ஆவூர்க் குடைவரை

ஆவூர்க் குடைவரை, தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆவூர் என்னும் ஊரில் உள்ள ஒரு குடைவரை ஆகும். இவ்வூர் திருவண்ணாமலை - விழுப்புரம் சாலையில், திருவண்ணாமலையில் இருந்து 19 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இன்றும் மக்களால் வழிபாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் இக்கோயில் "குகை வரதராசப் பெருமாள் கோயில்" என்றும் "கரிமணிக்கத்தாழ்வார் கோயில்" என்றும் அழைக்கப்படுகிறது. இது பல்லவர்காலத்தைச் சேர்ந்த குடைவரை.

மண்டபங்கள் ஏதும் இன்றிக் கருவறை மட்டும் பாறையில் நேரடியாகக் குடையப்பட்டுள்ளது. இது ஒரு சிறிய குடைவரை. திருமாலுக்காக அமைக்கப்பட்ட இக்குடைவரைக்குள் நிற்கும் கோலத்தில் திருமாலின் சிற்பம் காணப்படுகிறது. இது தொடர்ந்து வழிபாட்டில் இருப்பதால், பல பிற்காலத்துக் கட்டுமானங்களும் இக்குடைவரையுடன் சேர்த்து அமைக்கப்பட்டுள்ளன.[1]

மேற்கோள்கள் தொகு

  1. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000. பக். 91
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவூர்க்_குடைவரை&oldid=2171393" இலிருந்து மீள்விக்கப்பட்டது