இரட்டுறமொழிதல் அணி
ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுறமொழிதல் அணி எனப்படும். இதனைச் சிலேடையணி என்றும் அழைப்பர். ஒரு சொல் பிரிபடாமல் தனித்துநின்று பல பொருள் தருவது செம்மொழிச் சிலேடை என்றும் , சொற்றொடர் பல வகையாகப் பிரிக்கப்பட்டுப் பல பொருள்களைத் தருவது பிரிமொழிச் சிலேடை என்றும் பெயர் பெறும்.
எடுத்துக்காட்டு
தொகுதிருக்குற்றாலக் குறவஞ்சியில் உள்ள பின்வரும் பாடலில்[1] இவ் அணியைப் பயன்படுத்தியுள்ளதைக் காணலாம்.
பல்லவி
- கண்ணி கொண்டு வாடா-குளுவா
- கண்ணி கோண்டு வாடா!
- மீறும் அலஞ்சிக் குறத்தியைக் கொண்டசெவ்
- வேட்குற வன்முதல் வேட்டைக்குப் போனநாள்
- ஆறுநாட் கூடி ஒருகொக்குப் பட்டது
- அகப்பட்ட கொக்கை அவித்தொரு சட்டியில்
- சாறாக வைத்தபின் வேதப் பிராமணர்
- தாமுங் கொண் டார்சைவர் தாமுங் கொண்டார்தவப்
- பேறா முனிவரும் ஏற்றுக்கொண் டார்இதைப்
- பிக்குச் சொல்லாமலே கொக்குப் படுக்கவே (கண்ணி)
- விளக்கம்
குற்றாலத்தில் பறவைகள் பெரும் எண்ணிக்கையில் வலசை வந்து மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் சிங்கன் அப்பறவைகளைப் பிடிப்பதற்காகத் தன் நண்பனைக் கண்ணி கொண்டுவரச் சொல்கிறான். இவ்வாறு செய்வதில் தவறில்லை எனச்சொல்லும் வகையில் அமைந்த இப்பாடலின் நேரடிப் பொருள் பொதுவான அறிவுக்கு ஒவ்வாததாக அமைந்திருந்தாலும் அதன் உள் மறைபொருள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அமைந்துள்ளது. இப்பாடல் இவ்வகையில் நயத்துடன் அமைந்துள்ளது.
- நேரடியான பொருள்
வடிவழகிலே அனைவரையும் மிஞ்சும் இலஞ்சி நகர்க் குறத்தியின் மணாளன், செவ்வேளாகிய குறவன் தனது முதல் வேட்டைக்குச் சென்றான். அம்முறை ஆறு நாட்களுக்குப் பின்னர்தான் அவனுக்கு ஒரு கொக்கு அகப்பட்டது. அதை அவித்து ஒரு சட்டியிலே குழம்பாகச் சமைத்தான். அதனை மறையோதும் பிராமணர்களும், சைவர்களும் உண்டனர். தவப்பேறுடைய முனிவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர். அதனால் மறுப்பேதும் சொல்லாமல் வேட்டையாடுவதற்குக் கண்ணியை எடுத்துக்கொண்டு வாடா குளுவா!
- உட்பொருள்
முருகன் (குறவன்) சூரனாகிய மாமரத்தைத் (கொக்கைத்) தான் படையெடுத்துச் சென்ற ஆறாவது நாளில் வென்றான். அது சட்டித் திருநாள் எனப்படும். சாறு என்றால் திருவிழா எனும் பொருளும் உண்டு. அச்சட்டித்திருநாளை அனைவரும் கொண்டாடுவர். இவ்வாறான உட்பொருளைக் கவிஞர் சுவைபட உரைத்துள்ளார்.
குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ திரிகூடராசப்பக் கவிராயர்; புலியூர்க்கேசிகன் (உரை) (2007). திருக்குற்றாலக் குறவஞ்சி. சென்னை: பாரி நிலையம். pp. 145–146.