இசுக்கூனர்

இசுக்கூனர் (schooner) என்பது, ஒரு வகையான பாய்க்கப்பல் ஆகும். இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாய்மரங்களையும் நீளப்பாட்டுக்கு இணையாகப் பொருத்தப்பட்ட பாய்களையும் கொண்டது. இதில் முன் பாய்மரம் மற்றப் பாய்மரங்களிலும் உயரம் குறைவானதாகவும் மூன்று பாய்மரங்கள் உள்ள இசுக்கூனர்களில் முதன்மைப் பாய்மரமான நடுப்பாய்மரம் எல்லாவற்றிலும் கூடிய உயரமானதாகவும், பின் பாய்மரம் முன்பாய்மரத்தைவிட உயரம் கூடியதாகவும் காணப்படும். தொடக்ககால இசுக்கூனர்களில் காஃப் பாயமைப்புக் காணப்பட்டது. தற்காலத்தில் இக்கலங்கள் பெரும்பாலும் பெர்முடா பாயமைப்புக் கொண்டவையாக உள்ளன.

மரபுவழியான காஃப் பாயமைப்புக்கொண்ட இசுக்கூனர்
இசுக்கூனர் பாயமைப்பு: 1) முகப்புச் சட்டம் 2) முக்கோணப்பாய், தொடர்ந்த முன் பாய்மரம் 3) (முன்) காஃப் மேற்பாய் 4) முன்பாய் 5) முதன்மை காஃப் மேற்பாய் 6) முதன்மைப் பாய் 7) வளை முனை

இவ்வாறான பாய்க்கப்பல்கள் முதன்முதலாக 16 அல்லது 17வது நூற்றாண்டில் ஒல்லாந்தரால் பயன்படுத்தப்பட்டது. இவை 18ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வட அமெரிக்காவில் மேலும் மேம்படுத்தப்பட்டதுடன், நியூ இங்கிலாந்தில் பரவலாகப் பயன்பட்டன.[1] இரண்டு பாய்மரங்களைக் கொண்ட மிகப் பொதுவான இசுக்கூனர்கள், அடிமை வணிகம், தனியார் தாக்குதல் கலங்கள், கடற்போக்குவரத்துத் தடைகளுக்கு அகப்படாமல் தாண்டிசெல்லல், கரைதாண்டிய மீன்பிடி போன்ற வணிகத் தேவைகளுக்குப் பெயர் பெற்றவையாக இருந்தன.[2] செசாப்பீக்கே குடாவில் பல்வேறு தனிச்சிறப்பு வாய்ந்த இசுக்கூனர் வகைகள் உருவாயின. இவற்றுள், பால்ட்டிமோர் கிளிப்பர், பூகேயே, பங்கி போன்றவையும் அடங்கும். இசுக்கூனர்கள், மேற்கிந்தியக் கடற்பகுதிகளில், கடற்கொள்ளைகளின் பொற்காலம் என்று கருதப்பட்ட காலத்தில், வேகத்துக்காகவும் விரைவுச் செயற்பாடுகளுக்காகவும் இசுக்கூனர்கள் கடற்கொள்ளையர்களால் பெரிதும் விரும்பப்பட்டன. இவை ஆழம் குறைந்த கடலிலும் செல்லத்தக்கவை என்பதுடன், அக்காலத்தில் பயன்பாட்டில் இருந்த பிற கப்பல்களிலும் சிறியதாகவும் அதேவேளை வணிகக்கப்பல்களை மிரட்டி அடிப்படுத்தும் அளவுக்குப் போதுமான பீரங்கிகளைக் கொள்ளத்தக்கனவாகவும் இருந்தன.

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், அத்திலாந்திக்கின் இரு பக்கங்களிலும் இசுக்கூனர்கள் பெயர் பெற்றிருந்தன. ஆனால், ஐரோப்பாவில் "கட்டர்" வகைக் கப்பல்களுக்கு இடம்விட்டு படிப்படியாக இசுக்கூனர்கள் ஒதுங்கிக்கொண்டன.[3]

மேற்கோள்கள் தொகு

  1. 'The evidence of two or three old prints seems to prove that the type of vessel now called ‘schooner’ existed in England in the 17th cent., but it apparently first came into extensive use in New England.' "schooner, n.1". OED Online. March 2013. Oxford University Press.
  2. Cunliffe, Tom (1992). Hand, Reef and Steer. Sheridan House. பக். 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-57409-203-0. 
  3. Cunliffe, Tom (1992). Hand, Reef and Steer. Sheridan House. பக். 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-57409-203-0. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுக்கூனர்&oldid=3897298" இலிருந்து மீள்விக்கப்பட்டது