உதம் சிங்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
(உத்தம் சிங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உதம்சிங் (Udham Singh 26 டிசம்பர் 1899 – 31 ஜூலை 1940) ஒரு இந்திய புரட்சியாளர். ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்த்திய மைக்கல் ஓ'ட்வையரை 1940 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சுட்டுக் கொன்றவர்.[1]

உதம்சிங்
பிறப்பு26, டிசம்பர் 1899
சுனாம், பஞ்சாப், பிரித்தானியாவின் இந்தியா
இறப்புசூலை 31, 1940(1940-07-31) (அகவை 40)
ஐக்கிய இராச்சியம்
அமைப்பு(கள்)கதர் கட்சி, இந்துஸ்தான் சோசலிச குடியரசு அமைப்பு, இந்தியப் பணியாளர் அமைப்பு
அரசியல் இயக்கம்இந்திய விடுதலை இயக்கம்
சமயம்சீக்கியம்

இளமைக்காலம்

தொகு

ஜலியான்வாலாபாக் படுகொலைக்குக் காரணமான துணை ஆளுநர் மைக்கல் ஓ'ட்வையர் என்பவரை நிகழ்ச்சி நடந்து 21 ஆண்டுகளுக்குப் பின்னர் சுட்டுக்கொன்றவர் உதம் சிங் ஆவார். இவர் 1899- ஆம் ஆண்டு டிசம்பர் 26- ஆம் நாள் பஞ்சாப் மாநிலத்தில் சங்க்ரூர் மாவட்டத்தில் சுனாம் கிராமத்தில் பிறந்தவர். பெற்றோர் இவரின் இளம் வயதிலேயே இறந்துவிட்டனர். பின்னர் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அதுவரை அவரது பெயர் ஷேர்சிங். அங்குதான் உதம் சிங் என்று பெயர் மாற்றப்பட்டது. 1918 இல் மெற்றிக்குலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

ஜலியான்வாலாபாக் படுகொலையும் உதம் சிங்கின் சபதமும்

தொகு

1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13- ஆம் நாள் ஜலியான்வாலா பாக் படுகொலை நடந்த அன்று உதம் சிங்கும் அவரது ஆசிரம நண்பர்களும் கூட்டத்திற்கு தண்ணீர் வழங்கும் பணியைச் செய்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் கலைந்து செல்லவும் வழியில்லாமல் நடத்தப்பட்ட படுகொலை அவரைக் கடுமையாகப் பாதித்துவிட்டது. அவர் இச்சம்பவத்திற்குப் பழிவாங்க பொற்கோவிலில் சபதம் பூண்டார்.[2]

அவர் பல்வேறு பெயர்களுடன் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்தார். 1920 இல் ஆப்பிரிக்காவிற்கும் 1921 இல் நைரோபிக்கும் சென்றுவிட்டு 1924 இல் இந்தியா திரும்பினார். ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றார். சோஹன்சிங் வாக்னா, கர்த்தார்சிங் சாரபா, லாலா ஹர்தயாள், ராஷ்பிஹாரி போஷ் போன்றோரால் உருவாக்கப்பட்ட கதர் கட்சியில் இணைந்தார். கதர் கட்சி வெளிநாடுவாழ் இந்தியர்களால் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது. அமெரிக்காவில் மூன்றாண்டுகள் தங்கி இந்திய விடுதலைப் போராட்டத்திற்குப் பாடுபட்டார். 1927 இல் பகத் சிங் அழைத்ததால் இந்தியா திரும்பினார்.[3] 1927 இலேயே அனுமதியின்றி ஆயுதங்களை வைத்திருந்ததற்காகவும் கதர் கட்சி பிரசுரங்கள் வைத்திருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டு கடுங்காவல் தண்டனை பெற்றார். 1931 இல் விடுதலை ஆனார்.[4]

சபதம் நிறைவேற்றுதல்

தொகு

மூன்றாண்டுகள் மைக்கல் ஓ'ட்வையரை கொலை செய்யும் திட்டத்துடன் புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1933- ல் காஷ்மீர் சென்று ஜெர்மனிக்குத் தப்பிவிட்டார். அவர் இத்தாலி, பிரன்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா வழியாக 1934- ல் லண்டனை அடைந்தார்.[5] மைக்கல் ஓ'ட்வையரை கொல்ல சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் காத்திருந்தார். 1940- ஆம் ஆண்டு மார்ச் 13 அன்று ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 21 ஆண்டுகள் கழித்து அந்த சந்தர்ப்பம் கிடைத்தது. கேக்ஸ்டன் ஹால் என்ற இடத்தில் கிழக்கிந்திய சங்கம், மத்திய ஆசிய சங்கம் இவற்றின் கூட்டம் நடந்தது.[6] மைக்கேல் ஓ டையர் ஒரு பேச்சாளர். சிங் ஒரு புத்தகத்தில் ரிவால்வர் மாதிரியே வெட்டி அதனுள் ரிவால்வரை வைத்து எடுத்துச் சென்றார். சுவரின் அருகில் நின்றார். கூட்ட முடிவில் டையர் மேடையை நோக்கிச் செல்லும் போது இருமுறை சுட்டார். டையர் உடனே இறந்துவிட்டார். மீண்டும் சுட்டதில் ஜெட்லாந்து, லூயிஸ்டேன், லார்டு லாமிங்க்டன் ஆகியோர் காயமுற்றனர்[7]. சிங் தப்பிக்க முயற்சி செய்யவில்லை.

மைக்கேல் ஓ டையர் படுகொலை குறித்த கருத்துக்கள்

தொகு

ஸ்காட்லாந்துயார்டு அருங்காட்சியகத்தில் அவரது கத்தி, ஆயுதம், டைரி, துப்பாக்கிக்குண்டுகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. ஆளுநர் டையரின் கொலை இந்தியாவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது. மக்கள் மைக்கேல் ஓ டையரின் கொடும் செயலை மறக்கவில்லை[8] . வழக்கம் போல் காந்திஜி அவரது செயலைக் கண்டித்தார்[9]. ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் 1942- ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்கு உத்தம் சிங்கால் ஏற்பட்ட உணர்ச்சி மிகவும் உதவியது என்று கூறுகின்றனர்.

நேதாஜி சிங்கின் செயலை வரவேற்றார். R.C. ஜாகர்வாரா தனது "CONSTITUTIONAL HISTORY OF INDIA AND NATIONAL MOVEMENT" என்ற நூலில் சிங்கின் தீரச்செயல் இந்திய சுதந்திரத்திற்குப் புத்துணர்வு ஊட்டியது என்று எழுதியுள்ளார். இந்திய அரசாங்கத்தின் இரகசிய குறிப்பு ஆளுநர் டையரின் கொலை மக்களுக்கு மிகுந்த திருப்தியை அளித்தது என்று கூறுகிறது[10]. உலகம் முழுவதும் செய்தித்தாள்கள் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுகூர்ந்து மைக்கேல் ஓ டையர்தான் இதற்குப் பொறுப்பாளி என்று எழுதின. டைம்ஸ் ஆஃப் லண்டன் என்ற பத்திரிக்கை உத்தம்சிங் சுதந்திரப் போராட்ட வீரர் என்றும் அவரது செயல் ஒடுக்கப்பட்ட இந்தியரின் உணர்ச்சி வெளிப்பாடு என்றும் எழுதியது.

1940- ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலை 21- ஆவது நினைவு காங்கிரஸ் கூட்டத்தில் உத்தம் சிங் மிகவும் போற்றப்பட்டார். பஞ்சாப் காங்கிரஸ் டையருக்கு அஞ்சலி செலுத்தவும் உத்தம் சிங் செயலைக் கண்டிக்கவும் மறுத்துவிட்டது[11]. அக்காலத்தில் ரோம் நகரில் அதிகம் வெளியான பெர்கெரெட் (BERGERET) என்ற பத்திரிக்கை சிங்கின் செயலை தீரச்செயல் என்று பாராட்டியது[12] . ஜெர்மனி வானொலி ஒடுக்கப்பட்ட மக்கள் குண்டுகளால் பேசிவிட்டனர் என்றும் இந்தியர்கள் யானையைப்போல எதிரிகளை மன்னிக்கவே மாட்டார்கள் என்றும் 20 ஆண்டுகள் கழித்தும் அவர்கள் பழிதீர்த்துவிட்டார்கள் என்றும் கூறியது. பெர்லின் பத்திரிக்கை உத்தம் சிங் இந்திய சுதந்திரத்தின் வழிகாட்டி என்று கூறியது. இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு பகத் சிங் மற்றும் உத்தம் சிங்கின் செயல் குறித்த காந்திஜியின் விமர்சனத்தைக் கண்டித்தது[13] .

தூக்குத் தண்டனை

தொகு

உத்தம் சிங் சிறையில் 42 நாள் உண்ணாவிரதம் இருந்தார். அவர் கட்டாயப்படுத்தி உணவு உண்ண வைக்கப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் "நான் அவரைப் பழிவாங்க எண்ணியிருந்தேன். அவர் அதற்குப் பொருத்தமானவர்தான்" என்று கூறினார்[14]
. 1940- ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று அவர் பென்டோன்வில் சிறைச்சாலையில் அவர் தூக்கிலிடப்பட்டார். அன்று மதியமே அவரது உடல் சிறைச்சாலை வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.

இந்திய அரசின் அஞ்சலி

தொகு

நேருஜி 1962-ல் சிங்கின் செயலைப் பாராட்டி அவர் போன்றவர்களால்தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று கூறினார்[15]. 1974- ல் சாதுசிங் திண்ட் என்ற சுல்தான்பூர் லோதி வேண்டுகோளுக்கிணங்கி இந்திய அரசு கேட்டுக்கொண்டதால் பிரித்தானிய அரசு உத்தம் சிங்கின் சவப்பெட்டியை அனுப்ப சம்மதித்தது. சாதுசிங் திண்ட் சென்று உத்தம் சிங்கின் சவப்பெட்டியை வாங்கிவந்தார். அதனை காங்கிரஸ் தலைவர் சங்கர் தயாள் சர்மா, பஞ்சாப் முதல்வர் ஜெயில் சிங் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பிரதமர் இந்திரா காந்தி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது சொந்த கிராமமான சுனாம் கிராமத்தில் அவரது உடல் எரியூட்டப்பெற்று சட்லஜ் நதியில் அஸ்தி கரைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Swami P. The Queen's Visit. Jallianwala Bagh revisited. A look at the actual history of one of the most shocking events of the independence struggle.. Frontline. Vol. 14 :: No. 22 :: Nov. 1 - 14, 1997.
  2. Pre-meditated Plan of Jallianwala Massacre and Oath of Revenge, Udham Singh Kamboj alias Ram Mohammad Singh Azad, 2002, p 162, Prof Sikander Singh.
  3. Eminent Freedom Fighters of Punjab, 1972, p 239-40, Dr Fauja Singh
  4. Udham Singh Kamboj alias Ram Mohammad Singh Azad, 2002, p 106, by prof Sikander Singh
  5. Challenge to Imperial Hegemony, The life of a Great Indian Patriot Udham Singh, p 88, Singh, Navtej.
  6. http://www.geograph.org.uk/photo/913347
  7. Murder of Michael O’Dwyer, Udham Singh alias Ram Mohammad Singh Azad, 2002, p 180-181, Prof Sikander Singh
  8. From Orphan to Martyr, Udham Singh alias Ram Mohammad Singh Azad, 2002, pp 292-306, Prof Sikander Singh; cf: Jallainwala Bagh and the Raj, Jallianwala Bagh Commemoration Volume 1997, Patiala, p 179, Shiv Kumar Gupta
  9. Harijan, March 15, 1940
  10. Udham Singh alias Ram Mohammad Singh Azad, 1998, p 216, Prof (Dr) Sikander Singh.
  11. The Statesman, New Delhi, March 16, 1940; Udham Singh alias Ram Mohammad Singh Azad, 1998, p. 213.
  12. Public and Judicial Department, File No L/P + J/7/3822, 10 Caxton Hall outrage, India Office Library and Records, London, pp 13-14
  13. Government of India, Home Department, Political (I) Secret File No 251/40, 1940, National Archives of India, New Delhi, p 1; Udham Singh alias Ram Mohammad Singh Azad, 1998, p 216, Prof (Dr) Sikander Singh
  14. CRIM 1/1177, Public Record Office, London, p 64
  15. Quoted in: Udham Singh alias Ram Mohammad Singh Azad, 2002, p 300, prof (Dr) Sikander Singh
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதம்_சிங்&oldid=3924683" இலிருந்து மீள்விக்கப்பட்டது