இந்தியா (இதழ்)

இந்தியா பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு 1906ஆம் ஆண்டு மே 9 ஆம் நாள் தொடங்கப்பட்ட இதழாகும். ஆனால் இதன் ஆசிரியராக இதழில் அச்சிடப்பட்டவர். எம். சீனிவாச அய்யங்கார் ஆவார். இதன் உரிமையாளர்கள் திலகரின் தீவிர தேசியத்தைப் பின்பற்றிய மண்டையம் குடும்பத்தாராவர். இந்தியா வார இதழாக சென்னையிலும் புதுச்சேரியிலும் வெளிவந்தது. 1908, செப்டம்பர் 5 வரை சென்னையில் வெளிவந்த இவ்விதழ் அரசாங்க அடக்குமுறை காரணமாக புதுச்சேரிக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல் இதழ் 1908, அக்டோபர் 10 ஆம் நாள் வெளியிடப்பட்டது. இதன் கடைசி இதழ் 1910, மார்ச்சு 12 ஆம் நாள் வெளிவந்தது.

கேலிச்சித்திரம் தொகு

இந்தியா இதழில் செய்திகளும், கட்டுரைகளும் தலையங்கங்களும் மட்டும் அல்லாமல் வாரந்தோறும் முதல் பக்கத்தில் அரசியல் கேலிச்சித்திரங்களும் வெளிவந்தன. கேலிச் சித்திரங்களை அரசியல்; பிரசாரத்திற்குப் பயன்படுத்திய முதல் இதழ் இந்தியா ஆகும்.

கட்டுரைகள் தொகு

புறநானூற்றுப் பாடலில் வரும் வீரத்தாய்மார்கள் பற்றிய கட்டுரைகள், அயல்நாட்டு விடுதலைப் போர்ச்செய்திகள், இயக்கங்கள் பற்றிய செய்திகள் இந்தியாவில் எழுதப்பட்டு வந்தது.

வழக்கு தொகு

29.2.1908 முதல் 27.6.1908 வரையில் இந்தியா இதழில் வெளிவந்த 20 கட்டுரைகள் அரசுக்கெதிரான குற்றத்திற்குரியன என்று தொகுக்கப்பட்டன. இறுதியில் 'மகாபாரதக்கதைகள்', 'எத்தனையோ கொள்ளைகளில் இதுவும் ஒரு கொள்ளை', ' ஏன் காலத்தை வீணாக்க வேண்டும்', எனும் கட்டுரைகளை வெளியிட்டதற்காக வழக்கு தொடரப்பட்டது. உண்மை ஆசிரியரான பாரதியார் புதுச்சேரிக்குத் தப்பிச்சென்றார். ஆசிரியராக அச்சிடப்பெற்ற சீனிவாச அய்யங்கார், வழக்கின் இறுதியில் ஐந்தாண்டு காலம் சிறைசென்றார். இதனைப் பற்றிய குறிப்பொன்றில் பாரதியாரின் நண்பர் எஸ். ஸ்ரீ இராமானுஜலு நாயுடு " தம்மை நம்பிய ஒருவரை ஆபத்தில் சிக்கவைத்து விட்டுத் தாம் தூரப் போய்விட்டமை பாரதியாரின் சரித்திரத்தில் ஒரு களங்கமேயாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.[1]

உசாத்துணை தொகு

மேற்கோள்கள் தொகு

  1. விடுதலை வேள்வியில் தமிழகம் நூல் பக். 323
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியா_(இதழ்)&oldid=1521493" இலிருந்து மீள்விக்கப்பட்டது