தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்

(இனவொதுக்கல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இன ஒதுக்கல் ஆங்கிலத்தில் (Apartheid) என அழைக்கப்படுகிறது. "அப்பர்தீட் " என்றால் "பிரித்து வைக்கப்பட்ட நிலை" என்று அர்த்தம். தென்னாபிரிக்க அரசால் 1948ல் இருந்து 1998 வரை இருந்த சட்டம் மூலமாக இன வேற்றுமை முறை செயல்பாட்டில் இருந்த காலத்திணை "இன ஒதுக்கல் காலம்" எனப்படுகிறது அல்லது ஆங்கிலத்தில் (Apartheid - Era ) என்றழைக்கப்படுகிறது.

இனவொதுக்கல் கொள்கையின் அடிப்படையிலான ஒரு அறிவித்தல் பலகை. ஆங்கிலம், ஆப்பிரிக்கானர், சூலு ஆகிய மொழிகளில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது: டர்பன் நகரம், டர்பன் கடற்கரைச் சட்ட விதிகளின் 37 ஆம் பிரிவின் கீழ் இந்தக் குளிக்கும் பகுதி வெள்ளை இனக் குழு உறுப்பினர்களுக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. (1989)

இனவொதுக்கல் என்பது, 1948 ஆம் ஆண்டுக்கும், 1990 ஆம் ஆண்டுக்கும் இடையில் தென்னாபிரிக்காவில் ஆட்சியில் இருந்த தேசியக் கட்சி அரசால் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட சட்ட அடிப்படையிலான இனவாரித் தனிமைப்படுத்தல் முறையைக் குறிக்கும். இனவொதுக்கலின் அடிப்படை குடியேற்றவாதத்தின் வரலாற்றிலிருந்து உருவானது. இதிலிருந்து, இன அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கும் நடைமுறைகளும் கொள்கையும் உருவானதுடன் ஐரோப்பியக் குடியேற்றக்காரரதும் அவர்களது வழித்தோன்றல்களின் ஆதிக்கமும் நிலைபெறலாயிற்று. 1948 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில்[1] தேசியக்கட்சி வெற்றி பெற்றதும், அதன் இனவொதுக்கல் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கியது. ஏற்கனவே இருந்த கொள்கைகளும், நடைமுறைகளும்; அமைப்பு முறையான இனவாதத்தையும், வெள்ளையின ஆதிக்கத்தையும் உட்படுத்தி, முறைப்படுத்தப்பட்டு விரிவாக்கப்பட்டது. பின்னர் பல ஆண்டுக்காலக் கறுப்பின மக்களின் போராட்டத்தை அடுத்துப் பணிய வேண்டிய நிலைக்கு வந்த வெள்ளையின அரசுக்கும், கறுப்பினத்தவர் கட்சிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளை அடுத்து 1990களின் முதற்பாதியில் நீக்கப்பட்டது. தொடர்ந்து 1994 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் முதன் முதலாக அனைத்து மக்கள் வாக்குரிமை அடிப்படையில் தேர்தல் இடம்பெற்றது.

இனவொதுக்கல் சட்டம், குடிமக்களையும், நாட்டுக்கு வருகை தந்திருப்போரையும், கறுப்பர், வெள்ளையர், நிறத்தவர், இந்தியர், ஆசியர் எனப் பல்வேறு இனக்குழுக்களாகப் பாகுபடுத்தியது. தென்னாபிரிக்கக் கறுப்பினத்தவரின் குடியுரிமை நீக்கப்பட்டது. சட்டப்படி அவர்கள் பழங்குடி அடிப்படையில் அமைக்கப்பட்டதும், பெயரளவிலான தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டதுமான பாண்டுஸ்தான் எனப்பட்ட பத்துப் பழங்குடித் தாயகங்களில் ஒன்றின் குடிகள் ஆக்கப்பட்டனர். இவைகளுள் நான்கு பெயரளவில் தனி நாடுகள் ஆயின. இப் பழங்குடித் தாயகங்கள் பரப்பளவில் மிகச் சிறியனவாகவும், பொருளியல் அடிப்படையில் நாட்டின் வளமற்ற நிலப்பகுதிகளை உள்ளடக்கியனவுமாக இருந்தன. பெரும்பாலான கறுப்பினத் தென்னாபிரிக்கர் தமக்கென ஒதுக்கப்பட்ட தாயகங்களில் என்றுமே வசித்ததில்லை. தாயக முறை, வெள்ளை இனத்தவருக்கென எடுத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த கறுப்பினத்தவரின் வாக்குரிமையை இல்லாமலாக்கியது. அரசு, கல்வி, மருத்துவ வசதி, பொதுச் சேவைகள், என்பவற்றில் பாகுபாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்ததுடன், கறுப்பினத்தவருக்கு வெள்ளையரிலும் தரக் குறைவான வசதிகளையே வழங்கியது. கறுப்பினப் பாடசாலைகளின் கல்வி முறை அவர்களைக் கூலியாட்களாக உருவாக்குவதாகவே அமைந்தது.

இந்த இனவொதுக்கல் முறை உள்நாட்டில் குறிப்பிடத்தக்க எதிர்ப்புக்களை உருவாக்கியது[2]. தொடராக இடம்பெற்ற மக்கள் எழுச்சிகளையும், எதிர்ப்புக்களையும், காவல்துறையின் கொடூரமான அடக்குமுறை மூலம் அரசு ஒடுக்கியது. இதனால், மக்கள் மத்தியில் ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவு பெருகியது. மக்கள் நேரடியாகவும், அரசியல் வழிமுறைகள் மூலமும் காட்டிய எதிர்ப்புக்களை, நீதி விசாரணை இன்றித் தடுத்து வைத்தல், சித்திரவதை, செய்தித் தணிக்கைகள், கட்சிகளைத் தடை செய்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் அரசு அடக்க முயன்றது. விடுதலை இயக்கங்களான ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸ், கறுப்பின உணர்வு இயக்கம், அசானிய மக்கள் அமைப்பு, பரந்த ஆபிரிக்க காங்கிரஸ், ஐக்கிய சனநாயக முன்னணி, போன்ற இயக்கங்கள் தடைசெய்யப்பட்டன. கடுமையான அடக்கு முறைகளுக்கு நடுவிலும், இவ்வியக்கங்கள் தமது இனவொதுக்கலுக்கு எதிரான போராட்டங்களுக்கு பெரும் மக்கள் ஆதரவினைப் பெற்று வந்தன. இவர்கள் பன்னாட்டு அளவிலும், பல்வேறு இனவொதுக்கலை எதிர்க்கும் அமைப்புக்களோடு தொடர்புகளைப் பேணி வந்தனர்[3][4].

வெள்ளையினத் தென்னாப்பிரிக்கா மேலும் மேலும் இராணுவமயமானது. ஐக்கிய அமெரிக்காவின் மறைமுகமான ஆதரவுடன், அங்கோலாவின் விடுதலைக்கான மக்கள் இயக்கத்தின் ஆயுதப் பிரிவான, அங்கோலாவின் விடுதலைக்கான மக்கள் ஆயுதப் படை போன்றவற்றுடன் "எல்லைப் போர்கள்" எனப்பட்ட போர்களிலும் ஈடுபட்டது. இனவொதுக்கல் எதிர்ப்பு அமைப்புக்கள், ஆப்பிரிக்காவின் பிற விடுதலை இயக்கங்களுடன் வலுவான தொடர்புகளைப் பேணி வந்ததுடன், தமது போராட்டம், முதலாளித்துவத்துக்கு எதிரான பரந்த சோசலிசப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கும்படி பார்த்துக்கொண்டன[5].

இனவொதுக்கலின் தோற்றம்

தொகு

இனவொதுக்கலுக்கு முந்திய இன வேறுபாடுக் கொள்கையும் குடியேற்றவாதமும்

தொகு

1948-1990 காலப்பகுதியில் ஆப்பிரிக்கானரின் ஆதிக்கத்தில் இருந்த அரசாங்கமே இனவொதுக்கலுக்கான காரணம் எனப் பரவலாகக் கருதப்பட்டாலும், இனவொதுக்கல், பிரித்தானியக் குடியேற்றவாத அரசின் நடவடிக்கைகளின் விளைவாகும். பிரித்தானியரால் ஆளப்பட்டதும், வெள்ளையர்களும், பிற நிறத்தவரும் வாழ்ந்த பகுதிகளுக்கு, பழங்குடியினர் பகுதிகளிலிருந்து கறுப்பினத்தவர் வருவதைத் தடுப்பதற்காக கேப் குடியேற்றப் பகுதியிலும், நேட்டாலிலும் 19 ஆம் நூற்றாண்டில் உருவான அனுமதி அட்டை முறையே இதற்கான அடிப்படையாகும்[6][7][8].

1892 ஆம் ஆண்டில் பிரித்தானியர், வாக்குரிமை மற்றும் தேர்தல் சட்டத்தை நிறைவேற்றினர். இது, நிதி, கல்வி ஆகியவற்றின் அடைப்படையில் கறுப்பினத்தவரின் வாக்குகளை மட்டுப்படுத்தியது. தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட, நேட்டால் சட்டசபைச் சட்டம் 1894, இந்தியர்களின் வாக்குரிமையைப் பறித்தது. 1905 ஆம் ஆண்டில் லக்டென் ஆணைக்குழு, பொது அனுமதி அட்டை ஒழுங்குவிதிகள் சட்டத்தை நிறைவேற்றியது. இது, கறுப்பினத்தவரின் வாக்குரிமையை முழுதாகவே பறித்துக்கொண்டு, அவர்களைக் குறித்த பகுதிகளுக்குள் அடக்கியதுடன், கண்டனத்துக்கு உள்ளான அனுமதிச் சீட்டு முறையையும் தொடங்கி வைத்தது. பின்னர் கொண்டுவரப்பட்ட ஆசியர் பதிவுச் சட்டமூலம் (1906) எல்லா இந்தியர்களும் தம்மைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும், அனுமதிச் சீட்டுக்களை எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும் என்றும் விதித்தது. தென்னாபிரிக்கச் சட்டமூலம் (1910) வெள்ளையருக்கு வாக்குரிமையை அளித்து எல்லா இனத்தவரையும் ஆளும் அரசியல் அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கியது. உள்ளூர் நிலச் சட்டம் (1913), கேப் பகுதியில் உள்ளவர்கள் தவிர்ந்த பிற கறுப்பு இனத்தவர் எவரும் தமக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு வெளியே நிலங்கள் வாங்குவதைத் தடை செய்தது. நகர்வாழ் தாயக மக்கள் சட்டம் (1918) குறிப்பிட்ட இடங்களுக்குக் கறுப்பு இனத்தவரைக் கட்டாயப்படுத்தி அனுப்புவதற்காக இயற்றப்பட்டது. நகரப் பகுதிகள் சட்டமூலம் (1923) தென்னாபிரிக்காவில் வாழிடப் பகுதிகளைப் பிரித்து அமைப்பதையும், வெள்ளையர் தொழில் முயற்சிகளுக்கு மலிவான தொழிலாளர்கள் கிடைப்பதற்கு வழி செய்வதையும் நோக்கமாகக் கொண்டது. நிறத் தடைச் சட்டம் (1926) திறமைகள் தேவைப்படும் தொழில்களில் கறூப்பு இனத்தவர் ஈடுபடுவதைத் தடை செய்தது. பிரித்தானியரால் இயற்றப்பட்ட கடைசி இனவொதுக்கல் சட்டம் ஆசிய நிலவுடைமைச் சட்டம் (1946) ஆகும். இது ஆசியர்களுக்கு நிலம் விற்பதைத் தடை செய்தது.

கேப் குடியேற்றத்திலும், நேட்டாலிலும் கறுப்பினத்தவர், நகர வீதிகளில் இருட்டியபின் நடமாட அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் எப்போதும் அவர்கள் அனுமதிச் சீட்டுக்களையும் வைத்திருக்க வேண்டும். இளம் வழக்கறிஞராக இருந்த மோகன்தாஸ் காந்தி, நடுத்தர வகுப்பு இந்தியர்களைப் பாதித்த தடைகளுக்கு எதிராக வன்முறை சாராத எதிர்ப்புக்களை ஒழுங்கு செய்ததன் மூலம் தனது அரசியல் நடவடிக்கைகளை இக் காலத்தில்தான் தொடங்கினார்.

இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ஜான் ஸ்மத்ஸ் (Jan Smuts) என்பவரின் ஐக்கியக் கட்சி அரசு, பிரிவினைச் சட்டங்களைக் கடைப்பிடிப்பதில் அதிக இறுக்கம் காட்டாமல் இருந்தது. இனங்களுக்கு இடையிலான தொடர்புகள் காலப்போக்கில் நாட்டில் இனக்கலப்பை உருவாக்கும் என்ற அடிப்படையில், ஐக்கியக் கட்சியின் கொள்கைகளின் விளைவுகளை ஆராய்வதற்காக ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இனத் தொடர்புகள் எல்லா இனக் குழுக்களிலும் ஆளுமை இழப்புக்களை உருவாக்கும் என ஆணைக்குழு முடிவு வெளியிட்டது. பின்னர் கடைப்பிடிக்கப்பட்ட இனவொதுக்கல் கொள்கை முன்னைய அரசுகளின் இனங்களை வேறுபடுத்தி வைக்கும் கொள்கைகளின் அம்சங்கள் பலவற்றைக் கொண்டிருந்தது.

பெண்களுக்கு அனுமதி அட்டை வழங்க எடுத்த முயற்சிகள் தீவிரமான எதிர்ப்புக்களைச் சந்தித்ததால், 1956 ஆம் ஆண்டுவரை அனுமதி அட்டை முறையில் இருந்து பெண்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

1948 ஆம் ஆண்டுத் தேர்தலும் குழுப் பகுதிகள் சட்டமும்

தொகு

1948 ஆம் ஆண்டின் தேர்தல் காலத்தில், புரட்டஸ்தாந்த மதகுருவான டானியேல் பிராங்கோயிஸ் மாலன் என்பவர் தலைமையிலான ஆப்பிரிக்கானர் தேசியவாதக் கட்சி, இனவொதுக்கல் கொள்கைகயை முன்வைத்துப் பரப்புரை செய்தது. தேர்தலில் ஸ்மத்சின் ஐக்கியக் கட்சியைத் தோற்கடித்த இக் கட்சி இன்னொரு ஆபிரிக்கானர் தேசியவாதக் கட்சியான ஆப்பிரிக்கானர் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அரசொன்றை அமைத்தது. இக்கட்சிகள் பின்னர் தேசியக் கட்சி என்னும் பெயரில் ஒன்றிணைந்தன. மாலன் முதலாவது இனவொதுக்கல் பிரதமர் ஆனார். இக் கூட்டணி உடனடியாகவே இனவொதுக்கல் கொள்கைகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. கலப்புத் திருமணங்களைத் தடைசெய்யும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், மக்கள் இனங்களாகப் பாகுபடுத்தப்பட்டனர். இலக்குழுக்களைப் புவியியல் அடிப்படையில் பிரிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட, 1950 ஆம் ஆண்டின் குழுப் பகுதிகள் சட்டம் (1950), இனவொதுக்கல் கொள்கையின் அடிப்படையாக விளங்கியது. 1953 ஆம் ஆண்டு வெவ்வேறான பொதுவசதிகள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச் சட்டத்தில் கீழ் நகரங்களின் நிலங்கள் குறிப்பிட்ட இனங்களுக்காக மட்டும் ஒதுக்க முடியும். இதன்மூலம், தனித்தனியான கடற்கரைகள், பேருந்துகள், மருத்துவ நிலையங்கள், பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள் போன்றவை உருவாக்கப்பட்டன. "வெள்ளையருக்கு மட்டும்" எனக் குறிப்பிடும் அறிவிப்புப் பலகைகள் பொது இடங்களில் தாராளமாகக் காணப்பட்டன.

விளையாட்டுக்களிலும், இனங்களுக்கு இடையிலான தொடர்புகள் விரும்பப்படவில்லை. எனினும் இதற்காகத் தனியான சட்டங்கள் எதுவும் இருக்கவில்லை. ஆனால், குழுப் பகுதிகள் சட்டம் போன்றவற்றைப் பயன்படுத்தி விளையாட்டுகளிலும் இனவொதுக்கலை அரசு நடைமுறைப்படுத்தி வந்தது.

அரசு நடைமுறையில் இருந்த அனுமதி அட்டைச் சட்டங்களை மேலும் தீவிரமாக்கியது. கறுப்பினத்தவர் வெள்ளையர் பகுதிகளுக்குள் இடம்பெயர்வதைத் தடுப்பதற்காக அவர் கள் எப்போது, அடையாள ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என விதிக்கப்பட்டனர். நகரங்களில் பணிபுரியும் கறுப்பினத்தவர் அப்பகுதிகளில் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும், அவர்களுடைய குடும்பத்தினருக்கு அனுமதி இல்லையாதலால், இத்தகைய பணியாட்கள் தமது மனைவி, மக்களைப் பிரிந்தே வாழ வேண்டியதாயிற்று.

நிற இனத்தவரின் வாக்குரிமை பறிப்பு

தொகு

மாலனைத் தொடர்ந்து பிரதமரான ஜே. ஜி. ஸ்டிரிஜ்டம் (J.G. Strijdom), கேப் மாகாணத்தில் நிற இனத்தவரின் வாக்குரிமையைப் பறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். முன்னைய அரசு 1951 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில், வாக்காளர் தனிப் பிரதிநிதித்துவச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. எனினும், ஐக்கியக் கட்சியின் ஆதரவுடன் ஜி. ஹரிஸ், டபிள்யூ. டி. பிராங்ளின், டபிள்யூ. டி. கொலின்ஸ், எட்கார் டீனே ஆகிய நான்கு வாக்காளர்கள் அச் சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை குறித்து வழக்கொன்றைத் தாக்கல் செய்தனர். கேப் உச்ச நீதிமன்றம் சட்டம் செல்லுபடியாகும் எனத் தீர்ப்புக் கூறியது. ஆனால், வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு வந்தபோது, அரசமைப்புச் சட்டத்தில் உள்ளவற்றை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்தின் இரண்டு சபைகளினதும் கூட்டு அமர்வில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்பதால் சட்டம் செல்லாது என அது தீர்ப்பு அளித்தது. இதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் தீர்ப்புக்களைப் புறக்கணிக்கும் உரிமையை நாடாளுமன்றத்துக்கு வழங்கும் சட்டமொன்றை அரசு நிறைவேற்றியது. கேப் உச்ச நீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் இதையும் செல்லாது எனத் தீர்ப்பு அளித்தன. இதனைத் தொடர்ந்து அரசு புதிய வழிமுறையொன்றைக் கையாண்டது. 1955 ஆம் ஆண்டில், அரசு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளின் தொகையை ஐந்திலிருந்து பதினொன்றாக உயர்த்தியது. புதிய இடங்கள் தேசியக் கட்சி சார்பானவர்களுக்கு வழங்கப்பட்டது. அதே ஆண்டில் நிறைவேற்றப்பட்ட "மேல்சபைச் சட்டத்தின்" மூலம் அச் சபையின் உறுப்பினர் எண்ணிக்கை 49 இலிருந்து 89 ஆகக் கூட்டப்பட்டது. இச் சபையில் தேசியக் கட்சிக்கு 77 இடங்கள் இருக்குமாறு செய்யப்பட்டதுடன், 1956 ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்தின் இரு சபைகளினதும் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி மீண்டும் தனிப் பிரதிநிதித்துவ வாக்களர் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் கேப் மாகாணத்தில், நிற இனத்தவர்களின் பெயர்களைப் பொது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு அவர்களுக்கெனத் தனியான வாக்களர் பட்டியல் ஒன்று உருவாக்கப்பட்டது.

இனவொதுக்கல் சட்டங்கள்

தொகு

1950கள் முதல் இனங்களை தனித்தனியாக வைத்திருப்பதற்கும், எதிர்ப்புக்களை ஒடுக்குவதற்குமான பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தேசியக் கட்சியினர், தென்னாப்பிரிக்கா ஒரு நாட்டினத்தைக் கொண்டது அல்ல என்றும், இது வெள்ளையர், கறுப்பர், நிறத்தவர், இந்தியர் என நான்கு தனித்துவமான நாட்டினங்களைக் கொண்டது என்றும் வாதித்தனர். இவை மேலும் 13 நாட்டினங்கள் அல்லது இனக் கூட்டமைப்பு ஆகப் பிரிக்கப்பட்டன. வெள்ளையர்கள், ஆங்கிலேயர், ஆப்பிரிக்கானர் என்போரை உள்ளடக்கியது; கறுப்பினத்தவர், 10 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர்.

இனவொதுக்கல் முறைமை

தொகு

இனவொதுக்கல் பெரும்பாலும் "பெரும் இனவொதுக்கல்", "சிறு இனவொதுக்கல்" இரண்டு பிரிவுகளாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்படுவது வழக்கம். பெரும் இனவொதுக்கல் என்பது தென்னாப்பிரிக்காவைப் பல பிரிவுகளாகப் பிரிக்க எடுத்த முயற்சிகளையும், சிறு இனவொதுக்கல் என்பது இனங்களைத் தனித்தனியாகப் பிரித்து வைக்க எடுத்த முயற்சிகளையும் குறித்தது. தேசியக் கட்சி பெரும் இனவொதுக்கல் கொள்கையை 1990கள் வரை இறுக்கமாகப் பின்பற்றி வந்தது. அதே வேளை 1980களில் சிறு இனவொதுக்கல் கொள்கையைக் கைவிட்டுவிட்டது.

பெரும் இனவொதுக்கல், "தாயக" முறை

தொகு

1948 ஆம் ஆண்டில் தேசியக் கட்சி பதவிக்கு வந்தபோது, அதன் முதன்மையான முயற்சி, வெள்ளையர் மேலாண்மையைக் கொண்ட கிறித்தவ நாடு ஒன்றை உருவாக்குவதும், இனங்களைப் பிரித்து வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் ஆகும். இனங்களைத் தனிப்படுத்தலுக்கான முக்கியமான அடிப்படைகள் பின்வருமாறு:

  • மக்களை வெள்ளையர், கறுப்பர், நிறத்தவர், இந்தியர் எனக் குழுக்களாகப் பிரித்தமை.
  • நகரப் பகுதிகளில் இனத் தனிப்படுத்தலை தீவிரமாகக் கடைப்பிடித்தமை.
  • ஆப்பிரிக்கர் தொடர்பில் நகராக்கம் கட்டுப்படுத்தப்பட்டமை.
  • தொழிலாளர் புலப்பெயர்வு இறுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்டமை.
  • பழங்குடித் தன்மை, பழமைவாதம் போன்றவை முன்னரிலும் அதிகமாக நிர்வாகத்தில் பயிலப்பட்டமை.
  • பாதுகாப்புச் சட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் வலுப்படுத்தியமை.

குறிப்புகள்

தொகு
  1. "The 1948 election and the National Party Victory". South African History Online. பார்க்கப்பட்ட நாள் 2008-07-13. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  2. Lodge, Tom (1983). Black Politics in South Africa Since 1945. Longman. {{cite book}}: Unknown parameter |city= ignored (help)
  3. Lodge, Tom. 1983. Black Politics in South Africa Since 1945. New York: Longman.
  4. Truth and Reconciliation Commission of South Africa (21 மார்ச் 2003). "Truth and Reconciliation Commission of South Africa Report (PDF)". Archived from the original on 2013-09-25. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2007. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help); Unknown parameter |dateformat= ignored (help)
  5. Lisbon Conference of the African National Congress (1977). "Colonialism of a Special Type". Archived from the original on 2007-07-14. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |dateformat= ignored (help); Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  6. U.S. Library of Congress. "Africans and Industrialization". US Federal Research Division of the Library of Congress. பார்க்கப்பட்ட நாள் 2008-07-14. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  7. Jim Jones. "HIS 311 Lecture on Southern Africa 1800-1875". West Chester University of Pennsylvania. Archived from the original on 2006-09-04. பார்க்கப்பட்ட நாள் 2008-07-14. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  8. Jessica Smith. "Pass Laws". Charlotte Country Day School. Archived from the original on 2008-06-11. பார்க்கப்பட்ட நாள் 2008-07-14. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)