இரண்டாம் சிக்ஸ்துஸ் (திருத்தந்தை)

திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்துஸ் (Pope Sixtus II) உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் 257 ஆகத்து 30ஆம் நாளிலிருந்து 258 ஆகத்து 6ஆம் நாள் வரை ஆட்சி செய்தார்.[1] அவருக்கு முன் பதவியிலிருந்தவர் திருத்தந்தை முதலாம் ஸ்தேவான். திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்துஸ் கத்தோலிக்க திருச்சபையின் 24ஆம் திருத்தந்தை ஆவார்.[2]

  • சிக்ஸ்துஸ் என்னும் பெயர் (பண்டைக் கிரேக்கம்Ξυστος; இலத்தீன்: S(e)xtus) கிரேக்கத்தில் "ஒளிர்பவர்" என்று பொருள்படும். அப்பெயரின் இலத்தீன் வடிவம் Sixtus (Sextus) என்பதற்கு "ஆறாமவர்" என்னும் பொருள் இருந்தாலும், கிரேக்கச் சொல்லின் திரிபாக அது கொள்ளப்படுகிறது.
திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்துஸ்
Pope Sixtus II
24ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம்ஆகத்து 30, 257
ஆட்சி முடிவுஆகத்து 6, 258
முன்னிருந்தவர்முதலாம் ஸ்தேவான்
பின்வந்தவர்தியோனீசியுஸ்
பிற தகவல்கள்
இயற்பெயர்சிக்ஸ்துஸ்
Sixtus
பிறப்புதெரியவில்லை
கிரேக்க நாடு
இறப்பு(258-08-06)ஆகத்து 6, 258
உரோமை; உரோமைப் பேரரசு
புனிதர் பட்டமளிப்பு
திருவிழாஆகத்து 6
சிக்ஸ்துஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

பணிகள்

தொகு

திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்துஸ் கிரேக்க நாட்டவர் என்று "திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் பண்டைய ஏடு கூறுகிறது.

இரண்டாம் சிக்ஸ்துஸ் தமக்குமுன் பதவியிலிருந்த திருத்தந்தை முதலாம் ஸ்தேவானின் அணுகுமுறையிலிருந்து வேறுபட்ட விதத்தில் செயல்பட்டு, திருச்சபைக்கு உள்ளே நிலவிய பூசல்களுக்குத் தீர்வுகள் கண்டார். குறிப்பாக, உரோமை மன்னர்கள் கிறித்தவ மறையைத் துன்புறுத்தியபோது தம் உயிரைக் காத்துக்கொள்வதற்காக சில கிறித்தவர்கள் தம் மத நம்பிக்கையைக் கைவிட்டு, உரோமை தெய்வங்களுக்குப் பலிசெலுத்தியதால் அவர்களை மீண்டும் திருச்சபையில் ஏற்றுக்கொள்வது பற்றி கருத்து வேறுபாடு நிலவியது. அத்தகைய கிறித்தவர்களுக்கு மீண்டும் ஒருமுறை திருமுழுக்கு கொடுக்க வேண்டியதில்லை என்று உரோமைத் திருச்சபை கருதியது. ஆனால், வட ஆப்பிரிக்கா, சிறு ஆசியா ஆகிய பகுதிகளின் ஆயர்கள், குறிப்பாக கார்த்தேஜ் நகர் ஆயர் சிப்பிரியான், அக்கருத்தோடு உடன்படவில்லை. இதனால் திருச்சபைக்குள் குழப்பம் நிலவியது.

திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்துஸ் புனித சிப்பிரியானோடும் பிற ஆயர்களோடும் தொடர்புகொண்டு நல்லுறவு ஏற்படுத்தினார். இத்தகைய நல்லுறவு ஏற்படுவதற்கு அலெக்சாந்திரிய நகர் ஆயர் தியோனீசிஸ் (இறப்பு: 264/5) என்பவரும் பெரிதும் துணைநின்றார்.

மறைச்சாட்சியாக உயிர்துறத்தல்

தொகு

உரோமை மன்னன் வலேரியன் முதலில் கிறித்தவ சமயத்தின் மட்டில் சகிப்புத்தன்மை காட்டினார். அதன் பின் அதை மிகக் கடுமையாகத் துன்புறுத்தலானார். பல ஆயர்களும் குருக்களும் கொல்லப்பட்டனர். கிறித்தவர்கள் வெளிப்படையாகக் கல்லறைத் தோட்டங்களில் வழிபாடு நிகழ்த்துவது தடைசெய்யப்பட்டது. அரசு ஏற்பாடு செய்த வழிபாடுகளில் பங்கேற்று, உரோமை தெய்வங்களுக்குப் பலிசெலுத்த கிறித்தவர்கள் வற்புறுத்தப்பட்டார்கள்.

258ஆம் ஆண்டு ஆகத்து 6ஆம் நாள் கிறித்தவர்கள் வழிபாடு நடத்தியபோது சிக்ஸ்துஸ் ஓர் இருக்கையில் அமர்ந்து மக்களுக்குப் போதித்துக்கொண்டிருந்தார். அப்போது அரச இராணுவத்தினர் திடீரென அங்கு நுழைந்து, திருத்தந்தை சிக்ஸ்துசையும் அவரோடு நான்கு திருப்பணியாளர்களையும் கழுத்தை வெட்டிக் கொன்றார்கள். ஒருசில நாட்களுக்குப் பின் மற்றும் மூன்று திருத்தொண்டர்கள் கிறித்தவ நம்பிக்கைக்காகக் கொல்லப்பட்டார்கள்.

அடக்கம்

தொகு

மறைச்சாட்சியாக உயிர்துறந்த இரண்டாம் சிக்ஸ்துசின் உடல் உரோமை கலிஸ்டஸ் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் கொல்லப்பட்டபோது அமர்ந்திருந்த, இரத்தம் தோய்ந்த இருக்கை அவருடைய கல்லறையின் பின்புறம் அமைக்கப்பட்ட சிறுகோவிலில் வைக்கப்பட்டது.

ஒரு நூற்றாண்டுக்குப் பின், திருத்தந்தை தாமசுஸ் என்பவர் (ஆட்சி: 366-384) இரண்டாம் சிக்ஸ்துசின் கல்லறைமீது ஒரு கல்வெட்டு பதித்தார்.[3]

திருவிழா

தொகு

புனித இரண்டாம் சிக்ஸ்துசின் திருவிழா ஆகத்து 6ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. அவருடைய பெயர் உரோமைத் திருப்பலியின் நற்கருணை மன்றாட்டில் சேர்க்கப்பட்டது.

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sixtus II
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர் உரோமை ஆயர்
திருத்தந்தை

257–258
பின்னர்