ரகுபதி வெங்கய்யா
ரகுபதி வெங்கய்யா நாயுடு (Raghupathi Venkaiah Naidu, 15 அக்டோபர் 1887 – 15 மார்ச் 1941) என்பவர் சென்னையில் மவுனபடக் காலத்தில் தொழில் நுட்பத்தால் மவுன படத்தை பேசும் படமாக காட்டியவர் மற்றும் திரையரங்க உரிமையாளர் ஆவார்.[1] இவரின் மகனான ஆர். பிரகாஷ் அக்காலத்தில் பல மவுனப் படங்களையும், பேசும் படங்களையும் இயக்கிய பிரபல திரைப்பட இயக்குநராவார்.
வாழ்க்கை
தொகுவெங்கைய்யா இன்றைய ஆந்திர மாநிலத்தின், இன்றைய கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மச்சிலிப்பட்டினத்தில் பிறந்தவர். இவரது தந்தையான ரகுபதி பிரித்தானிய படையில் சுபேதாராக இருந்தார். வெங்கய்யாவுக்கு 18 வயது ஆனபோது அவரது பெற்றோர் மச்சிலிப்பட்டினத்திலிருந்து மதராசுக்கு குடிபெயர்ந்தனர் அவர்களுடன் வெங்கைய்யாவும் சென்னைக்கு வந்து சேர்ந்தார். சென்னையில் வெங்கய்யா தனது இருபதாவது வயதில் அப்பா அளித்த நிதியுதவியுடன் சிறு கலைப்போருள் கடையை ஆரம்பித்தார். அதில் ஒளிப்பட கருவிக்கு வேண்டிய ஒற்றை பிலிம்களை விற்று வந்தார். இந்த தொழிலால் பல ஒளிப்படக் கலைஞர்களின் அறிமுகம் ஏற்பட்டு, அதனால் ஒளிப்பட கலை மீது ஆர்வம் கொண்டு அக்கலையைக் கற்று, தனது கலைப் பொருள் கடையை ஒளிப்படம் எடுக்கும் கடையாக மாற்றி திறமையான ஒளிப்படக்காரராக மாறினார்.
மவுனப் படங்களை பேசும் படமாக திரையிடுதல்
தொகுஅந்தக் காலகட்டத்தில் மவுனப் படங்கள் பெரும் வரவேற்பு பெற்று இருந்தது. அந்நிலையில் அப்போது புதியதாக வந்த க்ரோனோமெகாபோன் என்ற ஒலியை வெளிப்படுத்தும் கருவியைப் பயன்படுத்தி மவுனப் படங்களைப் பேசும்படங்கள்போல் காட்டலாம் என்ற செய்தியை பத்திரிகைகளில் அறிந்தார். அக்கருவியை வாங்க அவர் மனைவி அளித்த ஊக்கத்தால் ஒளிப்பட கடையை அடகு வைத்த பணத்தைக் கொண்டு 30 ஆயிரம் செலவில் ஜான் டிக்கென்ஸன் நிறுவனத்தின் மூலம் அந்த ஒலிக் கருவியைத் தருவித்தார். பின்னர் க்ரோனோமெகாபோன் ஒலிப்பதிவுத் தட்டுடன் இங்கிலாந்தில் அன்று புகழ்பெற்று விளங்கிய 12 துண்டுப் படங்களை வாங்கினார். அந்தப் படங்களை மக்கள் மத்தியில் திரையிட்டார். திரைக்குப் பின்னால் ஒளித்து வைக்கப்பட்டிருந்த க்ரோனோ மெகாபோனிலிருந்து திரையில் படம் தொடங்கும் அதே நேரத்துக்குத் துல்லியமான ஒத்திசைவுடன் ஒலிக்க விட்டார்.
இந்த புதிய அனுபவம் பார்வையாளர்களை ஈர்த்தது. பேசும்படம் பார்ப்பது போன்ற அனுபவத்தை, பேசும்படங்கள் அறிமுகமாவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே பார்வையாளர்களுக்குக் கொடுத்தார். இந்த தொழில் நுட்பத்தைக் கொண்டு ஊர் ஊராக சுற்றியும், இலங்கை, பர்மா ஆகிய நாடுகளில் திரையிட்டும் பணம் ஈட்டினார்.
திரையரங்கு அமைத்தல்
தொகுநான்கு ஆண்டுகள் ஊர் ஊராக திரைப்படங்களை திரையிட பயணம் மேற்கொண்ட வெங்கய்யா சென்னை திரும்பியபின் மேலைநாடுகளைப் போல் திரையரங்கம் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்து, 1912 இல் சிந்தாரிப்பேட்டையில் அன்று ‘கறுப்பர்கள் தெரு’ என்று அழைக்கப்பட்ட பிளாக்கர்ஸ் சாலையில் கெயிட்டி சினிமா ஹால் என்ற பெயரில் திரையரங்கை கட்டினார். கெயிட்டி திரையரங்கைத் தொடர்ந்து கிரவுன், குளோப் ஆகிய திரையரங்குகளையும் சென்னையில் நிறுவி புகழ்பெற்ற திரையரங்க அதிபராக விளங்கினார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழ் சினிமா முன்னோடிகள்: இயக்குநர் ஆர்.பிரகாஷ்". ஆனந்த விகடன். Archived from the original on 2016-04-05. பார்க்கப்பட்ட நாள் 14 சனவரி 2017.
- ↑ பிரதீப் மாதவன் (30 திசம்பர் 2016). "தமிழ் சினிமா 100 நூற்றாண்டு நிறைவு: மவுனப் படத்தைப் பேசவைத்த வெங்கய்யா". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 14 சனவரி 2017.