் இவரே குறிக்கின்றார்.[3] இவரின் நூல்வழியாக இவர் வழக்கமான இறைவாக்கினர் குழுவில் உறுப்பினராக இல்லை என்பதும், இவர் ஆடுகள் ஓட்டிக் கொண்டபோனபோது ஆண்டவரிடமிருந்து அழைப்பு பெற்றார் என்பதையும் அறியமுடிகின்றது[4].

விவிலியத்தில் இடம் பெறும் இறைவாக்குகளுள், ஆமோஸ் உரைத்த தூதுரையே முதலில் எழுத்து வடிவம் பெற்றதாகும். ஆமோஸ் தென்னாடான யூதாவில் பிறந்தவராயினும் வடநாடான இஸ்ரயேலுக்குச் சென்று கி.மு. 750இல் இறைவாக்கு உரைத்தார். அந்நாளில் அந்நாடு சீரும் சிறப்புமாய் இருந்தது. ஆனால் வளமும் வாழ்வும் செல்வருக்கும் வலியோருக்கும் மட்டுமே; ஏழை எளியவர்கள் நசுக்கப்பட்டுத் தாழ்வுற்றுக் கிடந்தனர்.

வலியோரை வாழ்த்தி எளியோரை வாட்டும் அநீதியும் பொய்ம்மையும் நிறைந்த சமுதாயத்தைக் கண்டு இவர் தன் நூலில் சீறுகிறார். இனம் இனத்தையும் மனிதர் மனிதரையும் கசக்கிப் பிழியும் கொடுமையைக் கடுமையாய்க் கண்டிக்கிறார். நீதியையும் நேர்மையையும் வளர்த்துக் கொண்டாலன்றி, எந்த இனமும் கடவுளின் கடும் தண்டனைக்கு உள்ளாகும் என்று எச்சரிக்கை விடுக்கின்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. ஆமோஸ் 7:14
  2. Coogan, Michael. A Brief Introduction to the Old Testament. Page 257. Oxford: Oxford University Press, 2009.
  3. ஆமோஸ் 1:1
  4. ஆமோஸ் 7:14-15
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆமோஸ்&oldid=1540160" இலிருந்து மீள்விக்கப்பட்டது