இசுடெபானி ஹோரோவிட்சு

போலந்து வேதியியலாளர்

இசுடெபானி ஹோரோவிட்சு (Stefanie Horovitz) (17 ஏப்ரல் 1887-1942) (இசுடெபானியா ஹொரோவிட்ஸ் அல்லது இசுடெபானி ஹொரோவிட்ஸ் ) ஒரு போலந்து-யூத வேதியியலாளர் ஆவார். இவர் ஓரிடத்தான்களின் இருப்பை நிரூபிக்கும் ஆய்வுப் பணிகளுக்கு பெயர் பெற்றவர். தோராயமாக 1914-1918 க்கு இடையில், காரீயம் மற்றும் தோரியத்தில் ஓரிடத்தான்களின் அல்லது ஐசோடோப்புகளின் முதல் மற்றும் இரண்டாவது நம்பகமான நிகழ்வுகளை நிரூபிக்க பகுப்பாய்வு முறைகளைப் பயன்படுத்தி வியன்னாவின் ரேடியம் நிறுவனத்தில் ஓட்டோ ஹானிக்ஷ்மிட் உடன் பணிபுரிந்தார். [1] பின்னர், உளவியல் சிகிச்சை தேவைப்படும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான இல்லத்தை இவர் இணைந்து நிறுவினார். [2] இவர் 1942 ஆம் ஆண்டில் ட்ரெப்ளிங்கா அழிப்பு முகாமில் நாஜிகளால் கொல்லப்பட்டார். [3]

இசுடெபானியா ஹோரோவிட்ஸ்
பிறப்பு1887 (1887)
வார்சாவ், போலந்து
இறப்பு1942 (அகவை 54–55)
டிரெப்ளிங்கா வதை முகாம்
பணியிடங்கள்ரேடியம் ஆராய்ச்சி நிறுவனம், வியன்னா
கல்வி கற்ற இடங்கள்வியன்னா பல்கலைக்கழகம்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

ஹொரோவிட்சு 1887 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 அன்று வார்சாவில் பிறந்தார். [4] இவரது தந்தை கலைஞரான லியோபோல்ட் ஹோரோவிட்ஸ், பரோக் பாணி ஓவியங்களுக்கு பெயர் பெற்ற ஒரு வெற்றிகரமான ஓவியர் ஆவார். [5] இவரது தாயின் இயற்பெயர் ரோசா லண்டன் மற்றும் இவருக்கு ஒரு சகோதரி இருந்தார். இவரது குடும்பம் 1890 ஆம் ஆண்டில் குடிபெயர்ந்தது.

இவர் வியன்னா பல்கலைக்கழகத்தில் 1907 ஆம் ஆண்டில் கல்வி பயின்றார். கரிம வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவரது ஆலோசகர் கைடோ கோல்ட்ஸ்மிட் ஆவார். இவரது முனைவர் பட்ட ஆய்வு கந்தக அமிலத்தைப் பயன்படுத்தி குயினோனை மறுசீரமைப்பது பற்றியதாகும்.

அறிவியல் தொழில்

தொகு

லீஸ் மெயிட்னரின் பரிந்துரையின் பேரில், ஹோரோவிட்ஸ் 1913 அல்லது 1914 ஆம் ஆண்டுகளில் வியன்னாவில் உள்ள ரேடியம் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஓட்டோ ஹானிக்ஷ்மிட் என்பவரால் பணியமர்த்தப்பட்டார். இந்த நேரத்தில், ஃபாஜன்ஸ் மற்றும் சோடியின் கதிரியக்க இடப்பெயர்ச்சி விதி கதிரியக்க வேதியியலில் சமீபத்திய வளர்ச்சியாகும். யுரேனியம் அல்லது தோரியத்தின் கதிரியக்கச் சிதைவின் விளைவாக ஏற்படும் காரீயம் வழக்கமான காரீயத்தை விட வேறுபட்ட அணு எடைகளைக் கொண்டிருக்கும் என்று அது கணித்துள்ளது. ஆரம்பகால சோதனைத் தரவு பகுப்பாய்வு வேதியியலாளர்களால் அதிகாரப்பூர்வமானதாக கருதப்படவில்லை. ஹார்வர்டில் முன்னணி நிபுணரான தியோடர் வில்லியம்ஸ் ரிச்சர்ட்ஸின் கீழ் ஹோனிக்ஸ்மிட் படித்தார். துல்லியமான அணு எடைகளை தீர்மானிப்பதில் இவரது பணி நன்கு மதிக்கப்பட்டது. ஓரிடத்தான்கள் அல்லது ஐசோடோப்புகளின் இருப்பை நிரூபிப்பதற்காக கதிரியக்க மூலங்களிலிருந்து காரீயத்தின் அணு எடையைத் தீர்மானிக்க ஃபஜன்ஸ் மற்றும் சோடி ஆகியோரால் ஹோனிக்ஸ்மிட்டிடம் கேட்கப்பட்டது.

ஹொரோவிட்ஸ் காரீயத்தைப் பிரித்தெடுத்தல், சுத்திகரித்தல் மற்றும் சிறந்த துல்லியத்துடன் அளவிடும் கடினமான செயல்முறையை மேற்கொண்டார். முதலில், இவர் அருகிலுள்ள செயின்ட் ஜோக்மிஸ்டல் சுரங்கத்திலிருந்து யுரேனியம் நிறைந்த பிட்ச்பிளெண்டே மாதிரிகளிலிருந்து காரீயத்தைப் பிரித்தெடுத்தார். பிரித்தெடுக்கும் செயல்முறையானது காரீய குளோரைடு மாதிரியை முற்றிலும் மாசற்று வழங்குவதற்காக பல சுற்றுகளில் கழுவுதல், கரைத்தல், வடிகட்டுதல் மற்றும் மறுபடிகமாக்கல் ஆகியவற்றை உள்ளடக்கியது. யுரேனியத்தின் கதிரியக்கச் சிதைவிலிருந்து உருவான காரீயம் வழக்கமான காரீயத்தை (207.190) விட குறைவான அணு எடையைக் (206.736) கொண்டிருந்தது என்பதை இவரது நிறையறிப் பகுப்பாய்வு ஒரு கிராமின் ஆயிரத்தில் ஒரு பங்கானது நிரூபித்தது. மூலத்தைப் பொறுத்து தனிமங்கள் வெவ்வேறு அணு எடைகளைக் கொண்டிருக்கலாம் என்பதற்கான பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் சோதனை ஆதாரம் இதுவாகும்.

பெர்ட்ராம் போல்ட்வுட் கண்டுபிடித்த கதிரியக்கத் தனிமமான அயோனியம் உண்மையில் தோரியத்தின் ஐசோடோப்பு என்பதை ஹோரோவிட்சு மற்றும் ஹோனிக்ஸ்மிட் பின்னர் நிரூபித்தார்கள். இந்த ஆய்வுப்பணி பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அயோனியம் தனிமத்தின் இருப்பை தவறென்று நிரூபித்ததோடு தோரியத்தை ஐசோடோப்புகளைக் கொண்ட இரண்டாவது தனிமமாக நிறுவியது.

இரண்டு அறிவியலாளர்களும் தங்கள் பணி சார்ந்த அறிக்கையை இணைந்து வெளியிட்டனர். மேலும், ஹோனிக்ஸ்மிட் மற்றும் சோடி ஆகியோரால் ஹோரோவிட்ஸ் ஒரு பங்களிப்பாளராக பகிரங்கமாக அங்கீகரிக்கப்பட்டார். இந்த அங்கீகாரம் குறிப்பிடத்தக்கது, ஏனெனில் அந்த நேரத்தில் பெண் விஞ்ஞானிகள் உதவியாளர் பதவிகளுக்கு மட்டுப்படுத்தப்படுவது பொதுவானதாக இருந்தது. இருப்பினும், ஹோனிக்ஸ்மிட்டின் மரணத்திற்குப் பிறகு ஹோரோவிட்சின் பெயர் கைவிடப்பட்டதோடு மற்றும் அவரது பங்களிப்பு கிட்டத்தட்ட மறக்கடிக்கப்பட்டது என்றே கூறலாம்.

பிந்தைய ஆண்டுகள் மற்றும் மரணத்தின் சூழல்

தொகு

முதலாம் உலகப் போருக்குப் பிறகு, குடும்ப விவகாரங்கள் மற்றும் அரசியல் எழுச்சியால் ஹோரோவிட்ஸின் வாழ்க்கை சீர்குலைந்தது. ஒரு பெரிய தொழில் மாற்றத்தை சந்தித்த இவர் வியன்னாவில் ஒரு வளர்ப்பு இல்லத்தை நிறுவி, அட்லேரியன் உளவியலாளரான ஆலிஸ் ஃபிரைட்மேனுடன் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தார்.[6][7]

இவர் 1937 ஆம் ஆண்டில் தனது சகோதரியுடன் நாஜிக்கள் பின்தங்கிய நிலையில் இருந்த பொழுது வார்சாவுக்குத் திரும்பி அங்கு உருவாக்கப்பட்டிருந்த யூதக் குடியிருப்பில் வசிக்கத் தொடங்கினார். இவர் இறந்த சரியான தேதி தெரியவில்லை. காசிமியர்ஸ் ஃபஜான்ஸின் கடிதங்கள், இவர் வார்சாவுக்குத் திரும்பியதாகவும், 1940 ஆம் ஆண்டில் நாஜிகளால் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிடுகிறது. மற்ற ஆதாரங்கள் மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக ஹோரோவிட்சு மற்றும் அவரது சகோதரி 1942 ஆம் ஆண்டில் தங்களின் வருகையைப் புகாரளித்தனர். ஆனால், விவரங்கள் தெளிவாக இல்லை. அவர்கள் ட்ரெப்ளிங்கா அழிப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர் மற்றும் அங்கு பிழைக்காத 900,000 யூதர்களில் ஒருவராக ஆயினர். 1942 இல் ஹோரோவிட்ஸ் ஒரு எரிவாயு அறையில் கொல்லப்பட்டாதாக பதிவுகள் குறிப்பிடுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Rayner-Canham, Marelene; Rayner-Canham, Geoff (2000). "Stefanie Horovitz, Ellen Gleditsch, Ada Hitchins, and the Discovery of Isotopes". Bulletin for the History of Chemistry 25 (2): 103–108. http://research.library.mun.ca/507/. 
  2. Sanderson, Katharine (8 September 2020). "Stefanie Horovitz – the woman behind the isotope". Chemistry World (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-09.
  3. Mikucki, Jerzy (2005). "The Central Database of Shoah Victims' Names". Yad Vashem: The World Holocaust Remembrance Center. பார்க்கப்பட்ட நாள் 2020-12-04.
  4. Ogilvie, Marilyn Bailey; Harvey, Joy Dorothy (2000). The biographical dictionary of women in science : pioneering lives from ancient times to the mid-20th century. New York: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415920388. இணையக் கணினி நூலக மைய எண் 40776839.
  5. Singer, Isadore; Sohn, Joseph (1906). "Jewish Encyclopedia". Jewish Encyclopedia: The unedited full text of the 1906 Jewish Encyclopedia. பார்க்கப்பட்ட நாள் 2020-12-04.
  6. Rentetzi, Maria (2011). "Stephanie Horovitz (1887-1942)". In Apotheker, Jan; Sarkadi, Livia Simon (eds.). European Women in Chemistry. Wiley. pp. 75–79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783527329564.
  7. Rentetzi, Maria (2009). Trafficking Materials and Gendered Experimental Practices: Radium Research in Early 20th Century Vienna. Columbia University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780231135580.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுடெபானி_ஹோரோவிட்சு&oldid=3641380" இலிருந்து மீள்விக்கப்பட்டது