இயற்பியல் பண்பளவுகள்

(இயற்பியல் அளவுகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இயற்பியல் பண்பளவுகள் (Physical quantity), அடிப்படை அளவுகள் மற்றும் வழி அளவுகள் என இருவகைப்பட்டவை. மற்ற எந்த இயற்பியல் அளவுகளாலும் குறிப்பிட முடியாத அளவுகள் அடிப்படை அளவுகள் எனப்படும்.[1] நீளம், நிறை, காலம், வெப்பநிலை போன்றவை அடிப்படை அளவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

அடிப்படை அளவுகளால் குறிப்பிடக்கூடிய அளவுகள் வழி அளவுகள் எனப்படும். பரப்பு, கனவளவு, அடர்த்தி போன்றவை வழி அளவுகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

கொடுக்கப்பட்டுள்ள இயற்பியல் அளவுடன் (quantity) ஒப்பிடப் பயன்படும் ஒரு நிறுவப்பட்ட படித்தர அளவு (standard), இயற்பியல் அளவின் அலகு (Unit) எனப்படும். அடிப்படை அளவுகளை அளந்தறியும் அலகுகள் அடிப்படை அலகுகள் எனவும், வழி அளவுகளை அளந்தறியும் அலகுகள் வழி அலகுகள் எனவும் கூறப்படுகின்றன.

ஒரு பொருளின் நீளம், அகலம், நிறை, கனவளவு, வெப்பநிலை, காந்தப் புலம் முதலிய அளக்ககூடிய இயற்பியல் இயல்புகளையும் பண்புகளையும் எண்களோடு குறிப்பிடுவதே இயற்பியல் பண்பளவுகள் ஆகும். Q என்பது ஒரு இயற்பியல் பண்பளவு என்றால் அது {Q} என்னும் ஓர் எண்ணாலும் [Q] என்னும் இயற்பியல் பண்பு அளவடி அலகாலும் (physical unit) பெருக்கிப் பெறும் தொகையாகும்.

Q = {Q} x [Q]

(இன்று SI அலகுகளில் குறிப்பிடப்படும்). ஓர் இயற்பியல் பண்பளவை அளக்ககூடிய இயற்பியல் பண்புவெளி ( physical dimension) என்னும் கருத்தை முதலில் 1822ல் ஃவூரியர் (Fourier) முன்மொழிந்தார்.

SI அலகு முறை

தொகு

தற்காலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் SI அலகு முறை (System International de Units) கீழே விவரிக்கப் பட்டுள்ளது.

அடிப்படை அளவுகள்:

இயற்பியல் அளவுகள் அலகுகள் குறியீடு
நீளம் மீட்டர் m
நிறை (திணிவு) கிலோகிராம் kg
காலம் நொடி s
மின்னோட்டம் ஆம்பியர் A
வெப்பநிலை கெல்வின் K
ஒளிச்செறிவு கேண்டலா Cd
பொருளின் அளவு மோல் mol

துணை அளவுகள்:

இயற்பியல் அளவுகள் அலகுகள் குறியீடு
தளக்கோணம் ரேடியன் rad
திண்மக் கோணம் ஸ்டிரேடியன் sr

வழி அளவுகளும் அவற்றின் அலகுகளும்:

இயற்பியல் அளவுகள் சமன்பாடு அலகு
பரப்பு நீளம் x அகலம் m2
கன அளவு நீளம் x அகலம் x உயரம் m3
திசைவேகம் இடப்பெயர்ச்சி / காலம் m s−1
முடுக்கம் திசைவேகம் / காலம் m s−2
கோணத் திசைவேகம் கோண இடப்பெயர்ச்சி / காலம் rad s−1
கோண முடுக்கம் கோணத் திசைவேகம் / காலம் rad s−2
அடர்த்தி நிறை / கன அளவு kg m−3
உந்தம் நிறை x திசைவேகம் kg m s−1

மேற்கோள்கள்

தொகு
  1. Joint Committee for Guides in Metrology (JCGM), International Vocabulary of Metrology, Basic and General Concepts and Associated Terms (VIM), III ed., Pavillon de Breteuil : JCGM 200:2012 (on-line)

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்பியல்_பண்பளவுகள்&oldid=3699728" இலிருந்து மீள்விக்கப்பட்டது