பாய்மரம் என்பது, பாய்க்கப்பல்களில், நீளப்பாட்டு அச்சில், ஏறத்தாழ நிலைக்குத்தாக நிறுத்தப்படும் உயரமான கழி அல்லது கம்பம் ஆகும். இது, பாய்கள், துணைக் கம்புகள், பாரந்தூக்கிகள் ஆகியவற்றைத் தாங்குவதுடன், வழிகாட்டு விளக்குகள், கண்காணிப்பு நிலைகள், சைகைத் தளம், கட்டுப்பாட்டு நிலை, அலைவாங்கிகள் போன்றவற்றுக்குத் தேவையான உயரத்தையும் வழங்குகின்றன.[1] பெரிய கப்பல்கள் பல பாய்மரங்களைக் கொண்டிருப்பது வழக்கம். அவற்றின் அளவும் ஒழுங்கமைப்பும் கப்பலின் வகையைப் பொறுத்து அமையும். ஏறத்தாழ எல்லாப் பாய்மரங்களுமே பிணைவடக் கம்பங்கள் ஆகும்.[2]

சிறிய கப்பலின் பாய்கள். கீழிருந்து பார்க்கும் தோற்றம்
முதன்மை மேலுச்சிப் பாய்மரம்

அமைப்பு

தொகு

19ம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை எல்லாக் கப்பல்களினதும் பாய்மரங்கள் மரத்தினால் செய்யப்பட்டன. இவை ஒற்றை மரத்தினால் அல்லது பல மரத் துண்டுகளைப் பொருத்தி உருவாக்கப்பட்டன. பொதுவாக இவற்றுக்கு ஊசியிலை மரங்களின் அடிமரம் பயன்படுத்தப்பட்டது. 16ம் நூற்றாண்டுக்குப் பின்னர் பெரிய கப்பல்கள் உருவாக்கப்பட்டதால் இவற்றுக்குக் கூடிய உயரமும், பருமனும் கொண்ட பாய்மரங்கள் தேவைப்பட்டன. இதனால், இவற்றை ஒரே மரத்தில் செய்வது முடியாத நிலை ஏற்பட்டது. இவ்வாறான கப்பல்களின் பாய்மரங்களுக்குத் தேவையான உயரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நான்கு வரையான மரத்துண்டுகளைப் பொருத்த வேண்டியிருந்தது. கப்பலின் தளத்துக்கு மேல் இத்துண்டுகளின் உயரத்தைப் பொறுத்து இவை கீழ் மரம், உச்சிமரம், மேலுச்சி மரம், இராசமரம் என அழைக்கப்படுகின்றன. கீழ்ப் பகுதிக்குப் போதிய பருமனைக் கொடுப்பதற்காக இப்பகுதி வெவ்வேறு மரத்துண்டுகளை இணைத்துச் செய்யப்படுகிறது. இவ்வாறான மரம், செய்மரம் என அழைக்கப்படும்.

பெயர்கள்

தொகு

மூன்று பாய்மரங்களைக் கொண்ட கப்பல் ஒன்றில் முகப்புப் பக்கமிருந்து பின்னோக்கிச் செல்லும் ஒழுங்கில் பாய்பரங்களில் பெயர்கள் வருமாறு:

  • முகப்புச் சட்டப் பாய்மரம்: முகப்புச் சட்டத்தின் நுனியில் பொருத்தப்படும் சிறிய கம்பம். கப்பல் எத்தனை பாய்மரங்களைக் கொண்டது எனக் கணக்கிடும்போது இது கணக்கில் எடுக்கப்படுவதில்லை. 18ம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதிக்குப் பின்னர் இது வழக்கிழந்து விட்டது.
  • முன் பாய்மரம்: உண்மையான முதல் பாய்மரம் அல்லது முதன்மைப் பாய்மரத்துக்கு முன்னால் உள்ள பாய்மரம்.
    • பகுதிகள்: முன் பாய்மரம் கீழ்ப்பகுதி - முன் உச்சிப் பாய்மரம் - முன் மேலுச்சிப் பாய்மரம்
  • முதன்மைப் பாய்மரம்: எல்லாவற்றிலும் உயரமான பாய்மரம். பெரும்பாலும் கப்பலின் நடுப் பகுதிக்கு அண்மையாக அமைந்திருக்கும்.
    • பகுதிகள்: முதன்மைப் பாய்மரம் கீழ்ப்பகுதி - முதன்மை உச்சிப் பாய்மரம் - முதன்மை மேலுச்சிப் பாய்மரம் - இராச பாய்மரம் (தேவையானால்)
  • பின் பாய்மரம்: மூன்றாவது பாய்மரம் அல்லது முதன்மைப் பாய்மரத்துக்கு அடுத்துப் பின்னல் உள்ள பாய்மரம். வழமையாக முன் பாய்மரத்திலும் உயரம் குறைவாக இருக்கும்.
    • பகுதிகள்: பின் பாய்மரம் கீழ்ப்பகுதி - பின் உச்சிப் பாய்மரம் - பின் மேலுச்சிப் பாய்மரம்

மேற்கோள்கள்

தொகு
  1. Layton, Cyril Walter Thomas, Peter Clissold, and A. G. W. Miller. Dictionary of nautical words and terms. Brown, Son & Ferguson, 1973.
  2. Harland, John. Seamanship in the Age of Sail, pp. 22-5, Naval Institute Press, Annapolis, Maryland, 1992. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87021-955-3.

படங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாய்மரம்&oldid=3701789" இலிருந்து மீள்விக்கப்பட்டது