இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள்
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு இன்றியமையாததாக இருந்தது . தங்களுடைய பொருளாதாரத்தையும், உடல் உழைப்பையும் இந்திய விடுதலை இயக்கத்திற்கு முழுமையாக[1] அர்ப்பணித்திருந்தனர் முஸ்லிம்கள்.[2].[3]
காந்தியடிகள், சர்தார் பட்டேலுடன் மௌலானா அபுல் கலாம் ஆசாத் | |
---|---|
ஆங்கிலேயர் வணிகம் செய்ய வந்த காலந்தொட்டே அவர்களை ஆங்காங்கே எதிர்த்துக்கொண்டிருந்தவர்களில் முஸ்லிம்கள், முஸ்லிம் மன்னர்கள் கணிசமாக இருந்தனர். ஆங்கிலேயருக்கு நாட்டை ஆளும் எண்ணம் வந்துவிட்டதை முதலில் கணித்து[4] அவர்களை எதிர்த்தவர் வங்காளத்தை ஆண்ட சிராஜ்-உத்-தொவ்ளா ஆவார். முதல் இந்திய போராட்டம் என்று அறியப்படும் 1857-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சியில் அதிகப்படியான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.[5][6] அவர்களில் அதிகப்படியானோர் தங்கள் உயிரையும் இழந்தனர்.
இந்தியாவின் தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்தியடிகள், தன்னுடைய சுயசரிதையான சத்தியசோதனையில், விடுதலை போராட்டத்திற்கான ஆரம்பகாலத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த ஆதம் ஜவேரி சகோதரர்கள் குறித்து குறிப்பிடுகின்றார். அன்றைய தேதிக்கு சுமார் 150 கோடி சொத்துக்களை சுதந்திரப் பணிக்காக இழந்திருந்தனர் இச்சகோதரர்கள்.[7] தென் தமிழகத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தன்னுடைய சுதேசி கப்பல் லட்சியத்தை அடைய பொருளாதாரம் மிகப்பெரும் தடையாக இருந்தது. அந்நேரத்தில், சுமார் இரண்டு லட்சம் மதிப்பிலான 8000 பங்குகளை வாங்கி வ.உ.சியின் நோக்கத்திற்கு உறுதுணையாக இருந்தவர் ஏ.ஆர்.பக்கீர் முஹம்மது ராவுத்தர் சேட் ஆவார்.[8]
நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் உருவாக்கிய கடல் கடந்த இராணுவமான இந்திய தேசிய இராணுவத்தில் தளபதி பொறுப்பு முதற்கொண்டு பல்வேறு பதவிகளை முஸ்லிம்கள் அலங்கரித்திருந்தனர்.[9][10]. நேதாஜி வியந்து போற்றும் அளவு அதிகப்படியான பொருளாதார உதவிகளையும் இஸ்லாமிய வணிகர்கள் அளித்தனர்.[11]
மௌலானா என்றழைக்கப்படும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், சுதந்திர எண்ணங்களைத் தீவிரமாக விதைக்கும் வண்ணமாக, கதராடை அணியாத மணமகன் திருமணத்தில் தாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்று பத்வா (மார்க்க தீர்ப்பு) அளித்திருந்தனர்.[12] பக்கீர்கள் எனப்படும் யாசகம் தேடுவோர் வீடு வீடாக சுதந்திரக் கீதங்களைப்பாடி மக்களின் விடுதலை எண்ணங்களைத் தீவிரப்படுத்தினர்.[13]
இந்திய மண்ணின் விடுதலைக்கு இஸ்லாமியப் பெண்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருந்தனர்.[14][15] சுதந்திர இந்தியாவின் தேசிய கொடியை வடிவமைத்தவர் சுரையா தியாப்ஜி ஆவார்.[16]
இஸ்லாமியர்களின் இத்தகைய அர்ப்பணிப்பினாலேயே, இந்திய விடுதலைப் போராட்டத்திற்கான முஸ்லிம்களின் பங்களிப்பு பற்றிக் குறிப்பிடும் போது எழுத்தாளர் குஷ்வந்த் சிங் பின்வருமாறு எழுதுகின்றார்.
“இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது”.[17]
மௌலானா அபுல் கலாம் ஆசாத், ரஃபி அகமது கித்வாய், காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் போன்றவர்கள் இந்திய விடுதலை இயக்கத்தின் மிகப்பெரும் தலைவர்களாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல், சுதந்திர இந்தியாவை கட்டமைப்பதிலும், ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டுவதிலும் பெரும் பங்காற்றினர்.[18] [19]
மேற்கோள்கள்
தொகு- ↑ 'இந்திய விடுதலை இயக்கத்தில் முஸ்லிம்கள்' நூலின் முன்னுரை, அப்துல் அலி & ஜபருல் இஸ்லாம், இஸ்லாமிய கல்வி நிறுவனம், அலிகார் பல்கலைகழக வெளியிடு, உரைகளின் தொகுப்பு, 2007
- ↑ http://www.ranker.com/list/top-muslim-freedom-fighters-of-india-v3/saket Top Muslim Freedom Fighters Of India
- ↑ குஷ்வந்த்சிங், இல்லஸ்டிரேட் வீக்லி, 29-12-1975
- ↑ பி.கே குப்தா, கிழக்கு இந்திய நிறுவனமும் சிராஜ்-உத்-தவ்லாவும், 1756–57, லைடன், 1962
- ↑ வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம்.85
- ↑ R.c. Agarwal, Constitution Development of India and National Movement, P.43,53
- ↑ குமுதம் ரிப்போர்டர் 12.07.07
- ↑ செ.திவான், விடுதலைப்போரில் தமிழக முஸ்லிம்கள், பக்கம் 78
- ↑ கே. அருணாசலம், ஜெய்ஹிந்த்,பக்கம் 67,91
- ↑ கே. அருணாசலம், ஜெய்ஹிந்த் அணிந்துரையில் INA லெப்.கர்னல்.லட்சுமி
- ↑ கே. அருணாசலம், ஜெய்ஹிந்த், பக்கம் 86.
- ↑ சிராஜுல் மில்லத் அ.க. அப்துஸ் ஸமது, இஸ்லாமியத் தமிழர் பேரவை நடத்திய சுதந்திரப் பொன்விழா உரையில், சென்னை. 18.10.1997
- ↑ வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம்.63
- ↑ வீரசாவர்க்கர்,எரிமலை, பக்கம்.61,253
- ↑ http://www.thoothuonline.com/archives/5234
- ↑ http://www.flagfoundationofindia.in/know-your-national-flag.html
- ↑ குஷ்வந்த்சிங், இல்லஸ்டிரேட் வீக்லி, 29-12-1975
- ↑ ஆசாத், கித்வாய்: இரு ஆளுமைகள்! - தி ஹிந்து, தமிழ் பதிப்பு, 10-11-2013
- ↑ Members Profile (fifth lok sabha) Muhammad Ismail