இந்திய மாடப் புறா

மாடப்புறா கிளையினம்

இந்திய மாடப் புறா (Columba livia intermedia) என்பது மாடப்புறாவின் கிளையினம் ஆகும்.[1] இது தென் இந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகிறது.

விளக்கம்

தொகு

இது சுமார் 33 செ.மீ. நீளம் கொண்டது. அலகு கறுப்பு, அடிப்பகுதி வெள்ளையாக இருக்கும். விழிப்படலம் ஆரஞ்சு நிறத்திலும், கால்கள் நல்ல இளஞ்சவிவப்பு நிறத்திலும் இருக்கும்.

உடலின் மேற்பகுதி நீலங் கலந்த சாம்பல் நிறமாக இருக்கும். கரும் பச்சை ஊதா, கருஞ் சிவப்பு நிற பளபளப்போடு கூடிய மேல் மார்பையும் கழுத்தையும் கொண்டு இதனை எளிதாக அடையாளம் காணலாம்.[2] இறக்கைகளில் இரண்டு கறுப்புப் பட்டைகள் தெளிவாக தெரியும். ஆணும் பெண்ணும் ஒன்று போன்ற தோற்றம் கொண்டவை.

மனிதர்களால் இவை பிடிக்கப்பட்டு வளர்க்கும்போது தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையில் பல நிறங்களில் இனப்பெருக்கம் செய்யபட்டுள்ளது.

நடத்தை

தொகு

இவற்றை தென்னிந்தியா முழுவதும் மலைப் பகுதிகளிலும், பாறை இடுக்குகளிலும் காணலாம். பழைய கோட்டைகள், கோபுரங்கள், கோயில் மாடங்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் போன்ற பெரிய கட்டடங்களில் நிரந்தரமாக அச்சமின்றி வாழும் இயல்பு கொண்டவை. மாடங்களில் தங்கி வாழக்கூடிய இவற்றிற்கு அத்தகைய இடங்களி கிடைக்காதபோது பனை மரங்கள், ஈச்ச மரங்கள் போன்றவற்றையும் கூட குடியிருப்பு இடமாக மாற்றிக் கொள்ளும். இவை தங்கும் இடங்களில் இருந்து கூட்டமாக காலையும் மாலையும் புன்செய் நிலங்களை நோக்கி உணவுக்காக சென்று வரும். அறுவடை காலங்களில் விளை நிலங்களில் இருந்து நிறைய நெல் மணிகளை கொண்டுவந்து சேர்த்துவைத்துக் கொள்ளும் பழக்கம் இவற்றிற்கு உண்டு என்று கூறுகின்றனர்.[2]

இவை தானியங்கள், நிலக்கடலை, முளைத்த பயிர்களின் முளை போன்றவற்றை முதன்மையாக உண்கின்றன. ஆழ்ந்த குரலில் குட்டோகூ, குட்ரோகூ என்று ஒலி எழுப்பும்.

இவை ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்யக்கூடியன. பாறை இடுக்குகள், கோபுரங்கள், மாடங்கள் போன்வற்றில் காணப்படும் பொந்தில் கூடுகட்டி இரண்டு முட்டைகளை இடும். முட்டையை ஆணும், பெண்ணும் அடைகாக்கும். அடைகாக்கும் காலம் 16 நாட்கள் ஆகும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (January 2023). "Pigeons". IOC World Bird List Version 13.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 10 June 2023.
  2. 2.0 2.1 2.2 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 215–216.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_மாடப்_புறா&oldid=3776889" இலிருந்து மீள்விக்கப்பட்டது