கிரேக்கத் தொன்மக் கதைகளில் சிலவற்றை சாஃபக்கிளீசு (Sophocles) மேடையில் நடிக்கத்தக்க நாடகங்களாகப் படைத்தார். அவரது படைப்புகளில் மூன்று நாடகங்கள் ஒரே தொன்மக் கதையை மையமாக வைத்து இயற்றப்பட்டன. அம்மூன்று நாடகங்களுக்கும் கதாநாயகன் தீபெஸ் நாட்டின் அரசன் இடிப்பஸ் என்பவன் ஆவான்.

அம்மூன்று நாடகங்களாவன:

  • இடிப்பஸ் மன்னன் (Oedipus the king - 427 BC)
  • கலோனசில் இடிப்பஸ் (Oedipus at Colonus - 405 BC)
  • ஆண்டிகான் (Antigone - 441 BC) இம்மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடைய நாடகங்களாகும்.

கதைகளின் சுருக்கம்

தொகு

வெகு காலத்திற்கு முன்பு தீபெஸ் (Thebes) என்ற நாட்டை ஓர் அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர்தான் இடிப்பஸ். அக் குழந்தை தன் தந்தையைக் கொன்று தாயை மணப்பான் என்று அசரீரி கூறிற்று. அரசன் மிகவும் மனவருத்தப்பட்டான். எனவே அக் குழந்தையைக் காட்டிற்கு எடுத்துச் சென்று கொன்றுவிட்டு வரும்படி ஆட்களுக்கு ஆணையிட்டான். ஆனால் காட்டில் அக்குழந்தை ஒரு இடையனால் காப்பாற்றப்படுகிறது. அடுத்த நாட்டு அரண்மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு வளர்க்கப்படுகிறான். தன் பிறப்பை அறியாத நிலையிலேயே வளர்ந்து பெரியவனானான். ஆனால் எப்படியோ ஒரு சமயம் அவனும் அவனுடைய தந்தை கேட்ட அசரீரியையே கேட்க வேண்டியவனானான். அசரீரி வாக்குப்போல் ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக நாட்டை விட்டுக் காட்டுக்குப் போனான். காட்டில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கையில் தீபெஸ் நாட்டின் அரசனைச் சந்திக்கிறான். அவனோடு பகை ஏற்படுகின்றது. இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் தன் உண்மைத் தந்தைதான் தீபெஸ் நாட்டு அரசன் என்பதனை அறியாமல் இடிப்பஸ் கொன்றுவிடுகிறான். கொன்ற பின்னும் அவன், தான் கொன்றது தந்தைதான் என அறியவில்லை. பிறகு தீபெஸ் நாட்டிற்குச் சென்று, அங்கு சிபிங்ஸ் புதிரை விடுவித்து அந் நகரைப் பிடித்திருந்த தீமையினின்றும் அதை விடுவிக்கிறான். அப்புதிரை விடுவிப்பவர் அந்நாட்டின் அரசனாவார் என்ற விதிப்படி தீபெஸ் நாட்டின் அரசனாகிறான். அந்நாட்டின் அரசியையும் மணந்துகொள்கிறான். இடிப்பசுக்கும் அவன் மனைவிக்கும் நான்கு குழந்தைகள் பிறக்கின்றன. பிறகு ஒருநாள் இடிப்பஸ் மன்னனுக்கு உண்மை புலப்படுகின்றது. காட்டில் தன்னால் கொல்லப்பட்ட அரசனே தன் தந்தை என்றும், தான் மணந்துகொண்டவள் தன் தாய்தான் என்றும் அறிகிறான். இக்கொடிய செயலைத் தாங்காத இடிப்பஸ் தன்னுடைய கண்களைத் தானே குத்திக்கொள்கிறான்.

கண்ணை இழந்த இடிப்பஸ், கலோனியஸ் என்னும் நாட்டில் பாவப்பட்ட மனிதனாகவும், இழித்துரைக்கப்படும் மனிதனாகவும் வாழ்ந்து வருகிறான். அவனது குற்ற உணர்வு அவனை வருத்திக் கொண்டிருந்தது. தான் தந்தையைக் கொன்றதும் (Parricide), தாயை மணந்ததும் (incest) மிகப்பெரும் தவறு என்பதை இடிப்பஸ் உணர்ந்தான். அதனால் இழித்துரைக்கும் மக்களிடம் எந்தவித எதிர்ப்புணர்வையும் காட்டவில்லை.

இவ்வாறு வருந்தியவண்ணம் ஆண்டிகான் என்னும் பெயரில் கிரியான் (Creon) என்பவனுடன் தன் குற்றம் பற்றி விவாதிக்கிறான். அங்கிருந்த மக்கள் அவனது வரலாற்றைக் கேட்டும், அவனது இழிநிலையைக் கண்டும் வருந்தினர். குற்றத்திற்குரிய தண்டனையை அவன் உணர்ந்துவிட்டானாகையால் அவன் தூய்மையடைந்தான் என மக்கள் நினைக்கின்றனர். எனவே அவனைத் தெய்வத்திற்கு ஈடாக வைத்துப் போற்றுகின்றனர்.

தந்தையைக் கொன்றதும் தாயை மணந்ததும் இடிப்பஸ் தெரிந்து, புரிந்து செய்த செயலன்று. எனினும் கதையில் இடிப்பஸ் மன்னனுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனைக்குப் பதிலாக அவன் தெய்வமாக்கப் பட்டுள்ளான். இந்நிகழ்வு மனித மனத்தின் விசித்திரமான செயல்பாடாகும். ஆனால் இந்த இயல்பு ஒவ்வொருவரிடமும் இருக்கின்றது என்பது ஃபிராய்டின் கருத்து. ஃபிராய்ட் இடிப்பஸ் கதையின் வெளித்தோற்றத்தை மட்டும் எடுத்துக்கொண்டார். இதை அடிப்படையாகக் கொண்டுதான் மனக் கோளாற்றின் அடிப்படை குழந்தைப் பருவத்து விழைவுகளிலிருந்து தொடங்குகின்றது என்று அவர் திடமாக நம்பினார்.[சான்று தேவை]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடிப்பஸ்&oldid=4131935" இலிருந்து மீள்விக்கப்பட்டது