இசுக்காட்லாந்து தேசிய அருங்காட்சியகம்
இசுக்காட்லாந்து தேசிய அருங்காட்சியகம், இசுக்காட்லாந்தின், எடின்பரோ நகரில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம். இதற்கு முன்னோடியாக இருந்த "தேசிய அருங்காட்சியகங்கள் இசுக்காட்லாந்து" என்னும் அமைப்பு 1985 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய சட்டமூலம் ஒன்றின் வழி உருவாக்கப்பட்டது. அக்காலத்தில் இருந்த இசுக்காட்லாந்து தேசிய பழம்பொருள் அருங்காட்சியகம், அரச இசுக்காட்டிய அருங்காட்சியகம் என்னும் இரண்டையும் இணைத்து இதை உருவாக்கினர். 2006 ஆம் ஆண்டில் இந்த அருங்காட்சியகத்துடன், பழம்பொருட்கள், பண்பாடு, வரலாறு ஆகியவற்றுடன் தொடர்புடைய சேகரிப்புக்களைக் கொண்டிருந்த இசுக்காட்லாந்து அருங்காட்சியகத்தையும், அறிவியல், தொழினுட்பம், இயற்கை வரலாறு, உலக வரலாறு ஆகியவற்றோடு தொடர்புடைய சேகரிப்புக்களுடன் கூடிய அரச அருங்காட்சியகத்தையும் இணைத்ததன் மூலம் "இசுக்காட்லாந்து தேசிய அருங்காட்சியகம்" உருவாகியது. இதைப் பார்ப்பதற்குக் கட்டணம் அறவிடப்படுவது இல்லை.
இசுக்காட்லாந்து தேசிய அருங்காட்சியகம் | |
---|---|
இசுக்காட்லாந்து தேசிய அருங்காட்சியகக் கட்டிடத்தின் ஒரு பகுதி. | |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | விக்டோரியப் பாணியும் ரோமனெசுக் மறுமலர்ச்சி நவீன பாணியும் |
நகரம் | எடின்பரோ |
நாடு | இசுக்காட்லாந்து |
கட்டுமான ஆரம்பம் | 1861 |
நிறைவுற்றது | 1866 & 1998 |
துவக்கம் | 1866 |
புதுப்பித்தல் | 2011 |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக் கலைஞர்(கள்) | பென்சன் & போர்சித் |
அமைப்புப் பொறியாளர் | அந்தனி ஹண்ட் அசோசியேட்சு |
இந்த அருங்காட்சியகம் சேம்பர்சு சாலையில் அருகருகே அமைந்துள்ள இரண்டு கட்டிடங்களில் அமைந்துள்ளது. இரண்டு கட்டிடங்களும் தனித்துவமான பாணிகளில் அமைந்தவை. ஒன்று இசுக்காட்லாந்து அருங்காட்சியகக் கட்டிடம். இது 1998 ஆம் ஆண்டில் திறந்துவைக்கப்பட்ட நவீன பாணியில் அமைந்த கட்டிடம். முன்னைய அரச அருங்காட்சியகக் கட்டிடமான இரண்டாவது கட்டிடம் 1861ல் தொடங்கப்பட்டு 1866ம் ஆண்டில் பகுதியாகத் திறந்துவைக்கப்பட்டது. இது விக்டோரிய ரோமனெசுக் மறுமலர்ச்சிப் பாணியிலான முகப்பையும், வார்ப்பிரும்பினால் அமைக்கப்பட்ட நடு மண்டபத்தையும் கொண்டது. இது 47 மில்லியன் பவுண்டுகள் செலவுடன் கூடிய பெரிய அளவிலான திருத்த வேலைகளுக்குப் பின்னர், 2011 யூலை 29ல் மீளத் திறக்கப்பட்டது.[1]
இந்த அருங்காட்சியகத்தில், இசுக்காட்லாந்து தேசிய பழம்பொருள் அருங்காட்சியகம், அரச அருங்காட்சியகம் ஆகியவற்றில் இருந்த சேகரிப்புக்களுடன், தேசிய அளவில் இசுக்காட்லாந்தில் தொல்லியல் ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள், நடுக்காலப் பொருட்கள், நிலவியல், தொல்லியல், இயற்கை வரலாறு, அறிவியல், தொழினுட்பம், கலைகள் போன்ற துறைகள் சார்ந்த அரும்பொருட்களையும் உள்ளடக்கியுள்ளது. 2011ல் மீளத் திறக்கப்பட்ட 19 காட்சிக் கூடங்களில் 8,000 பொருட்கள் உள்ளன. இவற்றுள் 80% ஆனவை முன்னர் காட்சிக்கு வைக்கப்படாதவை.[2]
குறிப்புகள்
தொகு- ↑ "BBC News - National Museum of Scotland to reopen after £47m refit". bbc.co.uk. 2011-07-27. பார்க்கப்பட்ட நாள் 2011-12-20.
- ↑ மீளத் திறப்புக் குறித்து இசுக்காட்லாந்து தேசிய அருங்காட்சியகம் வெளியிட்ட பத்திரிகை அறிக்கை.
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளியிணைப்புக்கள்
தொகு- அருங்காட்சியகத்தின் இணையத்தளம்
- கட்டிடம் தொடர்பான மீளாய்வு பரணிடப்பட்டது 2011-07-20 at the வந்தவழி இயந்திரம். ஹியூ பியர்மன்