ஆர்வி ஆலதர்
ஆர்வி சேம்சு ஆலதர் (Harvey James Alter, பிறப்பு செப்டம்பர் 12, 1935) ஓர் அமெரிக்க மருத்துவ ஆய்வாளர். இவர் தீநுண்மி நோயியல் வல்லுநர். கல்லீரல் அழற்சி சி வகை தீநுண்மியை (hepatitis C virus) கண்டுபிடிக்க வழிவகுத்தமைக்காக பெரிதும் அறியப்படுகின்றார்.[1] ஆலதர் அமெரிக்காவின் நலத்துறைக் கழகங்களின் (NIH) வாரன் கிராண்டு மாகுனூசன் மருத்துவ நடுவத்தில் (Warren Grant Magnuson Clinical Center) இரத்தம் செலுத்தும் துறையில் தொற்றுநோய்ப் பிரிவில் இணை இயக்குநராக உள்ளார். 1970-களின் நடுப்பகுதியில் இவர் செய்த ஆய்வுகளில் இருந்து அறிந்தவற்றுள் ஒன்று பெரும்பாலான இரத்தஞ்செலுத்தியபின் ஏற்படும் கல்லீரல் அழற்சிகள் கல்லீரல் அழற்சி வகை ஏ (hepatitis A) அல்லது கல்லீரல் அழற்சி வகை பி (hepatitis B) பிரிவைச் சார்ந்தவையல்ல எனக் காட்டினார். ஆலதரும் எடுவேர்டு தாபோர் (Edward Tabor) என்பாரும் சிம்பன்சிகளில் செய்த இரத்தஞ்செலுத்தலில் புதிய வகை கல்லீரல் அழற்சியூட்டும் தீநுண்மி இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதன் நீட்சியாக 1988 இல் புதிய வகை கல்லீரல் அழற்சியூட்டும் தீநுண்மி வகை சி (hepatitis C virus) என்பதுக் கண்டுபிடிக்கப்பட்டது [1]. இக்கண்டுபிடிப்பு 2020 ஆம் ஆண்டுக்கான மருத்துவ உடலியங்கியல் நோபல் பரிசை கனடியரான மைக்கேல் ஆட்டன் என்பாருடனும், அமெரிக்கர் சாலசு இரைசு என்பாருடனும் சேர்ந்து பெறக் காரணமாக இருந்தது.[2]
ஆர்வி சே ஆலதர் Harvey J. Alter | |
---|---|
அமெரிக்க தேசிய நலத்துறைக் கழகங்களின் தொற்றுநோய்த் துறையின் தலைவர் ஆர்வி சே ஆலதர் | |
பிறப்பு | 12 செப்டம்பர் 1935 |
துறை | தீநுண்மி நோயியல் |
கல்வி கற்ற இடங்கள் | உரோச்செசுட்டர் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | கல்லீரல் அழற்சி சி வகை தீநுண்மி |
விருதுகள் | காரல் இலாண்டுதைனர் நினைவுப் பரிசு (1992) இலாசுக்கர் பரிசு (2000) Gairdner Foundation International Award (2013) மருத்துவ நோபல் பரிசு (2020) |
இளமை வாழ்க்கையும் கல்வியும்
தொகுஆலதர் அமெரிக்காவில் நியூயார்க்கு நகரத்தில் [3] ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார்.[4] உள்ள உரோச்செசுட்டர் பல்கலைக்கழகத்தில் படித்து 1956 இல் கலைத்துறை இளங்கலைப் பட்டம் பெற்றார். அதே பல்கலைக்கழகத்தில் 1960 இல் மருத்துவப் பட்டம் பெற்றார். மேற்பட்டப் படிப்பிற்கும், பயிற்சிக்கும் திசம்பர் 1961 முதல் சூன் 1964 வரை மாரிலாந்து மாநிலத்தில் பெத்தெசுடா என்னும் இடத்தில் உள்ள அமெரிக்க நலத்துறைக் கழகங்கள் நிறுவனத்தில் இருந்தார். பின்னர் ஓராண்டு வாசிங்டன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சூலை 1964 முதல் சூன் 1965 வரை அகமருத்துவப் பயிற்சி பெற்றார். கொலம்பியா மாவட்டத்தின் வாசிங்கிடனில் உள்ள சியார்ச்சு வாசிங்கிடன் பல்கலைக்கழகத்தில் இரத்தவியல் (hematology) சிறப்பாளராக சூலை 1965 முதல் சூன் 1966 வரை பணியாற்றினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 McHenry Harris; Randall E. Harris (2013). Epidemiology of Chronic Disease. Jones & Bartlett Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7637-8047-0.
- ↑ "Press release: The Nobel Prize in Physiology or Medicine 2020". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 5 October 2020.
- ↑ Henrichsen, Colleen (September 21, 2000). "NIH Clinical Center scientist a Lasker Award recipient". Press release. NIH. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
- ↑ Alter, Harvey J. (2014). "The road not taken or how I learned to love the liver: A personal perspective on hepatitis history" (in en). Hepatology 59 (1): 4–12. doi:10.1002/hep.26787. பன்னாட்டுத் தர தொடர் எண்:1527-3350. https://aasldpubs.onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/hep.26787. பார்த்த நாள்: 2020-10-05.
வெளி இணைப்புகள்
தொகு- 2000 Awards Presentation of Clinical Award by Leon Rosenberg The Lasker Foundation Award Winners, Clinical Medical Research