சுபாஷ் சந்திர போஸ்

இந்திய தேசியவாத தலைவர்(nationalist leader) மற்றும் அரசியல்வாதி
(சுபாஸ் சந்திர போஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897[4]இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945)[1] இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.[5]

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
பிறப்பு(1897-01-23)23 சனவரி 1897
கட்டக், வங்காள மாகாணம், கட்டக் மாவட்டம் தற்பொழுது ஒடிட்சாவில்
இறப்புஇறந்ததாகக் கருதப்படும் நாள் 18 ஆகத்து 1945(1945-08-18) (அகவை 48)[1]
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்நேதாஜி
படித்த கல்வி நிறுவனங்கள்கல்கத்தா பல்கலைக்கழகம்,
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுஇந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு, இரண்டாம் உலகப் போரின் போது இந்தியத் தேசிய இராணுவத்தை உருவாக்கியமை.
பட்டம்அசாத் இந்து தலைவர்
இந்தியத் தேசிய இராணுவத்தின் சம்பிரதாயத் தலைவர்
அரசியல் கட்சிஇந்திய தேசியக் காங்கிரசு, பார்வார்டு பிளாக்கு
சமயம்இந்து
பெற்றோர்ஜானகிநாத் போசு
பிரபாவதி தேவி
வாழ்க்கைத்
துணை
எமிலி செங்கல்[2]
பிள்ளைகள்அனிதா போஸ்[3]

இவர் 1945 ஆகத்து 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், அல்லது உருசியாவிற்குச் சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆகத்து 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது, போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது.[6]

இளமை

தொகு

பிறப்பு

தொகு

இந்தியாவில் ஒரிசா (இன்றைய ஒடிசா) மாநிலத்தில் கட்டாக் எனும் இடத்தில், 1897 ஆம் ஆண்டு சனவரி 23 ஆம் நாள், வங்காள, இந்துக் குடும்பத்தில், சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார்.[7][8] இவரது தந்தையின் குடும்பம், 27 தலைமுறைகளாக, வங்க மன்னர்களின் படைத் தலைவர்களாகவும், நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றி வந்த பெருமை மிக்க மரபுவழியை உடையது.[9] இவரது தாயார் பிரபாவதிதேவி "தத்" எனும் பிரபுக்குலத்திலிருந்து வந்தவர்.[10] 8 ஆண் பிள்ளைகளையும், 6 பெண் பிள்ளைகளையும் கொண்ட இக்குடும்பத்தில், ஒன்பதாவது குழந்தையாக சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். சிறு வயது முதலே பல பிள்ளைகளுடன் வளர்ந்த படியால், சந்திரபோஸ் தன் சிறு வயதில் தாய் தந்தையரை விட தன்னைக் கவனித்து வந்த தாதியான சாரதா என்பவருடன் பெரிதும் இருந்தார்.

கல்வி

தொகு
 
இளமையில் சுபாஷ் சந்திர போஸ்

ஐந்து வயதான போது, கட்டாக்கிலுள்ள பாப்டிஸ்ட் மிசன் ஆரம்பப் பள்ளியில் இணைந்த சுபாஷ், ஏழு ஆண்டுகள் அங்கு கல்வி பயின்றார். பின்னர், தன் உயர் கல்வியை கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் தொடங்கிய சந்திர போஸ், 1913 தேர்வில் கல்கத்தா பல்கலைக்கழக எல்லைக்குள் 2 ஆவது மாணவராகத் தேறினார். இவரது தாயார் மிகுந்த தெய்வ பக்தி மிக்கவர். அதனால் சுபாஷும் சிறு வயது முதலே விவேகானந்தர் போன்ற ஆன்மிகப் பெரியோர்களின்பால் ஈடுபாடுடையவராயும், அவர்களின் அறிவுரைகளைப் படித்து வருபவராயும் இருந்தார். இதனால் ஞான மார்க்கத்தின்பால் ஈடுபாடு கொண்டார்; துறவறத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினார். எதிலுமே பற்றற்று இருந்ததுடன், தனது 16 ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறிய சுபாஷ் சந்திரபோஸ், தன் ஞானவழிக்கான ஆசானைத் தேடி இரண்டு மாதங்கள் அலைந்தார்.

அப்போது, வாரணாசியில் ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி பிரம்மானந்தரைச் சந்தித்தார். இவருக்கு, சுபாசின் தந்தையையும், குடும்பத்தையும் நன்கு தெரியும். இந்த சந்திப்பு குறித்து, பின்னாளில் தனது நண்பரான திலீப்குமார் ராயிடம், யாருக்கெல்லாம் சுவாமி பிரம்மானந்தரது அருள் கிடைக்கிறதோ, அவர்கள் வாழ்வே மாறிவிடுகிறது; எனக்கும் அவரது அருளில் ஒரு சிறு துளி கிட்டியது; அதனால் தான், என் வாழ்க்கையைத் தேசத்திற்கு அர்ப்பணித்து, அதன் பலனைப் பெற விரும்புகிறேன்; இன்னொன்றும் சொல்லி விடுகிறேன்: அதே ராக்கால் மகராஜ் (பிரம்மானந்தர்), வாரணாசியிலிருந்து என்னை வரச் சொல்லி, என்னைத் தேசத்துக்காக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்," என்று குறிப்பிட்டுள்ளார்.[11] தன் மானசீக ஆசானாக, விவேகானந்தரையே ஏற்று வீடு திரும்பினார்.[12]

துறவறப் பாதையில் செல்ல விரும்பிய சுபாஸ் சந்திரபோஸ், ஞான மார்க்கத்திற்கு ஏற்ற குரு கிடைக்காததால், தந்தையாரின் வேண்டுகோளிற்கு இணங்கி 1915 ஆம் ஆண்டு கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். அக்காலத்தில் ஆங்கில இனவெறி மிக்க வரலாற்று ஆசிரியரான சி. எஃப். ஓட்டன் என்ற ஆசிரியர் அங்கு கற்பித்தார். அவர் கல்வி கற்பிக்கும் நேரங்களில், பெரும்பாலும் இந்தியர்களை அவமதித்து வந்தார். இவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக, சுபாஸ் சந்திர போசும் அவரது நண்பர்களும், கல்லூரியை விட்டு நீக்கப்பட்டதுடன், இரண்டு ஆண்டுகள் வேறெந்த கல்லூரிகளிலும் படிப்பை தொடரமுடியாது செய்யப்பட்டனர்.

இதனால், தன் கல்வியை ஓராண்டுகாலம் தொடர முடியாதிருந்த சுபாஷ், சி. ஆர். தாஸ் என்று அறியப்பட்ட சித்தரஞ்சன் தாஸ் மற்றும் சிலரின் உதவியுடன், 1917 ஆம் ஆண்டு, இசுக்காட்டிய சர்ச் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு 1919 ஆம் ஆண்டு, இளங்கலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறியதுடன், மாணவர்களுக்குரிய படைப் பயிற்சியிலும் சிறப்பாகத் தேறினார்.

மக்கள் சேவைப் பணி

தொகு
 
நேதாஜியின் வீடு

அக்காலத்தில், நாட்டுச் சூழ்நிலை பற்றி, அடிக்கடி வீட்டில் விவாதங்களில் ஈடுபட்ட சுபாசைப் பார்த்த அவரது தந்தையார், இவரை அரசியலில் ஈடுபடுத்த விரும்பாது, லண்டனுக்கு ஐ.சி.எஸ். தேர்வுக்குப் படிக்க அனுப்பி வைத்தார்.[13] தன் படிப்பைத் தொடர்ந்த போஸ், 1920 இல் (லண்டனில் நடந்த) இந்திய மக்கள் சேவைப் படிப்புக்கான ("இந்தியக் குடிமைப் பணி" எனப்படும் ஐ.சி.எஸ்.) நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர், இந்தியாவிலேயே நான்காவதாகத் தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால், தன் நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை செய்யக் கூடாது எனக் கருதி, தான் முயற்சியுடன் படித்துப் பெற்ற தனது பதவியை லண்டனிலேயே பணித்துறப்பு செய்தார்.

சுதந்திரப் போரில் ஈடுபாடு

தொகு

வழக்குரைஞரான சி. ஆர். தாஸ், தன் தொழிலை விட்டுவிட்டு, ஒத்துழையாமை இயக்கத்திற்குத் தலைமை தாங்கி தேசப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சுபாஷ், கடிதம் மூலம் சி.ஆர்.தாசிடம், தான் தாய் நாடு திரும்பியதும், இந்திய விடுதலைப் போரில் பங்கேற்க ஆலோசனை கேட்டிருந்தார். அதை ஏற்று, சுபாஷ் சந்திர போஸ் வருவதாயிருந்தால், தான் ஏற்றுக் கொள்வதாகவும், பதவி துறந்ததைப் பாராட்டியும், சி. ஆர். தாசும் மறுகடிதம் அனுப்பினார்.

இக்காலகட்டத்தில் தான், தென்னாப்பிரிக்காவிலிருந்து, இந்தியா திரும்பியிருந்த மகாத்மா காந்தியும், இந்திய அரசியலில் ஈடுபட்டார். இந்திய மக்களும், காங்கிரசின் தலைமையின் கீழ் விடுதலை எழுச்சி பெற்றிருந்தனர். 1921 இல், மும்பை துறைமுகத்தில் வந்திறங்கிய சுபாஷ் சந்திரபோஸ், மும்பையில் அப்போது தங்கியிருந்த காந்தியையும் சந்தித்து, சுமார் ஒரு மணிநேரம் கலந்தாலோசித்தார். போஸ், சித்தரஞ்சன்தாசின் கீழ் தொண்டாற்றவே விரும்பினார். போசை ஏற்றுக் கொண்ட சி.ஆர்.தாசும், அவரின் திறமையை நன்கு அறிந்திருந்ததுடன், திறமைமிக்க அவரது குடும்பப் பின்னணியையும் அறிந்திருந்தார். இதனால் சி.ஆர்.தாஸ், தான் நிறுவிய தேசியக் கல்லூரியின் தலைவராக, 25 வயதே நிரம்பிய போசை நியமித்திருந்தார். லண்டனில் கேம்பிரிட்சில் படிக்கும் போது, மேல்நாட்டு விடுதலைப் போர் வரலாறுகளையும், பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் நன்கு அறிந்து கற்றிருந்த சந்திரபோஸ், தன் கல்லூரியில் மாணவர்களுக்கு விடுதலை உணர்ச்சி பொங்கும் வண்ணம், சொற்பொழிவு ஆற்றியதுடன், பாடமும் கற்பித்தார்.

அரசியல் நுழைவு

தொகு

1922 இல், வேல்ஸ் இளவரசரை இந்தியாவுக்கு அனுப்ப, பிரித்தானிய அரசு தீர்மானித்து இருந்தது. இந்தியாவிலிருந்த பிரித்தானிய ஆதிக்கக்காரர்களும், வேல்சு இளவரசரை வரவேற்க, நாடு முழுதும் சிறப்பான ஏற்பாடு மேற்கொண்டிருந்தனர். ஆனால், சுயாட்சி அதிகாரத்தைத் தரமறுத்த பிரித்தானிய இளவரசரின் வருகையை, இந்திய மக்களும் காங்கிரசும் புறக்கணிக்க முடிவு செய்திருந்தனர். மும்பை துறைமுகத்தை வேல்சு இளவரசர் வந்தடையும் போது, நாடு முழுதும் எதிர்க்க, காந்தி அழைப்பு விடுத்தார். இதனால் சினமுற்ற ஆங்கிலேய அரசாங்கம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்றவற்றுக்குத் தடை விதித்தது.[14]

இவ்வாறு பொதுகூட்டங்களுக்கு அரசாங்கம் தடை விதித்திருந்த போதும், வேல்ஸ் இளவரசர் கொல்கத்தாவுக்கு வருகை தரும் போது, அங்கு மறியல் நடத்த காங்கிரசு கட்சி முடிவு செய்திருந்தது. கொல்கத்தா தொண்டர் படையின் தலைவராக சந்திரபோசை நியமித்திருந்தது. தீவிரத்தை அறிந்திருந்த ஆங்கில அரசு, போசின் தலைமையிலான தொண்டர் படையை, சட்ட விரோதமானது என அறிவித்து, போசையும், சில காங்கிரஸ் தொண்டர்களையும் கைது செய்தது. மேலும் அவருக்கு 6 மாத காலச் சிறைத்தண்டனையும் கிடைத்தது. சில நாட்களின் பின்னர் சவகர்லால் நேரு, சித்தரஞ்சன் தாஸ் போன்றோரும் கைதானார்கள். இவ்வாறு அரசியல் கட்சித் தலைவர்கள் கைதானதால், மக்கள் மட்டத்தில் இருந்து பெரும் எதிர்ப்பலைகள் கிளம்பின. மேலும் தலைவர்கள் யாரும் இல்லாத போதும், கொல்கத்தாவில் மறியல் சிறப்புற மக்களால் நடத்தப்பெற்றது. ஆறு மாதம் கழித்து போஸ், 1922 ஆம் ஆண்டு அக்டோபரில் விடுதலையானபோது, காந்தியும் ஒத்துழையாமை இயக்கம், வரிகொடா இயக்கம் ஆகியவற்றை விரிவுபடுத்தியிருந்தார்.

காங்கிரசில் பிளவு

தொகு

இடையில் சில காரணங்களுக்காகப் போராட்டத்தை நிறுத்தியதால், காந்திக்கு எதிராக, பல கண்டனங்கள் எழுந்தன. 1922 ஆம் ஆண்டில் சிறையிலிருந்து வெளியான சித்தரஞ்சன் தாஸ், கயையில் கூடிய காங்கிரஸ் மகாசபைக்குத் தலைமை தாங்கினார். சட்டசபைத் தேர்தல்களில், இந்தியர்கள் போட்டியிட்டு, சட்டசபைகளை கைப்பற்றுவதன் மூலம் தான் இந்திய விடுதலையை \விரைவில் பெறமுடியும் என சி.ஆர்.தாசும் மோதிலால் நேருவும் கருதினர். ஆனால், இதை காந்தி ஆதரவாளர்கள் எதிர்த்தனர். தாசுக்கும் காந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காந்தியின் வழிமுறைகளை தாஸ் கண்டித்தார். காங்கிரசில் இருந்தபடி சுயாட்சிக் கட்சி என்ற அமைப்பை தாஸ் தொடங்கினார். காந்திக்கு பதிலடி தர, "சுயராஜ்யா" என்னும் பத்திரிகையை ஆரம்பித்து, ஆசிரியர் பொறுப்பை போசிடம் ஒப்படைத்தார்.

ஜாலியன்வாலா பாக் படுகொலைக்குத் தலைமை ஏற்று நடத்திய, ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றார் உத்தம் சிங். அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் காந்தி. ஆனால், உத்தம் சிங்கைப் பாராட்டி கடிதம் அனுப்பினார் போஸ், காந்திக்கும் போசுக்கும் இடையிலான உரசலை இந்தச் சம்பவம் அதிகரித்தது.

1928 இல் கொல்கத்தாவில் காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநாடு காந்தி தலைமையில் கூடியது. சுயாட்சிக்கு எதிர்ப்பு காட்டிய காந்தியின் முடிவை எதிர்த்துப் பேச காங்கிரஸ் தலைவர்கள் தயங்கினர். கொல்கத்தா மாகாணத் தலைவரான போஸ் எழுந்து, காந்தியின் முடிவு தவறு என எதிர்த்தார். காந்தி-போஸ் மோதல் ஆரம்பமானது. போசின் முடிவை நேரு ஆதரித்தார். இதனால் இருவரும் இணைந்து, காங்கிரசில் இருந்தபடி, 'விடுதலைச் சங்கம்' என்ற பெயரில் இயக்கம் ஒன்றை நடத்தினர். காந்தியின் பல முடிவுகளை நேரடியாகவே எதிர்த்தார் போஸ். இதனால், காங்கிரசு காரியக் குழுவில் இருந்து போஸ் நீக்கப்பட்டார். அவரைப்போல், சென்னை மாகாணத்தைச் சேர்ந்த சீனிவாச ஐயரும் நீக்கப்பட்டார். உடனே போஸ், "காங்கிரஸ் மிதவாதிகள் கைக்கு போய்விட்டது; அங்கு எங்களுக்கு வேலையில்லை" எனக் கட்சியிலிருந்து விலகி, சீனிவாச ஐயரைத் தலைவராகக் கொண்டு 'காங்கிரஸ் சனநாயக கட்சி'யைத் தொடங்கினார்.

1939 இல் சுபாஷ் சந்திர போஸ் இரண்டாவது முறையாகக் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். போசின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து காந்தி, அவருக்கு எதிராக ராஜேந்திரப் பிரசாத்தையும், ஜவஹர்லால் நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதாராமையாவை நிறுத்தினார். போஸ் 1,580 வாக்குகளுடன் வெற்றிபெற்றார். சீதாராமையாவின் தோல்வி, தனக்குப் பெரிய இழப்பு என்று வெளிப்படையாகவே காந்தி தெரிவித்து, உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால், அவரைச் சமாதானப்படுத்த போஸ், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். 1939 இல் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியைத் தொடங்கினார், அதன் அகில இந்திய தலைவராக நேதாஜியும், தமிழக தலைவராக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உம் பதவியேற்று கொண்டனர்.

அரசியல் பணி

தொகு

காங்கிரஸ் சனநாயகக் கட்சியின் "பார்வர்ட்" எனும் ஆங்கில இதழில், ஆசிரியரான நேதாஜி, உணர்ச்சி ததும்பும் பல கட்டுரைகளை எழுதினார். இதைத் தொடர்ந்து, தேர்தல்களில் மத்திய மாகாணசபைக்கும், கல்கத்தா மாநகராட்சிக்கும் நடைபெற்ற தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சி வெற்றிபெற்றது. 1924-ல் மாகாண சபைக்கு மேயராக சி.ஆர்.தாசும், மாநகராட்சி நிர்வாக அதிகாரியாக போசும் தெரிந்தெடுக்கப்பட்டனர்.[15] கொல்கத்தா நகரில் பல சீர்திருத்தங்கள் மேற்கொண்டதுடன் மக்கள் ஆதரவையும் பெற்றனர்.

 
சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தபோது, காந்தியுடன்; இந்திய தேசிய காங்கிரஸ் வருடாந்த கூட்டத்தின்போது, 1938

இதனைக் கண்ட அரசு, நேதாஜியை ஓர் அவசரச்சட்டத்தின் மூலம் 1924 அக்டோபர் 25 ஆம் நாள், கைது செய்து, கொல்கத்தா மத்திய சிறையில் அடைத்தது. மேலும் வங்கத்தில் பிரித்தானிய ஆட்சியைக் கவிழ்க்க சதிகார இயக்கம் ஒன்று தோன்றி இருப்பதையும், அதில் சிலரையே கைது செய்திருப்பதாயும் போலி அறிக்கையை வெளியிட்டது. நேதாஜிக்கு ஆதரவாய், மக்களும் பல தலைவர்களும் நாடு முழுதும் முழங்கினர். கொல்கத்தா விரைந்த காந்தி உட்படப் பல தலைவர்களும், நேதாஜிக்கு ஆதரவை தெரிவித்தனர். இச்சமயத்தில் தான், சுயராஜ்ஜியக் கட்சி, சட்டசபைகளில் வெற்றி பெற்று, ஆற்றி வந்த சீர்திருத்தங்களையும், பணிகளையும் கண்ணுற்ற காந்திஜி, 'சட்டசபை வெளியேற்றம்' எனும் கொள்கையைக் கைவிட்டு, 'சுயராஜ்ஜியக் கட்சியின் கொள்கையே, காங்கிரசின் கொள்கை' எனக் கூறி, இரு கட்சிகளின் கருத்து வேறுபாடுகளை முடித்து வைத்தார்.

போசிற்கு ஆதரவான போராட்டங்கள் வலுப்பதை கண்ணுற்ற பிரித்தானிய அரசும், அவரைக் கடல் கடந்து, மாண்டலே சிறைக்கு மாற்றியது. அங்கு, காலநிலைகளுடன் நேதாஜியின் உடல்நிலை ஒத்து வராததால், அவர் காசநோய்க்கு ஆளாக நேர்ந்தது.[16] நோயின் தீவிரம் அதிகரித்ததால், சுபாசும் படுத்த படுக்கையானார். ஆனால், அரசு மருத்துவ பரிசோதனைக்குக் கூட அவரை அனுமதிக்கவில்லை. இதனால், காங்கிரசு, அவரை வெளிக்கொணர ஒரே வழி, 1926 தேர்தலில், நேதாஜியை சட்டமன்ற வேட்பாளராய் அறிவிப்பதுதான் என்று முடிவு செய்தது. நேதாஜியும், தன் சேவையைக் கருதி அதற்கு உடன்பட்டார். இதனால், சிறையிலிருந்தவாறே, வேட்பாளர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். ஆனால், அரசு அவ்வறிக்கையை வெளியிட மறுத்துவிட்டது. வேட்பாளரும், வேட்பாளர் தேர்தல் அறிக்கையும் வெளிவரவில்லை. ஆனால், பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில், நேதாஜி வெற்றி பெற்றார். துளியும் அசைந்து கொடுக்காத அரசோ, நேதாஜியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, "கொல்கத்தா வராமல், சிகிச்சைக்காக ஐரோப்பா சென்று விடவேண்டும்; 1930 வரை அவர் அங்கேயே இருக்க வேண்டும்" என்றும், "இதற்கு போஸ் சம்மதித்தால் விடுதலை செய்யத் தயார்" என அறிக்கை விட்டது. ஆனால் ஆங்கிலேயர்களின் கட்டளைக்கு கீழ்ப்படிய விரும்பாத நேதாஜி, இதற்கு முற்றிலும் மறுத்துவிட்டார்.

இதனால், சிறையிலேயே இருந்ததால் நோய் அதிகரித்து, நேதாஜியைப் படுக்கையில் தள்ளியது. இச்செய்தி வெளியில் பரவி, "சுபாஷ் பிழைப்பதே அரிது" என்றும், "அவர் சிறையிலேயே மரணித்து விட்டார்" என்றும் வதந்திகள் பரவின. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட அரசாங்கம், அல்மோரா சிறைக்கு சந்திரபோஸை கொணர்ந்து, மருத்துவ சிகிச்சை அளிக்க சம்மதித்தது. ஆனால் நேதாஜியின் உடல் நிலையின் மோசம் கருதி, அவர் இனிப் பிழைக்கப் போவதில்லை எனத் தீர்மானித்த அரசாங்கம், அவரை நிபந்தனை இன்றி விடுதலை செய்தது. கல்கத்தா திரும்பியதும், படுக்கையிலேயே தன்னை வெற்றியடைய வைத்த மக்களுக்கு நன்றி கூறி, ஓர் அறிக்கை விடுத்தார் நேதாஜி. சிறையில் இருந்து வெளிவந்ததும், 1930-ல் சுபாஷ் சந்திர போஸ் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு முசோலினி போன்றோரைச் சந்தித்தார்.[17] 1938-ல் காங்கிரசின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பிரித்தானிய இந்தியாவிடமிருந்து தப்பிச் செல்லுதல்

தொகு

இரண்டாவது உலகப்போர் மூண்டதும், இந்திய மக்களின் ஒத்துழைப்பைப் பிரித்தானிய அரசு கோரியது. ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதில் ஈடுபட்டார். இதன் காரணமாக, 1940 சூலையில், நேதாஜியை அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது.

உலகப்போரின் ஆரம்பத்தில், பிரித்தானியப் படைகளுக்கு தோல்வியே ஏற்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பிரித்தானியாவின் எதிரி நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவை விடுவிக்கவேண்டும் என்று நேதாஜி எண்ணினார். அதற்கு சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கருதினார். 1940 நவம்பரில், சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினார். சுபாஷ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பெரும் விளைவுகள் ஏற்படும் என்பதைப் பிரித்தானிய அரசு அறிந்திருந்தது. எனவே, உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி அவரிடம் அதிகாரிகள் கெஞ்சினார்கள். ஆனால் சுபாஷ் இணங்கவில்லை. உண்ணாவிரதம் தொடங்கி ஒரு வாரம் ஆயிற்று. நேதாஜியின் உடல் நிலை மோசம் அடைந்தது. வேறு வழியின்றி நேதாஜியை அரசாங்கம் விடுதலை செய்தது. ஆனால் அவர் வீட்டைச்சுற்றி இரகசியக் காவலர்கள் சாதாரண உடையில், 24 மணி நேரமும் கண்காணித்தபடி இருந்தனர்.[18] எப்படியும் இந்தியாவிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று நேதாஜி தீர்மானித்தார். வெளிநாடு செல்ல உதவுவதாக, அவருடைய நண்பர்கள் சிலர் வாக்களித்தனர்.

 
ஹைன்ரிச் ஹிம்லருடன் சுபாஷ் சந்திர போஸ்

தலைமறைவு

தொகு

1941 சனவரி 26 அன்று இரவிலிருந்து, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவருடைய அறையில் காணப்படவில்லை என்றும், இருப்பிடம் பற்றி இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தகவல் வெளியிடப்பட்டது.[19][20][21]

1941 சனவரி 15 ஆம் நாள், நேதாஜி ஒரு முசுலிம் போல் தாடி வைத்துக்கொண்டு, மாறு வேடத்தில் தப்பிச்சென்றார், கொல்கத்தாவிலிருந்து தொடர்வண்டியில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தார். பெசாவர் நகரை (தற்போதைய பாக்கித்தானில்) அடைந்து, இந்தியாவின் எல்லையைக் கடந்தார். பின்னர் ஆப்கானித்தான் சென்றார். அங்கு இத்தாலி நாட்டு தூதரக அதிகாரிகளுடன் நேதாஜி தொடர்பு கொண்டு இத்தாலிக்குச் செல்ல அனுமதி வாங்கினார்.[22][23][24] உருசியா வழியாக இத்தாலிக்குச் செல்ல வேண்டும் என்பது நேதாஜியின் திட்டம். ஆனால் எதிர்பாராதவிதமாக, செருமனிக்கு வருமாறு இட்லரிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்ற நேதாஜி, தொடர்வண்டி மூலம் மாஸ்கோ சென்று அங்கிருந்து செருமனியத் தலைநகரான பெர்லினுக்குப் போய்ச்சேர்ந்தார். அவர் செருமனி வந்து சேர்ந்த செய்தியை மார்ச் 28-ந்தேதி செருமனிப் பத்திரிகைகள் வெளியிட்டன.[22][23] அப்போதுதான், அவர் இந்தியாவில் இருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்ற செய்தி பிரித்தானிய அரசுக்குத் தெரிந்தது.[22][23][25] செருமனியில் நேதாஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இட்லரை நேதாஜி சந்தித்துப் பேசினார். இந்தியாவின் விடுதலைக்கு முழு ஆதரவு தருவதாக இட்லர் உறுதி அளித்தார்.[24]

சுதந்திர இந்திய இராணுவம்

தொகு
 
நவம்பர் 1943இல் பெரும் கிழக்கு ஆசிய மகாநாடு, வலது பக்கத்தில் சுபாஷ் சந்திர போஸ்

1941 இல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பைத் தொடங்கி, ஆசாத்ஹிந்த் என்ற வானொலிச் சேவையையும் உருவாக்கி, விடுதலைத் தாகத்தை, அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி ஜன கண மன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.

செருமனி, இத்தாலியின் உதவி கிடைக்காது எனத் தெரிந்தபின், சப்பான் செல்ல முடிவு செய்து, போர்க்காலத்தில், நீர்மூழ்கிக் கப்பல் மூலம் சப்பான் சென்று, இராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது. பிரித்தானிய அரசுக்கு எதிராக ராஷ் பிஹாரி போஸால் உருவாக்கப்பட்டு, செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை, மீள் உருவாக்கம் செய்து, அதன் தலைவரானார் சுபாஷ். விடுதலைக்காகப் போராடி, நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி, பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியாவில் அனைவரும், காந்தியின் அகிம்சை வழி போராட்டத்தில் விரும்பி சென்றமையால், இராணுவத்திற்கு சிலரே செல்ல நேர்ந்தது. தமிழகத்தில், முத்துராமலிங்க தேவரால் சுமார் 600 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தில் இணைந்தனர்.

 
சப்பானிய நீர்மூழ்கி ஐ-29 இருந்த நீர்மூழ்கி ஓட்டுனர்கள் செருமன் நீர்மூழ்கி யு-180ஐ மடகாசுகின் தென் கிழக்கில் 300 சட்ட மைலில் சந்தித்துக் கொண்டபோது. முன்வரிசையில் வலப்பக்கத்தில் சுபாஷ் சந்திர போஸ். திகதி: 28 ஏப்ரல் 1943

1943 அக்டோபர் 21 இல், சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில், போஸ், சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். திசம்பர் 29 ஆம் தேதி அரசின் தலைவராகத் தேசியக் கொடியை ஏற்றினார். அவற்றை சப்பான், இத்தாலி, செருமனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன. பர்மாவில் இருந்தபடி, தேசியப் படையை இந்தியாவை நோக்கி நகர்த்தினார். ஆனால் பிரித்தானியப் படைகள் முன் தாக்கு பிடிக்க முடியாமல், இப்படை தவித்தது. மனம் தளராமல், இந்தியாவின் எல்லைக்கோடு வரை வந்தவர்களை, கொத்துக் கொத்தாக கொன்று குவித்தது பிரித்தானியப் படை. இந்திய தேசிய படை தோல்வியைத் தழுவியது.[26][27] அது மட்டுமல்ல; சப்பான், இரண்டாம் உலக போரில் சரணடைந்தது. எனவே போரை முன்னெடுத்து செல்ல முடியாத நிலைக்கு சுபாஷ் சந்திர போஸ் ஆளானார்.

கல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, பி.வி.சக்ரபர்த்தி எழுதிய கடிதத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதி பின்வருமாறு:[28]

சட்டமறுப்பு இயக்கம் நேரடியாகவே இந்திய சுதந்திரத்தை வழிநடத்தியது என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. காந்தியின் பிரச்சாரங்கள்...இந்தியா சுதந்திரத்தை அடைவதற்கு கிட்டத்தட்ட பதினான்கு வருடங்களுக்கு முன்பே நீர்த்துப்போய்விட்டது...முதலாம் உலகப்போரின்போது, ஆயுதக் கிளர்ச்சிகளின் மூலம், நாட்டை விடுதலை செய்வதற்கு போர்த்தளவாடங்கள் வடிவத்தில், செருமனியர்களின் அனுகூலத்தை, இந்தியப் புரட்சியாளர்கள் கோரினர். ஆனால், இந்த முயற்சி வெற்றிபெறவில்லை. இரண்டாம் உலகப்போரின் போது, சுபாஷ் போஸ், இதே முறையைப் பின்பற்றி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். அற்புதமான திட்டமிடல் மற்றும் துவக்கநிலை வெற்றிகள் இருந்தபோதிலும் சுபாஷ் போஸின் வன்முறைப் பிரச்சாரம் தோற்றுப்போனது...இந்திய விடுதலைக்கான போர், ஐரோப்பாவில் இட்லராலும், ஆசியாவில் சப்பானும் மறைமுகவாகவேனும் பிரித்தானியாவிற்கு எதிராக போர்புரிவதாக இருந்தது. இவை எதுவும் நேரடியாக வெற்றிபெறவில்லை, ஆனால், இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த மற்ற மூன்றின் ஒட்டுமொத்த விளைவுதான் இது, என்பதை ஒருசிலர் மறுக்கின்றனர். குறிப்பாக, இந்திய தேசிய ராணுவத்தின் விசாரணையின்போது வெளிப்பட்டவை; அது இந்தியாவில் உருவாக்கிய எதிர்வினையானது, ஏற்கனவே போரினால் வலுவிழந்திருந்த பிரித்தானியரின், 'வெளியேறுவது' என்ற திட்டத்தை உருவாக்கியது; இந்தியாவில் தங்கள் அதிகாரத்தைப் பாதுகாத்திடுவதற்கு, சிப்பாய்களின் விசுவாசத்தை இனிமேலும் சார்ந்திருக்க முடியாது என்பதும் காரணமாகும். இதுதான் அவர்கள் 'இந்தியாவை விட்டு வெளியேறுவது' என்ற இறுதி முடிவிற்கு பெரும் தூண்டுதலாக இருந்திருக்க முடியும்.

திருமணம்

தொகு

1933 பிப்ரவரி 13 இல், உடல் நிலை சரியில்லை என வியன்னா சென்றவர், அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளான செக்கோசிலோவாக்கியா, போலந்து, அங்கேரி, இத்தாலி, செருமனி எனப் பயணம் மேற்கொண்டு அந்த நாடுகளில் இருந்த இந்திய இளைஞர்களை சந்தித்து, நாட்டின் விடுதலையைப் பற்றி பேசி ஒத்துழைப்பு கேட்டார். ஐரோப்பாவின் அரசியல்வாதிகளையும், ஆட்சியாளர்களையும் சந்தித்து விடுதலைக்கு உதவும்படி கேட்டார். 1935ல் முசோலினியை சந்தித்து ஆதரவு கேட்டார். பயணத்தில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த எமிலியின் அறிமுகம் கிடைத்தது. அவரைத் தனது உதவியாளராக்கிக் கொண்டார். உடல் நலம் தேறியது. அதற்கு எமிலியும் ஒரு காரணம். இருவருக்குள்ளும் காதல் அரும்பியது. 1937 டிசம்பர் 27 இல் எமிலியை, போஸ் இரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, 1942 நவம்பர் 29 இல் அனிதா போஸ் என்ற ஒரு மகள் வியன்னாவில் பிறந்தார்.[29][30]

கொள்கை

தொகு

போஸ், 'இந்தியாவுக்கு நிபந்தனையற்ற முழுவிடுதலை வேண்டும்' என்ற உறுதியுடன், அதற்கான பரப்புரையைச் செய்தார். அதே நேரத்தில், இந்திய காங்கிரஸ் சபை, 'படிப்படியாக விடுதலை பெறுவதை' ஆதரித்தது. மேலும் முழு விடுதலைக்குப் பதில், பிரித்தானியாவின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக, இந்தியா இருக்க விரும்பியது. லாகூரில் நடைபெற்ற காங்கிரசு கருத்தரங்கில் முழுவிடுதலை பெறுவதைத் தன் குறிக்கோளாக ஏற்றுக்கொண்டது.

போசு, இரு முறை தொடர்ச்சியாகக் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தியுடன் ஏற்பட்ட கொள்கை வேறுபாடு காரணமாக, தலைவர் பதவியில் இருந்து விலகினார். விலகியதும், கட்டுப்பாடுகள் தகர்ந்ததால், காங்கிரசின் வெளிநாட்டு, உள்நாட்டு கொள்கைகள் தவறானவை எனக் கண்டித்தார். 'காந்தியின் அறவழிப் போராட்டத்தால் இந்தியாவிற்கு விடுதலை வாங்கி தரமுடியாது' என்றும், 'பிரித்தானியருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடுவதே விடுதலைக்கான வழி' என்றும் கருதினார். இவர் ஃபார்வர்ட் பிளாக் என்ற அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார். 'இரத்தத்தைத் தாருங்கள்; உங்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருகிறேன்' என்பதே இவரின் புகழ்பெற்ற சூளுரையாக இருந்தது.

இரண்டாம் உலகப்போரின் போதும், இவர் தன் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. அப்போது பிரித்தானியாவின் பலவீனத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து சோவியத் ஒன்றியம், நாட்சி ஜெர்மனி, சப்பான் போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து, இந்தியாவில் பிரித்தானியரைத் தோற்கடிக்க உதவி வேண்டினார். நிப்பானியர்களின் துணையுடன் தென்கிழக்காசியாவில் இருந்த இந்தியத் தொழிலாளர்களைக் கொண்டும், நிப்பான் பிடித்து வைத்திருந்த பிரித்தானியப் படையில் இருந்த இந்திய போர்க்கைதிகளைக் கொண்டும், இந்திய தேசிய இராணுவத்தை மறுசீரமைத்து வழிநடத்தினார்.

அரசியல் தத்துவம்

தொகு

சுபாஷ் சந்திர போஸ், பிரித்தானியாவிற்கெதிரான போராட்டத்திற்கான பெரும் தூண்டுதல் மூலமாக பகவத் கீதையைக் கருதினார்.[31] அவரது சொந்த சாமான்கள் கொண்ட சிறு பையொன்றில் மிகச்சிறிய பகவத் கீதை புத்தகத்தையும், துளசி மாலையையும் மூக்குக் கண்ணாடியையும் மட்டுமே வைத்திருந்தார்.[32]

சுவாமி விவேகானந்தரின் சர்வமயவாதம் பற்றிய கற்பித்தலும், தேசியவாத, சமூக சிந்தனையும், சீரமைப்பு எண்ணங்களும், சிறு வயதிலேயே இவரிடம் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்து சமய ஆன்மீக் கருத்துக்களே இவரின் பின்னாளைய அரசியல், சமூக எண்ணங்களுக்கு வித்திட்டதாக பல அறிஞர்கள் கருதுகிறார்கள். இந்து ஆன்மீகத்தின் தாக்கம் இருந்தாலும், இவரிடம் மதவெறியோ, பழைமைவாதமோ இருக்கவில்லை.[33]. சுபாஷ் தன்னை சமதர்மவாதி என அழைத்துக்கொண்டார். இந்தியாவில் சமதர்மக் கொள்கையின் முன்னோடி சுவாமி விவேகானந்தர் என நம்பினார்[34].

பெண்ணுரிமை

தொகு

இவர் தன் இந்திய தேசிய ராணுவத்தில், பெண்களுக்கென தனிப் பிரிவான 'ஜான்சி ராணி படை'யைத் தொடங்கியவர். ஒரு முறை, ஜான்சி ராணி படை கூடாரப் பகுதிக்குள் இவர் நுழைந்ததை, வேறு யாரோ என்று எண்ணி, கோவிந்தம்மாள் என்னும் பெண் அதிகாரி, அவரைத் தடுத்து நிறுத்தினார். அதைப் பொருட்படுத்தாமல், அவருடைய பாதுகாப்பு சேவையைப் பாராட்டி, அவருக்கே அப்படையின் உயரிய விருதான லாண்ட்சு நாயக் விருதை வழங்கிக் கௌரவித்தது குறிப்பிடத்தக்கது..[35]

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணத்திலுள்ள மர்மம்

தொகு

இரண்டாம் உலகப்போரில், செர்மனி, இத்தாலி தோற்கடிக்கப்பட்டு, அச்சு நாடுகள் சார்பில் நிப்பான் மட்டுமே போரில் இருந்தது. நிப்பான் ஆதிக்கத்தின் கீழ் இருந்த மஞ்சூரியா மேல் ருசியா படையெடுத்து, அதை ஆகத்து 9-20, 1945 வரை நடந்த போரில் முழுமையாக கைப்பற்றிக்கொண்டது. பாங்காக்கில் இருந்த நிப்பானிய தொடர்பு அதிகாரி, நேதாஜி, பாங்காக்கில் இருந்து டோக்கியோ வழியாக மஞ்சூரியாவை அடைந்து, அங்கிருந்து இருசியாவை அடைய ஒத்துக்கொண்டார். நேதாஜியின் கடைசி புகைப்படம் சைகோன் (தற்போதைய கோ சு மிங் ஆகத்து 17, 1945) நகரில் எடுக்கப்பட்டதாகும் [36]. ஆகத்து 23, 1945 அன்று நிப்பானிய செய்தி நிறுவனம், ஆகத்து 18, 1945 அன்று தாய்பெயில் வானூர்தி தளத்தில் நடந்த விபத்தில், போஸ் இறந்ததாக அறிவித்தது [36]. ஆனால் தைவான் நாடு, அப்படி ஒரு வானூர்தி விபத்து நடக்கவில்லை எனக் கூறி மறுத்தது.[37][38]

 
ரெங்கோயி கோயில், யப்பான்

இந்தச்செய்தி, இந்திய மக்களை நிலைகுலையச் செய்தது. 'நேதாஜி இறந்துவிட்டார்' என்பதைப் பலர் நம்பவில்லை. “நேதாஜி இறந்து விட்டார் என்றால், அவர் உடலை ஏன் இந்திய மக்களிடம் ஒப்படைக்கவில்லை?” என்று கேட்டனர். ஆயினும் நேதாஜியுடன் பயணம் செய்து, படுகாயத்துடன் தப்பிய ஹபிப்-வுர்-ரகிமான், “நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்டதை என் கண்ணால் பார்த்தேன்” என்று கூறினார். ஆயினும்,பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முதன்முதலாக மற்றும் பல தலைவர்கள், “நேதாஜி உயிருடன் இருக்கிறார்” என்றே கூறி வந்தனர். சிலர், அவர் துறவி வேடத்தில் இந்தியாவில் வசிப்பதாகவும், சிலர் அவர் சோவியத் ஒன்றியத்துக்குத் தப்பி சென்று விட்டதாகவும் நம்புகின்றனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின், 1956 ஏப்ரல் மாதம், முன்னாள் பிரதமர் நேரு ஆட்சியின் போது நேதாஜி பற்றிய உண்மைகளைக் கண்டறிய மூவர் கொண்ட ஷாநவாஸ் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம், டோக்கியோ, சைகோன், பாங்காக் உள்பட பல இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தியது. இறுதியில், ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களில் இரண்டு பேர், வானூர்தி விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை, டோக்கியோவில் உள்ள புத்தர் கோவிலில் இருப்பது அவருடைய அஸ்திதான் என்று அறிக்கை கொடுத்தனர்.[39][40] மூன்றாவது உறுப்பினர் சுரேஷ் சந்திரபோஸ் (நேதாஜியின் அண்ணன்), இதை ஏற்க மறுத்து தனி அறிக்கை கொடுத்தார். அதன்படி 1970-ம் ஆண்டு ஜுலை மாதம், முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சியின் போது, ஓய்வு பெற்ற பஞ்சாப் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி. டி. கோசலாவைக் கொண்ட “ஒரு நபர் விசாரணை ஆணையம்” அமைக்கப்பட்டது. அவர் நிப்பான், தைவான் உள்பட பல நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தி, “வானூர்தி விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை” என்று உறுதி செய்து அறிக்கை தந்தார். 1999-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின் போது , 'முகர்ஜி ஆணையம்', என மூன்று ஆணையங்கள் நியமிக்கப்பட்டது. இதில் முகர்ஜி ஆணைய அறிக்கை 2006-ம் ஆண்டு மே 17-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஜஸ்டிஸ் முகர்ஜி கமிஷன் சமர்ப்பித்த அறிக்கையில், நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்றும், சோவியத் ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்று இருக்கலாம் என்றும் கூறியது. அதனாலும் நேதாஜி மரணம் குறித்து தெளிவான முடிவுக்கு வரவில்லை.[41]

இரகசியத் துறவி

தொகு

உத்திரப் பிரதேசத்தில், 1985 வரை வாழ்ந்த இந்துத் துறவி பகவான்ஜி, அல்லது 'கும்னமி பாபா' என்பது சுபாஷ் சந்திர போஸ் என சிலர் நம்புகின்றனர்.[42] நான்கு சம்பவங்கள், அத்துறவி, போஸ்தான் என நம்பக் காரணமாகின.[43] அத்துறவியின் மரணத்தின் பின், அவரது உடமைகள் நீதிமன்ற உத்தரவின்படி உடமையாக்கப்பட்டன. இவை, பின்பு முகர்ஜி ஆணையத்தினால் சோதனைக்குட்படுத்தப்பட்டன. துறவி மரணமானதும், முகம் அமிலம் மூலம் சிதைக்கப்பட்டு, எரியூட்டப்பட்ட சம்பவம் ஐயப்பாட்டிற்குக் காரணமாகியது. கையெழுத்தியல் நிபுணர் பி. லால் வாக்குமூலத்தில் பகவான்ஜி மற்றும் போஸின் கையெழுத்துக்கள் ஒத்துப் போயின என்றார்.[44][45] ஆயினும், முகர்ஜி ஆணையம், மேலதிக சான்று வேண்டுமென அதனை நிராகரித்த அதே வேளை, இந்திய அரசின், 'போஸின் இறப்பு 1945ம் ஆண்டில் நடைபெற்றது' என்ற பார்வையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே, பகவான்ஜிதான் போஸ் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பட்டது.

இறுதி உரை

தொகு

இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது, ஆகத்து 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார்.[46] அதன்படி இந்தியா,

பாரத ரத்னா விருது

தொகு

1992-இல் சுபாஷ் சந்திரபோசுக்கு, இறப்புக்குப் பின்னான இந்தியாவின் மிக உயரிய விருதான, "பாரத ரத்னா" விருது வழங்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் குழுவால், சுபாஷ் சந்திர போஸின் இறப்பு குறித்த ஆதாரங்களைத் தர முடியவில்லை. எனவே உச்சநீதிமன்ற ஆணையின்படி இவ்விருது திரும்ப வாங்கப்பட்டது.[47]

இரகசிய ஆவணங்கள்

தொகு

சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான இரகசிய ஆவணங்களை மேற்கு வங்காள அரசு 17 செப்டம்பர் 2015 அன்று வெளியிட்டது.[48]

போஸ் பற்றிய சித்தரிப்புக்கள்

தொகு

திரைப்படங்கள்

தொகு
  • 2010: கன்னடத் திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளிலும் உள்ள "சுப்பர்".
  • 2008: தெலுங்கு மொழித் திரைப்படம் "சுபாஷ் சந்திர போஸ்"
  • 2005: இந்தி மொழித்திரைப்படம் "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்: மறக்கப்பட்ட கதாநாயகன்"
  • 2002: இந்தி மொழித்திரைப்படமான "பகத் சிங்கின் கதை" இல் போஸ் பற்றிய காட்சிகள்
  • 1966: வங்காளி மொழித்திரைப்படம் "சுபாஷ் சந்திரா"
  • 1950: இந்தி மொழித்திரைப்படமான "சமாடி" இல் போஸின் சிறு பாத்திரம்

ஆவணப்படங்கள்

தொகு
  • இட்லருக்கும் காந்திக்குமிடையே - சுபாஷ் சந்திர போஸ்: மறக்கப்பட்ட சுதந்திரப் போராளி[49]

நூல்கள்

தொகு
  • 1986: "பெரும் இந்தியப் புதினம்" (த கிரேட் இன்டியன் நோவல்) என்ற புதினத்தில் போஸ் பற்றிய கதாபாத்திரம்
  • 2012: கே.எஸ்.சிறிவஸ்டவா எழுதிய சுபாஷ் சந்திர போஸ்

மேலும் சில

தொகு

படக் காட்சியகம்

தொகு

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. 1.0 1.1 Bayly & Harper 2007, ப. 2.
  2. திருமணம் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது, போதிய ஆதாரம் இல்லை. பார்க்க: எமிலி செங்கல்
  3. வாய்ப்பு உள்ளது, போதிய ஆதாரம் இல்லை. பார்க்க: அனிதா போஸ்
  4. சுவாமிஜியும் நேதாஜியும்; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 8
  5. "புரட்சி நாயகன் நேதாஜி".
  6. "Death Mystery of Subhash Chandra Bose - Death of Netaji Subhash Chandra Bose". www.thecolorsofindia.com.
  7. Sugata Bose (2011). His Majesty's Opponent: Subhas Chandra Bose and India's Struggle Against Empire. Harvard University Press. p. 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-04754-9. பார்க்கப்பட்ட நாள் 22 June 2012.
  8. Marshall J. Getz (2002). Subhas Chandra Bose: A Biography. McFarland. pp. 7–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7864-1265-5. பார்க்கப்பட்ட நாள் 13 June 2012.
  9. Kanailal Basu (20 January 2010). Netaji: Rediscovered. AuthorHouse. pp. 262–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4490-5567-7. பார்க்கப்பட்ட நாள் 13 June 2012.
  10. Meenu Sinhal (1 January 2009). Subhas Chandra Bose. Prabhat Prakashan. pp. 3–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8430-003-1. பார்க்கப்பட்ட நாள் 13 June 2012.
  11. சுவாமிஜியும் நேதாஜியும்; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 36
  12. "விடுதலை வீரர் சுபாஷ் சந்திரபோஸ்-01". www.venkkayam.com. Archived from the original on 2012-07-28. பார்க்கப்பட்ட நாள் 2012-07-09.
  13. Lion M. G. Agrawal (2008). Freedom fighters of India. Gyan Publishing House. pp. 249–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8205-470-7. பார்க்கப்பட்ட நாள் 13 June 2012.
  14. "விடுதலை வீரர் சுபாஷ் சந்திரபோஸ்". www.venkkayam.com. Archived from the original on 2012-07-28. பார்க்கப்பட்ட நாள் 2012-07-09.
  15. Eric A. Vas (19 May 2008). Subhas Chandra Bose: The Man and His Times. Lancer Publishers. pp. 32–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7062-243-7. பார்க்கப்பட்ட நாள் 13 June 2012.
  16. Singh Vipul (1 September 2009). Longman History & Civics Icse 10. Pearson Education India. pp. 116–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-2042-4. பார்க்கப்பட்ட நாள் 13 June 2012.
  17. "Answers - The Most Trusted Place for Answering Life's Questions". Answers.com.
  18. Durga Das Pvt. Ltd (1985). Eminent Indians who was who, 1900–1980, also annual diary of events. Durga Das Pvt. Ltd. பார்க்கப்பட்ட நாள் 13 June 2012.
  19. "இந்த நாளில் அன்று: (27. சனவரி 1941); பாபு சுபாஷ் சந்திரபோஸ் எங்கே? நேற்று இரவிலிருந்து காணோம்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 29 சனவரி 2014.
  20. "இந்த நாளில் அன்று: 28. சனவரி 1941: போஸ் வீட்டில் போலீஸின் மூன்று மணி நேர சோதனை; புதுச்சேரியில் இல்லையெனத் தகவல்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 29 சனவரி 2014.
  21. "இந்த நாளில் அன்று: 29. சனவரி 1941; சுபாஷ் போஸ் பற்றி மகாத்மா கவலை; வாழ்க்கையை துறந்திருக்கக் கூடும் - சரத் பதில்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 29 சனவரி 2014.
  22. 22.0 22.1 22.2 Talwar, Bhagat Ram (29 September 1976). "The Talwars of Pathan Land and Subhas Chandra's Great Escape". People's Publishing House – via Google Books.
  23. 23.0 23.1 23.2 Markandeya, Subodh (1 December 1990). "Subhas Chandra Bose: Netaji's passage to im[m]ortality". Arnold Publishers – via Google Books.
  24. 24.0 24.1 "Hitler's secret Indian army" by Mike Thomson, BBC News, 23 September 2004.
  25. "Subhas Chandra Bose in Nazi Germany". www.revolutionarydemocracy.org.
  26. Iqbal Singh The Andaman Story p249
  27. C.A. Bayly & T. Harper Forgotten Armies. The Fall of British Asia 1941-5 (London) 2004 p325
  28. மஜும்தார், ஆர்.சி.,இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கான மூன்று நிலைகள், பம்பாய், பாரதீய வித்யா பவன், 1967, பக். 58–59.
  29. Memories of a brave heart. The Hindu. 02/25/2001. http://www.hindu.com/2001/02/25/stories/1325128q.htm. பார்த்த நாள்: 07/08/2012. 
  30. http://www.netaji.org/images/oracle_pdf/oracle_2014.pdf பரணிடப்பட்டது 2014-09-19 at the வந்தவழி இயந்திரம் ; பக்கம் 13
  31. Li Narangoa, R. B. Cribb, Imperial Japan and National Identities in Asia, 1895–1945, Published by Routledge, 2003
  32. ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்;1977;டிசம்பர்; நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ்; பக்கம் 389(Unto Him a Witness(1951); பக்கம் 269)
  33. நீரத் சந்திர சவுத்ரி, Thy Hand, Great Anarch!: India, 1921–1952, published by Chatto & Windus, 1987
  34. P. R. Bhuyan, Swami Vivekananda, Published by Atlantic Publishers & Distributors, 2003
  35. ஆனந்தவிகடன், 23 ஜனவரி, 1994
  36. 36.0 36.1 "Subhas Chandra Bose: The Afterlife of India's Fascist Leader - History Today". www.historytoday.com.
  37. "outlookindia.com - more than just the news magazine from India". https://www.outlookindia.com/. http://www.outlookindia.com/pti_news.asp?id=277465. 
  38. "Netaji case: US backs Taiwan govt". Times of India. Sep 19, 2005, 09.21pm IST. http://timesofindia.indiatimes.com/articleshow/1236063.cms. பார்த்த நாள்: 12 June 2012. 
  39. Mitchell, Jon, "Japan's unsung role in India's struggle for independence", Japan Times, 14 August 2011, p. 7.
  40. James, L (1997) Raj, the Making and Unmaking of British India, Abacus, London P575
  41. "நேதாஜியைக் கொன்றது ரஷ்யாவின் ஸ்டாலின்தான்: சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு".
  42. "Hindustantimes.com". Archived from the original on 2012-10-10. பார்க்கப்பட்ட நாள் 2012-07-13.
  43. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-29. பார்க்கப்பட்ட நாள் 2012-07-13.
  44. "Hindustantimes.com". Archived from the original on 2012-10-10. பார்க்கப்பட்ட நாள் 2012-07-13.
  45. "Ayodhya sadhu's writing matches Netaji's" Lucknow-Cities The Times of India
  46. Webdunia. "இந்தியா அழைக்கிறது : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்!".
  47. "SC cancels note on Bharat Ratna for Subhash Bose". The Indian Express (New Delhi). August 5, 1997. http://www.indianexpress.com/ie/daily/19970805/21750283.html. பார்த்த நாள்: 31 May 2011. 
  48. "சுபாஷ் சந்திர போஸ் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டது மேற்கு வங்கம்". BBC தமிழ்.
  49. Between Gandhi And Hitler – Subhash Chandra Bose: The Forgotten Freedom Fighter

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபாஷ்_சந்திர_போஸ்&oldid=4104480" இலிருந்து மீள்விக்கப்பட்டது