இடியப்ப உரல்
இடியப்ப உரல் என்பது இடியாப்பம் செய்வதற்குப் பயன்படும் ஒரு கருவி. முற்காலத்தில் மரத்தினால் மட்டும் செய்யப்பட்ட இது தற்காலத்தில் அலுமினியம் போன்ற உலோகங்களாலும் செய்யப்படுவதுண்டு.
அமைப்பு
தொகுஇடியப்ப உரல் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும். கீழ்ப்பகுதி, இரு புறமும் கைபிடியுடன் கூடியதும் நடுவில் ஏறத்தாழ 2 அங்குல விட்டம் கொண்ட துளையுடன் கூடியதுமான உருளைவடிவ அமைப்புக் கொண்டது. இதன் அடிப்பகுதியில் சிறிய பல துளைகளுடன் கூடிய பித்தளைத் தகடு பொருத்தப்பட்டிருக்கும். மேற்பகுதி, இருபக்கமும் கைபிடிகளுடன் கூடிய உருளை அமைப்பு இருக்கும். இவ்வுருளை சரியாக கீழ்ப்பகுதியின் துளைக்குள் செல்லக்கூடியவாறான அளவு கொண்டதாக இருக்கும். கீழ்ப்பகுதியின் துளைக்குள் பிசையப்பட்ட மாவை இட்டு, கைபிடிகளின் உதவியுடன் மேற்பகுதியின் உருளைப் பகுதியால் அழுத்துவர். உருளை துளைக்குள் இறங்கும்போது பிசைந்த மாவு பித்தளைத் தகட்டின் துளைகள் வழியாகக் கம்பிகள் போல் வெளியேறும். இவற்றை, இடியப்பத் தட்டில் வட்டமாகச் சுற்றிப் பிழிவர்.
இவ்வாறான உரல்களை இடியப்பம் செய்வதற்காக மட்டும் அல்லாமல் முறுக்கு, அச்சுப் பலகாரங்கள் போன்ற பல்வேறு சிற்றுண்டிகளையும் செய்யக்கூடியதாக உருவாக்குவதும் உண்டு. இவ்வாறான உரல்களில் துளைகளைக் கொண்ட அடித்தகடு நிலையாகப் பொருத்தப்படுவதில்லை. சிற்றுண்டிகளின் தன்மையைப் பொறுத்து வெவ்வேறு அளவுகளைக்கொண்ட துளைகளுடன் கூடிய உலோகத் தகடுகள் உரலின் உருளை வடிவத் துளையுள் தற்காலிகமாகப் பொருத்தும்படி அமைக்கப்பட்டிருக்கும். தேவையைப் பொறுத்து அச்சுக்களை மாற்றிப் பயன்படுத்துவர். இவ்வகையான உரல்களில் பின்வரும் அச்சுக்கள் இருப்பதுண்டு:
- இடியப்ப அச்சு
- முறுக்கு அச்சு
- மகிழம்பூ அச்சு
- ஓமப்பொடி அச்சு
- நாடா அச்சு
- பல்லுப் பதிந்த அச்சு
- சிலேபி அச்சு
தற்காலம்
தொகுதற்காலத்திலும் இடியப்ப உரல் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. எனினும் இடியப்ப உரலில் இடியப்பம் பிழிவது இலகுவானது அல்ல. இதனால், தற்காலத்தில் இடியப்ப உரலுக்குப் பதிலாக இலகுவாகப் பிழியத்தக்க வகையில் பல வகையான பொறிகள் உருவாக்கப்பட்டுள்ளன.